ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
(அதிகாரம்:பொறையுடைமை
குறள் எண்:0155)
பொழிப்பு (மு வரதராசன்): (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
|
மணக்குடவர் உரை:
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
பரிமேலழகர் உரை:
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
(ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
தீங்குக்குத் தீங்கு திருப்பிச் செய்து விடுகிறவனைக் குறிப்பிடத் தகுந்த ஒரு மனிதனாக யாரும் மதிக்க மாட்டார்கள். ஆனால் தீங்கு செய்தவனையும் மன்னித்து விடுகிறவனை மிகவும் குறிப்பிடத் தக்கவனாக மதித்து அவனுடைய பொறுமைக் குணத்தை எல்லோரும் தம்முடைய மனத்தில் போற்றி வைப்பார்கள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் .
பதவுரை: ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-ஒருபொருட்டாக, ஒரு பொருள் ஆகும்படி; வையாரே-கொள்ளாரே; வைப்பர்-கொள்வர்; பொறுத்தாரை-பொறுத்துக் கொண்டவரை; பொன்-தங்கம்; போல்-நிகராக; பொதிந்து-முடிந்து, மூடிவைத்து.
|
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்;
பரிப்பெருமாள்: தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்;
பரிதி: பொறுமை யில்லாதார் ஒன்றுக்கும் அல்லார்;
காலிங்கர்: எளியவர் என்று கருதிக்கொண்டு ஒறுத்தாரை இம்மை மறுமை இரண்டுக்கும் உரியதோர் ஆக்கமுடையராக வைத்து எண்ணார் சான்றோர்;
பரிமேலழகர்: பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; [ஒறுத்தாரை - தண்டித்தவரை]
பரிமேலழகர் குறிப்புரை: ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார்.
'தமக்குத் துன்பஞ் செய்தாரை ஒறுத்தாரை ஒரு பொருளாக மதித்து வையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் வையார் என்றதற்கு உலகத்தார், சான்றோர், அறிவுடையார் என்று இவர்கள் விளக்கம் செய்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தண்டித்தவரை யார் மதிப்பர்?', 'குற்றம் செய்தாரைத் தண்டித்தவரை அறிவுடையார் ஒரு பொருளாக மதித்து மனத்துட் கொள்ளார்', 'தமக்குத் தீங்கு செய்தாரைப் பொறாமல், அவரைத் தண்டிப்பரை ஒரு பொருளாக அறிஞர் மதிக்கமாட்டார்', 'பிறர் தமக்குத் தீமை செய்தவழிப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைக் கடிந்தவரை அறிவுடையார் ஒரு பொருளாக மதியார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார் என்பது இப்பகுதியின் பொருள்.
வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார். [பொதிந்து வைத்தாற்போல-மறைத்து வைத்தாற் போல]
பரிப்பெருமாள்: பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒறுப்பதினும் பொறுப்பதனை நன்கு மதிப்பர் என்றது.
பரிதி: பொறுமையுடையாரைப் பொன்போல யாரும் தலைமேற்கொண்டிருப்பார் என்றவாறு.
காலிங்கர்: அதனால் சிலர் தம்மை ஒறுக்க ஒன்றாக உட்கொள்ளாது உலகத்தார் பொன்னைக் குறிக்கொண்டு பேணிக் கொள்ளுமாப்போல் மற்று இவரைக் குறிக்கொண்டு பேணிக் கொள்வர் சான்றோர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.
'பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்தவரையே பொன்போல் போற்றி மதிப்பர்', 'ஆனால் குற்றம் பொறுத்தவர்களைப் பொன்போல் மதித்து மனத்தில் வைத்துப் போற்றுவர்', 'அவ்வாறன்றிக் குற்றம் பொறுப்பாரைப் பொன்னைப் போல் அருமையாக நன்கு பேணிப் போற்றுவர்', 'ஆனால் பொறுத்துக்கொண்டவர்களைப் பொன் போல் போற்றி மதிப்பர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
பொறுத்தவரைப் பொன்போல் போற்றி மதிப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார்; பொறுத்தவரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் என்பது பாடலின் பொருள்.
'பொன்போல் பொதிந்து வைப்பர்' குறிப்பது என்ன?
|
பழிக்குப் பழியாகத் தீமை பண்ணியவரை யாரும் நினைக்கமாட்டார்கள்.
தமக்குத் தீமை இழைத்தவரைப் பொறுக்காமல் ஒறுத்தவரை ஒரு பொருட்டாக உலகோர் மதியார்; ஆனால் தீங்கைப் பொறுத்துக்கொண்டவரைப் பொன்னாக உள்ளத்துள் வைத்துப் போற்றிப் பாதுகாப்பர்.
ஒருவருக்குத் தீமை செய்தவரை அத்தீங்கைப் பொறுக்காமல் திருப்பித் தீமை செய்தவரை மக்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். இதை வள்ளுவர் 'ஒன்றாக வையார்' எனக் குறிப்பிடுகிறார். 'ஒன்றாக' என்பதற்கு ஒருவன் மக்கள் நிலையினின்று கீழிறக்கப்பட்டு 'பொருள்' என்ற தன்மையும் பெறாமல், அதனினும் இழிவாகக் கருதப்பெறுவர் என விளக்கம் செய்தனர். பரிதி அவரை 'ஒன்றுக்கும் அல்லார்' என அழைக்கிறார்.
