இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0158



மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:158)

பொழிப்பு (மு வரதராசன்): செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.



மணக்குடவர் உரை: தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக.
இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

பரிமேலழகர் உரை: மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக.
(தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)

தேவநேயப்பாவாணர் உரை: செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை தாம் தம் பொறையினால் வென்று விடுக.
சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் 'தகுதியான் வென்று விடல்' என்றார். 'விடல்' வியங்கோள் வினை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மிகுதியான் மிக்கவை செய்தாரை, தாம் தம் தகுதியான் வென்றுவிடல்.

பதவுரை: மிகுதியான்-(செருக்கு) அளவு மீறி இருப்பதால், மனச் செருக்கால்; மிக்கவை-மிகையானவை, தீங்குகள்; செய்தாரை-செய்தவரை; தாம் தம்--ஒருவர் தம்முடைய, தாங்கள் தமது; தகுதியான்-(பொறுமையுடன் கூடிய) தகுதியால்; வென்று-வெற்றி கொண்டு; விடல்-விடுக.


மிகுதியான் மிக்கவை செய்தாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களை;
பரிதி: ஆங்காரத்தினாலே மிகை செய்வார் பிழையை; [ஆங்காரத்தினாலே - அகங்காரத்தால் விளைந்த சினத்தால்]
காலிங்கர்: செய்யும் திறம் ஒழிய நெறிகேட்டாலே மிகையான தீங்குகளைச் செய்தாரை;
பரிமேலழகர்: மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை;

'செல்வ மிகுதியாலே/ஆங்கரத்தினாலே/நெறிகேட்டாலே/மனச் செருக்கால் மிகையான தீங்குகளைச் செய்தாரை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் இறுமாப்பால் தீமைசெய்தவரை', 'செருக்கு மிகுதியால் தமக்குத் தீங்கு செய்தவர்களை', 'செருக்கினால் தீயவை செய்தவர்க்கும்', 'செருக்கால் தீமை செய்தவரை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செருக்கு மிகுதியால் மிகையானவற்றைச் செய்தவர்களை என்பது இப்பகுதியின் பொருள்.

தாம்தம் தகுதியான் வென்று விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.
பரிதி: தமது பொறுமையினாலே வெல்கை அறிவுடைமை என்றவாறு.[வெல்கை-வெல்லுதல்]
காலிங்கர்: வாது செய்தாற்போலத் தாமும் எதிர்மலைந்து செய்யாது தமக்குத் தகுதியாகிய பொறையினால் வென்றுவிடுக என்றவாறு.[வாதுசெய்தாற் போல - வாதாடினாற் போல; எதிர்மலைந்து - எதிர்த்து போரிட்டு]
பரிமேலழகர்: தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக.
பரிமேலழகர் குறிப்புரை: தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.[தோலாது - தோற்றுப் போகாமல்]

'தமது பொறையினாலே வென்று விடுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீ உன் பொறுமைச் சிறப்பால் வென்று விடுக', 'தாம் தம் பொறுமையால் வென்று விடுக', 'நன்மையே செய்து அவரைத் தமது சால்பினால் வென்றுவிடல் வேண்டும்', 'தம்முடைய பொறுமையால் வெல்லுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தங்கள் பொறுமை என்னும் தகுதியால் வென்றுவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
செருக்கு மிகுதியால் மிகையானவற்றைச் செய்தவர்களைத் தங்கள் தகுதியான் வென்றுவிடல் என்பது பாடலின் பொருள்.
'தகுதியான் வென்றுவிடல்' குறிப்பது என்ன?

தமக்குத் தீமை செய்வாரிடம் பொறுமைகாட்டி அவரை நுண்ணறிவுத் திறத்தால் கையாள்க.

