நன்றி மறப்பது நன்றன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல;
பரிதி: ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல;
காலிங்கர்: உலகத்து ஒருவர் செய்த நன்றி பெரும்பயனைத் தரும். ஆதலால், தமக்கு ஒருவர் செய்த நன்மையைத் தாம் மறப்பது தமக்கு நன்மை அல்ல'.
பரிமேலழகர்: ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று;
ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல/அறன் அன்று என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது', 'துன்பக் காலத்தில் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல', 'ஒருவன் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று', 'ஒருவர் செய்த உதவியை மறப்பது அறமன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.
மணக்குடவர் கருத்துரை: இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று
பரிதி: ஒருவர் செய்த குற்றத்தை அன்றே மறப்பது நன்று என்றவாறு.
காலிங்கர்: அதனால், நன்மை அல்லாதது ஒருவர் செய்யின் அதனை அப்பொழுதே மறந்து விடுவதே நன்மை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
பரிமேலழகர் கருத்துரை: இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு. [இரண்டும் - நன்மையும் தீமையும்; மறப்பதும் மறவாததும் - மறப்பது தீமை (நன்றல்லது) மறவாதது-செய்த நன்மை]
'அவர் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவர் செய்த நன்றல்லாத தீமையைச் செய்த அப்பொழுதே மறப்பது அறமாகும்', 'பின்னால் அவர்கள் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது', 'ஆனால் அவன் செய்த தீமையை செய்த பொழுதே மறப்பது நன்று', 'ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது அறம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|