இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0163



அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:163)

பொழிப்பு (மு வரதராசன்): தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத்தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்.

மணக்குடவர் உரை: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.
இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய்வான்.
('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

வ சுப மாணிக்கம் உரை: தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவனே மற்றவன் வளர்ச்சிக்குப் பொறாமைப்படுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்.

பதவுரை: அறன்-அறம், நற்செயல்; ஆக்கம்-செல்வம்; வேண்டாதான்-விரும்பாதவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன், சொல்கிறவன்; பிறன் -மற்றவன்; ஆக்கம்-செல்வம், வளர்ச்சி; பேணாது-பாராட்டாது, விரும்பாமல்; அழுக்கறுப்பான்-பொறாமை கொள்பவன்.


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான்;
பரிதி: தனக்குத் தன்மத்தின் ஆக்கமாகிய செல்வம் வேண்டாதார் என்பார்; [தன்மம் - அறம். தருமம் என்பதன் மரூஉ]
காலிங்கர்: தனக்கு மறுமை இன்பக் காரணமாகிய அறனும் மற்று இம்மை இன்பக் காரணமாகிய செல்வமும் என்னும் இவை இரண்டினையும் விரும்பாதான் என்று சான்றோரால் சொல்லப்படும் அவன் யாவனோ எனின்;
பரிமேலழகர்: மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்;

'அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான்' என்றபடி மணக்குடவரும் இப்பகுதிக்கு உரை நல்க, காலிங்கரும் பரிமேலழகரும் இம்மைக்கு செல்வமும் மறுமைக்கு அறமும் விரும்பாதவன் என உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் செல்வமும் வேண்டாதவன் எனப்படுபவன்', 'தர்ம பலத்தை இகழ்ந்து விடுகிறவன்தான்', 'தனக்கு அறத்தையும் பொருளையும் விரும்பாதவன் என்று கருதப்படுவான்', 'அறனும் செல்வமும் விரும்பாதவன் என்று கருதப்படுவான் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறவாழ்வு விரும்பாதவன் எனப்படுபவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.
பரிதி: பிறர் செல்வங்கண்டு அழுக்கு மனத்தாராவார் என்றவாறு.
காலிங்கர்: பிறனொருவன் ஆக்கத்தை விரும்பாது மற்றவன் கண்ணே தமது உள்ளத்து உள்ள அழுக்கினை விடுகின்றவன் என்றவாறு.
பரிமேலழகர்: பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உவவாது அழுக்காற்றைச் செய்வான். [உவவாது - மகிழாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.

'பிறர் செல்வங்கண்டு அழுக்கு மனத்தாராவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனது செல்வத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுவான்', 'இன்னொருவனுடைய நல்வாழ்வை விரும்பாமல் பொறாமைப்படுவான்', 'பிறருடைய செல்வத்தைக் கண்டு உவந்திராது பொறாமை கொள்வான்', 'பிறனுடைய செல்வம் கண்டு பொறாமைப்படுகிறவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறனாக்கம் வேண்டாதான் எனப்படுபவன் மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'அறனாக்கம் வேண்டாதான்' யார்?

பொறாமைப்படுபவனுக்கு நல்லுயர்வு கிட்டாது.