செருக்கினால் தீமைசெய்தவரைப் பொறுமை என்னும் நற்திறம் கொண்டு வெற்றி கொள்க.
மிகுதியான் என்ற சொல் அளவுக்கு மீறியதால் என்ற பொருள் தருவது. இங்கு ஒருவர்க்கு மிகும் செருக்கு குறித்து வந்தது. மிகுதி என்பது செல்வமிகுதி, வலிமிகுதி, நெறிகேட்டால் வரும் மிகுதி ஆகியவற்றைக் குறித்தது. இம்மிகுதிகள் அளவு கடந்த அறமற்ற செயல்களைச் செய்யத் தூண்டும்.
அறமற்ற செயல்களை மிக்கவை என்ற சொல் குறிக்கிறது. செருக்கு மிகுதியால் ஒருவர் கொடுமையான செயல்களைச் செய்கிறார். அத்தீமைகளை எதிர்கொள்பவர் எதிர்ச் செயல் புரியாது பொறுமை காக்க வேண்டும். அதுவே அறம் என்கிறது பாடல். தீமை செய்தவரை ஒறுக்கக்கூடாது; பொறுத்துப் போக வேண்டும்; மன்னித்து மறக்கலாம் என்கிறார் வள்ளுவர். அப்படியென்றால் இழைக்கப்பட்ட தீங்குக்குத் தீர்வுவழிதான் என்ன? இக்கேள்விக்கு விடை தருவது போல் இக்குறள் அமைந்துள்ளது.
உயர்ந்த நெறியைப் பின்பற்றி வாழும் சூழலிலும் கூட ஒருவர்க்குப் பகை என்ற ஒன்றைத் தவிர்க்க முடிவதில்லை. தான் உண்டு தன் பணியுண்டு என்று-தான் எந்த வம்புக்கும் போகாமலேயே இருப்பவரையும் சிலர் சீண்டிப்பார்ப்பர். அதுபோன்ற சமயங்களில் வம்புக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விடமாட்டேன் என்று சிலிர்த்தெழுந்து எதிர்த் தாக்குதல் வேண்டாம். வேறு வழிகளும் இருக்கின்றன; அவற்றை எண்ணி ஆராய்ந்து வெற்றி கொள் என்பது மேற்கண்ட வினாவுக்கு வள்ளுவர் தரும் தீர்வாகும். பொங்கி எழுவதை விட்டு விட்டு பொறுமை காத்து மேன்மையாலே வென்று விடு. தீங்குப்பதில் தீங்கு செய்வது அறமல்ல என்கிறார்.

செருக்கினால் தம்மை இகழ்வோரை, தம்மிடம் வீரம் பேசுவோரை, தமக்குத் தீங்கிழைப்போரைத் தமது பொறுமையெனும் பண்பினால் வென்று விடல் வேண்டும். அவரிடம் பதிலுக்குச் சூளுரைப்பதோ, எதிர் வாதம் செய்வதோ, தீங்கு செய்வதோ சரியான முறை அன்று. தமக்குத் தீமை செய்தவரை எதிர்த்து அடக்கி வெல்ல வேண்டும் என்று எண்ணுவதைவிட தமது பொறையாலுயர்ந்த தகுதியால் வென்று காட்ட வேண்டும் என்பது வள்ளுவர் தரும் அறிவுரையாகும். கீழ்க்குணம் கொண்ட ஒருவனை ஒறுத்து வெல்ல நினைத்து நாமும் கீழாக மாறிவிடக்கூடாது; நம் தகுதியால் அவனை வென்றுவிடவேண்டும் என்று இக்குறள் சொல்கிறது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். (இன்னா செய்யாமை, குறள் 314 பொருள்: தமக்குத் துன்பம் தந்தவர்களைத் தண்டித்தல், அவர் தாமே நாணுமாறு அவர்க்கு நன்மை செய்து அவர் செய்த குற்றத்தையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடலாகும்) என்றும் இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. (சான்றாண்மை, குறள் 987 பொருள்: தமக்குத் தீயனவற்றைச் செய்தார்க்கும் நன்மையான வற்றைச் செய்யாவிட்டால் சால்பு என்ன பயனையுடையது?) என்றும் பிற இடங்களில் குறள் கூறும். தீமை செய்தவர்க்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதுவே வள்ளுவர் நமக்குக் கற்றுத் தரும் பாடம். தாங்கிக் கொள்ளலும் மன்னித்தலும் கலந்ததே சரியான நெறி என்பார் அவர்.

'தகுதியான் வென்றுவிடல்' குறிப்பது என்ன?

