இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0170அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

(அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:170)

பொழிப்பு: பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

மணக்குடவர் உரை: .............................................

பரிமேலழகர் உரை: அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
(இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமையால் வாழ்வு விரிந்தவரும் இல்லை; பொறுப்பதால் வளர்ச்சி குறைந்தவரும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.


அழுக்கற்று அகன்றாரும் இல்லை:
பதவுரை: அழுக்கற்று-பிறர் ஆக்கம் பொறாமையைச் செய்து; அகன்றாரும்-செல்வராயினாரும்; இல்லை-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிதி: மனத்தில் அழுக்குடையார் செல்வம் பெற்றதும் இல்லை;
பரிமேலழகர்: அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை;

மனத்தில் அழுக்குடையார் செல்வம் பெற்றதும் இல்லை என்று பரிதியும் பெரியராயினாரும் இல்லை என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை கொண்டு செல்வத்திற் பெரியராயினாரும் இல்லை', 'பொறாமையினால் செல்வம் அதிகப்பட்டவர்களும் இல்லை', 'பொறாமை கொண்டு பெரியாராயினாரும் இல்லை', 'பொறாமையால் செல்வராயினாரும் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொறாமை கொண்டு செல்வராயினாரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்:
பதவுரை: அஃது-அது; இல்லார்-இல்லாதவர்; பெருக்கத்தில்-ஆக்கத்தினின்றும்; தீர்ந்தாரும்-நீங்கினவரும்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் செவ்வியார்க்குக் கேடில்லை என்றார். இதில் கேடில்லாமையை இவ்வுலகத்திற் காணலாம் என்கின்றார்.
பரிதி: மனத்தில் அழுக்கில்லாதார் செல்வமாகிய லட்சுமியை நீங்கியதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அச்செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.

செவ்வியார்க்குக் கேடில்லாமையை இவ்வுலகத்திற் காணலாம் என்று பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினார். பரிதி மனத்தில் அழுக்கில்லாதார் செல்வத்தின் நீங்கினாரும் இல்லை என்றும் பரிமேலழகர் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை என்றும் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை இல்லாதார் செல்வப் பெருக்கில் நீங்கியதும் இல்லை', 'அது இல்லாததனால் செல்வம் இழந்து விட்டவர்களும் இல்லை', 'பொறாமை இல்லாதவர்களுள் செல்வ வளர்ச்சியில் நீங்கினாரும் இல்லை', 'பொறாமையில்லாமல் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொறாமை இல்லாதாருள் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாமையால் வளம் பெருக்கியவரும் இல்லை; பொறமை இல்லாமல் வளர்ச்சியில் சுருங்கியோரும் இல்லை.

பொறாமை கொண்டு அகன்றாரும் இல்லை; பொறாமை இல்லாதாருள் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'அகன்றார்' என்பதன் பொருள் என்ன?

அழுக்கற்று என்ற சொல்லுக்குப் பொறாமைப்பட்டு என்பது பொருள்.
இல்லை, இல் என்ற சொற்கள் இல்லை என்ற பொருள் தரும்.
அஃது இல்லார் என்ற தொடர்க்கு அது இல்லாதவர் என்று பொருள். இங்கு அது என்பது பொறாமைக் குணத்தைச் சுட்டும்.
பெருக்கத்தில் என்ற சொல் வளர்ச்சியில் என்று பொருள்படும்.
தீர்ந்தாரும் என்ற சொல் நீங்கினாரும் என்ற பொருளது.

பொறாமை கொண்டவருள் செல்வம் பெருக்கியவரும் இல்லை; பொறாமை இல்லாதாததால் வளர்ச்சியில் குன்றியவரும் இல்லை.

