இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0061 குறள் திறன்-0062 குறள் திறன்-0063 குறள் திறன்-0064 குறள் திறன்-0065
குறள் திறன்-0066 குறள் திறன்-0067 குறள் திறன்-0068 குறள் திறன்-0069 குறள் திறன்-0070

மக்களைப் பெறவேண்டும் என்பதானும் நாம் கருதி வரும் முறையில் அறத்தின்பாற்படுமோ? மக்கட்பேறு என்ற ஓர் இனிய சுவையான பொருளை அதிகாரமாக வள்ளுவர் தழுவிக்கொண்டதற்குத் தமிழ் அகத்திணை மரபே காரணம். அகத்திணைக் கற்பொழுக்கத்தில் புதல்வனுக்குக் கூற்று இல்லாவிட்டாலும் அவன் நெய்க்கிண்ணம்போல இன்றியமையாப் பாத்திரம் ஆவான். பிள்ளையால் இருவர்தம் பிணைப்பும் கடமைகளும் முயற்சிகளும் கூடுதலாகின்றன.
- வ சுப மாணிக்கம்

மக்கட்பேறு என்பது மக்களைப் பெறுதல் பற்றியது. இதற்கு 'மக்களாகிய செல்வம்' எனவும் பொருள் காண்பர். மக்கள் அறிவுள்ள பிள்ளைகளாக உருவானால் அதைவிடச் சிறந்த பேறு வேறெதுமில்லை எனத் தொடங்குகிறது அதிகாரம். அவர்கள் பண்புள்ளவர்களாகவும் அவரவர் காலில் நிற்கும்படியாகவும் வளர்க்கப்படவேண்டும் என்று தொடர்கிறது. குழந்தைகளின் சிறுகை ஊட்டிய உணவும், மெய்தீண்டலும், மழலைச் சொல்லும் பெற்றோர்க்கு அளவிலா இன்பம் பயக்கும் என்றும் குழந்தைகளை உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்தல் தந்தையின் கடமை என்றும் பிள்ளைகளை அறிவுடைமையராக்குதல் பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருக்கவேண்டும் என்று இத்தொகுப்பு கூறுகிறது. மக்கள் நற்குணம் கொண்டவரானால் தாய்க்கு மகிழ்ச்சி. அவர்கள் பெருமை கொண்டவர்களாக ஆனால் தந்தையின் முயற்சிகளுக்கு வெற்றி என்று சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.

அதிகாரத் தலைப்பு

இவ்வதிகாரத்துத் தலைப்பாக புதல்வரைப் பெறுதல் என்றும் மக்கட்பேறு என்றும் கொள்கின்றனர். இவற்றில் வள்ளுவர்‌ தந்த தலைப்பு எது?

