இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0153



இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0153)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

மணக்குடவர் உரை: வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.
புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.

பரிமேலழகர் உரை: இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வறுமையுள் வறுமை விருந்தோம்பாமையாகும். வீரத்துள் வீரமாவது, அறியாது பிழைசெய்தாரைப் பொறுத்துக் கொள்ளுதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

பதவுரை: இன்மையுள்-இல்லாமையிலும்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஒரால்-ஒருவுதல், (ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல்; வன்மையுள்-வலிமையில்; வன்மை-வலிமை; மடவார்ப் பொறை-அறிவிலிகள் செய்வனவற்றைப் (மிகையைப்) பொறுத்தல்.


இன்மையுள் இன்மை விருந்தொரால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை;
மணக்குடவர் குறிப்புரை: புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
பரிப்பெருமாள்: வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை;
பரிப்பெருமாள் குறிப்புரை: புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
பரிதி: 'தரித்திரத்தில் தரித்திரம்' வந்த விருந்தை உபசரிக்க வகையில்லாமை; [உபசரிக்க-உபசாரம் செய்ய. அதாவது வேண்டுவகொடுத்துப் பேணுதல்]
காலிங்கர்: உலகத்தில் வாழ்வார்க்கு இனிமைகளில் வைத்து மிகவும் இனிமையாவது விருந்தினரை விடாது பேணி வழிபடுதல்;
காலிங்கர் மாற்றுரை: அல்லதூஉம் இல்வாழ்வார்க்கு வறுமையுள் வைத்துக்கொண்டு மிகவும் வறுமையாவது விருந்து வந்து எய்தாமையும், எய்திய விருந்தினர் நுகரப் பெறாமையும். இவையிரண்டும் நீங்குதலும் இதுவே மிக வறுமை என்றுமாம். ஒரால் என்பது நீங்குதலல்லாமை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்;

இன்மையுள் இன்மை என்பதற்கு 'வலிமையின்மையுள் வலிமையின்மை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாளும், 'தரித்திரத்தில் தரித்திரம்' என்று பரிதியும் 'இனிமையுள் இனிமை' என்று காலிங்கரும் 'வறுமையுள் வறுமை' என்று பரிமேலழகரும் பொருள் உரைத்தனர். விருந்தொரால் என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'புதுமையை நீக்காது' என்றும் பரிதி 'விருந்தை உபசரிக்க வகையில்லாமை' என்றும் உரை செய்தனர். காலிங்கர் முதலுரையில் 'நீக்குதல்' எனப் பொருள் கூறி வேறுரையாக 'நீக்குதல் அல்லாமை' என எதிர்மறைப் பொருள் கூறி, 'விருந்து வராமையும் வந்த விருந்தை ஓம்பாததும்' என்று விளக்கமும் தந்தார். பரிமேலழகர் 'விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்' என்று உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரிய வறுமை வந்த விருந்தை நீக்குவது', 'ஒருவனுக்கு வறுமையுள் சிறந்த வறுமையாவது விருந்தினை ஓம்பாது கைவிடுதல்', 'இல்லாமையிலும் இல்லாமை விருந்தினரை உபசரிக்கத் தவிர்வது', 'வறுமையுள் வறுமை விருந்தினரை (ஏற்றுக் கொள்ளாது) நீக்கி விடுதல்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இல்லாமையிலும் இல்லாமை வந்த விருந்தினைப் பேணாது விடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.
பரிப்பெருமாள்: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொறுத்தான் என்றும் எளியன் ஆகான். அதனானே வலியனாவன் என்றது.
பரிதி: அதுபோல், வன்புக்குள் வன்பு அறிவில்லாதார் செய்த குற்றம் பொறுத்தல் என்றவாறு. [வன்பு - அன்புக்கு எதிர்ச்சொல், அன்பின்மை]
பரிதி குறிப்புரை: வன்மையாவது மலையின் உச்சியின்மேலே ஒரு கல்லை ஏற்றல், கடுகிலே கடலை அடக்குதல் ஆகியன.
காலிங்கர்: மற்று இதுபோல் ஒருவர் தாம் செய்யவல்ல செய்திவலிமைகளில் வைத்துக் கொண்டு வலியாவது யாதோ எனில், அறிவுக் கேடாகிய அவமதிப்பைப் பொறுக்கும் பொறையுடைமையே என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.