'தகுதியான் வென்றுவிடல்' என்ற தொடர்க்கு தகுதியால் வென்றுவிடுக அல்லது வென்றுவிடவேண்டும் எனப் பொருள் கொள்வர்.
தகுதி என்பது என்ன? தகுதி எனஒன்று நன்றே..... (நடுவுநிலைமை குறள் 111) என்ற பாடலில் வரும் 'தகுதி' என்பது அதிகாரத்திற்கேற்ப நடுவு நிலையைக் குறித்தது போல இங்குத் 'தகுதி' என்பது அதிகாரம் நோக்கி பொறை உடைமையைக் குறிக்கிறது என்றே அனைத்து உரையாசிரியர்களும் பொருள் கூறினர்.
தகுதி என்பதற்கு ஆற்றல், திறம் என்ற பொருள்களும் உண்டு. எனவே தகுதியான் என்பதற்குத் திறமான வழிகள் என்பதும் பொருத்தமாகலாம். தகுதியான் வென்றுவிடல் என்பது திறமான நெறிகளால் வெல்லுதல் இயலும் என்பதாகும். அதற்குப் பொறுமை தேவை. மிகை செய்தாரினும் மேம்பட்ட பண்புடைமை என்னும் தகுதியை வளர்த்துக் கொண்டால், அது அவரை நம்மினும் கீழாக்கி வெல்லும் ஓர் வழியாம். அத்தகுதியே பொறை என்பது. மிகுதிக்கு மிகுதி செய்தலைவிடத் தகுதிசெய்து மிகுதியை வெல்லலாம் என்பது கருத்து.
கீழ்க்குணம் கொண்ட ஒருவன் உயர்ந்த மனிதர் மேல் சாணம் எறிகிறான்; மேன்மைக் குணம் கொண்டவர் சினம் கொள்ளாமல் 'இதை நான் வளர்வதற்கேற்ற உரமாக ஏற்றுக்கொள்கிறேன்' எனச் சொல்கிறார். இதுதான் தகுதியால் வெல்வது.
மிக்கவை செய்தாரை 'விட்டு விடுக' என்று சொல்லப்படவில்லை. அவரைப் பொறுமை என்னும் பண்பால் வென்று விடுக என்றே கூறுகிறது குறள். வெல்லலும் ஒழுக்க நெறியாதல் வேண்டும் என்பதைத் 'தம் தகுதியான் வென்றுவிடல்' எனக் கூறப்பட்டது. பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பது செய்தி. அம்மேன்மையைத் தகுதி என அழைக்கிறார் வள்ளுவர்.
மணக்குடவர் உரையில் கண்டபடி 'பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது' என்ற மனநிலையைப் பெறுவதும் ஓர் தகுதியான முறையே. வெல்வது, வேண்டின் வெகுளிவிடல் (நான்மணிக்கடிகை 17) என்ற பாடலில் சொல்லியபடி சினம் தவிர்ப்பதைப் பயிலலும் தகுதி வளர்த்துக் கொள்வதே. தாமும் திரும்பத் தீமை செய்யாமல் இருப்பதுவே தோற்றுப் போகாமல் இருப்பதற்கு வழியாகும். இதுவும் தகுதியால் வெல்வதைக் காட்டும்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் (சான்றாண்மை, குறள் 986 பொருள்: சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரை கல்லாகிய செயல் யாது எனின், தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தாரிடம் கொள்ளுதல்) என்ற குறட்கருத்தையும் ஒப்புநோக்கலாம்.
ஒருவருக்கு வெற்றி என்ற போது மற்றவருக்குத் தோல்வி என்ற நிலை எடுக்காமல், இருவருமே வெற்றி-வெற்றி என எண்ணும்படி தீர்வு காண்பதும் ஓர் தகுதியாம்.

'தகுதியான் வென்றுவிடல்' என்ற தொடர் பொறையாலுயர்ந்த தகுதியால் வெற்றிகொள்க எனப் பொருள்படும்.

செருக்கு மிகுதியால் மிகையானவற்றைச் செய்தவர்களை தங்கள் பொறுமை என்னும் தகுதியால் வென்றுவிடுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தீமைக்குத் தீமை செய்யாமல் பொறையுடைமை மூலம் வெல்லலாம்.

பொழிப்பு

இறுமாப்பால் தீயவை செய்தாரைப் பொறை என்னும் தகுதியால் வெல்க.