இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:154)

பொழிப்பு (மு வரதராசன்): நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

மணக்குடவர் உரை: தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்.
நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.

பரிமேலழகர் உரை: நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
(பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பெருந்தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுக்குந் தன்மையைப் போற்றிக் கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும்.

பதவுரை: நிறையுடைமை-சால்புடைமை; நீங்காமை-நீங்காமல் இருக்க, விலகாமை; வேண்டின்-விரும்பினால்; பொறையுடைமை-பொறுத்துக்கொள்ளும் தன்மை; போற்றி-காத்து; ஒழுகப்படும்-நடந்து கொள்ளத்தகும், நடந்துகொள்ள வேண்டும்.


நிறையுடைமை நீங்காமை வேண்டின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின்;
மணக்குடவர் குறிப்புரை: நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
பரிப்பெருமாள்: தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
பரிதி: எல்லாக் குணத்திற்கும் அது அதுவாய் நிற்கும் நிறையுடைமை தன்னைவிட்டுப் போகாமல் வேண்டுமாகில்;
காலிங்கர்: அடக்கமுடைமையாகிய மிகையுடைமை தமது உள்ளத்து நீங்காது நிலைநிற்றலை விரும்பினார் உளராயின்; [மிகையுடைமை-சிறப்பு]
பரிமேலழகர்: ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்;

'தனக்கு நிறையுடைமை நின்று நீங்காமை வேண்டுவனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் சால்புடைமை தன்னிடமிருந்து நீங்காதிருக்க விரும்பினால்', 'நிறைகுணம் உள்ளவன் என்ற பெருமை நீங்காமலிருக்க வேண்டுமானால்', 'மனத்திட்பமாகிய சால்பு தன்னைவிட்டு நீங்காதிருக்க வேண்டும் என்று ஒருவன் விரும்பினால்', 'நற்குணங்கள் நிறைந்திருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நிறைகுணம் உள்ள தன்மை தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்.
பரிப்பெருமாள்: பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வேண்டுவார் பொறுக்க என்கின்றது.
பரிதி: பொறை உடைமை வேண்டும் என்றவாறு.
காலிங்கர்: பொறையுடைமையை எஞ்ஞான்றும் குறிக்கொண்டு ஒழுக அடுக்கும் என்றவாறு.[அடுக்கும்-பொருந்தும்]
பரிமேலழகர்: அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.

பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுமையை விடாமல் போற்றி ஒழுக வேண்டும்', 'பொறுமையைப் பாதுகாத்து அதற்கிணங்க நடந்துகொள்ள வேண்டும்', 'தன்னிடமுள்ள பொறுமையைக் கெடாமல் பாதுகாத்து நடக்கவேண்டும்', 'பொறுமைக் குணம் அழியாமல் காக்கப்பட வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்து ஒழுக வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிறைகுணம் உள்ள தன்மை தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின், பொறையுடைமையைப் போற்றிப் பாதுகாத்து ஒழுக வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நிறையுடைமை' என்றால் என்ன?

பொறுமை காத்தால் சான்றாண்மை தங்கும்.

நல்ல குணங்கள் என்றும் தன்னிடம் நிலைத்து இருக்க வேண்டுமென்று ஒருவர் விரும்பினால் அவர் பொறுமைக் குணத்தினை மிகவும் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
நிறையுடைமை என்பது பல சிறந்த குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கும் தன்மை. சால்பு நிறைந்திருக்கும் இத்தன்மை தன்னைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின், பொறுமைக் குணம் அழியாமல் காக்கப்பட வேண்டும்.

