இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0109



கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:109)

பொழிப்பு (மு வரதராசன்): முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

மணக்குடவர் உரை: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.

பரிமேலழகர் உரை: கொன்று அன்ன இன்னா செயினும் - தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் - அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
(தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தமக்கு முன் நன்மை செய்தவர் பின்னர் கொல்லுதல் போன்ற தீமையைச் செய்தாலும், அவர் செய்துள்ள நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறக்கப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்

பதவுரை: கொன்றன்ன-கொன்றாலொத்த; இன்னா-தீங்குகள்; செயினும்-செய்தாலும்; அவர்செய்த-அவர் (முன்) செய்த; ஒன்று-ஒரு; நன்று-நன்மை; உள்ள-நினைக்க; கெடும்-அழியும், மறையும்.


கொன்றன்ன இன்னா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்; [இன்னாமை - தீமை அல்லது துன்பம்]
பரிப்பெருமாள்: தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்;
பரிதி: தன்னைக் கொன்றாற்போல் ஒத்த பொல்லாங்கு செய்தாலும்;
காலிங்கர்: ஒருவர் தம்மைக் கொல்லும் கொலைக்கு மேற்பட்டதோர் இன்னாமை இல்லை; மற்று அது போலவே தத்தம் பொல்லாங்கு செயினும்; .
பரிமேலழகர்: தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;

'தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன் ஒரு நன்மை செய்தவர் பின் கொன்றாலொத்த தீமை செய்யினும்', 'ஒருவன் கொலை செய்துவிடுவதைப் போன்ற துன்பத்தைச் செய்துவிட்டாலும்', 'தனக்கு ஒரு நன்மை செய்தவர் பின் தன்னைக் கொல்வது போன்ற தீமையைச் செய்தாலும்', 'தமக்கு முன் நன்மை செய்தவர் பின்னர் கொல்லுதல் போன்ற தீமையைச் செய்தாலும்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்
பரிப்பெருமாள்: அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்
பரிப்பெருமாள் குறிப்புரை :ஒருமுறை நன்மை செய்தார் பலகால் தீமை செய்வார் ஆயின் அதற்குச் செய்வது என்னை என்றார்க்கு இது கூறப்பெற்றது.
பரிதி: தினையத்தனை நன்றி செய்ததை நினைத்து அதனை விடுக என்றவாறு.
காலிங்கர்: அவர் முன்பு செய்தது ஒன்றே ஆயினும் நன்றி உளதாயின் அதனைச் சிந்திக்கவே எல்லாக் குற்றமும் தீரும் செய்ந்நன்றி அறிவார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது. [அவ்வொன்றுமே- அவர் செய்த நன்மை ஒன்றுமே; அவற்றை எல்லாம் - அவர் செய்த இன்னாதவற்றை எல்லாம்]

'அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் செய்த நன்மையைப் பனைத்துணையாகக் கருதி மதிக்கவே அத்தீமை மறைந்தொழியும்', 'அவன் முன் நம்முடைய துன்பக் காலத்தில் உதவி செய்த அந்த ஒன்றை நினைத்துப் பார்த்தால் இப்போது அவன் செய்த துன்பங்கள் மறைந்துவிடும்', 'அவர்செய்த நன்மை யொன்றினை நினைத்துப் போற்ற, அத்தீமைகளெல்லாம் கெட்டொழியும்', 'அவர் செய்துள்ள நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறக்கப்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறைந்து போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொன்றன்ன இன்னா செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறைந்து போகும் என்பது பாடலின் பொருள்.
'கொன்றன்ன இன்னா' குறிப்பது என்ன?

அவர் அன்று செய்த நன்மையை நினை; இன்று செய்யும் இன்னாமை மறையும்.

ஒரு உதவி செய்தவர் பின்னர் தீமை செய்தாலும் அந்நன்மையை நினைக்கவே தீமை இல்லாமல் போய்விடும்.
முன்பு ஒருமுறை ஒருவர் நமக்கு ஓர் நல்லது செய்தார். காலங்கள் நகர்ந்தன. காட்சிகள் மாறிவிட்டன. இப்பொழுது அவர் பகைமை பாராட்டுகிறார்; உயிரைப் பறிக்கும் கொலைக்கு ஒப்ப துன்பம் தந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலைமையில் நாம் என்ன செய்யவேண்டும்? வள்ளுவர் சொல்கிறார்: 'அன்று ஓர் நன்மை செய்தானே, அதை நினைத்துக் கொள்; துன்பம் தானாகவே மறைந்துவிடும்'.

