இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0152பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0152)

பொழிப்பு (மு வரதராசன்):: வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.

மணக்குடவர் உரை: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

பரிமேலழகர் உரை: என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று.
('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)

இரா சாரங்கபாணி உரை: நெறிகடந்து செய்யும் குற்றத்தை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க. அங்ஙனம் பொறுத்தலினும் அக்குற்றத்தைச் செய்த அப்போதே மறத்தல் நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை மறத்தல் அதனின்று நன்று.

பதவுரை: பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; இறப்பினை-மிகையை, கடத்தலை; என்றும்-எப்போதும்; அதனை-அதை; மறத்தல்-மறந்து விடுதல், நினைவொழிதல்; அதனின்று-அதனைக் காட்டிலும்; நன்று-நல்லது, நன்மையுடையது.


பொறுத்தல் இறப்பினை என்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; [மிகையினை - குற்றத்தை]
பரிப்பெருமாள்: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று;
பரிதி: பிறர் செய்த குற்றம் பொறுத்தலின் புகழில்லை;
காலிங்கர்: தம்மாட்டுச் சிலர் மரபினைக் கடந்த நெறியதாகிய கேட்டைச் செய்யினும், வெஞ்சொற்களைச் சொல்லினும் தாம் அதனை எஞ்ஞான்றும் பொறுத்தல் சாலநன்று; [வெஞ்சொற்கள் - கொடிய சொற்கள்]
காலிங்கர் பதவுரை: இறத்தல் என்றது கடத்தல்.
பரிமேலழகர்: பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க;

'பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரது பெருங்குற்றத்தை என்றும் பொறுக்க', 'பொறுத்தல் என்பது ஒருவன் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது', 'ஒருவன் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக', 'பிறர் செய்த தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை மறத்தல் அதனின்று நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
பரிப்பெருமாள்: அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
மறத்தல்-வெகுளாமை. அது மிகுதி உடைத்தாதலின் அதனைத் துறவறத்துக் கூறுவர்.
பரிதி: அதனினும் பிறர் செய்த குற்றம் மறத்தலைப் போல அறம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று இதனை யாம் பொறுத்தேம் என்று கருதாது அப்பொறுத்தமை தன்னையும் மறத்தல் சாலநன்மை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார். [மேற்சொல்லிய இரண்டனையும் - தீமையானவற்றைச் செய்தலும், அவற்றைச் சொல்லுதலும்]

'அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முடியுமாயின் மறக்க; அது மிகவும் நல்லது', 'பொறுத்து மன்னித்து விடுவதை விட அக்குற்றத்தை மறந்துவிடுவது இன்னும் சிறந்த பொறையுடைமையாகும்', 'அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவுஞ் சிறந்தது', 'அத்தீமையை உடனே மறந்துவிடல் அங்ஙனம் பொறுத்தலினும் நன்மையாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவும் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் செய்த இறப்பினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக; அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவும் நல்லது என்பது பாடலின் பொருள்.
'இறப்பினை' என்பதன் பொருள் என்ன?

பொறுமை கடந்த மிகை செய்யப்பட்டாலும் அதை உள்ளத்துள் கனன்றுகொண்டிருக்கவிடாமல் மறந்து விடுக.

மிகைபடச் சொல்வாரையும் செய்வாரையும் பொறுத்துக் கொள்க. பொறுத்துக்கொள்வதோடு அக்குற்றங்களை நினைவில் கொள்ளாமல் மறந்துவிடுவது இன்னும் நல்லது.
தமக்கு ஒருவர் மரபு மீறிய கேட்டைச் செய்தாலோ அல்லது வெஞ்சொற்களை உரைத்தாலோ அதனை எப்பொழுதும் பொறுத்தல் நன்று. எப்பொழுதும் என்றது ஒறுத்தற்கு இயன்ற காலத்தையும் குறித்து நின்றது. பொறுத்தலைவிட பிறர் செய்த மிகையை மறத்தல் இன்னும் நல்லது எனவும் சொல்கிறது பாடல்.
‘நன்று’ என்பதனை இறப்பினை என்றும் பொறுத்தல் நன்று என முதலடியிலும் கூட்டி உரை காண்பர். இப்பாடலில் உள்ள பொறுத்தல் என்பதற்கு மன்னித்தல் என்று சிலரும் மறத்தல் என்றதற்கு வெகுளாமை என்று மற்றும் சிலரும் பொருள் கூறினர்.
இது நல்லது, ஆனால் இதைவிட அது நல்லது என்ற பொருளிலே அமைந்த மற்றொரு குறள் இது; நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று(செய்ந்நன்றியறிதல்108) என்ற பாடலின் நடையில் அமைந்தது.

