இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0168



அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:168)

பொழிப்பு (மு வரதராசன்):: பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்.

மணக்குடவர் உரை: அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும்.
ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
(பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமையாகிய பாவம் செல்வம் கெடுத்துத் தீய வழியிலும் கொண்டுபோய் விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்.

பதவுரை: அழுக்காறு-(பிறர் ஆக்கம்) பொறாமை; என-என்ற, என்று சொல்லப்படும்; ஒருபாவி-ஒப்பில்லாத தீச்செயலால் கொடியது, பெரும்பாவம்; திரு-செல்வம்; செற்று-அழித்து; தீயுழி-தீய இடம், நரகத்தின் கண்; உய்த்துவிடும்-கொண்டு சேர்த்துவிடும், திண்ணமாகச் செலுத்தும்.


அழுக்காறு எனஒரு பாவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி;
மணக்குடவர் குறிப்புரை: ஒரு பாவி- நிகரில்லாத பாவி.
பரிதி: மனவழுக்கு என்றொரு பாவம்; [மன அழுக்கு -மனத்தின் குற்றம்]
பரிமேலழகர்: அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி;
பரிமேலழகர் குறிப்புரை: பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின்.

'அழுக்காறென்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை என்னும் ஒப்பற்ற பாவி', 'அழுக்காறு என்ற பெரும் பாவம்', 'பொறாமை என்னுங் கொடுமையில் ஒப்பற்ற பாவி', 'பொறாமை என்று சொல்லப்படும் பெரிய பாவி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமை என்னும் பெரும் பாவம் என்பது இப்பகுதியின் பொருள்.

திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். [தீக்கதியுள்ளும் - பாவநெறிகளிலும்]
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
பரிதி: தன்னிடத்தில் லட்சுமியையும் அகற்றி மறுமைக்கு நரகத்தையும் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.

'செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத்தைக் கெடுத்துத் தீய இடத்துக் கொண்டு செலுத்தும்', 'செல்வத்தை அழித்துத் தீமைகளுக்குள் தள்ளிவிடும்', 'தன்னை உடையானது செல்வத்தை இம்மையில் கெடுத்து மறுமையிலும் துன்பத்துள் செலுத்திவிடும். (செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் புகுத்தி விடும் என்றலும் ஒன்று.)', 'செல்வத்தை அழித்துத் துன்பத்தின் கண் செலுத்திவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வத்தை அழித்துத் தீய இடத்துக் கொண்டு தள்ளிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாமை என்னும் பெரும் பாவம் செல்வத்தை அழித்துத் தீயுழி தள்ளிவிடும் என்பது பாடலின் பொருள்.
'தீயுழி' குறிப்பது என்ன?

பொறாமையானது ஒருவனை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிடுவது திண்ணம்.

அழுக்காறு என்ற கொடும்பாவம் அதனைக் கொண்டவனது செல்வத்தை அழித்து அவனைத் தீய நிலைக்குத் தள்ளி விடுகிறது.
பொறாமை எனும் ஓர் பாவி, கொண்டவனின் செல்வத்தைச் சிதைத்துத் தீய இடத்தில் அதாவது தீமையுள் ஆழ்த்தி விடும். பொறாமையை 'ஒரு பாவி' என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். 'ஒரு பாவி' என்றதால் அது ஒப்பில்லாத பாவி எனப் பொருள்படும். அவ்வளவு கொடுமையானது அது. அழுக்காறு வேறு-பாவி வேறல்ல என்ற கருத்தை விளக்குவதற்காக 'என ஒரு பாவி' என்று குறிப்பிட்டார் எனவும் கூறுவர். பாவி என்ற சொல் கொடியவன் என்ற பொருள் தருவது. அழுக்காறு ஒரு கொடியனாக உருவகப்படுத்திக் காட்டப்படுகிறது. கொடுஞ்செயல்கள் புரிகின்றவனப் பாவி என்று இழித்துக் கூறும் வழக்கம் உள்ளது. அது ஒருவனது உள்ளிருந்து தீச்(பாபச்) செயல்களைத் தூண்டிக் கொண்டிருக்கும். அப்பாவியானவன் அழுக்காறு கொண்ட கொடியவன் உள்ளத்தில் குடிகொண்டு முதலில் அவனது செல்வத்தை அழிக்கும்; பின்னர் அவனாற்றும் பாவச்செயல்கள் அவனைத் தீய இடத்தில் உறுதியாகச் செலுத்திவிடும்.
பிறர் பெற்ற செல்வம், கல்வி, புகழ் போன்றவற்றைக் கண்டு மனம் புழுங்கி அவர்களைப் போல நன்கு முயன்று பெறத் தனக்கு ஆற்றல் இல்லாமையால் தோன்றுவதே அழுக்காறு. அக்குணமாவது சினம், பேராசை, களவு, பொய், பகை, சூது, சூழ்ச்சி, நிறைவின்மை, குறுக்கு வழிகள் போன்ற அனைத்துக் கீழ்மையான எண்ணங்களைக் கிழைத்தெழச் செய்து, எல்லாக் கேடுகளையும் உண்டாக்க வழிவகுக்கும். பொறாமை கொண்டவன் அப்பிறருடைய செயல்களுக்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து அவைகளைக் களங்கப்படுத்துவான். அவர்களது முன்னேற்றத்தைத் தடை செய்யவும் அவர்களை முற்றிலுமாக அழிப்பதிலுமே தன் நேரத்தையும் ஆற்றலையும் செலவழிப்பான். இவ்வாறாக அவனுக்குத் தன்னை மேம்படுத்திகொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. இதன் விளைவாக இவனது ஆக்கமும் முன்னேற்றமும் தடைப்படும்; செல்வம் அழியும். இதையே 'திருச்செற்று' என்ற தொடர் குறிக்கிறது. நீங்கிய செல்வத்தை ஈடுகட்டும் நோக்கிலும் அழுக்காறு காரணமாகவும் தீச்செயல்கள் பல புரிவான். இது 'தீயுழி' உய்ப்பது. 'தீயுழி உய்த்துவிடும்' என்ற தொடர் அது முடிந்த உண்மையான கருத்து என்பதை உணர்த்தவந்தது.

