பிறர் குற்றம் பொறுக்க இயலாது பழிவாங்கும் முனைப்போடு அவரை ஒறுப்பரே பலர். பிறன் செய்த தீமையால் உள்ளத்தில் சினம் தோன்ற அதனால் பதிலுக்குத் தீயன தீமை செய்து தம்முடைய வலிமையைக் காட்ட வேண்டும் என்ற உந்துதல் உண்டாவது இயல்பு. அதைச் செயல்களில் வெளிப்படாதவாறு பொறுத்துக் கொள்ளுதலே பொறையுடைமை. பல்லுக்குப் பல், அடிக்கு அடி, உதைக்கு உதை, கொலைக்குக் கொலை, சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி என்பதே சரியான பழிதீர்க்கும் முறை என்ற தவறான கருத்துக் கொண்டோர்க்கு, ஒருவன் தனக்கு மிகை செய்தால், தானும் அதைச் செய்யாமல் பொறுத்துக் கொண்டு, எதிர்ச்செயல் ஆற்றாமல், தம் நுண்ணறிவின் துணைகொண்டு அவனை வெல்ல வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் அடங்கியது இவ்வதிகாரம்.
அதிகார வைப்பு முறை எண்ணி (பொறையுடமை அதிகாரம் பிறனில் விழையாமை எனும் அதிகாரத்திற்குப் பின் வருவது), நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய, அதாவது பிறன் மனையாளை விரும்புதல் முதலிய, தீய செயல்களைச் செய்தவர்களையும் பொறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுவதாக அறிஞர்களும் ஆய்வார்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இராவணன் கடத்திச்சென்ற சீதையை ஒப்படைத்து விட்டால் அவளது கணவனான இராமன் போர்க்களத்தில் அவனை மன்னிக்கும் பொறுமை கொண்டவனாக இருக்கிறான் என்பது தெ பொ மீனாட்சிசுந்தரம் தரும் எடுத்துக்காட்டு.
பொறுமையைச் சிதைப்பது சினம். பிறர் கூறும் இன்னாச் சொற்களுக்கு எதிரே வெகுண்டு எழாது பொறுக்கும் பண்பாளரைத் துறவியரினும் தூய்மையுடைய பெரியார் என்று போற்றுகின்றது இத்தொகுதி.
இவ்வதிகாரத்தில், இகழ்வார்ப் பொறுத்தல், ஒருவரின் வரம்பு மீறிய செயல்களைப் பொறுத்தல், அறிவிற்குறைந்தோர் செயலைப் பொறுத்தல், திறன் அல்ல செய்தாரைப் பொறுத்தல், மிகுதியான் மிக்கவை செய்தாரைப் பொறுத்தல், அறநெறியைக் கடந்தவர்வாய் இன்னாச்சொல் பொறுத்தல் என்று பொறுத்தல் வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.
பொறுத்தாற்றும் பண்பைப்பெற மனவலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பொறுத்தல் என்பது தாங்கிக் கொள்ளுதலையும் மறத்தலையும் உள்ளடக்கியது; மறத்தல் என்பது மன்னிப்புடன் கூடிய மறத்தல் குறித்தது;
தனக்குச் செய்யப்படும் தீங்குகளைத் தாங்கிக் கொள்வது என்பது பொறுத்தாரது உறுதியான மனவலியைக் காட்டும் அது கோழைத்தனம் அன்று; பொறுத்துக்கொள்ளுதலுக்கு மனவலிமை, பக்குவம், பெருங்குணம், பேராற்றல் யாவும் வேண்டும். பொறுத்தல் மென்மையாலன்று; வலிமையால் என்பதாம்.
உலகம் தீமைக்குத் தீமை செய்து ஒறுத்தவரை ஒரு பொருளாக மதிப்பதில்லை; பொறுத்தவரையே பொன் போல் நன்கு போற்றி மதிக்கும்; நிறைகுண நல்லோர் பொறை மிக வுடையராயிருப்பர்; இவை பொறையுடமை அதிகாரம் தரும் செய்திகளாகும்.