இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0166



கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:166)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

மணக்குடவர் உரை: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.
இது நல்குரவு தருமென்றது.

பரிமேலழகர் உரை: கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)

வ உ சிதம்பரனார் உரை: (ஒருவனுக்கு மற்றொருவன்) கொடுப்பதன்கண் பொறாமை செய்பவன், சுற்றத்தோடு உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெடுவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பதவுரை: கொடுப்பது-கொடுத்தல், கொடுத்து உதவுவது; அழுக்கறுப்பான்-பொறாமைப்படுகிறவன், பொறாமையால் தடுப்பவன்; சுற்றம்-சுற்றத்தார், கிளைஞர்; உடுப்பதூஉம்-உடுத்திக் கொள்வதும், உடுக்க உடையும்; உண்பதூஉம்- உண்ணப்படுவதும், உண்ண உணவும்; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம்;
பரிதி: ஒருவர்க்கொருவர் செய்யும் உபகாரம் கண்டு பொறாதமனத்தனுக்கும் அவன் சுற்றத்தார்க்கும்; [உபகாரம் - உதவி]
காலிங்கர்: ஒருவர்க்கொருவர் செய்யும் உபகாரம் கண்டு பொறாத மனத்தனுக்கும் அவன் சுற்றத்தார்க்கும்;
பரிமேலழகர்: ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;
பரிமேலழகர் குறிப்புரை: கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். [அழுக்கறுத்தல் -பொறாமையுறுதல்]

'கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம்' என்று மணக்குவர் இப்பகுதிக்கு உரை நல்கினார். மற்றவர்கள் 'ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்' எனப் பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனது சுற்றத்தாரும்', 'பிறர்க்குக் கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் மட்டுமன்றி, அவனுடைய சுற்றமும்', 'பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவனுடைய குடும்பம்', 'பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனும் அவனது சுற்றமும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் என்பது இப்பகுதியின் பொருள்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்குரவு தருமென்றது.
பரிதி: உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம். [இழப்பிக்கும் - இழக்கச் செய்யும்]

'உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உணவுஉடை இன்றி அழிவர்', 'உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும்', 'உடையும் உணவும் இல்லாது வருந்தி ஒழியும்', 'உணவும் உடையுமின்றிக் கெடுவார்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடையும் உணவும் இல்லாது கேடு அடையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடையும் உணவும் இல்லாது கெடும் என்பது பாடலின் பொருள்.
'சுற்றம்' குறிப்பது என்ன?

யாரோ யாருக்கோ எதையோ கொடுத்து உதவுகிறார், அதில் உனக்கென்ன ஆற்றாமை?

பிறருக்குக் கொடுக்கப்படுவதைக் கண்டு பொறாமைப்படுகின்றவன் சுற்றமும், உடுப்பதற்கு உடையும், உண்பதற்கு உணவும் இல்லாமல் அழிவான்.
ஒருவர் நல்ல உள்ளத்துடன் தேவைப்படுவர்க்குப் பொருள் கொடுத்து உதவி செய்ய முன்வருகிறார். அந்தப் பொருள் கொடுக்கப்படுவது கண்டு பொறமல் அதைக் கொடுக்கவிடாமல் தடுக்கிறான் இன்னொருவன். பிறர் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படுவது மட்டுமல்லாமல் அவர் உதவிசெய்வதையும் தடுப்பவனைக் 'கொடுப்பதுஅழுக்கறுப்பான்' என அழைத்து, அவன் சுற்றத்தொடு வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உடுப்பதூஉம் உண்பதூஉம் இல்லாத வறியநிலை எய்தி அழிவான் எனத் திட்டுகிறார் வள்ளுவர்.
இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுக்கிறான். தனக்கும் வேண்டியிருந்தால், அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து இன்னொருவன் பெறுகிறானே என்பதைப் பொறுக்கமுடியாமல் அதை ஏன் தடுக்க வேண்டும்? இதைக் கொடிய குற்றமாகக் கருதி கடுஞ்சொற்களால் வைது, மனமாசுடன் கூடிய அந்தக் கீழானசெயலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் வள்ளுவர் கூறிவிடுகிறார்.
பலவற்றின் மேல் மாந்தர் பொறாமை கொள்கின்றனர். அவற்றுள் 'கொடுப்பது' கண்டு பொறாமைப்படுவதை விதந்தோதுகிறார் வள்ளுவர் இங்கு. ஒருவன் ஈயாவிட்டாலும் மற்றவர் ஈவதைக கண்டு மனத்தால் பொறுத்துக்கொள்ளவேண்டும்' என அறம் பகர்கிறார்.

கொடுப்பது என்பதற்கு ஈகையாகப் பொருள் தருவது என்பது பொருள். இதற்கு நல்லூழும் முயற்சியின்மையும் 'கொடுக்கும்' செல்வம் என்றும் பொருள் கூறினர். ஈகையால் கொடுக்கப்படும் பொருள் என்பதே பொருந்தும்.
'கொடுப்பது அழுக்கறுப்பான்' என்றதற்குக் 'கொடுப்பது கண்டு பொறாமை கொள்பவன்' என்றும் 'கொடுப்பதைப் பொறாமை கொண்டு தடுப்பவன்' என்றும் இருவிதமாகப் பொருள் கூறுவர். ஈவது விலக்கேல் (ஆத்திச்சூடி 4: பொருள்: ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே) என ஔவையார் கொடை தருவதைத் தடுப்பது பற்றிச் சொல்வார். இங்கும் 'கொடுப்பதைப் பொறாமை கொண்டு தடுப்பவன்' எனக் கொள்வதே சிறக்கும்.

