இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0156ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0156)

பொழிப்பு (மு வரதராசன்): தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

மணக்குடவர் உரை: ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
இது புகழுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
[ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]

நாமக்கல் இராமலிங்கம் உரை: தீங்குக்குத் தீங்கு உடனே திருப்பிச் செய்து தண்டித்து விடுவதில் அப்போதைக்குத்தான் இன்பம் உண்டு. ஆனால் பொறுத்து மன்னித்து விடுவதில் சாகும் வரை பிறர் அதைப் புகழ்ந்து பேசும் இன்பம் உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.

பதவுரை: ஒறுத்தார்க்கு-தண்டித்தவர்க்கு; ஒருநாளை-ஒரு நாள்; இன்பம்-மகிழ்ச்சி; பொறுத்தார்க்கு-பொறுத்துக் கொண்டவர்க்கு; பொன்றும்-அழியும்; துணையும்-அளவும்; புகழ்-நற்பெயர், இசை.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்;
பரிதி: கோபிக்கும் தன்னை வைதாரை வைதோம் என்று ஒரு நாளையில் இன்பம் உண்டு;
காலிங்கர்: இவர் நமக்கு எளியர் என்ற கருதிக்கொண்டு ஒறுத்தவர்க்கு மற்று அப்பொழுதை இன்பமே உளது;
பரிமேலழகர்: தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே;
பரிமேலழகர் குறிப்புரை: ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். [தருக்கியிருக்கும் பொய்யின்பம்- செருக்குக் கொண்டு இருக்கும் போலி இன்பம்]

'ஒறுத்தவர்க்கு அற்றைநாளை இன்பமே உண்டாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தண்டித்தவர்க்கு அப்போதைய மகிழ்ச்சியே', 'தீமை செய்தவர்களைத் தண்டித்தவர்க்கு உண்டாவது ஒருநாளை இன்பமே', 'பிழைசெய்தவனைத் தண்டித்தவர்க்கு உண்டாவது ஒருநாளைப் பொய் இன்பமே', 'தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று உண்டாகும் ஒரு நாளை இன்பமே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒறுத்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே என்பது இப்பகுதியின் பொருள்.

பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழுண்டா மென்றது.
பரிதி: பொறுத்தார்க்குப் பூமி பொன்றும் அளவும் புகழாம். [பொன்றும் அளவும் -அழியும் அளவும்]
காலிங்கர்: மற்று அங்ஙனம் ஒறுத்தவர் ஒறுப்பினைப் பொறுத்தவர்க்கு இவ்வுலகம் உள்ள அளவும் புகழாம் என்றவாறு. [ஒறுப்பினை - தண்டித்தலை]
காலிங்கர் குறிப்புரை: துணை என்பது இவ்வுலகத்துள் சூழ்ந்திருக்கும் கடல் வெள்ளம் வந்து கூடிப் பெருகும் அளவும் புகழானது நசியாமல் நிற்கும், என்னுமாம். [நசியாமல் - அழியாமல்
பரிமேலழகர்: அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.

'பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும்/இவ்வுலகம் உள்ளளவும் புகழுண்டாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்தவர்க்கோ உலகம் உள்ளளவும் புகழ்', 'ஆனால், அதனைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாம்', 'அதனைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியும்வரை புகழ்நிற்கும்', 'ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்வார்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒறுத்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே; பொறுத்தவர்க்கோ பொன்றும் துணையும் புகழ் நிற்கும் என்பது பாடலின் பொருள்.
'பொன்றும் துணையும்' குறிப்பது என்ன?

ஒறுத்தார் பழி தீர்த்த அன்று மட்டுமே இன்பம் பெறுவர்; ஆனால் பொறுத்தார் பூமியாள்வார்.

தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; பொறுத்தவர்க்கோ சாகும் வரையிலும் புகழ் உண்டு.
தீமைக்குச் தீய செய்தவர் 'பழிக்கு பழி வாங்கிவிட்டோம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பத்தால் அன்றைப் பொழுது மகிழ்ந்திருப்பார்; பொறுமை காட்டியவர்களோ தம் உயிர் அழியும் வரை புகழப்படுவர்.
தனக்குச் செய்யப்பட்ட குறையைப் பொறுக்காத ஒருவன் தனக்குத் தீங்கிழைத்தவனுக்கு உடனே பழிவாங்கும் உணர்வோடு பதில் தீமைசெய்து மனநிறைவடைகிறான். பின் அவன் சினம் தணிகிறது. சரிக்குச் சரி செய்துவிட்டோம் என்ற ஒருநாள் இன்பமே அவனுக்குண்டாகும். இன்னொருவன் எதிர்செய்ய வலிமையிருந்தும் தான் துய்த்த தீமையைப் பொறுத்துக்கொள்கிறான்; இவனது நற்பெயர் பலகாலம் நிலைக்கும்.