'வலியுடைமையுள் வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவலிமை பேதையைப் பொறுப்பது', 'அதுபோல, ஒருவனுக்கு ஆற்றலுள் சிறந்த ஆற்றலாவது அறியாதாரின் பிழை பொறுத்தல்', 'வல்லமையிலும் வல்லமை அறிவில்லாதவர்கள் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுதல்', 'வலிமையுள் வலிமையாவது அறியாதார் செய்யும் பிழைகளைப் பொறுத்தலாம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வலிமையுள் வலிமையாவது அறிவிலிகள் செய்யும் மிகையைப் பொறுத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

இல்லாமையிலும் இல்லாமை வந்த விருந்தினைப் பேணாது விடுதல்; வலிமையுள் வலிமையாவது அறிவிலிகள் செய்யும் மிகையைப் பொறுத்தல் என்பது பாடலின் பொருள்.
விருந்தோம்பாமைக்கும் மடவார் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளுதலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் அறிவு குன்றியவர்களின் மிகையைப் பொறுத்துக்கொள்ள மிக்க வலிமை வேண்டும்.

இன்மையுள் இன்மை என்ற தொடர் வறுமையுள்ளும் வறுமை என்ற பொருள் தரும் அஃதாவது பெரிய வறுமை. இது செல்வத்துள் செல்வம்.. (411), கற்றாருள் கற்றார்... (722) ஆகிய சொல்லாட்சிகள் போன்று அவற்றின்‌ மிகுதி குறித்தன. விருந்தொரால் என்ற சொல் வந்த விருந்தினரைப் பேணமுடியாது விடுதல் எனப் பொருள்படுவது. எனவே இன்மையுள் இன்மை விருந்தொரால் என்பது ஒருவன் மிகவும் வலிமையற்று விருந்தினரைக் கண்டும் அவர்களை ஓம்ப முடியாமல் இருப்பதைக் குறிக்கும். இந்நிலையில் அவன் தனது அனைத்து வலிமையையும் இழந்து விட்டதாக எண்ணுவான். இச்சூழல் வறுமையுள்ளும் வறுமை எனப்பட்டது. 'இன்மையுள் இன்மை விருந்தொரால்' என்னும் இக்குறட்கருத்தின் சாயல் உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு (விருந்தோம்பல் 89 பொருள்: செல்வநிலையில் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும்) என்பதிலும் காணப்படும்.
வலியற்ற நிலை எது எனக் கூறிய பாடல் அடுத்து எது வலிமையானது என்பதையும் கூறுகிறது. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை என்கிறது. இது வலிமையுள்ளும் வலிமை யானது பேதைகள் தமக்கு இழைக்கும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்ற பொருள் தரும். ஓடும் நீரைத் தடுக்கின்றபொழுது, அது ஆற்றலின் மிகுவதுபோல, தமக்கு இன்னா செய்தாரை ஒறுக்கவிரையும் உள்ளத்தைத் தடுத்து நிறுத்துதல் எளிதன்று. பொறுமை என்பதே தாங்கிக் கொள்ளும் வலிமைதான். இதனால் பொறுத்தல் வன்மையுள் வன்மை எனச் சொல்லப்பட்டது.

ஒருவன் மற்றொருவரை இகழ்ந்து பேசுகிறான் அல்லது தீங்கு செய்கிறான். அவன் அறியாமல் செய்தான் என்றாலும் தீங்கு செய்யப்பட்டவர்க்கு சீற்றம் வரும். ஆனால் குமுறிப் பொங்குவதற்கு மாறாக அவர் அதைப் பொறுத்துக்கொள்கிறார். பொறுத்துக்கொள்ளுதலுக்கு மனவலிமை, பக்குவம், பெருமிதம், பேராற்றல் அனைத்தும் வேண்டும். அச்சத்தால் அடங்கி போவது பொறுமை காப்பதாகச் சொல்லப்படவில்லை; பொறுத்தல் மென்மையாலன்று; வலிமையால் என்பதாம். அதனால் தான் பொறுமையை 'வன்மையுள் வன்மை' என்றார் வள்ளுவர். ஆவதறியாது மிகைசெய்யும் அறிவிலாரின் பொருளற்ற பேச்சை, மூடத்தனமான செயலை வேதனையுடன் தாங்கிக் கொண்டு, இழிவையெல்லாம் பொறுத்துக்கொள்வது பெருமைக்குரியது. எனவே அது வலிமையுள்ளும் மிக்க வலிமையாயிற்று. பேதைபால் காட்டும் பொறுமையை 'வன்மையுள் வன்மை' என்று தெரிவித்ததால், பொறுத்தல் முழு வன்மையாகிறது. இப்பாடலின் செய்தி பொறுமை காட்டுவதும் வல்லமை என்பதுவே.

