இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:107)

பொழிப்பு (மு வரதராசன்): தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்

மணக்குடவர் உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

பரிமேலழகர் உரை: தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம். விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

தமிழண்ணல் உரை: தம்மிடம் நேர்ந்த கடுந்துன்பங்களைப் போக்கியவர் நட்பினை, ஏழேழு பிறப்பிற்கும் நல்லோர் நினைத்துக்கொள்வர்.
என்றென்றும் மறக்கக்கூடாது என்பதை இங்ஙனம் கூறுவது ஒரு மொழிநடை மரபு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்

பதவுரை: எழுமை-உயர்ச்சி, எழுந்தன்மையுடையது; எழு-ஏழு வகையாகிய; பிறப்பும்-பிறப்பும்; உள்ளுவர்-நினைப்பர்; தங்கண்-தம்மிடத்தில்; விழுமம்-துன்பம்; துடைத்தவர்-நீக்கியவர்; நட்பு-தோழமை, உறவு.


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிப்பெருமாள்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிதி: செனனம் தோறும் நினைக்கப்படும்;
காலிங்கர்: எழுவகையாகத் தோன்றி வருகின்ற பிறப்புதோறும் ஈண்டுச் செயலாகும் நன்றியைக் கொண்டே பிறவிதோறும் இடருறும் காலத்துப் பெரியோர் செய்த நன்றிகள் என்று இங்ஙனம் எழுவகைப் பிறப்பினும் தமக்குச் செய்தார் செய்தநன்றிகளைச் சிந்திப்பச் செய்ந்நன்றி அறிவார் என்றவாறு.
பரிமேலழகர்: எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். [எழுமை - வினைப்பயன் தொடர்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் [குறள் 62] [எழு பிறப்பு - எழுவகைப் பிறப்பு]

''எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர்'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் நினைப்பர் என்றதற்கு சான்றோர் என்று மணக்குடவரும் செய்ந்நன்றி அறிவார் என்று காலிங்கரும் நல்லோர் என்று பரிமேலழகரும் குறித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர்', 'தம்முடைய தொடர்கின்ற எழுவகைப் பிறப்புகளிலும் சான்றோர் மறவாது போற்றுவர். (எழுபிறப்பு என்பதற்கு ஏழு தலைமுறை என்றும் கூறுவர்', 'நன்றியுள்ளவர்கள் எழேழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள்', 'எழுமையினையுடைய எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். (எழுமை-எழு. பிறப்பு-தமக்கு உண்டாகும் பலவகை நிலைமைகள்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை .
பரிப்பெருமாள்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாற்றுதவி செய்யுங்கால் நிலத்தினும் நீரினும் உளவான பொருளாற் செய்யுங்கால் அதற்கு நேர் ஒவ்வாமையின் எக்காலத்திலும் அவரை ஒழிவின்றி நினைத்தலேயாவது என்று கூறப்பட்டது..
பரிதி: தம்முடைய மனக்கிலேசத்தைத் துடைத்தவர் நட்பை என்றவாறு
காலிங்கர்: தம்மாட்டு வந்து எய்தும் இடுக்கண் துடைத்தவர் நட்பை .
பரிமேலழகர்: தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.

'தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை', 'துன்பத்தைப் போக்கியவரது நட்பினை', 'துன்பக் காலத்தில் வந்து உதவி செய்து துன்பங்களைத் துடைத்துவிட்டவர்களுடைய உறவை', 'தம்மிடம் உண்டாகிய துன்பத்தைப் போக்கியவர் நட்பினை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை எழுமை எழுபிறப்பும் நினைத்துக்கொள்வர் நன்றியறிவுடையோர் என்பது பாடலின் பொருள்.
எழுமை எழுபிறப்பும் என்றால் என்ன?

துன்பத்தில் உதவியவரது உறவு கால எல்லை இல்லாமல் போற்றப்பட வேண்டியது.

தமது துன்பத்தைப் போக்கியவரின் நட்பை நன்றியறிவுடையோர் ஏழேழ் பிறவிக்கும் மறவாது நினைத்துப் போற்றுவர்.
ஒருவர் தம் வாழ்நாளில் பலரிடமும் சிறிய பெரிய உதவிகள் பெறுவர். செய்யப்பட்ட எல்லா வகை உதவிகளும் நினைக்கத்தக்கனவே. ஆனால் துன்ப காலத்தில் துயர் துடைக்க விரைந்து வந்து உதவியவரின் நற்செய்கை நெடுங்காலம் மறவாதிருக்கச் செய்யும். இதை அழுத்தமாக உணர்த்த ஏழேழ் பிறவிக்கும் மறக்கமாட்டார்கள் என்று இங்கு கூறப்பட்டது.
செய்த நன்றியை அன்றே மறப்பவர்களும் நம்மிடை உளர். துன்ப நீக்கத்திற்கு உதவி செய்தவரை அத்துன்பம் நீங்கியவுடன் மறப்பவர்களும் உண்டு. இப்பாடல் துன்பம் துடைத்தவரை எக்காலத்தும் மறத்தலாகாது என அறிவுறுத்துகிறது.

