அழுக்காறாமை என்பது அழுக்காற்றின் அன்மை பெறுதல் அதாவது 'அழுக்காறு கொள்ளாமை' என்னும் கருத்தில் அமைந்தது. அழுக்காற்றுக்கு எதிர்மறை அழுக்காறாமை. அழுக்காறு என்ற சொல்லுக்குப் பொறாமை அதாவது பிறர் ஆக்கம் கண்டு பொறுக்கமுடியாத உளநிலை எனக் கொண்டு அழுக்காறாமை என்றதற்குப் பொறாமையின்மை என அனைத்து உரையாசிரியர்களும் பொருள் கூறினர்.
அழுக்கான ஆற்றில் (அதாவது வழியில்) உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. இது அழுக்காறு என்பதை அழுக்கு+ஆறு அதாவது அழுக்கு வழி என்று விரித்தலால் வருவது. ஆனால் ‘பேணாது அழுக்கறுப்பான்’ ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ ‘அழுக்கற்றகன்றாரும் இல்லை’ என வரும் இவ்வதிகாரத்துத் தொடர்களால் அழுக்கறு (மன மாசை அகற்று-பொறாமைப் படுதலைத் தவிர்) என்னும் பகுதி கொண்டது இச் சொல்லமைப்பு என்றும் தெரிகிறது.
'அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு எனநிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற்போன்று, அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. "அழுக்கற் றகன்றாருமில்லை" (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க.
அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயராகும். அது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அழுக்காறு கடும் பொறாமை. அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது' என்பார் தேவநேயப் பாவாணர்.
அழுக்காறாமை என்பதற்குப் பொறாமைப்படாதிருத்தல் என்பது பொருள். பிறரது புகழ், அறிவு, வலி, வெற்றி, உடைமை, நல்லூழ், நுகர்ச்சி, அழகு, பெருமை, துணிவு, நோயின்மை, போன்ற பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. இவற்றை மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாமலும் அவற்றைப் பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவது அழுக்காறு. அழுக்காறுடையர் இவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து களங்கப்படுத்தவும் செய்வர்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (குறள் எண்: 35) என்று குறளின் பாயிர அதிகாரத்துள் ஒன்றான அறன் வலியுறுத்தலில் கூறினார் வள்ளுவர். அழுக்காறு மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இடமாக விளங்குவதினால்தான் வள்ளுவர் தவிர்க்க வேண்டுவனவற்றுள் அழுக்காற்றுக்கு முன்னிடம் தருகின்றார். பெருமைமிக்க மனிதனாகத் திகழ்வதற்கு வேண்டிய அறப்பண்புகளுள் இன்றியமையாததாக விளங்குவது அழுக்காறின்மை. இவ்வதிகாரம் பிறராக்கம் கண்டு தன்உள்ளத்தில் கோணல்கள் அதாவது தீய எண்ணங்கள் தோன்றாமற் செய்தலை அறிவிக்க வந்தது.
'கல்வி, புகழ், தொழில் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்' என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர். இது போட்டி இருக்கலாம்; பொறாமை கூடாது என்பதைச் சொல்வதற்காக எழுந்தது. பொறாமை என்பது வேறு; போட்டி மனப்பான்மை வேறு. பிறரை ஒப்பீடு செய்து அவரினும் மிஞ்சவேண்டும் என நினைப்பது போட்டி மனப்பான்மை. போட்டிகள் நிறைந்த உலக வாழ்வில் ஊக்கம் பெறுவதற்காக எழுவது போட்டி மனப்பான்மை; போட்டியாளன் வெற்றிபெறுபவனை ஆராய்ந்து அவனிடமிருந்து நல்லவற்றைக் கற்றுத் தனது முன்னேற்றத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளுவான்; பிறர் வளருவதால் தானும் வளர்கிறோம் என்று நம்புவான்.
ஆனால் பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். பிறரின் நலனில் மனம் புழுங்குவான். மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க, தட்டிப் பறிக்க, களவு, பொய், சூது, வஞ்சகம், சூழ்ச்சி, வாதம், குறுக்குப் புத்தி, சினம், தன்னிரக்கம் ஆகியவற்றோடு பழி தூற்றச் செய்யும் முயற்சிகள் எல்லாம் மேற்கொண்டு அதன் மூலம் தான் உயர நினைப்பான். அவனுக்கு முன்னேற்றம் இருக்காது. பொறாமை அதைக் கொண்டவனது அழிவுக்கே வழிகோலும். போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு ஆக்கத்தில் குறைவு இல்லை.
பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் கடையாய பொறாமைக்காரனுக்கு வள்ளுவர் வழங்கும் ஒறுப்பு மிகக் கடுமையானது - அவன் சுற்றம் இழந்து உண்ணவும் உடுக்கவும் இன்றி கெட்டலைவான் என்கிறார்.
பொறாமையில்லாக் குணத்தையும் ஆக்கம் பெறுதலையும் தொடர்புபடுத்தியே பேசுகிறது குறள். இங்குள்ள பாடல்களிலும் மிகுதியாக ஆக்கம் அல்லது செல்வம் பெருகுதல் இவற்றுடனே அழுக்காறு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. பொறாமை நெஞ்சம் கொண்டு வளம் பெருக்கியவரும் இல்லை; அழுக்காறு இல்லாது கோடாத மனம் உள்ளவராய் இருந்தவர்கள் தாழ்ந்து போனதும் இல்லை என்பது வள்ளுவரது ஆய்வின் முடிவு.
அழுக்காறு என்னும் பொறாமையைக் குறிக்கும் சொல்லாட்சி, திருக்குறள் தவிர வேறு எந்தக் கழகநூல்களிலும் (சங்கநூல்களிலும்) வரவில்லை என்பார் பெருஞ்சித்திரனார்.
மேலும் அவர் 'பொறாமை என்னும் சொல்கூடப் பொறுத்துக் கொள்ளாமைப் பொருளில்தான் வந்துள்ளதே தவிர, திருக்குறளில் வரும் பொறாமைப்படும் 'அழுக்காறு' என்னும் பொருளில் எந்தக் கழகஇலக்கியத்தும் வரவில்லை. தொல்காப்பியத்துள் வரும் 'பொறாமை' (1206-8) என்னும் சொல்லும் 'பொறுத்துக் கொள்ளாமை'ப் பொருளிலேயே வருகிறது.
வெளிப்படையாகச் சொன்னால், பொறாமையுணர்வு தரும் எந்தச் சொல்லும் கழக இலக்கியங்களுள் இல்லை.
இந் நூலிலுங்கூட, இவ்வதிகாரத்தில் தவிர, பொறாமையுணர்வைக் குறிக்க வேறு சொற்கள் எங்கும் வரவில்லை..
....இச்சொல் வேறு கழக இலக்கியங்களுள் இப்பொருளில் எங்கும் பிறரால் கையாளப் பெறவில்லையாகலின், இந்நூலாசிரியரே இச்சொல்லை, இந்தப் பொருளில் உருவாக்கிக் கொண்டாராதல் வேண்டும் என்று கருதுதற்கு இடமுண்டு என்க' எனவும் கூறுகிறார் பெருஞ்சித்திரனார்.