இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0103



பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:103)

பொழிப்பு (மு வரதராசன்): இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்

மணக்குடவர் உரை: தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

பரிமேலழகர் உரை: பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம்.
(இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: இன்னது செய்தால் இது கிடைக்கும் எனப் பயனை எண்ணிப் பாராமல் உதவியவரின் அன்பை ஆராய்ந்து பார்த்தால் அவர் செய்த உதவியின் நன்மை கடலைவிடப் பெரிதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

பதவுரை: பயன்-பயன், நன்மை; தூக்கார்-நிறுத்துப்பார்க்காதவராய், நோக்காதவராய், ஆராய்தலிலராய்; செய்த-இயற்றிய, செய்யப்பட்ட; உதவி-நன்மை, நன்றி; நயன்--தன்மை, ஈரம், நன்றி, நன்மை; தூக்கின்-ஆராயின்; நன்மை-நன்மை; கடலின்-கடலைவிட; பெரிது-பெரியது.


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின்;
பரிப்பெருமாள்: தனக்கு ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உபகாரத்தை நயனுடையவன் தூக்குவானாயின்;
பரிதி: ஒருவன் ஒருவர்க்கு நன்றி செய்யும்போது பயன் தூக்காமல் செய்த நன்றிக்கு;
காலிங்கர்: தன் மனத்தினால் மேல்வரும் பயனைச் சீர்தூக்காராய், தமக்கு ஒருவர் செய்த உதவியினது தன்மையைச் சீர்தூக்கின்; [சீர்தூக்கல்-அளவிட்டு ஆராய்தல்]
பரிமேலழகர்: இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; [ஈரம்-அருள்]

'தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த உபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயன் கருதாது செய்த உதவியின் நன்மை எண்ணிப் பார்ப்பின்', 'பிரதிப் பிரயோசனத்தைக் கருதாமல் செய்கிற உதவியினுடைய அன்பை அளக்கப் போனால்', 'கைம்மாறு கருதாது செய்த உதவியின் நயத்தை ஆராய்ந்து பார்த்தால்', 'உதவியின் பயனை ஆராய்தலிலராய்ச் செய்த உதவியின் நன்மையை ஆராயின்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உதவியின் தன்மையை ஆராயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நன்மை கடலிற் பெரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.
பரிப்பெருமாள்: அதனால் உண்டான நன்மை கடலினும் பெரிது.
பரிதி: எழுகடலும் நிகரல்ல என்றவாறு.
காலிங்கர்: அவ்வுதவித் தன்மையினது நன்மை கடலினும் பெரிது என்றவாறு.
பரிமேலழகர்: அதன் நன்மை கடலினும் பெரிது ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது. [அளவில வாதல் கூறப்பட்டது-அளவிட்டுக் கூறுதல் முடியாது]

'அவ்வுதவித் தன்மையினது நன்மை கடலினும் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடலினும் பெரியது', 'அது கடலைவிடப் பெரியதாம். அளக்க முடியாததாகும்', 'அதற்கடிப்படையான நல்லியல்பு கடலினும் பெரிதே. (கடல் தன்பால் மேகங்கொண்ட நீரை மீண்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினுஞ் சிறந்தவர் என்றவாறு.)', 'அது கடலினும் பெரிதாகும்' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

நன்மை கடலினும் பெரிது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உதவியின் தன்மையை ஆராயின், நன்மை கடலிற் பெரிது என்பது பாடலின் பொருள்.
'கடலிற் பெரிது' குறிப்பது என்ன?

கைம்மாறு கருதாத உதவியின் நன்மைகள் அளவிட முடியாததாக இருக்கும்.

இவருக்கு இன்ன உதவி செய்தால் பிறகு நமக்கு இன்னது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் தன்மையை ஆய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிட அளவினால் மிகப் பெரியது ஆகும்.
உலகியலில் பலர் ஏதோ ஒரு பயன் கருதியே உதவி செய்கின்றனர். இக்குறளில் பயனை எடைபோட்டுப் பார்க்காமல் அதாவது ஆதாயக் கணக்குப் பாராமல் செய்த உதவி பேசப்படுகிறது. அவ்விதம் எந்த எதிருதவியும் நோக்காது அன்புள்ளம் கொண்டு செய்யப்பட்ட உதவியின் சிறப்பு அளவிட்டுக் கூறமுடியாது என்று சொல்கிறது பாடல். ஈரமுள்ள நெஞ்சுடன் செய்யப்பட்டதால் அவர் செய்த உதவிக்கு எதிருதவியாக எதையுமே ஏற்கவும்மாட்டார். பயன்கருதாமல் செய்யப்பட்ட இவ்வுதவியின் தன்மையை ஆராயப் புகுந்தால் அது அளவிடமுடியாது; அது கடலைவிடப் பெரிது என்கிறார் வள்ளுவர். தன்னலம் அற்ற தன்மையுடன் செய்யப்பட்ட உதவியாதலால், அந்த அருளுடைமை கடல் செய்யும் நன்மையைவிடப் பெரிது எனப்பட்டது. தனக்குப் பயனுள்ளதா என்று ஆராயாமல் பிறர்க்கு நன்மைதரும் உதவியைச் செய்பவரின் அன்புடைமை கடலை விட விரிவானதும் ஆழமானதுமாகும்.