அழுங்குதல் என்றது வருந்துதல் அல்லது துன்புறுதல் குறித்தது. அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு எனநிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல் எனப்பொருள்படும். நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்று உலக வழக்கில் திரிந்தாற்போன்று, அழுக்குற்று என்பதும் அழுக்கற்று என இலக்கிய வழக்கில் திரிந்தது. இன்னொரு வகையாக, அழுக்காறு என்ற பண்புப் பெயர் தொழிற் பெயராகுமிடத்து, அழுக்கறு என நிற்கும்; அது அழுக்கற்று என இங்கு வந்துள்ளது எனவும் விளக்குவர்.
பொறாமைக் குணம் உடையவர்கள் நன்றாக வாழ்வதும் நேர்மை மனம் கொண்டு இருப்பவர்கள் துன்பத்தில் உழல்வதும் எதனால் என்ற கேள்விக்குப் பதிலிறுப்பது போல இக்குறள் அமைந்துள்ளது. பொறாமை குணத்தோர் பெருமை எய்தியதும் இல்லை; அக்குணம் அற்றவர் வளர்ச்சியில்லாமல் போனதும் இல்லை என்கிறது இக்குறள். இதையே வேறு சொற்களில் 'அழுக்காறுடையார் வாழ்வது போல் தோன்றினாலும், அந்த வளப்பத்தினுள்ளே அக அமைதி இருக்காது; அதேபோல், அத்தீக்குணம் அற்றவர்கள் வளப்பமற்று இருந்தாலும் அவர்கள் துன்பமாக இருப்பதாக எண்ண மாட்டார்கள்' என விளக்குவர்.
பழைய செல்வம் இருப்பின் அதுவும் பெருகாது என்பதை விளக்குகிறார் எனக் கொண்டு அழுக்காற்றைச் செய்து (செல்வத்தால்) அகல விரிந்தாரும் இல்லை, அழுக்காறாமையால் உள்ள செல்வம் பெருகாமல் சுருங்கப் பெற்றாரும் இல்லை என்றார் எனவும் உரை கொண்டனர்.
இக்குறள் 'மரபுவழிச்செல்வமும் பெருகாது அழுக்காறுடையானுக்கு என்பது கருதிற்று' என்பார் தண்டபாணி தேசிகர்.

அழுக்காற்றைச் செய்து செல்வத்தால் பெருக்கமுற்றாரும் இல்லை. அவ்வழுக்காற்றைக் கொள்ளாமையால் வளர்ச்சியில் குன்றினாரும் இல்லை என்று உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் அழுக்காறாமையின் பயன் விளக்கப்பட்டது.

'அகன்றார்' என்பதன் பொருள் என்ன?

'அகன்றார்' என்ற சொல்லுக்குப் பெரியராயினார், செல்வம் பெற்றார், பெரியவர் ஆனவர், செல்வத்திற் பெரியராயினார், வாழ்வு விரிந்தவர், வளர்ந்தவர், செல்வராயினார், வளம் பெருகப் பெற்றார், செல்வம் அதிகப்பட்டவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அகன்று என்ற சொல் விரிவாகி, பெருகி, மேம்பட்டு என்று பொருள்படும். இங்கு அகலுதல்- நீங்குதல் என்னும் பொருளுடையதன்று; விரிவடைதல் என்னும் பொருளுடையது. ‘அகன்றார்’ என்பதற்குப் பெரியராயினார் என்றும் செல்வராயினர் என்றும் பொருள் கூறுவர். இவ்வதிகாரத்துக் குறள்கள் மிகுதியாகச் செல்வத்தோடு அழுக்காற்றை இணைத்துப் பேசுவதால் ‘அகன்றார்’ என்றதற்கு செல்வராயினர் எனப் பொருள் கொள்வது சிறக்கும்.

'அகன்றார்' என்பதற்கு செல்வப்பெருக்கு கொண்டார் என்பது பொருள்.

பொறாமை கொண்டு செல்வராயினாரும் இல்லை; பொறாமை இல்லாதாருள் செல்வத்தில் குறைந்து போயினாரும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அழுக்காறாமை கொண்டோரில் மேன்மை குறைந்தார் இல்லை.

பொழிப்பு

பொறாமை கொண்டு வளம் பெற்றோரும் இல்லை; பொறாமை இல்லாதார் வளர்ச்சியில் தேங்கியதும் இல்லை.