இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0277குன்றிமணி
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கின் கரியார் உடைத்து

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:277)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.

மணக்குடவர் உரை: புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம்.
இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.

பரிமேலழகர் உரை: குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்.
('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)

இரா சாரங்கபாணி உரை: குன்றி மணியின் புறம்போலத் தவக்கோலத்தில் செம்மையுடையாராயினும் அதன் மூக்கு நுனிபோல நெஞ்சம் கருத்திருப்பாரை உடையது இவ்வுலகம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி மூக்கின் கரியார் உடைத்து.

பதவுரை:
புறம்-வெளியிடம்; குன்றி-குன்றிமணி; கண்டனையரேனும்-பார்த்ததில் (தோற்றத்தில்) ஒப்பரேனும்; அகம்-நெஞ்சம்; குன்றி-குறைந்து; மூக்கின்-மூக்குப் போல; கரியார்-இருண்டிருப்பவர்; உடைத்து-உடைத்து.


புறம்குன்றி கண்டனைய ரேனும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும்;
பரிப்பெருமாள்: புறம்பு குன்றி நிறம்போன்ற தூய வேடத்தராயிருப்பினும்;
பரிதி: வேஷதாரிகளாய்;
காலிங்கர்: தாம் புறத்துக்கொண்ட தவக் கோலத்தால் பிறர்க்குக் குன்றி கண்டாற்போல்வதோர் செம்மையுடையராயினும்;
பரிமேலழகர்: குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும்;

'புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குண்டுமணி போலப் புறத்தே காவியும்', 'வெளிப் பார்வைக்குக் குன்றிமணியின் பெரும் பாகமும் உள்ளது போலச் சிறுதும் குற்றமற்றவர்களாகத் தென்பட்டாலும்', 'குன்றிமணியின் மேற்புறம்போலக் கோலத்தால் செம்மையுடையவராயினும்', 'குன்றிமணியினைப் போல வெளித்தோற்றத்தில் செம்மை யுடையராக இருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குன்றிமணியினைப் போல, புறத்தே தோற்றத்தில் செம்மையுடையராக இருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அகம்குன்றி மூக்கின் கரியார் உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.
பரிப்பெருமாள்: உள்ளம் குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவரை வடிவு கண்டு தேறப்படாரென்றது.
பரிதி: மனத்திலே வெகு ஆசை உள்ள வரும், குன்றிமணியுஞ் சரி என்றவாறு.
காலிங்கர்: மற்ற அகத்தால் அக்குன்றியினது மூக்கினைக் கண்டாற்போலக் கரிய தன்மை உடைத்து இவ்வுலகு என்றவாறு.
பரிமேலழகர்: அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.

'அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகத்தே கருமையும் உடையார் உண்டு', 'மனம் மட்டும் அந்தக் குன்றிமணியின் மூக்கைப் போல இருண்டிருப்பவர்கள் உண்டு', 'அதன் மூக்குப்போல மனம் இருண்டவர்கள் இவ்வுலகத்தி லுண்டு', 'மனத்தில் குன்றி மணியின் மூக்குப் போல குற்றம் உடையாரை உலகம் பெற்றுள்ளது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டவர்கள் உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குன்றிமணியினைப் போல, புறத்தே தோற்றத்தில் செம்மையுடையராக இருந்தாலும், உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டவர்கள் உண்டு என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பார்ப்பதற்குச் செம்மை; உள்ளத்திலோ கருமை. இதுபோன்ற மனிதர்களையும் உள்ளடக்கியது இந்த உலகம்.

வெளியே குன்றிமணியைப் போல செம்மையுடையோராகத் தோன்றினாலும், அந்தக் குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமையைப் போன்று உள்ளத்தால் குறைவு உடையவராகவும் உள்ளனர்.
மாட்சிமைப்பட்டார் போன்று வெளியில் தோற்றம் தந்து, மனத்தின் கண் மாசு கொண்டு ஒழுகக் கூடிய மாந்தர் பலர் உண்டு. அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்கிறது பாடல். உள்ளத்திலே வஞ்சக எண்ணம் இருப்பினும், அவற்றை மிகவும் முகத்தில் தோன்றாதவாறு திறமையாக மறைத்துக்கொள்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள் பேசுவது பொய்யா, உண்மையா என்பதை அவர்கள் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் மூலம் கண்டு கொள்ள முடியாதபடி, தீய நடவடிக்கைகளிலே தேர்ந்த பலர் தம் மனதில் ஏற்படும் மாற்றங்கள் வெளியே தெரியாதவண்ணம் புன்முறுவல் பூத்த முகத்துடன் காணப்படுவர். இவர்களை வெளித்தோற்றத்தில் குன்றுமணிபோல் செம்மையாகத் தோன்றினும், அதே குன்றுமணியின் நுனியில் இருக்கும் கரு நிறம்போல் அகத்தில் இருண்ட எண்ணங்கள் கொண்டு வஞ்சித்துவாழும் கொடுமையானவர்கள் என்கிறார் வள்ளுவர்.
காட்சியளவால் மதிப்பிடுவதைக் குறள் பல இடங்களில் கடிந்துள்ளது. இக்குறளும் பார்த்த அளவிலேயே எதையும் நம்பக்கூடாது எனச் சொல்வதுதான்.

