இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:101)

பொழிப்பு (மு வரதராசன்): தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது

மணக்குடவர் உரை: முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

பரிமேலழகர் உரை: செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது.
(கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம்: உரை: கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது..

பதவுரை: செய்யாமல்-செய்யாதிருக்க, செய்யாதிருந்தாலும்; செய்த உதவிக்கு-(தானாக முன்வந்து) செய்யப்பட்ட உதவிக்கு, நன்மைக்கு; வையகமும்-மண்ணுலகமும்; வானகமும்-விண்ணுலகமும்; ஆற்றல் அரிது-ஒப்பாகாது, போதியதாகாது.


செய்யாமல் செய்த உதவிக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு;
பரிப்பெருமாள்: ['செய்யாமைச் செய்த' - பாடம்.] பிறர் செய்த உதவிகளில் செய்யாமைச் செய்தலும் காலம் தப்பாமற் செய்தலும், பயன் தூக்காது செய்தலும் வலிவுடையன. அவற்றுள் செய்யாமைச் செய்தலின் பெருமை வரையறுக்கப்பெற்றது.;
பரிதி: தனக்கு முன்னே ஒரு உதவி செய்தமைக்கு அறிந்து உதவி செய்வது நிகரல்ல கபடற்று முன்செய்த நன்றிக்கு; [கபடு அற்று -வஞ்சனையில்லாமல்]
காலிங்கர்: முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு இடர் வந்துறுங் காலத்துச் செய்த உதவியின் பெருமைக்குக் கைம்மாறு சீர்தூக்கின் அவர்க்கு; [கைம்மாறு - பிரதி உபகாரம்]
பரிமேலழகர்: தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு;

முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு ஒருவன் செய்த உதவிக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'செய்யாமல்' என்றதற்கு 'செய்யாதார்' என்று மணக்குடவரும், செய்யாமை' என்று பரிப்பெருமாளும் பாடம் கொண்டனர். '

இன்றைய ஆசிரியர்கள் 'முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் தானே முன்வந்து செய்த உதவிக்கு', 'நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னால் பெறாதவராக இருந்தும் தக்க சமயத்தில் ஒருவர் நம்க்குத் தாமாகவே செய்கிற உதவிக்கு', 'தான் உதவி யாதும் செய்யாதிருக்க தனக்கு மற்றொருவன செய்த உதவிக்கு', ' தான் முன் உதவி செய்யாமல் தனக்குப் பிறர் செய்த உதவிக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

வையகமும் வானகமும் ஆற்றல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது [நிறையாற்றுதல் - எடையால் ஒத்தல்]
பரிதி: பூமி ஆகாசம் இரண்டும் நிகரல்ல.
காலிங்கர்: இம்மை மறுமை இரண்டுலகும் நிறையாற்றல் அரிது என்றவாறு
பரிமேலழகர்: மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. [அரிது-ஒப்பாகாது]
பரிமேலழகர் குறிப்புரை: கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர். [கைம்மாறு-ஒருவரிடம் பெற்ற உதவிக்கு ஈடாகத் திருப்பிச் செய்யும் உதவி; மறித்து - திருப்பி]

'மண்ணுலகும் விண்ணுலகும் நிறையாற்றல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது', 'ஈடாக மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் போதாது', 'கைம்மாறாக மண்ணுலகமும் விண்ணுலகமும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா', 'மண்ணுலகமும் விண்ணுலகமும் ஈடாகா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது பாடலின் பொருள்.
'செய்யாமல் செய்த உதவி' என்றால் என்ன?