ஒருவன் பெற்று வாழ்ந்துவிடக் கூடாது என்று கொடுக்கும் கையை வஞ்சித்துத் தடுப்பவன் பொறாமைக்காரர்களுள் மிகவும் இழிவானவன். எனவேதான் கேடு அடைவதில் கடையான உண்பதற்கும் உடுத்துவதற்கும் எதுவுமே கிடைக்காத ஏழ்மை நிலையை அந்த அழுக்காறுடையான் அடைவான் என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு உணவும் உடையும் இல்லாத நிலை, வீடு, நிலம், தொழில், பணம், பண்டம் முதலிய அனைத்தும் இழந்த பிறகே ஏற்படும். ஆதலின் இக்கேடு பெருங்கேடு ஆகும். அருள் நெஞ்சம் கொண்ட வள்ளுவரையே கடும் சினம் கொண்டு கொடுப்பது அழுக்கறுப்பான் இந்நிலை எய்துவான் எனக் கூறவைக்கிறது.
குறள் சில இடங்களில் அறம் ஒறுத்தலைச் சொல்லிச் செல்லும். அவற்றில் இது ஒன்று.


'சுற்றம்' குறிப்பது என்ன?

இப்பாடல் சுற்றம் கெடும் என்று சொல்கிறது. சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது அதாவது சுற்றமும் கெடும் என இதை வாசிக்கவேண்டும் என்பர். சுற்றம் கெடும் எனின் பொறாமைக்காரனுக்கு என்ன ஆகும்? காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (இறைமாட்சி குறள் 386) என்னும் பாடலில் நிலத்தை மீக்கூறும் எனவே மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாமலே பெறப்பட்டது என்பது போல இங்கும் பொறாமைக்காரனது கேடும் சொல்லாமலேயே பெறப்பட்டது அதாவது 'பொறாமையாளனும் அவனது சுற்றமும்' கெடும் என இக்குறள் சொல்கிறது என்பர்.
சுற்றம் என்பது குடும்பத்திலுள்ளோர், நண்பர்கள், உறவுகள் ஆகியோர் பற்றியது. இக்குறளில் கூறப்பட்டுள்ள சுற்றம் இவர்களைக் குறிப்பதாகவே பலரும் கூறியுள்ளனர். பிறர் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்பட்டுத் தடுப்பவனும், அவனது சுற்றமும் உண்பதற்கும், உடுத்துவதற்கும் வழி வகையின்றிக் கெடும் எனவும் இக்குறட்கருத்தை இவர்கள் விளக்கினர்.

கொடுப்பதைத் தடுப்பது தீதாதலால் அழுக்கு மனம் கொண்டவன் கெடுவான் என்பது சரி. அவனது சுற்றம் ஏன் கெடவேண்டும்? இது என்ன வகை அறம்? என்ற கேள்விகள் எழுகின்றன.
'சுற்றம் கெடும்' என்பதனை 'ஓரிடத்து நீர் பக்கத்துக்குக் கசிந்து செல்லுமாப் போல, ஒரு குடும்பத்தின் நல்லவும் தீயவும் உறவுக் குடும்பங்களைச் சார்ந்து பற்றும்', 'ஒருவனுடைய ஒழுகலாற்றுக்கு அவன் வாழும் சுற்றமும் சமுதாயத்தின் சூழ்நிலைகளும் காரணம் என்பதால் 'சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉமின்றிக் கெடும்', 'வெறும் பொறாமையினால் வரும் பாவம் இவனோடு நிற்கும். பிறருக்குத் தானங் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுவதனால் வரும் பாவம் இவனை மட்டுமல்ல இவனுடைய குடும்பத்தையும் தொடரும் என்பது கருத்து.' என்று விளக்கினர். 'செய்தவினை செய்தவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்த அனைவரையும் சமுதாயத்தையும் கெடுக்கும்' போன்றது வள்ளுவர் கருத்தாக இருக்கமுடியாது என்று எண்ணியவர்களில் சிலர் மாற்றுரையாகச் 'சுற்றம் உடுப்பதூஉம்' என்பதற்குச் சுற்றமாகிய ஆடையையுடுப்பதும்' என உருவமாகக் கொண்டு உரைத்தலும் ஆம்' என உரைத்தனர். இதுவும் பொருத்தமாகப் படவில்லை.
வேறு சில உரைகள்: 'பொறாமை கொள்ளும் குணம் படைத்த ஒருவனை, அவனது சுற்றத்தாரும் வெறுத்து ஒதுக்கி விடுவர்; அவனைச் சுற்றி எவருமே இரார்; ஆதலின் அவனுக்கு 'சுற்றம் கெடும்' என அவன் சுற்றத்தாரையும் இழப்பர்' என்ற பொருளில் கி ஆ பெ விசுவநாதம் இக்குறளை விளக்குவார். வ உ சிதம்பரனாரும் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் என்பதை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு 'கொடுப்பது அழுக்கறுப்பான் தன் ஆக்கத்திற்கு ஆதாரமான சுற்றத்தையும், தன் உடையையும் உணவையும் இழப்பன்' எனக் கருத்துரை வழங்கினார்.
பொறாமை கொள்வானது சுற்றமும் கெடும் என்பதினும் அவன் சுற்றமும், உடுப்பதும் உண்பதுமின்றிக் கெடுவான் என்பது சிறப்பாய் உள்ளது.

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடையும் உணவும் இல்லாது கேடு அடைவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமை கேடு நேராமல் காக்கும்.

பொழிப்பு

கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றிக் கெடும்.