ஒருவன் செய்த துன்பத்தை மறைந்தொழியச் செய்வதற்கு அவன் முன் செய்த உதவியை மனத்துள் நினைத்துக் கொண்டாலே போதும் என்கிறது இப்பாடல். அவன் ஒரு சமயம் ஒரே ஒரு சிறிதான நன்மை செய்தான்; இப்பொழுது தாங்கொண்ணாத் துன்பம் தருகிறானே என்று எண்ணவேண்டாம். அவன் செய்வது பெரிய தீங்கு என்றாலும் பொறுத்துக் கொள் என்கிறார் வள்ளுவர். அந்த நன்மையை எண்ண எண்ண நமக்குச் செய்யப்பட்ட தீங்கிற்கு மனதில் இடமில்லாது போகும். அவர் துன்பம் செய்கிறார் என்பதே தெரியாமல் போய்விடும். அவர் செய்த தீமைகளெல்லாம் தீமையில்லாதவனவாக ஒழிந்துவிடும். தீமையைமட்டும் நினைக்க வஞ்சம் தான் வளரும்.
நன்றியறிவுடையார் மனப்பண்பாடு வளர்வதற்கானதும், நன்றல்லவற்றை மறப்பதற்கானதுமான, எல்லோருக்கும் இயலக்கூடிய, பழக்க முறை ஒன்று கூறப்பட்டது. இது பகையை மீண்டும் நட்பாய் மாற்றும். துன்பம் தருவார் மீது தோன்றும் சினத்தையும் அவருக்கு எதிர்த் துன்பம் தந்து வன்முறை தோன்றுவதையும் தவிர்க்கும். நன்றி மறத்தல் என்னும் குற்றம் வராமலும் செய்யும்.

கொன்றன்ன இன்னா' குறிப்பது என்ன?

கொன்றன்ன என்பது கொன்றால் அன்ன என விரியும். ‘கொன்றன்ன இன்னா' என்பதற்குக் கொலைக்குச் ஒத்த துன்பங்கள் அல்லது தீமைகள் என்பது பொருள். கொலை செய்யப்படுபவர் உயிரை வாட்டும் துன்பங்களைப் பேரெல்லையில் துய்ப்பர் என்பது யாவரும் உணரக்கூடியதே. செய்ந்நன்றி அறிதலை அழுத்தத்துடன் புலப்படுத்த, கொல்வது போன்ற கொடுமை இழைக்கப்பட்டாலும் செய்த நன்மையை மறவாதே என்று வள்ளுவர் சொல்கிறார், எதிர்த்துன்பம் செய்யாதவிடத்து தீங்கிழைப்பவரும் மனம் மாறித் தீங்கு செய்யாதவராகி விடுவார்.

வ சுப மாணிக்கம் உதவி செய்தவரே நன்றியுணர்ச்சியைக் கொல்லும் அளவு தீமை செய்வது பற்றிக் கூறும் இக்குறட்கருத்தை ஓர் எடுத்துக்காட்டுடன் கூறுகிறார். 'நன்றி செய்தவன் உதவி பெற்றவனைக் கைம்மாறு காட்டும்படி கட்டாயப்படுத்துகிறான். தினைத்துணை நன்றி செய்தவன் தானே பனைத்துணைக் கைம்மாறு வேண்டுகிறான். இவ்விதம் உதவி பெற்றானது நன்றியுணர்ச்சியைக் கொல்கிறான். நன்றி காட்டத் தவக்கஞ் செய்வானேல், பகைத்துச் சீறியெழுந்து, நெடுநாட் பகைவன் போல் உயிரை அழிக்கும் துன்பம் உறுத்துகிறான். இஃதோர் மனநிலை. இச்சூழலில் உதவி பெற்றவன் தன் மனத்தூய்மை கெடா வண்னம் நடப்பது யாங்ஙன்? சிறந்த மக்கட் பண்பான நன்றியுணர்ச்சியைக் காப்பது யாங்ஙனம்? ஒருவரே நமக்கு நன்மையும் அன்மையும் செய்த நிலையில், நல்லது ஒன்றாக, தீயபலவாகச் செய்த நிலையில் பண்பு வேண்டும் குறளிது. 'இன்னா செயினும் அன்று செய்த நன்மையை உள்ளக் கெடும்' என வழி காட்டினார்' என்று நன்றியுணர்ச்சி கொல்லப்படும் அளவு தீமை செய்யப்பட்டாலும் அவர் செய்த நன்மையை நினைத்து அமைக என அவர் இதை விளக்குகிறார்.

கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறைந்து போகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்யப்பட்ட உதவியை எண்ணி அமையும்போது நன்றல்லாதது மனதிலிருந்து மறையும் என்னும் செய்ந்நன்றியறிதல்.

பொழிப்பு

முன் ஒரு உதவி செய்தவர் பின் கொன்றாலொத்த தீமை செய்யினும் அவர் செய்த நன்மையை நினைக்கவே அத்தீமை மறைந்தொழியும்