மற்றவர் நலன் கண்டு மனம் பொறாமைப்படுபவன் அறவழியில் உண்டாகும் தனது நல்வளர்ச்சியை விரும்பாதவனாக இருப்பான்.
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனாகவே இருப்பான். அறவாழ்வு வேண்டாம் என்றிருப்பவன் பிறன் பெற்ற நலங்களைக் கண்டு உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பான்.
'பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்' என்றதனால் பிறர் வளர்ச்சியைப் பாராட்டாமல் இருப்பதும் பொறாமை எனக் கருதவேண்டும் என்றும் அப்படிப் பொறாமை கொண்டவனுக்கு அறப்பெருக்கம் தரும் வாழ்வு அமையாது என்றும் கூறுகிறார் வள்ளுவர் இங்கு. அவ்வாழ்வை இகழ்பவர் அதனால் விளையக்கூடிய நன்மைகளும் தனக்குத் தேவையில்லை என்று நினைப்பர். அத்தகைய பொறாமைக்காரர்களுக்கு அறவாழ்வு கிட்டாது என்பதை அவர்களுக்கு உணர்த்தும்விதமாக, அவர்கள் அதை வேண்டாமென்பார்கள் என்கிறார் வள்ளுவர். ஆக்கம் என்ற சொல் பரந்துபட்ட பொருள் கொண்டது. பணம், செல்வம், வீடு, வாசல், நில, புலன் இவை மட்டும் அல்ல ஆக்கம் என்பது. ஒருவனின் புகழ், கல்வி, பிள்ளைகள், குடும்பம் எல்லாமே ஒருவனின் ஆக்கம்தான். மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்கு, அறிவுடைமை போன்றவற்றைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். அதுவே பாராட்டுகின்ற குணமாம். அதுவே அறவாழ்வை நல்கி முன்னேற்றம் தரும்.

தனக்கு நற்பேறு வேண்டாம்; வளர்ச்சி வேண்டாம் என்று துணிந்தவனே அழுக்காறு கொள்வான் என்கிறார் வள்ளுவர்.

'அறனாக்கம் வேண்டாதான்' யார்?

'அறனாக்கம் வேண்டாதான்' என்ற தொடர்க்கு அறனாகிய வாழ்வு வேண்டாதான், தன்மத்தின் ஆக்கமாகிய செல்வம் வேண்டாதார், இன்பக் காரணமாகிய அறனும் மற்று இம்மை இன்பக் காரணமாகிய செல்வமும் என்னும் இவை இரண்டினையும் விரும்பாதான், மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான், அறமாகிய ஆக்கம் வேண்டாமென்பவன், தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவன், அறமும் செல்வமும் வேண்டாதவன், அறத்தின் நன்மைகளை விரும்பாதவன், தனக்கு அறத்தையும் பொருளையும் விரும்பாதவன், இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவன், அறத்தையும் பொருளையும் விரும்பாதவன், அறமும் பொருளும் வேண்டாதவன், (உயிர்த்துணையாம்) அறத்தையும் (வாழ்வுத்துணையாம்) நலங்களையும் தனக்கு வேண்டாதவன் என உரையாசிரிரியர்கள் பொருள் கூறினர்.

நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கும் 'நற்பேற்றை' அறத்தின் பயன் எனக் கூறுவது வழக்கு. அதையே வள்ளுவர் இங்கு அறனாக்கம் என்கிறார் என்பர்.
இப்பாடலிலுள்ள பிறனாக்கம் என்றதற்கு பிறனது ஆக்கம் எனவே பொருள் கொள்வர். அதுபோல அறனாக்கம் என்ற தொடர்க்கு அறனது ஆக்கம் என்று ஆறாம் வேற்றுமைத் தொகையாகப் பொருள் கொள்வது இயல்பானது. ஆனால் பல உரையாசிரியர்கள் அறனாக்கம் என்பதை உம்மைத் தொகையாகக் கொண்டு அறனும் ஆக்கமும் எனப் பொருள்கொண்டனர். இதுவும் சிறப்பாக உள்ளது.
'அறனாக்கம் வேண்டாதான்' என்ற தொடர் அறவழியை இகழ்பவன் என்ற பொருள் தருவதாகிறது.

'அறனாக்கம் வேண்டாதான்' என்ற தொடர் அறநெறி வாழ்க்கையால் பெறக்கூடிய உயர்வை அல்லது மேன்மையை நினையாதவன் எனப் பொருள்படும்.

அறவாழ்வு விரும்பாதவன் எனப்படுபவன் மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அழுக்காறாமை நற்பேறுகளை உண்டாக்கும்.

பொழிப்பு

தனக்கு அறவாழ்வு வேண்டாம் என்பவனே மற்றவன் ஆக்கத்துக்குப் பொறாமை கொள்வான்.