ஒருவர் நமக்குத் தீங்குசெய்த காலத்து தீயன செய்தாரை ஒறுக்கலாம் அதாவது பதிலுக்குப் பதில் தீமை செய்ய நினைக்கலாம்; அல்லது அவற்றைத் தாங்கிக்கொண்டு வாளா இருக்கலாம்; அல்லது எல்லாவற்றையும் உள்ளத்தில் கொள்ளாமல் மறந்துவிடலாம். பழிக்குப் பழி என்னும் ஒறுத்தல் வள்ளுவர்க்கு எப்பொழுதும் ஏற்புடையதல்ல. தீங்கு செய்தாரை ஒறுத்தலுக்குரிய ஆற்றல் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறை. ஆயினும் அப்படிப் பொறுத்தவன் மனம் அமைதி பெறாமல் மனத்துள்ளே எழுந்த சினம் மூளாத தீ போன்று தணலாக இருந்து அவனைவிட்டு நீங்காமல் உறுத்திக்கொண்டே இருக்கும். பொறுத்தவன் உள்ளத்தினுள்ளே 'பொறுத்தேம்' என்ற எண்ணம் உள்ளவரையில் பிறன் செய்த தீங்கு பற்றிய நினவு நிலவுமாதலின் 'நான் பொறுத்தேன்' என்ற நினைப்பையே ஒழிக்க என்கிறது இக்குறள். ஒருவன் செய்யும் தீமையைப் பொறுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாற்றல் கைவரப் பெற்றபின், மறந்துவிடும் பழக்கத்தைக் பயிலவேண்டும். பொறுமையைப் பின்பற்றலைப் பிறர் பலவீனமான குணமாகக் கருதக்கூடும். ஆனால் பொறுமைதான் பலத்தைக் காட்டும் அடையாளம். திருப்பித் தாக்குவதைவிடவும் வலிமையான செயல் அது. தீமை செய்வாரிடம் பொறுமையாக நடந்து கொள்ள உள்ளத்தில் மிகுந்த வலிமை வேண்டும்.
ஏன் மறக்கவேண்டும்? பொறுத்துக் கொள்பவன் மனத்திடைப் பொறுத்தேம் என்ற நினைப்பு உள்ளவரையில் செய்யப்பட்ட தீங்கின் சுவடும் நிலவுமாதலின் அவன் தீமை செய்தான்; அதனை நான் பொறுத்தேன் என்ற நினைப்பையே ஒழிக எனச் சொல்லப்பட்டது. மேலும் நம் மனதில் ஒருவர் செய்த தீமைகளை நினைத்துக் கொண்டிருந்தால் அவரைப் பற்றிய ஒரு காட்சி நம் மனத்தில் ஆழப் புதைந்திருந்து கசப்பு வளர்ந்துகொண்டே இருக்கும்; அது அன்பு மலர ஏதுவாக இருக்காது. அன்பு மலர வேண்டும் என்றால் பிறர் குற்றங்களை மறக்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருந்தால், அது நல்லதல்ல.

'இறப்பினை' என்பதன் பொருள் என்ன?

'இறப்பினை' என்ற சொல்லுக்கு மிகையினை, குற்றத்தினை, வரம்பு மீறிய செயல்களை, மரபினைக் கடந்த நெறியதாகிய கேட்டை, மிகையை, குற்றத்தை, தீமையை, வரம்பு கடந்து தீமை செய்தலை என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

இறப்பு என்ற சொல்லுக்கு இங்கு கடத்தல் என்பது பொருள். குறளில் இறப்பு என்ற சொல் கடத்தல் என்பதோடு சாவு, மிகுந்தது, தாண்டியது என்ற பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. இப்பாடலில் இறப்பினை என்றது 'சொல்லத் தகாததைச் சொல்லலும் செய்யத்தகாததைச் செய்தலுமான மிகுதியை (குற்றத்தை)' என்ற பொருளில் வந்தது.

'இறப்பினை' என்ற சொல்லுக்கு இங்கு மிகைபடச் சொல்லுதலை/செய்தலை அல்லது அளவுக்கு மிஞ்சியதை என்பது பொருள்.

பிறர் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக; அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவும் நல்லது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எல்லை மீறிய தீங்கினையும் பொறுத்து மறக்க என்னும் பொறையுடைமையை அறிவுறுத்துவது.

பொழிப்பு

நெறிகடந்து செய்யப்பட்ட குற்றத்தை எப்பொழுதும் பொறுத்துக் கொள்க; பொறுத்தலினும் அதை அப்பொழுதே மறத்தல் நல்லது.