இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0105



உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:105)

பொழிப்பு (மு வரதராசன்): கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

மணக்குடவர் உரை: முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி.
இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

பரிமேலழகர் உரை: உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
'(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உதவி உதவிப் பொருளைப் பொறுத்ததன்று. உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உதவி உதவி வரைத்தன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பதவுரை: உதவி-செய்யப்பட்ட நன்மை; வரைத்துஅன்று-பொறுத்தது இல்லை; உதவி- உதவிப்பொருள்; உதவி செயப்பட்டார்-உதவி பெற்றுக் கொண்டவர்; சால்பின்- நற்பண்பின், மேன்மையின்; வரைத்து-அளவானது.


உதவி வரைத்தன்று உதவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி;
பரிப்பெருமாள்: முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி;
பரிதி: முன்னே ஒரு உதவி செய்யாமல் செய்த நன்றிக்குத் தான் ஒரு நன்றி செய்வோம் என்றால் அவனைக் கெடுக்க நினைவதற்கு ஒக்கும்;
காலிங்கர்: உலகத்து உதவியாளர் ஒருவர்க்கு உதவுகின்ற உதவி, பொருளினது வரம்பினை உடைத்தன்று. பின்பயக்கும் பெரும் பயன்மாற்று என்னை எனின்;
பரிமேலழகர்: கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று;

'முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி' என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிது முற்றிலும் வேறுபாடான உரை தருகிறார். இவரும் உதவி என்பதற்கு மாற்றுதவி எனப்பொருள் கொண்டாலும் மாற்றுதவி செய்ய நினைக்கக்கூடாது என்கிறது இவர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'உதவி உதவிப் பொருளைப் பொறுத்ததன்று', 'உதவி உதவியின் அளவைப் பொறுத்ததன்று', 'கைம்மாறாகச் செய்யும் உதவி முற்செய்த உதவியின் அளவாகக் கருதப்படக்கூடாது', 'கைம்மாறான உதவி முன் செய்த உதவி அளவினதன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்யப்பட்ட உதவிப்பொருளின் அளவு பொறுத்ததல்ல நன்மை என்பது இப்பகுதியின் பொருள்.

உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி.
மணக்குடவர் குறிப்புரை: இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.
பரிப்பெருமாள்: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி.
பரிப்பெருமாள் குறிப்புரை: மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.
பரிதி: நினையாமற் செய்த நன்றியை நினைத்திருப்பதே நன்று என்றவாறு.
காலிங்கர்: அவ்வுதவியாளரால் ஒரு உதவிப் பொருளினைச் செய்யப்பட்டவர் தகுதி வரம்பினை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. [உதவியைச் செய்வித்துக் கொண்டவர் - உதவியைப் பெறுபவர்;
பரிமேலழகர் குறிப்புரை: சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது. [மூன்றுமல்லாத உதவி- காரணமில்லாமல் செய்த உதவியும், துன்பக் காலத்தில் செய்த உதவியும், பயனை எதிர் நோக்காமல் செய்த உதவியும் ஆகிய மூன்றும் அல்லாத கைம்மாறான உதவி]

'அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி நன்றியை நினைத்தாலே போதுமானது என்று உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது', 'உதவி பெறுபவரின் பெருந்தன்மையை அளவாகக் கொண்டது', 'அஃது உதவி செய்யப்பட்டவர்களது தகுதியின் அளவாகச் செய்யப்படுதற்குரியது', 'உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யப்பட்ட நன்மையின் அளவு பொறுத்ததல்ல உதவி, அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது என்பது பாடலின் பொருள்.
'உதவி' என்ற சொல் குறிப்பது என்ன?

நன்றி பாராட்டத் தெரிந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாம்.

முற்குறளில் (104) தினைத்துணை நன்றியும் பனைத்துணையாகக் கருதப்படும் அதன் பயனை அறிபவரால் எனச் சொல்லப்பட்டது. அக்கருத்துக்கு இயையுமாறு இங்கு ஒருவர் செய்த உதவியானது உதவிப்பொருளின் அளவை எல்லையாக உடையது அன்று; அது, உதவி பெற்றவரின் பண்பின் அளவானதாகும் எனக் கூறப்படுகிறது.
செய்யப்பட்ட நன்மையை எந்த அளவீடும் கொண்டும் மதிப்பீடு செய்யமுடியாது. பண உதவியாயிருந்தால் வட்டியுடன் சேர்த்து முதலைத் திருப்பிக் கொடுத்துவிடலாமென்றாலும் பெற்ற நன்மையின் மதிப்பு வட்டியுடன் சேர்ந்த முதல் மட்டும் அல்ல, அதற்குப் பன்மடங்கு மேலாம் என்பதை பயன் பெற்றவர் உணர்ந்திருப்பர். அவர் முன் செய்த உதவியை என்றும் மறவாது நினைந்து கொண்டிருப்பார்; இதை உதவியை ஏற்றவர் எந்த அளவு நன்றியுணர்வு கொண்டிருக்கிறாரோ அந்த அளவு உதவியானது மதிப்புடையது என்கிறார் வள்ளுவர்.
உதவிக்கு உதவி செய்தல் இன்றியமையாதது அல்ல; உதவியே பெரிது. பணமல்லாத மற்ற நன்மைகளாயிருந்தால் ஏதோ ஒருவகையில் அளவு மதிப்பீடு செய்து நன்றிக்கடன் செலுத்தலாம். அவ்விதம் மறு உதவி செய்துவிட்டாலும் அது அத்துடன் நிறைவுபெற்றது என்று உதவி செய்யப்பட்ட சால்புடையவர் எண்ணமாட்டார் என்கிறார் வள்ளுவர். சால்பு என்னும் பண்பு மிகையாக இருந்தால் செய்ந்நன்றி மறவாத குணம் மிகையாக இருக்கும்.
நன்றியறிவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ உதவியும் அவ்வளவு சிறப்பு பெறும்; நன்றி பாராட்டும் குணம் இல்லாதவர்க்குச் செய்யப்பட்ட உதவியும் சிறுமைக்குள்ளாகும். நன்றியறிவு குறைவாக உள்ளவர் உதவியை ஏற்கும்வரை அதைப் பெரிதாக நினைப்பர்; உதவியின் பயனைத் துய்த்தபின் உதவியையும் உதவி செய்தவரையும் இழித்தும் பேசத் தயங்கமாட்டார்.