வையார் என்ற சொல் வைக்கமாட்டார் என்னும் பொருளில் ஆளப்பட்டது. கெடுவாக வையாது...... (நடுவுநிலைமை குறள் 117) என்று பிறிதொரு பாடலில் வையாது என்ற சொல் வைக்காது என்ற பொருளில் வந்தது. பேச்சு வழக்கில் "அவனெல்லாம் ஒரு ஆளுன்னு வைத்துக் கொள்ளலாமா?" என்று சொல்வதைப் போன்றது இது.
அதேவேளையில் உலகத்தார் பொன்னைக் குறிக்கொண்டு பேணிக் கொள்ளுவதைப்போல, ஒருவன் தனக்கு மிகை செய்தாலும் தாமும் அவன்கண் அதனையே செய்யாது குற்றத்தைப் பொறுத்து மன்னித்து மறந்தவரை மதித்துப் போற்றி வைப்பார்கள் எனவும் கூறுகிறார் வள்ளுவர்.
பொறுமையுடையார் உலகத்தார் உள்ளத்துள் எல்லாமுளராவர்; தமக்குத் துன்பம் தந்தவர்க்குத் தானும் மாறாகத் துன்பம் தராது பொறுத்தாரை, பொன்னான மனிதனாக, தன் நினைவில் வைத்துப் பாதுகாப்பர் என்பது கருத்து.
ஒறுத்தல்-பொறுத்தல் என்னும் முரண் அமைத்துப் பொறுமையின் பெருமையைக் கூறுவது இக்குறள். ஒருவர் பொறுமை காப்பதால் பகை முதிராது. தீய மனத்தை திருத்துவதே தண்டிப்பதன் பயன் ஆதல் வேண்டும். இதை விடுத்துப் பிறர் குற்றம் பொறுக்காமல் பழிவாங்கும் முனைப்போடு ஒறுத்தால், அதனால் குற்றஞ் செய்தவர் திருந்தாமையோடு வாழ்வுக்கேடும் உறுவர். தண்டித்தவரின் மனமும் கெடும்; அவர் மனவலிமை அற்றவராகவும் கருதப்படுவார்.
|
'பொன்போல் பொதிந்து வைப்பர்' குறிப்பது என்ன?
'பொன்போல் பொதிந்து வைப்பர்' என்றதற்குப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போல, பொன்போல யாரும் தலைமேற்கொண்டிருப்பார், பொன்னைக் குறிக்கொண்டு பேணிக் கொள்ளுமாப்போல், பொன்னைப் போல (தம் உள்ளத்திற்) பிணித்து வைப்பர், பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர், பொன்னைப் பொதிந்து வைத்துக்கொள்வது போலக் கொள்வர், பொன்போல் போற்றி நினைவிற் கொள்வர், பொன்போல் போற்றி மதிப்பர், பொன்போல் மதித்து மனத்தில் வைத்துப் போற்றுவர், பொன்போலத் தங்கள் மனதில் போற்றிப் பூட்டி வைத்துக் கொள்வார்கள், பொன் போல் போற்றி வைப்பர். பொன்னைப் போல் அருமையாக நன்கு பேணிப் போற்றுவர், பொன் போல் போற்றி மதிப்பர், பொன்னைப் போற்றிக் காப்பதுபோலத் தன் உள்ளத்தின்கண் வைத்துப் போற்றிப் பாதுகாப்பர், பொன்னாகப் போற்றி மதிப்பர், பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர், பொன்னைப் பாங்காகப் போற்றுதல் போலப் போற்றுவர் (பொதிந்து வைத்தல்- பெட்டியிலிட்டு மூடி வைத்தல்), பொன்னே போல் போற்றிப் பாராட்டுவர், பொன்னை (த் துணியில் பொதிந்து வைத்தல்) போல (மனத்தின்கண்) போற்றி வைப்பர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'உலோகங்கள் பலவற்றுள்ளும் அருமையும் அழகும் மதிப்பும் சிறந்து நிற்றலோடு வன்மை மிக்கு எத்துணை மெல்லிதாக அடித்துப் பரப்பினும் ஓடியாது நின்று
பொறுமை காட்டுவது பொன்னாகலின்' எனப் பொன் பொறுமை காட்டுவதை விளக்கினார் செ தண்டபாணிப்பிள்ளை.
பொறுத்துக் கொண்டவரது பொறையை, பொன்னை முடித்து வைத்துக் கொண்டிருப்பவன், அதனைக் காப்பது போன்று, உலகோர் எப்பொழுதும் எண்ணிக் கொண்டு இருப்பர் என்கிறது இக்குறள்.
பொன்போல் பொதிந்து வைப்பர் யார் என்பதை விளக்கும்போது உரையாளர்கள் உலகத்தார், யாரும், சான்றோர், அறிவுடையார், நன்மக்கள், அறவோர், அறிஞர், உலகோர், பெரியோர், மக்கள் எனக் குறிப்பிடுவர். இவற்றுள் உலகோர்/உலகோர் என்பது சிறக்கும்.
பொன்போல் பொதிந்து வைப்பர் என்பது மிக மேன்மையாகப் போற்றுதல் குறித்தது.
|
ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார்; பொறுத்தவரைப் பொன்போல் போற்றி மதிப்பர் என்பது இக்குறட்கருத்து.
பொறையுடைமை மதிப்புடைமையுமாம்.
ஒறுத்தவரை ஒரு பொருளாக மதியார் உலகோர்; பொறுத்தவர்களைப் பொன்போல் போற்றி மதிப்பர் அவர்கள்.
|