குறளில் உள்ள சிவப்பு நிறம் குறிப்பது ஒருவரது உடல் நிறத்தையே என்றனர் சிலர். வள்ளுவரும் அப்படித்தான் கருதினார் என்று சொல்லமுடியாது. பரிமேலழகர் 'செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை' என, சிவப்பு, கறுப்பு இவற்றை ஒருவரின் குணங்களே எனத் தெளிவாக்குகின்றார்.
தேவநேயப் பாவாணர் 'செம்மை கருமை என்பன குன்றிமணியை நோக்கின் நிறப்பண்பும், கூடா வொழுக்கத்தினரை நோக்கின் குணப்பண்பும், ஆகும். புறம் என்னுஞ் சொல் குன்றிக்கும் கூடாவொழுக்கத்தினர்க்கும் பொதுவாக முன்நின்றது . இங்ஙனம் நில்லாக்கால் பின்னர் வரும் அகம் என்னுஞ் சொற்கு முரணின்மை காண்க' என உவமையை விளக்குவார்.

இப்பாடலில் குன்றிமணி உவமப் பொருளாக அமைந்துள்ளது. குன்றிமணி குன்றிக்காய் என்றும் குன்றி முத்து என்றும் அறியப்படுவது. குன்றிமணிக் கொடி மரத்தில் படர்ந்திருக்கும். குன்றிமணியின் பெரும்பகுதி செம்மையான நிறத்தைக் கொண்டது. ஆனால் அதன் ஒரு சிறுபகுதி -அதை மூக்கு என அழைக்கிறது குறள்- சிறிது திட்டாக கறுமை நிறத்தில் இருக்கும். முன்பு இது பொற்கொல்லர்களால் நிறுத்தல் எடையாக பயன்படுத்தப்பட்டது; பல்லாங்குழி விளையாடுவதற்கும் பயன்படுவதுண்டு. இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை. நாட்டில் அழியும் தருவாயில் இருக்கும் மரங்களில் இதுவும் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

சிவப்பு நிறம் எவராலும் விரும்பத்தக்கது. அதற்கு ஒரு ஈர்ப்புத் திறன் உண்டு. குன்றிமணியின் பெரும்பகுதி சிவப்பாக இருப்பதால், அதைப் பார்க்கும்பொழுது செம்மை நிறத்துடன் காணப்படும். ஆனால் அருகில் சென்று நோக்கும்போது அதன் ஒரு முனை கருப்பாக இருப்பது தெரியவரும். இதனை உவமையாகக் கொண்டார் வள்ளுவர். புறத்தில் நல்ல குணமுடையவரான வேடமும் உள்ளத்தில் அவநினைவும் உடையவர்கள் குன்றிமணியை ஒப்பார்கள் என்றார். புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு என்பது செய்தி.

மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் பல சமயம் புதிராக இருக்கிறது. வெளித்தோற்றத்தில் சிலர் உயர்ந்த நிலையில் மாண்புமிக்கவராய், மனிதப் பண்புகள் அனைத்தும் நிறைந்தவராய் இவ்வுலகிற்குத் தோற்றம் தருகின்றனர். அவர்களை உலகம் பண்பாளர்கள் என்று நம்புகிறது. ஆனால் அவர்களே நஞ்சுள்ளம் கொண்டு, பிறரை வஞ்சித்து வாழ்பவராய் இருக்கின்றனர். அந்தப் போலி மனிதர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று வள்ளுவர் தெரிவிக்கிறார். குன்றிமணியின் மூக்கு கறுத்திருப்பதை வஞ்ச மனத்தாருடைய அகம் கறுத்திருப்பதோடு வள்ளுவர் ஒப்பிட்டு' மூக்கில் கரியார்' எனக் காட்டுவது நம்மை இன்புறச் செய்கிறது. தண்டபாணிப் பிள்ளை 'குன்றி தன்நிறப் பகட்டால் அரிய மணியெனப் படினும் மணியொடுவைத் தெண்ணப்படாது. அங்ஙனமே கூடாவொழுக்கம் பிழைத்தோர் தம் வேடப் பகட்டால் அரிய துறவியாரெனப்படினும் துறவியரொடு வைத்தெண்ணப் படார் என்பதும் இவ்வுமையிற் பெற்றாம்' என நயம் உரைப்பார்.

இக்குறள் ஒரு பொதுக்கருத்தாக மாந்தர் பலருக்கும் பொருந்தி வரும் கருத்து கொண்டது என்றாலும் இயல்-அதிகாரம் கருதி தவப் போலிகளைப்பற்றியது என்றே கொள்வர். குன்றிமணி இருவேறுபட்ட நிறங்களைக் கொண்டிருப்பதைப்போல் வஞ்சத்துறவிகளிடமும் இரண்டு மாறுபட்ட குணங்கள் இருக்கும்; அவர்கள் வெளித்தோற்றத்தில் மென்மையாக இருப்பர். உள்ளுக்குள் கொடியவர்கள். போலித் துறவிகளுடைய தோற்றமும் உள்ளமும் முரண்பட்டு இருக்கும் என்பது கருத்து.

குன்றிமணியினைப் போல, புறத்தே தோற்றத்தில் செம்மையுடையராக இருந்தாலும், உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டவர்கள் உண்டு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கூடாஒழுக்கம் உடையவனை உடல் அளவால் காணமுடியாது.

பொழிப்பு

குன்றி மணி போலப் புறத்தே செம்மையுடையாராயினும் அதன் மூக்குபோல உள்ளத்தில் கருத்திருப்பார் உண்டு.