நாம் வறுமையில் உள்ள போது ஒரு விருந்தினர் வந்தால், நம் வறுமையையும் பொருட்படுத்தாது அவரை உபசரித்து, நம் இன்மையைப் பொருட்படுத்தாது அவரைப் பேணுதல் போன்றே நம்மைத் துன்புறுத்துவாரது அறிவின்மையையும் பொருட்படுத்தாது பொறுமை காட்டுதல் வேண்டும் எனவும் இக்குறட்கருத்தை விளக்குவர்.

விருந்து ஒரால் என்ற சொற்றொடர்க்கு விருந்தினரை ஓம்பாமல் விலக்குதல் என்பது பொருள். தழுவல் என்பது தழால் என்றாவது போன்று, ஒருவல் என்பது ஒரால் என்றாயிற்று. காலிங்கர் ஒரால் என்பதை எதிர்மறைத் தொழிற்பெயராகக் கொண்டு 'விடாது பேணி வழங்குதல்' என்று மற்றொரு பொருளும் கொள்வார்.
இச்செய்யுளில் 'இன்மையுள் இன்மை விருந்தொரால்' எனவும் 'வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை' எனவும் வந்து இடையில் அதுபோல என்னும் சொல் தொக்கியிருப்பதால் இது எடுத்துக்காட்டு உவமை ஆயிற்று.

விருந்தோம்பாமைக்கும் மடவார் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளுதலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

வலிமை வலியின்மை இவற்றிற்கிடையுள்ள தொடர்பு பொறையுடைமையில் இயல்பானது எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால் இங்கு விருந்தோம்பலுக்குள்ள இடம் எது? விருந்தினர்க்கு உதவமுடியாமல் வாழ்தல் வறுமையுள் வறுமை ஆவது போல் அறிவுக்குறைவால் தீமை செய்வாரைப் பொறுத்துக்கொள்வது வல்லமையுள் வல்லமையாகும் என்ற பொருள் தரும் இப்பாடலின் இரண்டு பகுதிகளுக்கும் தொடர்பு இல்லாததுபோல் தோன்றுகிறது.

விருந்தொரால் இன்மையுள் இன்மை; மடவார்ப் பொறை வன்மையுள் வன்மை என்ற இவ்விரண்டு கூற்றுகளையும் உரையாசிரியர்கள் எவ்வாறு இயைபுபடுத்தி விளக்கினர் என்பனவற்றிலிருந்து சில:

  • நிரம்பவும் தரித்திரமுள்ள இல்லறவாளன் வீட்டில் விருந்து ஆள் வந்தவுடனே என்ன செய்வோம் என்று ஏங்கி வந்தவனை விசாரியாமல் சும்மா இருப்பன். அதுபோல மடவார் முதலிய பேதைப் புத்தியுடையவர்கள் செய்த கொடுமையாகிய நெட்டுரத்துக்குப் பதில் செய்ய மனமில்லாமல் அவர்கள் புத்தியீனத்தால் செய்தார்கள் என்று சும்மா பதையாதிருப்பார்கள்.
  • நாம் வறுமையில் உள்ள போது ஒரு விருந்தினர், வந்தால் நம் வறுமையையும் பொருட்படுத்தாது அவரை வரவேற்று, நம் இன்மையைப் பொருட்படுத்தாது அவரை உபசரிப்பது போன்றே அவரது அறிவின்மையையும் பொருட்படுத்தாது பொறுமை காட்டுதல் அவசியம் என்பதே மறை பொருள். அத்தகைய பொறுமையும் விருந்தோம்பலும் வலிமையுள் எல்லாம் வலிமை மிக்கது.
  • வறுமையிற்கொடிய நிலை, தம்மிடம் வந்த விருந்தினரைப் போற்ற முடியாத அந்த அளவுள்ள வறுமை. அது போலவே, வறுமையிற் சிறந்த பொறுமை நிலை, தன்னினும் அறிவினும் ஆற்றலினும் குறைந்தான் ஒருவன் செய்யும் தீங்கினைப் பொறுப்பதாகும். வறுமை, தன்னைத் துன்பப்படுத்துவதோடு நில்லாது, தன்னை எதிர் நோக்கிவரும் விருந்தினரையும் துன்பப்படும்போது, அவ்வறுமையின் கொடுமை பிறர்க்கும் வெளிப்படும். அது போலவே, பொறுமை தன்னை ஒத்தாரிடமும் மிக்காரிடமும் காட்டும்போது அது முடியாத நிலையாய் நின்றுவிடத் தாழ்ந்தாரிடம் பொறுமை காட்டும்போதுதான் பொறுமை வெளிப்படும்.
  • வன்மையுள் வன்மை அறிவுடைமை, ‘அறிவற்றங் காக்குங் கருவி’ என்றா ராகலின். இன்மையுள் இன்மை அறிவின்மை, ‘அறிவின்மை யின்மையு ளின்மை’ என்றாராகலின். ‘ஒப்பமுடித்தல்’ என்னும் உத்தியால் மடவார்ப் பொறைக்குக் காரணமாய அறிவுடைமையைக் கூறும் இக் குறளில் விருந்தொராலுக்குக் காரணமாய அறிவின்மையையும் கூறினார்.
  • ஒருவன் மிகவும் வலிமையற்று வறுமையிலே வாழ்கிறான் என்பதற்கு அடையாளம் விருந்தினரைக் கண்டும் உபசரிக்க முடியாமல் போவது. அதே போல் வலிமையுள் வலிமையாவது மூடர்கள் தம் அறிவின்மையால் செய்யும் தீமைகளைப் பொறுத்தருள்வது. சிறுமைக்கு உரியது வறுமை என்றால், பெருமைக்குரியது பொறுமை என்கிறார் வள்ளுவர். வறுமையில் வறுமை விருந்தோம்ப முடியாமை; வலிமையில் வலிமை அறிவிலிச் செயல் பொறுப்பது.
  • விருந்து விலக்கலின் மேற்பட்ட தரித்திரமும் பிறர் செய்த குற்றத்தைப் பொறுத்தலின் மேற்பட்ட வல்லமையும் இல்லை. ஆகவே விருந்தினரை யோம்புகிறவன் பொருள் இல்லாதவனாய் இருந்தாலும் பொருள் உடையவனாகவே கருதப்படுவான் என்பதும் பிறர் இயற்றிய குற்றத்தைப் பொறுத்துக் கொள்பவன் இந்திரிய நிக்கிரகம் செய்யும் வலிமையிலும் பிறர் செய்த குற்றத்தைப் பொறுக்கும் வலிமை மேன்மையுடையது ஆயிற்று என்க.

