மணக்குடவர் உரை:
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.
பரிமேலழகர் உரை:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
(கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)
வ சுப மாணிக்கம் உரை:
பொறாமைப்படுபவன் உண்மையில் வளர்கின்றானா? நல்லவன் கெடுகின்றானா? எண்ணிப்பார்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும், நினைக்கப்படும்.
பதவுரை: அவ்விய-அழுக்காற்று, பொறாமை, கோட்டமான, கோணலான, நடுவுநிலை கருதா; நெஞ்சத்தான்-உள்ளம் உடையவன்; ஆக்கமும்-வளர்ச்சியும், செல்வமும், மேன் மேல் உயர்தலும்; செவ்வியான்-நேர்மையானவன், நேரான உள்ளம் கொண்டவன்; கேடும்-அழிவும், இங்கு கேடுற்ற வாழ்வும் அல்லது வறுமையும் எனப் பொருள் கொள்வர்; நினைக்கப்படும்-ஆராயப்படும், எண்ணிப்பார்க்கப்படும்.
|
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும்;
பரிப்பெருமாள்: அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும்;
பரிதி: அழுக்கு மனத்தன் பெற்ற ஆக்கமும்;
காலிங்கர்: அழுக்காறாகிய உட்கோட்டம் கிடந்த நெஞ்சத்தானது ஆக்கமும்; [உட்கோட்டம்-மனக்கோணல்]
பரிமேலழகர்: கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்;
பரிமேலழகர் குறிப்புரை: கோட்டம் ஈண்டு அழுக்காறு.
'அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை கொண்ட மனமுடையானது செல்வமும்', 'பொறாமையுள்ள மனமுடையவன் செல்வமுடையவனாக இருப்பதையும்', 'பொறாமை நிறைந்த மனமுடையானது செல்வமும்', 'பொறாமை கொள்ளும் நெஞ்சுடையோன் செல்வமும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கோட்டத்தினை உடைய மனமுடையானது வளமையும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
செவ்வியான் கேடும் நினைக்கப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும். [விசாரிக்கப்படும்-இதன் ஏது யாது என்று ஆராயப்படும்]
பரிப்பெருமாள்: செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை இரண்டும் இல்லை என்றவாறு. காரணம் வேறே உண்டு என்று ஆராயப்படும் என்பாரும் உளர். 'அழுக்காறுடையான் கண் ஆக்கம் போன்றில்லை' (135) என்ற வேறோர் அதிகாரத்தும் கூறினார்.
பரிதி: ('இமைப்பிற் கெடும்' பாடம்) நல்ல மனத்தன் பெற்ற கேடும் இமைப்பிற் கெடும் என்றவாறு.
காலிங்கர்: மற்ற கோட்டமில்லாத செவ்வியானது கேடும் என்னும் இவை இரண்டும் விசாரிக்க, அவனுக்கு ஆக்கம் இல்லை; இவனுக்கு ஒருகேடும் இல்லை என்பதூஉம் பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின் 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.
மணக்குடவர்/பரிப்பெருமாள் 'செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்' என இப்பகுதிக்கு உரை கூறினர். பரிப்பெருமாள் தனது சிறப்புரையில் 'இவை இரண்டும் இல்லை' எனக் கூறி 'காரணம் வேறே உண்டு என்று ஆராயப்படும் என்பாரும் உளர்' எனவும் உரை செய்தார். பரிதி நினைக்கப்படும் என்பதற்கு இமைப்பிற்கெடும் எனப் பாடம் கொண்டதால் 'நல்ல மனத்தன் பெற்ற கேடும் இமைப்பிற் கெடும்' என்று உரை வரைந்தார். காலிங்கரும் 'கோட்டமில்லாத செவ்வியானது கேடும் விசாரிக்க, ஆக்கமும் இல்லை கேடும் இல்லை' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செம்மையுடையானது வறுமையும் அறிஞர்தம் ஆராய்ச்சிக்குரியன', 'பொறாமை இல்லாத செம்மையான மனமுடையவன் ஏழையாக இருப்பதையும் பார்க்கிறோம். இது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்தான்', 'செம்மை பொருந்தியவனது வறுமையும் உளவாயின், அவை பழவினைப் பயனென்று ஆராய்ந்து கருதப்படும்', 'பொறாமையற்றோன் வறுமையும் நல்லோரால் ஆராயப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செம்மையான மனமுடையவனது வறுமையும் ஆராயப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
'நினைக்கப்படும்' என்ற சொல் குறிப்பது என்ன?
