இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0162விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:162)

பொழிப்பு: யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை.
இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

பரிமேலழகர் உரை: யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை.
(அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: யார் மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை.


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை:
பதவுரை: விழு-சீரிய; பேற்றின்-பேறுகளுள், பெறுகின்ற வாய்ப்புகளுள்; அஃது-அது; ஒப்பது-போல்வது; இல்லை-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விழுமிய பேறுகளுள் அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை;
காலிங்கர்: தாம் விழுமியவாகப் பெறும் பேற்றின் மற்றதனை ஒப்பது ஒன்றும் இல்லை;
பரிமேலழகர்: மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை;

'தாம் விழுமியவாகப் பெறும் பேற்றின் மற்றதனை ஒப்பது ஒன்றும் இல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அடையும் சிறந்த பேறுகளுள் அதனை ஒப்பது வேறில்லை', 'விரும்பத்தக்க மேலான செல்வங்களுள் அதற்கு இணையானது வேறில்லை', 'அவன் பெறுதற்குரிய மேலான ஊதியங்களுள் அதனைப் போல்வது பிறிதியாதும் இல்லை', 'அதுவே பெருஞ்செல்வம்; அச்செல்வத்திலும் சிறந்த செல்வமில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் பெறுதற்குரிய சிறந்த பேறுகளுள் அதனை ஒப்பது வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்:
பதவுரை: யார்மாட்டும்-எல்லார் இடத்தும்; அழுக்காற்றின்-பொறாமையினின்றும்; அன்மை-அல்லாமை; பெறின்-அடைந்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.
பரிதி: பெருமை, கல்வி, அறிவுடைமைக்கு மனத்தில் அழுக்காகிய ஒருவர்க்குப் பொல்லாங்கு செய்வோம் என்பதை விடுதல் நன்று என்றவாறு.
காலிங்கர்: யாவர் மாட்டாயினும் தமது உள்ளத்து அழுக்காறு இல்லாமையாகிய பெறும்பேறு உளதாகப் பெறுவார் அல்லது.
காலிங்கர் குறிப்புரை: பெரிய கல்வி யறிவுடைமைக்கு மனத்தில் அழுக்காகி ஒருவர்க்குப் பொல்லாங்கு செய்வோம் என்பதை விடுதல் நன்று என்பது கருத்து.
பரிமேலழகர்: யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.

'யாவர் மாட்டாயினும் தமது உள்ளத்து அழுக்காறு இல்லாமையாகிய பெறும்பேறு உளதாகப் பெறுவார் என்றால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால்', 'யாருடைய நன்மை கண்டும் பொறாமை கொள்ளாத மனப்பண்பை அடைந்துவிட்டால்', 'யாரிடத்திலும் பொறாமை யற்றிருத்தலை ஒருவன் பெறவல்லனாயின்', 'எவரிடத்தும் பொறாமை கொள்ளாமலிருந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவரிடத்தும் பொறாமை இல்லாமல் நடப்பதைப் பெற்றால் விழுமங்களுள் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால் ஒருவன் பெறுதற்குரிய விழுப்பேற்றின் அதனை ஒப்பது வேறில்லை என்பது பாடலின் பொருள்.
'விழுப்பேற்றின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

அஃதொப்பது இல்லை என்ற தொடர்க்கு அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை என்பது பொருள்.
யார் மாட்டும் என்றது எவரிடத்திலும் என்ற பொருள் தரும்.
அழுக்காற்றின் என்ற சொல் பொறாமைக் குணங்களில் எனப்பொருள்படும்.
அன்மை பெறின் என்ற தொடர் இல்லாமை பெற்றால் என்ற பொருள் தருவது.

எவரிடமும் பொறாமை இல்லாமல் இருக்கும் பண்புக்கு மேலான விழுப்பம் வேறு எதுவும் இல்லை.

பொதுவாக அழுக்காறு பிறருடைய பெருமை, செல்வம், அறிவுடைமை போன்றவை பற்றி எழுவது. அந்தப் பிறர் யாவர்? அதாவது யார் மீதெல்லாம் பொறாமை வரும்? பெரும்பாலும் பொறாமை நம் அருகில் இருக்கும் மாந்தரிடம் பாயும். அண்டை வீட்டார், அன்றாடம் நாம் பழகுவோர் போன்றோரிடமும், நண்பர்களுக்கிடையேயும், ஏன் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கூட, பொறாமை தோன்றும். 'யார் மீதும் பொறாமை கொள்ளாதே' என்பது வள்ளுவர் கூறும் அறிவுரை. யார் மாட்டும் என்பதற்கு 'பகைவர் மாட்டும்' என உரை கூறினார் பரிமேலழகர். இப்பாடல் நண்பர், பகைமை பாராட்டுபவர், அருகில் இருப்பவர், தொலைவில் உள்ளோர் என்ற வேறுபாடு இல்லாமல், யாரிடத்திலும் பொறாமை இல்லாமல் வாழும் தன்மையை வலியுறுத்துகிறது. அத்தனமை பெற்றால் அது விழுமிய பேறுகளில் அதாவது மிகச் சிறந்த பேறுகளுள் ஒப்பில்லாத பேறு ஆகும்.

மாந்தர்கள் எல்லோருக்குள்ளும் எங்காவது ஓரிடத்தில் பொறாமை என்கிற குணம் ஓரளவாவது இருந்துகொண்டே இருக்கும் என்பர். அழுக்காறு, மனிதர் செய்யும் குற்றங்களுக்கு ஒரு ஏதுவாக இருப்பதாலேயே, அது இல்லாதிருத்தலை ஒரு சிறந்த பேறாக வள்ளுவர் குறிக்கிறார்.

'விழுப்பேற்றின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'விழுப்பேற்றின்' என்ற தொடர்க்கு விழுமிய பேறுகளுள், சிறந்த பேறுகளுள், விழுமியவாகப் பெறும் பேற்றின், சீரிய பேறுகளுள், சீரிய நன்மதிப்புகளில், மானுட நன்மதிப்புகளில், சிறந்த மேன்மை, நன்மை மிகுந்த செல்வங்களுள், மேலான ஊதியங்களுள், பெருஞ்செல்வம், சீரிய பேறு, மேலான பேறு, மேன்மைச் செல்வம், சிறந்த பாக்கியம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் சீரிய அல்லது சிறந்த பேறுகளுள் என்பது பொருத்தம்.
விழுமிய பேறுகள் பதினாறு என்றும் அவை புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்னும் பதினாராம் எனவும் பழம் நூல்கள் கூறும். விழுப்பேறு என்பதற்கு வீட்டுப் பேறு அதாவது துறக்க உலகம் பெறுவது எனவும் பொருள் கொள்வர்.

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால், ஒருவன் பெறுதற்குரிய சிறந்த பேறுகளுள், அதனை ஒப்பது வேறில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

யாரிடத்தும் அழுக்காறாமை ஒரு ஒப்பற்ற விழுப்பமாகும்.

பொழிப்பு

எவரிடத்தும் பொறாமை கொள்ளாதிருந்தால் அதனினும் சிறந்த மேன்மை வேறில்லை.