நாம் ஒருவர்க்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்தபோதிலும், அவர் நமக்குச் செய்த நன்மைக்கு கைமாறாக எதையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

தனக்கு முன்னமோர்‌ எந்தவொரு உதவியும் செய்யாதிருக்க, ஒருவன்‌ பிறனுக்குச்‌ செய்த உதவிக்கு, மண்‌ணுலகத்தையும்‌ விண்ணுலகத்தையும்‌ கைம்மாறாகக்‌ கொடுத்தாலும்‌ ஆற்றல் அரிது என்கிறது பாடல். செய்யாமல் செய்த உதவி என்பதற்குக் காரணமில்லா உதவி என்றும் ஆற்றல்‌ என்ற சொல்லுக்கு ஒத்தல் அல்லது ஈடாதல் எனவும் பொருள் கொள்வர். தனக்கு முன் ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறருக்குச் செய்த உதவி அளவிடற்கரியது என்று சொல்ல வருகிறது இப்பாடல்.
இங்கு சொல்லப்பட்ட உதவி முதலில் செய்யப்படும் உதவி என்பர். எதிர் உதவியாகச் செய்யப் படும் உதவி, நன்றிக் கடனைத் தீர்ப்பதால் அதற்கு ஒப்பீடு காணமுடியும். ஆனால் எதிர் உதவி அல்லாமல் செய்யப்படும் முதல் உதவிக்கு ஒப்பீடு கிடையாது. கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும், முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து.
பிறர் நமக்கு செய்த உதவிக்குக் கைம்மாறாக ஏதாவது உதவி அவர்க்குச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் அரிதாகவே காணப்படுவர். எனவே தனக்கு எந்த உதவியும், யாரும் செய்திராவிட்டாலும், தானாக முன்வந்து, பிறர்க்கு உதவி வேண்டும் போது, உதவுவது ஒப்பற்ற பெரிய உதவியேயாம்.

ஒருவர்க்கு ஓர் உடனடி உதவி தேவைப்படுகிறது. உதவி தேடிச்சென்ற இடங்கள் பயனளிக்கவில்லை. இப்பொழுது யாரிடம் சென்று கேட்பது என்று புரியாமலும், நாண்கொண்டும் அவர் வாளாவிருக்கிறார். இவர் தேவையை அறிந்து, தக்க சமயத்தில், மனமுவந்து யாரோ ஒருவர் தானே முன் வந்து அதைச் செய்து விடுகிறார். அப்பொழுது உதவி பெற்றோர் மனநிலை எவ்விதம் இருக்கும்? தெய்வமே அம்மனிதர் வடிவில் வந்து உதவியது என்றுதான் நினைப்பார்.
பொதுவாக உதவி செய்பவர்கள் தமக்கு இவர் முன்பு செய்த உதவிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணி உதவுவார்கள் அல்லது பின்னால் இவரால் நமக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உதவ முன்வருவார்கள். நாம் அவருக்கு இதற்குமுன் எந்தவொரு உதவியும் செய்ததும் இல்லை. என்றாலும், உடனடி தேவை ஏற்படும் நேரத்தில்- அவரே முன்வந்து தானாகவே நமக்கு உதவி செய்கிறார். அப்படிப்பட்ட உதவி செய்த அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்வது? விண்ணுலகையும் மண்ணுலகையும் அவருக்கு கொடுத்தாலும் ஈடாகாது. கடல் பெரிது. கடலினும் அதை உள்ளடக்கிய இந்த நிலவுலகம் பெரிது. அதனினும் அளவிடமுடியாத வானுலகம் இன்னும் பெரிது. நிலவுலகம், வானுலகம் இவை இரண்டையும் விடப் பெரிதாக எண்ணப்படவேண்டியது செய்யாமல் செய்த உதவி. அவ்வளவு பெரிய அளவுடையது அந்நற்செயல் என்கிறார் வள்ளுவர். அவ்வுதவிக்கு ஒப்பு எதுவும் இல்லை என்பது கருத்து. வானமும் நிலமும் ஈடில்லை என்று சொல்லப்பட்டதால் செய்யாமல் செய்யப்பட்ட உதவி பெற்றார், அவ்வளவு நன்றிவுணர்வோடு இருக்கவேண்டும் என்பதும் சொல்லப்பட்டது.

''செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று பரிப்பெருமாள் அதற்கு உரை கூறினார். கைம்மாறாகச் செய்தற்கு இயலாமை உள்ள இடத்து, (ஏழைகளுக்குச் செய்த உதவி போன்றது) என்று இதற்குப் பொருள். பயன் கருதுவதை மனத்திற் செய்யாது செய்த உதவி என்றும் கூறுவர்.

கம்பரும் இக்குறட்கருத்துக் கொண்ட பாடலை யாத்துள்ளார். அது:
உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக. மதம் யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ (கம்ப இராமாயணம், கிட்கிந்தா காண்டம், கிட்கிந்தைப் படலம், 56 பொருள்: மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த; உதவிக்கு உதவியாக; வேறு கைம்மாறு; என்ன உள்ளது? ஒன்றும் இல்லை.)

'செய்யாமல் செய்த உதவி' என்றால் என்ன?

செய்யாமல் செய்த உதவி என்பதற்கு முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த உதவி, முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு இடர் வந்துறுங் காலத்துச் செய்த உதவி, காரணமில்லாமல் செய்த உதவி, பயன் கருதுவதை மனத்திற் செய்யாது செய்த உதவி, தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவி, கேளாமலே முன்வந்து செய்த உதவி, திருப்பிச்செய்ய முடியாமல் செய்துவிடும் உதவி, யாரும் செய்யாமல் கைவிட்ட போழ்து செய்த உதவி, செய்ய இயலாது சிரமத்தின் ஊடே செய்யப்பட்ட உதவி, தான் செய்யாமல் பிறரைக் கொண்டு செய்த உதவி, வெளிக்கு உதவி செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல் ஒருவர் அவ்வப் போது செய்துவரும் உதவி என்று பலவாறாகப் பொருள் கண்டனர்.

நாம் ஒன்றும் செய்யாமல் ஒருவர் நமக்கு ஏன் உதவி செய்கிறார்? காரணமேயில்லாமல் ஒருவர் உதவிசெய்யலாம். உதவுவதே தன் கடமை என்று அறிந்து உதவும் அறவாணர்கள் பலன்நோக்காது முன்பின் அறியாதவர்களுக்கெல்லாம் நற்செயல்கள் புரிவர். இது இயல்பாகவே அவர்களிடம் உள்ள உதவி செய்யும் மனப்பான்மையாலும் அருட்குணத்தாலும் உண்டாவது. இவ்விதம் காரணமின்றிச் செய்யப்படும் உதவியும் செய்யாமல் செய்த உதவி என்று அறியப்படும்.
உலகத்தாற் புரக்கப்பட்ட தான் உலகத்தைப் புரக்கும் கடன் ஆற்ற வேண்டும்.....ஒருவன் வாழ்க்கைக்கு ஊரும் சுற்றுப்புறமும் உலகமும் செய்த நன்மை வெளிப்படக் காணுதற்கு இன்று எனினும், பிறந்தது முதல் நினைந்து பார்ப்பார்க்கு அந்நன்மைப் பெருக்கம் புலனாகும். 'செய்யாமற் செய்தவுதவி' என்பது இவ்வுலக உதவியையே சுட்டும் போலும் ( வ சுப மாணிக்கம்).
பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்வது, ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடம், அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றையும் செய்யாமல் செய்த உதவிகள் என்பர்.

'செய்யாமல் செய்த உதவி' என்றது முன்னர் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவர் பிறருக்கு செய்த உதவி எனப்பொருள்படும்.

முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நாம் ஒன்றும் செய்யாதிருக்க நமக்குச் செய்யப்பட்ட நன்மைக்கு மிகைப்படச் செய்ந்நன்றியறிதல் வேண்டும்.

பொழிப்பு

நாம் கேளாமல் தாமே முன்வந்து நமக்கு ஒருவர் செய்த உதவிக்கு நிலவுலகும் வானுலகும் கொடுத்தாலும் ஈடாகா.