நினைக்கப்படும் என்ற சொல்லுக்கு விசாரிக்கப்படும், இமைப்பிற் கெடும், விசாரிக்க அவனுக்கு ஆக்கம் இல்லை இவனுக்கு ஒருகேடும் இல்லை, ஆராயப்படும், ஆராய்ந்து பார்க்கப்படும், ஆராயத் தக்கவை, ஆராயப்படுதல் தக்கது, ஆராய்தலுக் குரியன, எண்ணிப்பார், ஆராய்ச்சிக்குரியன, ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்தான், ஆராய அவற்றின் இல்லாமைகள் புலப்படும், அவை பழவினைப் பயனென்று ஆராய்ந்து கருதப்படும், இவ்விருவர்தம் எண்ணங்களாலேயே இல்லாமல் ஒழிந்துவிடும், சிந்திக்கவும் சீர்திருத்தவும் உரியது, எக்கரணியம் பற்றி நேர்ந்தனவென்று ஆராயப்படும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பரிதி 'இமைப்பொழுதிற் கெடும்' எனப் பொருள் கொண்டார். இவ்வுரை 'இது ஒரு தற்காலிக காட்சிதான்; தொடர்ந்து நீடிக்காது கணப் பொழுதில் மறைந்துவிடும்' என்ற கருத்தைத் தருவது. இவ்வாறு பொருள் கொண்டால் அது, 'காத்திருந்து பார்; காட்சிகள் மாறும்' எனச் சொல்வதாகிறது. மற்றும் சிலர் 'நினைக்க' + 'படும்' என இரு சொல்லாகப் பிரித்துப் பரிதி போன்றே உரை செய்தனர். 'நினைக்கப்படும்' என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு பொருள் காண்டலே உலக வழக்கிற்கு ஏற்புடையது. 'நினைக்கப்படும்' என்பது வைக்கப்படும் (50), காணப்படும் (114), அஞ்சப்படும் (824), உணரப்படும் (1096) என்பனவற்றில் உள்ளபடி ஒரு சொல்லாகவே இருக்கவேண்டும் என்பதால் பரிதி உரை பொருத்தமற்றது என்பார் இரா. சாரங்கபாணி.
இச்சொல்லுக்கு ஆராயப்படும் என்று பொருள் கூறியவர்களே பெரும்பான்மையினர்.
கெட்டவன் செல்வம் சேர்ப்பதும் நல்லவன் நலிவடைவதும் அறநூல்கள் கூறும் கொள்கைக்கு மாறாவதால் அதற்குக் காரணம் பழவினையாகலாம் என்ற முடிவுக்கு வந்த பரிமேலழகர் 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார் என விளக்குவார்.
மற்றவர்கள் 'தீமை தீமைதான் பயக்குமென்பதில் ஐயமில்லை', 'இதற்கு (முரணுக்கு) வேறு காரணங்கள் உளவோ என ஆராய வேண்டும்', 'நினைக்கப்படும் என்பதால், வேறு நல்வினைகள் உளவோ என்று நினைத்துப் பார்க்கப்படும்', 'அரசின்முறை பிறழ்வாலும் இம்மாறுபாடுகள் நிகழலாம்', 'நல்லவர் கேடுறுவதற்கும் அவ்வியர் ஆக்கம் பெறுவதற்கும் மாந்த வாழ்க்கை எல்லைக்கு அப்பாற்பட்ட வெளி ஆற்றல்கள் எவையும் காரணமல்ல; சமுதாயத்தில் இருக்கும் சில தன்னல மனிதர்களும், அவர்கள் உருவாக்கிய முறையற்ற சமுதாய அமைப்பும், நெறியற்ற பொருளியல் நிறுவனங்களும், அவற்றை நடைமுறைப்படுத்துகிற கோல் கோடிய அரசுகளும், அவற்றைப் பற்றிக் கொண்ட கோணல் விதிகளும், இவற்றின் கலப்புத் தொடர்பால் விளைந்த பல சீர்கேடுகளும் அச்சீர் கேடுகளை முறையோடு அணுகி அறிவுடன் தீர்க்கப்படாததும் சமயவாதிகள் விதி, பழவினை என்று தந்த பொய் விளக்கங்களும் அடிப்படைக் காரணங்களாயின என்பது திருவள்ளுவத்தால் பெறப்படுகிறது', 'நெறி கெட்டவன் உண்மையில் வளர்கின்றானா? நேர்மையாளன் கெடுகின்றானா? என இவ்விருவரையும் எண்ணிப்பார்க்கச் சொல்கிறார்', 'இவர்களது எண்ணங்களாலேயே அவை இல்லாமல் ஒழிந்துவிடும்' என்று விளக்கினர்.