அழுக்காறு கொண்டவனுக்கு செல்வம் சேராது என்று வள்ளுவர் திடமாக நம்பினார் எனத் தெரிகிறது. இப்பாடல் தவிர்த்து, பொறாமையையும் செல்வத்தையும் இணைத்து வேறு பல குறள்களும் உள்ளன. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு(ஒழுக்கமுடைமை குறள் எண்:135 பொருள்: பொறாமை உள்ளவனிடத்தே வளர்ச்சி இல்லாதது போல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை) என்கிறது மற்றொரு அதிகாரப்பாடல் ஒன்று. இவ்வதிகாரத்துப் பாடல்களான அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (குறள் 167: பொருள்: அழுக்காறு உடையவனிடத்திருந்து செல்வம் நீங்கும்), அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (குறள் 168: பொருள்: பொறாமை கொள்ளும் நெஞ்சுடையோன் செல்வமும் பொறாமையற்றோன் வறுமையும் ஆராயப்படும்), அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (குறள் 170: பொருள்:பொறாமையினால் செல்வராயினாரும் இல்லை; பொறாமையில்லாமல் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை.) என்பனவும் செல்வத்தையும் அழுக்காற்றையும் தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டவை.

குறளில் இரண்டு இடங்களில் பாவி உருவகம் செய்யப்படுகிறது. ஒன்று இங்கு சொல்லப்படும் அழுக்காறு என்பது. பிறிதொன்று வறுமை. இன்மை எனஒரு பாவி...... (1042) என்பதில் வறுமையையும் பாவியென வெறுப்புடன் குறிக்கிறார் வள்ளுவர். இவ்விரண்டுக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. அழுக்காறே ஒருவனது வறுமைக்கு வழிவகுக்கும்.
தேவநேயப்பாவாணர் பாவி என்றதை கரிசன் (ஆண்பால்) என்ற சொல்லால் குறிக்கிறார். மேலும் பாவம் என்ற சொல்லைக் கரிசி என்றும் பெண்பால் பாவி என்ற சொல்லைக் கரிசு என்றும் குறிப்பிடுகிறார்.

'தீயுழி' குறிப்பது என்ன?

'தீயுழி' என்ற சொல்லுக்குத் தீக்கதி (பாவநெறி), நரகம், தீய வழிகள், தீய வழி, தீய இடத்து, தீமை, துன்பம், துன்பத்தின் கண், தீமைக்குப் பாதை, நெருப்பு, வறுமையுள், தீயநெறியில், எரிவாய்நிரயம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'மறுமைக்குறிப்பு, குறளகத்தின்மையால் ‘தீயுழிக்கு’ நரகம் எனப் பொருள் கூற வேண்டுவதின்று. வள்ளுவர்க்கு மறுமையில் நம்பிக்கை யுண்மை கண்டு பரிமேலழகர் முதலிய பழைய உரையாசிரியர்கள், அங்ஙனம் பொருள் கண்டுள்ளனர்' என்றார் இரா சாரங்கபாணி. இச்சொற்குக் காணப்படும் பொருள்களுள், தீமையுள், தீயநெறியுள் என்பன கொள்ளத் தகும் எனவும் அவர் கூறினார்.
''உழி' என்பது இடப்பொருளையுணர்த்தும் உருபிடைச் சொல்லாய்ப் பெயரைச் சார்ந்து வருவதன்றித் தனியே இடம் என்ற பொருளை யுணர்த்தாது. ஆகவே தீயுழி-என்பது அனைத்தும் ஒரு சொல்லாய்த் தீய இடமாகிய நரக முதலியவற்றை உணர்த்தியது எனலாம்' என்பது தண்டபாணி தேசிகர் கருத்து.

'தீயுழி' என்றதற்கு தீய இடத்து என்பது பொருந்தும்.

பொறாமை என்னும் பெரும் பாவம் செல்வத்தை அழித்துத் தீய இடத்துக் கொண்டு தள்ளிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமை ஒருவனை இருள் சேர்ந்த இன்னாவுலகம் புகவிடாமல் தடுக்கும்.

பொழிப்பு

பொறாமை என்னும் பாவம் செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியிலும் கொண்டுபோய் விடும்.