ஒருவர் நற்குணங்கள் பொருந்தியிருந்து நற்செய்கைகள் ஆற்றி சான்றோர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். அந்தப் புகழ் நிலைக்க வேண்டும் என்றால், அவர் அக்குணங்களுள் ஒன்றான பொறுமை என்பதை விடாது பாதுகாத்து எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். மற்ற நற்குணங்கள் பல இருந்தாலும் பொறுமை காக்கத் தவறினால் ஒருவர் சால்புடைமை கொண்டவராகக் கருதப்படமாட்டார் என்பதை வலியுறுத்துகிறது இப்பாடல்.
பொறையுடைமையைப் பாதுகாப்பதென்பது எல்லா வேளைகளிலும் தன்னிடமுள்ள பொறுக்குந் தன்மையைக் கெடாமல் காப்பதில் கருத்தாக இருப்பதைச் சொல்வது. பொறுமை பேணி யார் செய்த குற்றத்தையும் மன்னித்து விடுவது மிகவும் பெருமை தரத்தக்கது. பொறுமையாளர்கள் நல்லதை நிலைநிறுத்தி, அன்புஅருள் உள்ளத்தில் இருத்தி, பொறுமை கொண்டு செயலாற்றுவர். அறியாமையால் சிலர் எள்ளி நகையாடினாலும், தீமைபுரிந்தாலும், வன்சொல் வழங்கினாலும், நிறைகுண நல்லோர், அவற்றையெல்லாம் பொறுத்து, அவர்களை மன்னித்து, பொறை மிகவுடையாராக இருப்பர். நிறை எனும் முழுமை, பொறுமை என்பது இல்லாது போயின் குறையுடைமை ஆகிவிடும். நிறையுடைமைக்கு பொறுமை எனும் குணம் இன்றியமையாதது.

'நிறையுடைமை' என்றால் என்ன?

நிறையுடைமை என்றதற்கு காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம், எல்லாக் குணத்திற்கும் அது அதுவாய் நிற்கும் நிறையுடைமை, அடக்கமுடைமையாகிய மிகையுடைமை, சால்புடைமை, பெருந்தன்மை, மனத்தை ஒருவழி நிறுத்தும் ஆற்றல், நெஞ்சத்தின் உறுதிப்பாடு, நன்மை, நிறையுடைமை, மனத்திட்பமாகிய சால்பு, நற்குணநிறைவு, நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மை, நிறையுடையவனாக இருக்குந்தன்மை, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தும் உயர்பண்பு, பண்பாட்டு நிறைவு, தன்பெருங்குணம், நிதான குணம் உள்ளவன் என்ற பெருமை என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

பொறையுடைமை - நிறையுடைமை என்ன இயைபு?
பொறுமை காப்பது என்பது ஒருவரது வலியற்ற குணத்தைச் சுட்டுவது; அது ஓர்குறை என்று பலர் கருதுகின்றனர். அவ்விதம் எண்ணுவது தவறு; அது நிறையே எனச் சொல்ல வருகிறது இப்பாடல். மேலும் பொறுமை இழந்து ஒருவர் செயல்பட்டால் அவர் குறையுடையவர் என அறியப்படுவார் எனவும் உணர்த்தப்படுகிறது. பொறுத்துப்போதல் என்பது அச்சத்தாலோ, ஆற்றலின்றியோ உண்டாவது அன்று. பொறையுடைமை குறையுடைமை அல்ல; அது நிறையுடைமையே. பொறுமையின்றிச் சீற்றம் பொங்கியெழும் பொழுது மனத்தில் அதைத் தடுத்து நிறுத்தலால், அந்நிறையுடைமையாம் நற்பண்பு நிலைபெறுகிறது. பொறுத்தல் என்பது முழு வன்மை என்பதாலேயே அதை நிறையுடைமையோடு இணைத்துப் பேசுகிறார் வள்ளுவர்.
சினம் வந்தால், பொறுமை நீங்கி, அதை வெளிக்காட்டினால் நிம்மதி உண்டாகும் என்று நம்புவது தவறு என்பதும் பெறப்பட்டது.

'சால்பு' என்ற சொல் நற்குணங்கள் அனைத்தையும் அடக்கி நிற்றலால் அதுவே நிறையுடைமையை நன்கு விளக்கும்.

நிறைகுணம் உள்ள தன்மை தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின், பொறையுடைமையை போற்றிப் பாதுகாத்து ஒழுக வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொறையுடைமை கொண்ட மாந்தரே நிறைவானவராய்த் திகழ்வர்.

பொழிப்பு

நற்குணங்கள் நிறைந்த தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் போற்றி ஒழுக வேண்டும்.