ஒறுத்தல் பொறுத்தல் என்ற முரண்நிலையில் அமைந்த மற்றொரு குறள்.
நமக்கு யாரேனும் தீங்கு செய்தால் சினம் பொங்கி எழுவது இயல்பு. அதுபொழுது சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி, தீமைக்குத் தீமை, கொலைக்குக் கொலை என்று உறுப்பு இழப்பாலோ அல்லது பொருள் இழப்பாலோ வருத்தியவனும் துன்புற வேண்டும் என்னும் வஞ்சம் தீர்க்கும் ஒறுத்தல் நெறிமேலிடுகிறது. ஒறுத்ததால் பெற்ற இன்பம், ஒறுத்தவுடன் மறையும்; வெகுண்டு தீயசெயல்களைச் செய்தலால் வென்றோம் என நினைத்தல், அப்பொழுதைக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் அது எப்பொழுதும் நிற்பதாய இன்பம் அல்ல. பொங்கி எழும் சினத்தைப் பொறுமை காத்து தடுத்தால், நீண்டகாலம் புகழ் பெறுவர் என்கிறது பாடல்.
குற்றத்தைப் பொறுத்துக்கொண்டு தவறு இழைத்தவரை மன்னிப்பது என்பது பெருந்தன்மை. அவ்வாறு தாங்கிக் கொள்ளும் மனதுடையவர், துன்பத்தின் வலியையும் உடனடியாக மறந்து விடுவர்; துன்பம் செய்தவரைக் கூட மறந்து மன்னித்து விடுவர். பதில் தீமை செய்யும்போது சிலநாட்களுக்கு பொய்யின்பம் உண்டாகலாம், தவறினால் ஏற்பட்ட இழப்பை ஒறுத்தல் மூலம் சரி செய்யமுடியாது. ஆனால் பொறுத்துக்கொண்டால், அதில் ஏற்படும் மனநிறைவும், தவறு இழைத்தவர்கள், வெட்கி, திருந்துவதற்காக வாய்ப்பும் உண்டாகிறது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்வதுவே மனித உறவுகளை மேலும் வளர்த்து சமுதாயத்தை அமைதியாக்கும். மனிதர்களுக்கு உண்டாகும் வாழ்வியல் சிக்கல்களுக்குப் பொறையின்மை போன்ற மனவெழுச்சிகளே காரணம். மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி நிலைப்படுத்தி வாழ்பவனே உளநலத்துடனும், உடல் நலத்துடனும் வாழ இயலும். எனவே அதற்குப் பொறுமை அவசியம்.
பொறுமையுடையார் எந்நாளும் இன்பமாகவே இருப்பர். ஒறுப்பதால் கிடைக்கும் சிறு இன்பத்தைவிட, வாழ்வே இன்பமாவதையே யாவரும் விரும்புவர்.

கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப் பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்..... (பழமொழி நானூறு 19 பொருள்: சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, அவர் தீச் செயல்களைப் பொறுத்து ஒழுகுதல் புகழாகும்.....) என்னும் பழம்பாடல் இக்குறட்கருத்தைத் தழுவியதே.

'பொன்றும் துணையும்' குறிப்பது என்ன?

'பொன்றும் துணையும்' என்ற தொடர்க்கு சாமளவும், பொன்றும் அளவும், இவ்வுலகம் உள்ள அளவும், உலகம் அழியுமளவும், சாகும் வரைக்கும், வாழ்நாள் முடியும் காலம் வரைக்கும், இறக்குமளவும், அழியும் வரை, உலகம் அழியும்வரை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பொன்றும் துணையும்' என்ற தொடர் அழியும் அளவும் என்ற பொருள் தரும்.
'பொன்றும் துணையும்' என்ற தொடர்க்கு உலகம் அழியும் அளவும் என்று பலர் உரைத்தனர். இப்படிச் சொன்னவர்கள், புத்தர், ஏசு, காந்தி போன்ற மாமனிதர்களைக் கருத்திற் கொண்டு கூறியிருக்கலாம். அப்படிப்பட்ட மாந்தர் மிக மிகச் சிலரே தோன்றுவர். எனவே இறக்குமளவும் என்ற பொருளே பொருத்தமாகப் படுகிறது. அப்படியானால், யார் இறக்கும் அளவுக்கும்? - தீமை செய்தவன் இறக்கும் அளவுக்குமா? தீமையைப் பொறுத்துக் கொண்டவன் இறக்கும் அளவுக்குமா? தீமையைப் பொறுத்துக்கொண்டவனே புகழுக்குரியவன். எனவே மிக்கவையைத் தாங்கிக் கொண்டவன் உயிர் அழியும் அளவும் என்பதே 'பொன்றும் துணையும்' என்ற தொடர் குறிக்கிறது என்பது பொருத்தம்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் (புகழ் 233 பொருள்: இணையில்லா ஓங்கிய புகழைத் தவிர உலகத்தில் அழியாமல் நிலைப்பது வேறொன்றும் இல்லை) என்று புகழே நெடிது நிற்கும் என்று குறள் வேறோரிடத்தில் கூறும். பொறுமைகாத்து எந்நாளும்‌ அழியாத புகழைப்‌ பெற்றோம்‌ என்னும்‌ கருத்தால்‌ வரும்‌ இன்பம்‌ தம்‌ வாழ்நாள்‌ உள்ளளவும்‌ மாறாத உண்மையான இன்பமாம்.

தீமைக்குத் தீமை என்று ஒறுக்காமல் அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவன் உயிர் அழியும்வரை என்பதைப் 'பொன்றும் துணயும்' என்ற தொடர் குறிக்கிறது.

ஒறுத்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே; பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொறையுடைமையாரது இன்பமும் புகழும் வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.

பொழிப்பு

ஒறுத்தவர்க்கு அந்த நாள் மட்டும் இன்பம்; பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும்.