பரிதி என்னும் தொல்லாசிரியர் 'முன்னே ஒரு உதவி செய்யாமல் செய்த நன்றிக்குத் தான் ஒரு நன்றி செய்வோம் என்றால் அவனைக் கெடுக்க நினைவதற்கு ஒக்கும். நினையாமற் செய்த நன்றியை நினைத்திருப்பதே நன்று' என உரை வரைந்தார். இவ்வுரை, 'செய்த உதவிக்கு மறு உதவி செய்துவிட்டால் பெற்றதைத் திருப்பித் தந்தாகிவிட்டது என்று எண்ணவேண்டாம்; செய்த உதவியை மறவாமல் நினைத்திருப்பதே நன்று' எனச் சொல்கிறது. ஒருவர் செய்த நன்றிக்கு தான் ஒரு நன்றி செய்தல் முக்கியம் அல்ல; அதனை நினைந்திருப்பதே மேல் என்பது இவர் உரையின் சாரம். இது இக்குறளுக்கு ஒரு சிறப்பான உரையாக உள்ளது.

இக்குறட்பாவின் நடை இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் (விருந்தோம்பல் 87 பொருள்: விருந்தின் பயன் இவ்வளவு என்று சொல்ல முடியாது; விருந்தளவிற்கு பயன் உண்டு) என்னும் பாடலின் கருத்தை யொத்ததாக உள்ளது. இப்பாடலுடன் நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (தெரிந்து செயல்வகை 469 பொருள்: நன்மை செய்வதிலும் தவறு உண்டாகிவிடும் அவரவர் இயல்பு அறிந்து ஆற்றாவிடின்) என்ற பொருட்பாலின் குறட்கருத்தையும் இணைத்து எண்ணலாம்.

'உதவி' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பாடலில் வந்துள்ள உதவி என்ற சொல் நன்மை என்ற பொருளில் ஆளப்பட்டது. இச்சொல் இக்குறளில் மூன்று இடங்களில் வந்துள்ளது. முதலில் சொல்லப்பட்டது உதவிச் செயலைக் குறிக்கும். இரண்டாவதாக வரும் உதவி, உதவிப் பொருள் அதாவது செயப்பட்ட நன்மை குறித்தது. மூன்றாவதான உதவி, செய்யப்பட்ட உதவியின் அளவைச் சுட்டுவதாக உள்ளது.
முதலாவதாக வரும் உதவி என்ற சொல்லை விளக்குவதில் உரையாளர்கள் பெரிதும் மாறுபடுகின்றனர். ஒருசாரார் இது ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவி குறிப்பது என்றும் மற்றவர்கள் கைமாறாகச் செய்யும் எதிர் உதவி என்றும் இரு வேறுபட்ட பொருள்களில் உரைத்தனர். பெரும்பான்மையினர் இப்பாடல் நன்மைபெற்றவர் நன்றியுணர்ச்சிவழி மறு உதவி செய்வது பற்றியது எனவே கருதுகின்றனர். இக்குறள் கைம்மாறு பற்றியது என்பதற்கு அதில் ஒரு குறிப்புமில்லை. செய்நன்றி அறிதலை வற்புறுத்திக்‌ கூறுவதற்காக அமைந்ததே இப்பாடல். செய்நன்றிக்கு எதிர்‌ நன்றிஆற்றுவதைக் கூறுவதற்காக எழுந்தது அல்ல இது. செய்யப்பட்ட உதவியையும் அதனை மறவாமையையும் பற்றிப் பேசுவது இப்பாடல்.

'உதவி' என்ற சொல் நன்மை குறித்தது.

செய்யப்பட்ட உதவிப்பொருளின் அளவு பொறுத்ததல்ல உதவி, அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றியறிதலே நன்மை செய்தார்க்குச் செய்யும் கைம்மாறு.

பொழிப்பு

உதவிப்பொருளின் அளவைப் பொறுத்ததன்று நன்மை; அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தை அளவாகக் கொண்டது.