இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0101 குறள் திறன்-0102 குறள் திறன்-0103 குறள் திறன்-0104 குறள் திறன்-0105
குறள் திறன்-0106 குறள் திறன்-0107 குறள் திறன்-0108 குறள் திறன்-0109 குறள் திறன்-0110

ஒருவர் செய்த உதவியை, நன்மையை நினைத்துக் கொள்ளுதல். உலகில் பலருக்குத் தாம் பிறருக்குச் செய்த நன்மையே நினைவில் நிற்கும்; பிறர் தமக்குச் செய்த உதவி மறந்துபோகும். கைம்மாறு கருதாதது செய்ந்நன்றி; அந் நன்மையைச் செய்து கொண்டவன்தான் நினைந்து போற்ற வேண்டும்.
- தமிழண்ணல்

பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல் ஆகும். செய்யாமல் செய்த உதவி, காலத்தினால் செய்த உதவி, பயன் தூக்கார் செய்தார் உதவி என்றிவை நன்றி உணர்தலில் அளவிட்டு அறியமுடியாத மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. நன்றி மறப்பது அறமன்று எனச் சொல்லப்படுகிறது. செய்ந்நன்றி கொல்வது அதாவது தனக்குச் செய்யப்பட்ட உதவியில் தோன்றவேண்டிய நன்றியுணர்வை நினைவிற்கொள்ள மனமில்லாமல் அதை அழித்துவிடல் என்பது மன்னிப்பே இல்லாத குற்றமாம் என்று கூறப்படுகிறது.

செய்ந்நன்றியறிதல்

ஒருவர்க்கொருவர் உதவி செய்வதாலேயே உலகம் இயங்குகிறது. பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கையாகிறது. ஒருவரது வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வாயில்கள் வழியாக ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. துன்பங்கள் நேர்கின்றன. அதுபோன்ற வேளைகளில் பிறர் உதவியில்லாமல் அவற்றிலிருந்து மீள்வது கடினம். ஆனாலும் யாராவது எங்கிருந்தாவது உதவுவர். அவ்விதம் நமக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறவாமல் நினைந்து போற்றவேண்டும். உதவி என்பது பொருளுதவி மட்டுமன்றி எல்லாவகையான உதவிகளையும் குறிக்கும்.

நன்றி என்ற சொல் இன்று ஒருவர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சி காட்டுதல் அல்லது திரும்ப உதவுதல் என்ற பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் இவ்வதிகாரத்தில் நன்றி என்ற சொல் நன்மை அல்லது உதவி என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. செய்யப்பட்ட உதவி நினைக்கப்படவேண்டும் என்பதைச் சொல்வது இவ்வதிகாரம். நன்றிக்கு நன்றி செய்வது அல்ல. அதாவது செய்யப்பட்ட நன்றியை மறவாது இருப்பது பற்றியதே இது. செய்ந்நன்றியறிதலை உதவியறிதல் எனவும் கொள்ளலாம். செய்த நன்றி அதாவது செய்யப்பட்ட நன்றி என்பது செய்ந்நன்றி எனச் சுருங்கியது.
'ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறவாது நினைவிற்கொள்ளவேண்டும் என்றால் ஏதோ செய்ததற்கு ஈடு செய்வது அல்ல. இன்ன காலத்து இவர் இன்ன செய்தார் எனப் பாராட்டிப் பேசினும் செய்ந்நன்றி தாழும் என்னும் கருத்தை எண்ணி ‘நன்றி கூறல்’ என்னாது ‘நன்றியறிதல்’ என்று கூறப்பட்டது (தண்டபாணி தேசிகர்).
உதவி பற்றியும் உதவி பெற்றோர் பற்றியும் பேசும் அதிகாரம் உதவி செய்தோர் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை.

நன்மையின் அளவை எண்ணாது செய்யப்பட்ட உதவிக்காகவே அதைப் பெரிதாகப் போற்றுவர் நன்றியுணர்வுள்ளவர்கள்; துன்ப காலத்தில் நன்மை செய்தவர்களை எப்பொழுதும் மறக்காமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும்; நன்மையல்லாதவற்றை மறக்கப் பயிற்சி கொள்ளவேண்டும்; சிறு உதவியையும் பெரிதாகப் போற்ற வேண்டும்; ஒருவன் கொல்வது போன்ற துன்பத்தை செய்தாலும் அவன் செய்த ஒரு சிறு நன்மையின் நினைவு அதை மறக்கடிக்கும்; உதவியைப் பெற்ற பிறகு, மனதின் சிறுமையால், செய்யப்பட்ட நன்மையை மறந்துவிடக்கூடாது; செய்ந்நன்றி மறத்தல் கொடிய செயலாகும்; ஒருவன் எந்த நன்மையை மறந்தாலும் மீட்சி பெறலாம்; ஆனால் நன்றியுணர்வைச் சாகடித்தால் அத்தீச் செயலிலிருந்து மீட்சியே இல்லை; இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