இவ்வதிகாரத்தில், முதலில், காரணம் இன்றிச் செய்த உதவிக்கு வையகம், வானம் இரண்டையும் கொடுத்தாலும் இணையில்லை எனச்சொல்லப்பட்டது. அடுத்து, தக்க நேரத்தில், செய்யப்பட்ட உதவி உலகத்தை விடப்பெரியது எனப்பட்டது. இங்கு தன்னலம் கருதாது செய்யப்படும் உதவி கடலை விடப் பெரியது எனக் கூறப்படுகிறது. இவையனைத்தும் உதவுதலின் அளவிறந்த சிறப்பை வலியுறுத்துவன.

நயன் என்றதற்குத் தன்மை, நன்றி, நன்மை, மேன்மை, அருமை, உதவிப்பயன், கருணை, ஈரமுடைமை, அன்புடைமை, நயனுடையான் எனப் பொருள் கூறினர். இவற்றுள் இங்கு தன்மை என்னும் பொருள் பொருத்தம். நயன் ஆராய்ந்தால் என்பதில் உதவியின் தன்மை கருதப் பெறுகின்றது.

'கடலிற் பெரிது' குறிப்பது என்ன?

கடலிற் பெரிது' என்பது கடலினும் பெரிது எனப் பொருள் தரும். இதற்குத் தொல்லாசிரியர்கள் கடலின் பரப்பளவைக் கருதி உரை செய்தனர். இந்த உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பகுதி பெரியது.
பயன் எதிர்பார்க்காமல் செய்த உதவி, அதனால் விளையும் நன்மை கடலினும் பெரியது என்கிறார் வள்ளுவர்.
உரையாசிரியர்கள் கடல் செய்யும் நன்மையை ஒப்பிட்டுப் பொருள் கூறுகின்றனர். கடல் உதவும் நன்மைகளாகக் கடல்படுபொருள்கள், மேகத்திற்கு நீர் உதவுவது ஆகிய கடல் வளங்களை இவர்கள் காட்டுவர்.
நாகை சொ தண்டபாணி 'பயன் கருதாது எழிலிக்குத் தன்னைக் கொடுக்க, எழிலி அதனை அவ்வாறே பயன் கருதாது உலகிற்குக் கொடுத்தலின், அவ்விருவாற்றானும் சிறப்பெய்தியது கடலாதலால், ’கடலிற் பெரிது’ என இக்குறளுக்கு உரை தருகிறார்.
கா சுப்பிரமணியம் பிள்ளை ஏன் கடலிற் பெரிது எனச் சொல்லப்பட்டது என்பதை இன்னும் தெளிவாக்குகிறார். அவர் உரை 'கைம்மாறு கருதாது செய்த உதவியின் நயத்தை ஆராய்ந்து பார்த்தால், அதற்கடிப்படையான நல்லியல்பு கடலினும் பெரிதே. கடல் தன்பால் மேகங்கொண்ட நீரை மீண்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினுஞ் சிறந்தவர் என்றவாறு' என்கிறது. இது 'கடல் மேகத்துக்குத் தந்த நீரைத் திரும்பப் பெறுகிறது. பயன்தூக்கார் செய்த உதவியை மீண்டும் பெறுவதே இல்லை. அதனால் உதவியின் தன்மை கடலின் நன்மையைக் காட்டிலும் பெரிது' என்ற கருத்தைத் தருவது.
மனிதநேயத்தோடு, ஒருவர்க்குச் செய்யப்பட்ட உதவியின் பயனை நன்றியோடு நினைத்துப் பார்த்தால் அதனால் கிடைத்த நன்மை கடலைவிட பெரிதாகத் தோன்றும்.

வள்ளுவர் 'நயன்தூக்கின்' அதாவது நயன் ஆராய்ந்தால் என்று சொல்வதால் அவர் நன்மையின் தன்மையைத்தான் ஒப்பிடுகிறார். ஒன்றையும் எதிர்நோக்காமல் பிறர்க்கு நன்மைதரும் உதவியின் தன்மையில் அறநிலை சிறந்தோங்கி விளங்குகிறது. பயன் ஆராயாமல் செய்யப்பட்டதன் நயத்தை -தன்மையை, பண்பை அதாவது ஈரமுடைமையை - ஆராய்ந்தால் அது கடலைவிடப் பெரியதாக விளங்கும். அதை அளக்கவும் இயலாது.

'கடலிற் பெரிது' என்றது நன்மையின் தன்மையைக் குறிப்பது.

ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உதவியின் தன்மையை ஆராயின், நன்மை கடலினும் பெரிது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றியறிதல் நன்மையின் தன்மையையும் கருதுவது.

பொழிப்பு

பயன் கருதாது செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்து பார்த்தால், நன்மை கடலினும் பெரியது.