தண்டபாணி தேசிகர் கருத்துரை: 'பழவினை காரணமாக வந்ததா? என்று ஆராயப்படும் என்பதைக் காட்டிலும் 'செவ்வியான் முயற்சியின்றிச் சோம்பி இருத்தலாலும் வறுமை எய்தலாமே என்றும், அழுக்காறுடையான் முயற்சியன் ஆதலால், செல்வம் எய்தியிருக்கலாம் என்றும் சிந்திக்கலாம் என்பது கருத்தாகலாம்' என்பது.
ஆராயப்படும் என்று சொல்லப்பட்டதால் இச்செய்யுள்ளுக்கு முடிவு கூறாமல் விட்டுவிட்டாரா வள்ளுவர்? இல்லை. உறுதி செய்யப்பட முடியாத உண்மையைப் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது. எனவே அது மேலும் ஆராயப்படவேண்டும் என்கிறார் அவர்.
உலகியல் நமக்குச் சொல்லும் பாடம் அறத்திற்கு எதிரானதாகத் தோன்றும் நிலைமை ஒரு காலகட்டத்தில் முடிந்துபோகும் ஒன்றல்ல. அது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். “நினைக்கப்படும்” என்று சொல்லப்பட்டதால் முரண் பற்றிய ஆய்வும், காலத்துக்குத் தகுந்தவாறும், மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளுக்கேற்பவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்ல வருகிறார் வள்ளுவர்.
நினைக்கப்படும் என்ற சொல்லுக்கு ஆராயப்படும் என்பது பொருள்.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
தீய நெஞ்சினரின் ஏற்றமான வாழ்வும் நல்லோர்கள் அடையும் வீழ்ச்சியும் மாறாத உலகச் சூழல்தான்.
'நல்லவன் வளம்பெறுவான், கெட்டவன் துன்புறுவான்' என்பது அறம் சார்ந்த நம்பிக்கை. 'நல்லவை வாழவேண்டும்; தீயவை வீழவேண்டும்' என்ற அறக்கோட்பாடுகள் இந்நம்பிக்கையிலிருந்து தோன்றியனவே. மனித மேம்பாட்டிற்கான இத்தகைய அறங்களை நடைமுறைப்படுத்த, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் தேவையானவை என்பது, காலங்காலமாக உணரப்பட்டும், உணர்த்தப்பட்டும் வந்துள்ளன. வள்ளுவரும் அறங்களைக் கைக்கொள்வோர் நன்மையை யடைவர்; அவர் செல்வம் குறையாது, அவர் வாழ்க்கை கெடாது என்று கூறுபவர்தான். இது போன்ற நம்பிக்கை எல்லாச் சூழலிலும் இப்படித்தான் அமையும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடியவை எனச் சொல்ல முடியாது.
அழுக்காற்றை உளத்திற் கொண்டவன் பெறும் ஆக்கமும் மனத்துள் நேர்மையாக நடந்துகொள்பவன் உறும் கேடும் விளக்குவதற்கரிய புதிராகவே அறநூலுடையார்க்கிருக்கிறது. இது நூல்அறிவோடு முரண்படுகிற உண்மை.
அறநூல் கூறுவதற்கு மாறாக உள்ள இரு நிலைமைகளை வள்ளுவர் இக்குறளில் எடுத்துக்காட்டுகிறார்.