செய்ந்நன்றியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 101 ஆம்குறள் முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்கிறது.
  • 102 ஆம்குறள் உற்ற நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது உலகத்தைவிட பெருமையில் பெரியது எனச் சொல்கிறது.
  • 103 ஆம்குறள் ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உதவியின் தன்மையை ஆராயின், நன்மை கடலினும் பெரிது என்பதைச் சொல்கிறது.
  • 104 ஆம்குறள் தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள்.என்பதைச் சொல்வது.
  • 105 ஆம்குறள் செய்யப்பட்ட உதவிப்பொருளின் அளவு பொறுத்ததல்ல உதவி, அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது என்கிறது.
  • 106 ஆம்குறள் குற்றமற்றாரது கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து துணையாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர் எனச் சொல்வது.
  • 107 ஆம்குறள் தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் நன்றியறிவுடையோர் என்று சொல்கிறது.
  • 108 ஆம்குறள் ஒருவர் செய்த உதவியை மறப்பது அறமன்று; அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது எனச் சொல்வது.
  • 109 ஆம்குறள் கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறைந்து போகும் என்பதைச் சொல்வது.
  • 110 ஆவதுகுறள் எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும்; செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு அதிலிருந்து மீள வழியில்லை எனக் கூறுகிறது..

செய்ந்நன்றியறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

செய்ந்நன்றியறிதல் வெகு உயர்வாகச் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வதிகாரத்தில் உதவிக்கு ஒப்பீடு செய்வதற்கு வையகம், வானம், ஞாலம், கடல் போன்ற அளவிட்டு அறியமுடியாத உவமப் பொருட்கள் ஆளப்பட்டன; நன்றி-நன்றிஅறிதல் இவற்றின் வேறுபாடு தெளிவாகப் புலப்படும் வகையில் தினை-பனை என்ற எல்லைகளில் குறிக்கப்பட்டுள்ளது, எழுமைஎழுபிறப்பு என்ற கழிநெடுங் கால அளவிலும் சொல்லப்பட்டுள்ளது.

மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (106) என்னும் பாடல் தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலிமைதந்து உதவினார் நட்பை விடாதொழிக எனச் சொல்கிறது. இப்பாடலிலுள்ள 'மறவற்க மாசற்றார் கேண்மை' என்ற பகுதி பின்சொல்லப்படும் 'துன்பத்துள் துப்பாயர்' என்பவன் குற்றமுள்ளவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக உள்ளது. செய்யப்பட்ட உதவியின் கால அருமை நோக்கி துன்ப காலத்தில் கைகொடுத்து உதவியவன் தொடர்பைக் குற்றமுள்ளவனென்று விட்டு விடாதே என்கிறது இக்குறட்பா. எங்கும் தூய்மை பேசும் வள்ளுவர் இங்கு குற்றமுள்ளவனானாலும் அவன் துன்பகாலத்தில் துப்பாய் அதாவது வலிமை சேர்ப்பவனாய் இருந்ததால் அவன் செய்த உதவியையும் மறத்தலாகாது என்கிறார்.

நன்றிமறவாத் தன்மையைப் பெரிதாகப் பாராட்டும் அதிகாரம், நன்றி கொன்ற குணத்தைக் குற்றங்களின் உச்சநிலையாகக் காட்டுகின்றது. மிகக் கொடுமையான தீச்செயல் புரிந்த ஒருவனைவிட, செய்ந்நன்றி கொன்றவன் கொடிய தீர்ப்புக்கு உள்ளாகின்றான். கழுவாய் தேடி உய்தி பெறும் நிலைமை இவனுக்கு அறவே இல்லை என்கிறது எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்110) என்ற பாடல். நன்றி மறத்தல் என்பது செய்யப்பட்ட நன்மையை நினைவில் நிறுத்தாத குற்றம் குறிப்பது. நன்றி கொல்தல் என்பது தனக்குச் செய்யப்பட்ட உதவியைப் பாராட்டாமல் இருப்பதும் அதன் பயனை முற்றிலும் துய்த்தபின்னர் உதவியவர் என்ன பெரிதாகச் செய்துவிட்டார் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதும் அந்நன்மையைத் தான் பெறவே இல்லை என்று மறுப்பதும் ஆகும்.




குறள் திறன்-0101 குறள் திறன்-0102 குறள் திறன்-0103 குறள் திறன்-0104 குறள் திறன்-0105
குறள் திறன்-0106 குறள் திறன்-0107 குறள் திறன்-0108 குறள் திறன்-0109 குறள் திறன்-0110