‘இன்மை’ என்றதற்கு வலியின்மை, வறுமை, அறிவின்மை, பொறுமையின்மை, இனிமை எனப் பலவாறாக உரைக்கப்பட்டவற்றுள் வறுமை, வலியின்மை என்பன இங்கு சிறக்கும்.
மணக்குடவர் இன்மை என்ற சொல்லுக்கு வல்லமை யின்மை எனப் பொருள் கொண்டார். குறளின் பின்பகுதி வன்மை பற்றிப் பேசுவதால் முற்பகுதியிலுள்ள இன்மை என்பதற்கு வல்லமையின்மை எனக் கொள்வது பொருந்தக் கூடியதே. அப்படிக் கொண்டால் 'இன்மையுள் இன்மை விருந்தொரால்' என்ற பகுதிக்கு வலிமையின்மையுள் வலியில்லாமையாவது வீடுதேடிவந்த விருந்தினரை ஓம்பமுடியாமை என்ற பொருள் கிடைக்கிறது. வலியின்மை-வலி பற்றி பாடல் பேசுவதாக நாம் கொள்வதால் வலியற்ற பொருளில்லாத வறுமைநிலையை 'இன்மை' குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம்.
நாமக்கல் இராமலிங்கம் 'செல்வம் இருந்தும் விருந்து ஓம்பாமல் விட்டுவிடுவதற்கு மிக்க வன்நெஞ்சம் வேண்டும், மிகை செய்தாரைப் பொறுக்கவும் மனவுறுதி வேண்டும். இரண்டு வன்னெஞ்சங்களும் ஒரு நோக்குடையனவல்ல. முன்னது அன்பில்லாமையால் ஆவது. பின்னது அன்பின் மிகுதியால் விளைவது. முன்னது மடமை, பின்னது அறிவுடைமை. முன்னது 'வன்னெஞ்சம்' என்ற பெயர் பெறினும் வலியில்லாமையான் ஆயது; பின்னது வலி மிகுதியால் ஆயது' என்கிறார். இவர் இன்மை என்பதற்கு வளமையுள் வறுமை எனப் பொருள் கொள்கிறார்.

இல்லாமையிலும் இல்லாமை வந்த விருந்தினை ஓம்பாது கைவிடுதல்; வலிமையுள் வலிமையாவது அறிவிலிகள் செய்யும் மிகையைப் பொறுத்தல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொறையுடைமையாளர்களுக்கே அறிவில்லாதார் செய்யும் தீமைகளைப் பொறுக்க இயலும்.

பொழிப்பு

இல்லாமையுள் இல்லாமையாவது வந்த விருந்தை ஓம்பாதிருப்பது; வலிமையுள் வலிமையாவது அறிவிலிகள் செய்யும் மிகையைப் பொறுத்தல்