பண்பு இலான் பெற்ற செல்வம்... (பண்புடைமை 1000), நல்லார்கண் பட்ட வறுமை... (கல்லாமை 408) போன்ற வெளிப்படையாகக் காணப்படும் மற்ற சில சமுதாய முரண்களையும் வேறு இடங்களிலும் வள்ளுவர் கூறியுள்ளார். இந்த முரண்களுக்கு விடை காண்பது கடினம். சமயங்கள் கூறும் விதி, முற்பிறவி, வினைப் பயன்கள் ஆகியன சரியான விளக்கங்கள் ஆகா. பகுத்தறிவுக் கோட்பாடுகளினாலும் பயன் இல்லை. ஊழின் வலிமையை-இன்ப துன்பம், ஆக்கம் இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை-வள்ளுவர் ஏற்றாலும் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்; இத்தகைய ஆக்கங்களுக்கும் கேடுகளுக்கும் ஊழ்தான் காரணம் எனவும் அவர் சொல்லமாட்டார்.
அறக் குணங்களுக்கும் செல்வச் செழிப்புக்கும் தொடர்பு உண்டா, அது எப்படிப்பட்ட தொடர்பு, நிறுவப்படவேண்டிய அத்தொடர்பு ஏன் துண்டாகிக் கிடக்கின்றது என்று ஆராயப்படவேண்டும் என்கிறார் இக்குறளில்.
தெ பொ மீனாட்சிசுந்தரம் 'இக்காட்சி வெறும் காட்சிதான்; அதன் அடி வேரில் வேறுபட்ட ஒன்று உள்ளது. அந்தச் செல்வத்தின் உள்ளே அக நிம்மதி இருக்காது; வீழ்ந்தாலும் அதன் உள்ளே துன்பம் இருக்காது. காலிங்கரின் இந்த விளக்கம் வள்ளுவரின் மனத்துக்கு அருகில் வருகின்றது' என்று சொல்லி அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (குறள் 170 பொருள்: பொறாமையால் வளமை வருவதில்லை. பொறாமையில்லாதவர்கள் நன்மையை அடையாமல் போவதில்லை) என்று குறள் சொல்லும் எனவும் கூறினார்.
அழுக்காறு காரணமாகத் தான் பொறாமைக்காரனுக்கு செல்வம் சேர்ந்ததா? நல்லவன் கேடுற்றது அவன் நேர்மையாளனாக இருப்பதால்தானா? இவற்றை ஆராய்ந்தால் சீரும் இறக்கமும் வேறுபல ஏதுக்களால் உண்டாயின என்பது தெரியவரும். நன்மை தீமை என்பன சமூக வாழ்க்கைக்காக உண்டான அறக்கருத்துக்கள்; நல்லவர்களுக்கு நன்மைதான் ஏற்படவேண்டும்; தீயவன் கேடுறவேண்டும் என்பது நாம் விரும்புவது. ஆனால் நல்லவனாக இருந்தால் செல்வம் தானாக வந்துவிடும்; கேடுற்றபவன் ஆக்கம் அதுவாக நீங்கி விடும் என்பதாக இல்லை உலகியல்பு.
'நான் நல்லவனாக இருக்கிறேன்' என்று சோம்பி இருந்தால் உயர்வு கிட்டுமா? பொறாமைப்படுபவன் முயற்சியுடைவனாக இருப்பதால் செல்வம் அடைந்திருக்கலாம்.
செல்வம் படைத்தவனைப் பார்த்து ஆற்றமாட்டாமல் புலம்பிக் கொண்டிருந்தால் வளர்ச்சி ஏற்படாது. ஒருவரது திறமை, கல்வி, பட்டறிவு இவற்றிற்குண்டான வகையில் முயற்சி மேற்கொண்டால் மேன்மை உண்டாவது உறுதி.
சமுதாய நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அது வேறுவகையில் நினைக்கப்படும். தனி நிலையில் ஒருவன் அழுக்காற்றை அகற்றி தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வெற்றியும் தோல்வியும் முயற்சி, முயற்சியின்மை இவற்றால் விளைவன; எனவே தீய எண்ணங்களை விலக்கி முயற்சியில் ஈடுபடு. இது இக்குறள் கூறும் செய்தி.
|