துடைத்தல் என்ற சொல் விரைவும் நிறைவுந் தோன்றச் சொல்லப்பட்டது என்பர். இச்சொல் துன்பக் கண்ணீர் துடைத்தலைக் குறிக்கக் கூறப்பட்டது என்று சில உரையாளர்கள் கருதுவர்.
'உள்ளுபவர் யார்' என்பது பாடலில் சொல்லப்படவில்லை. உரையாசிரியர்கள் சான்றோர், செய்ந்நன்றி அறிவார், நல்லார், நன்றியறிவுடையோர். நன்றியுள்ளவர்கள், அறிவுடையோர், செய்நன்றி அறிந்தோர், நன்றியுடையோர் எனப் பலவாறு வருவித்துரைத்தனர். இவற்றுள் செய்ந்நன்றி அறிவார் என்பது பொருத்தம்.
விழுமம் என்ற சொல்லுக்குத் துன்பம் என இங்கு பொருள் கொள்வர்.

எழுமை எழுபிறப்பும் என்றால் என்ன?

எழுமை என்ற சொல்லுக்கு ஏழு என்பது பொருள். எழுபிறப்பும் என்ற சொல் ஏழு பிறப்பு என்ற பொருளில் கூறப்பட்டதாகக் கொள்வர். எழுமை எழுபிறப்பும் என அதையே அழுத்தம் பெற இரட்டித்துக் கூறப்பட்டது. ஏழேழ் பிறவிக்கும் என்றது.
எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர். எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது. சமயங்களே பிறப்புகள் பல உண்டு என்ற நம்பிக்கையைக் கொணர்ந்தன. வள்ளுவர் இங்கு கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையையே குறிக்கும். வாழையடி வாழையாக எனவும் கொள்வர்.
குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார். கா அப்பாத்துரை 'ஏழுகுடி வட்டாரங்கள். முதல்வட்டம் தானும் மனைவி மக்களும் இரண்டாம் வட்டம் தாய்தந்தை, மனைவியின் தாய்தந்தை, மூன்றாம் வட்டம், தன்னுடன் பிறந்தாரும்- தன் மனைவியின் உடன் பிறந்தாரும்; நான்காம் வட்டம் தன் தாயின் உடன் பிறந்தார், தாயின் உடன் பிறந்தார் மக்களும் தந்தையுடன் பிறந்தார்களும் தந்தையுடன் பிறந்தாரின் மக்கள் இவர்களையும் தன் தாயும் மனைவியையும், ஐந்தாவது-ஆறாவது-ஏழாவது மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டிப் பரவிய பிற உறவினர்களையும் கொண்டமைவது' என்பார்.
'எழுமை' என்னுஞ்சொல் உயர்ச்சியையோ பெருமையையோ பல என்னும் பொருளையோ குறிக்கும் சொல் எனக்கூறி ஒருவர் ஆற்றிய நன்றியை மறவாது அவர்தம் தலைமுறையில் வந்தோர்க்கு, அத்துன்பத்தினின்று விடுபட்ட தலைமுறையினர், செவியறிவுறுத்தல் கரணியமாய்ச் செய்ந்நன்றியுடையோராய் இந்நாள் வரை இருக்கக் காண்டலின் அவர் தம் பிறப்பின் உயர்வு தொடர்ந்து எழுதலாற் 'எழுமை' என்னுஞ் சொல்லாற் உணர்த்தப்பட்டதெனத் தெளிக எனவும் உரைத்தனர்.
"'எழு பிறப்பு' 'எழுமை' என்ற நம்பிக்கை நெடுங்காலமாகத் தமிழ் மக்களுக்குள் பழக்கத்திலிருந்து வருகிற பதங்கள். பாவ புண்ணியங்களின் பலன்களை நினைப்பூட்ட வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதனால்தான் பாமர மக்களும் 'ஏழு பிறப்புகள்' என்பது என்ன என்ற ஆராய்ச்சி இல்லாமலேயே நல்வினை தீவினை என்பவைகளையும் மறுபிறப்புகளையும் நம்பி நடக்கிறார்கள்" என்பது சி இலக்குவனார் கருத்துரை.

எழுமை எழுபிறப்பும் என்றதற்குச் சமயம் சார்ந்த கருத்துக்களான ஏழுபிறவி, பலபிறவி போன்றவற்றைக் கொண்டே பெரும்பான்மையர் இக்குறளுக்கு உரை வகுத்தனர். மறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் அறியமுடியாது. அவ்விதம் அறியமுடியுமானால் இப்பிறவியில் நமக்கு முற்பிறவியில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியுமே. அப்படி யாருக்கும் நிகழ்வதில்லையே. பிறவிகள், வினைப்பயன் தொடர்தல் போன்றன அறிவுக்குப் பொருந்துமாறில்லை. எழுமை எழுபிறப்பு என்பது 'ஏழேழ் பிறவி' என்ற பொருள் தருவது. இன்றும் 'ஏழேழு பிறப்பு' என்பது வழக்கில் உள்ளது. துன்பம் துடைத்து உதவியவரின் நல்ல நட்பை எக்காலத்தும் மறவாது எண்ணுதல் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு ஏழேழ் பிறப்பு என்று இங்கு அது மிகைப்படுத்தி நீண்ட காலத்தைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது.

எழுமை எழுபிறப்பும் என்ற தொடர் நீண்ட நெடுங்காலம் என்ற பொருள் தருவது.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் நன்றியறிவுடையோர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்பம் துடைத்த செய்ந்நன்றியறிதல் கழிநெடுங்காலம் நீடிக்க வேண்டும்.

பொழிப்பு

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரது நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் செய்ந்நன்றிஅறிவார்.