அதிகாரப் பெயர் 'புதல்வரைப் பெறுதல்' என்று மணக்குடவர்-பரிப்பெருமாள், பரிதி, காளிங்கர், பரிமேலழகர் ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் குறிக்கின்றனர். (மணக்குடவரின் பிரதி ஒன்றில் மக்கட்பேறு என்ற தலைப்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது,) அதன்பின் வந்தவர்களிலும் கவிராசபண்டிதர் வரை அதே தலைப்பையே காண்கிறோம். திருக்குறள் அதிகாரங்களின் பெயரைத் திருவள்ளுவரே அமைத்தார் என்று பரிமேலழகர் 'அவர்வயின் விதும்பல்' (127) என்னும் அதிகாரத் தொடக்க உரையில் குறித்துள்ளார். இதைக் குறளறிஞர்கள் அனைவரும் ஒப்புவர். எனவே புதல்வரைப் பெறுதல் என்பதை வள்ளுவர் இட்ட பெயராகக் கொண்டு அதையே பழையவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் திரு வி க அதிகாரத் தலைப்பை 'மக்கட்பேறு' என மாற்றினார். இன்றைய உரையாசிரியர்கள் அனைவரும் மக்கட்பேறு என்றே தலைப்பிட்டனர். குறளின் அனைத்துத் தலைப்புக்களும் தூய தமிழ்ச் சொற்களாகக் காணப்படுகின்றன; புதல்வரைப் பெறுதல் என்பதில் அயல்மொழிக் கலப்புச் சொல் தோன்றுவதால் 'மக்கட்பேறு' என்னும் தலைப்பையே இன்று அனைவரும் விரும்புகின்றனர்.
குறளின் அதிகாரத் தலைப்புப் பெரிதும் ஒவ்வொரு அதிகார முதற் பாட்டிலேயே தோற்றம் செய்வது ஆசிரியர் வழக்கம்; இவ்வதிகாரத்து முதற்பாட்டிலும் 'மக்கட்பேறு' என்ற தொடரே ஆளப்பட்டுள்ளது. அதிகாரத்துள் 'புதல்வர்' என்னும்‌ பெயராட்சி எங்கும்‌ இல்லை; ஒவ்வொரு குறளிலும் மக்கள்/மகன் என்றே ஆண்டு வந்துள்ளன; முன்னதிகாரமான 'வாழ்க்கைத் துணைநலத்தின் இறுதிப் பாட்டிலும், இவ்வதிகார முதற் பாட்டிலும் மக்கட்பேறு என்றே குறிக்கப் பெறுகின்றது; இன்னபிற காரணங்களை முன்வைக்கின்றனர் அதிகாரத்தலைப்பை மக்கட்பேறு என்று அழைத்த அறிஞர்கள். இதனால் இவர்கள் அதிகாரத் தலைப்பு 'மக்கட்பேறு' என இருத்தலே அமைவுடையதாகும் என்கின்றனர்.

எல்லா இடத்தும்‌ பாடலில்‌ வரும்‌ தொடர்கொண்டே ஆசிரியர்‌ அதிகாரப்‌ பெயர்களை அமைக்கவில்லை என்பதும் அறியத்தக்கது. 'கடவுள்‌ வாழ்த்து' என்னும்‌ முதல்‌ அதிகாரத்தில் கடவுள் என்ற சொல்லாட்சியே இல்லை. ஆதலால்‌, அதிகாரப்‌ பாடல்களில்‌ வரும்‌ தொடரை வைத்துக்‌ கொண்டுமட்டும்‌ இவ்வதிகாரப்‌ பெயரை 'மக்கட்‌ பேறு' என்று ஆசிரியர்‌ கொண்டார்‌ என்று ஒருதலையாகத்‌ துணிய இயலவில்லை, எனினும் இவ்வதிகாரத்து ஒவ்வொரு குறளிலும் மக்கள் என்றே வள்ளுவர் ஆண்டு வந்துள்ளமையால் அதனை அதிகாரப் பெயராகக் கொள்வதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. மக்கட்பேறு என்பதும் புதல்வரைப்‌ பெறுதல்‌ எனவே பொருள்படுகிறது. மக்கட்பேறு என்ற சொல்லாட்சி இவ்வதிகாரத்துக் காணப்படுதலின் இவ்வதிகாரப் பெயர் மக்கட்பேறு என மாற்றப்பட்டது.

மக்கட்பேறு

தம் குழந்தைகள் தரும் இன்பங்கள், பிள்ளை வளர்ப்புமுறை இவற்றைக் கூறும் அதிகாரம். முதற்கண்‌ இல்வாழ்க்கைச்‌ சிறப்பைச்‌ கூறி அதனை அடுத்து அதற்கு இன்றியமையாத்‌ துணையான இல்லாளின்‌ நலத்தைக்‌ கூறி முடிவில்‌ அவ் வாழ்க்கைத்துணையின்‌ மாட்சியே இல்லாழ்வானுக்கு மங்கலமென்றும்‌, மக்கட்பேறு ௮ம்மாட்சிக்கு அணிகலன்‌ என்றுந் தோற்றுவாய்‌ செய்தவாறே மக்கட்பேற்றை இவ்வதிகாரத்‌தாற்‌ கூறுகின்றார் வள்ளுவர். இவ்வாறாக இல்வாழ்க்கை, வாழ்க்கைத்‌ துணை நலம்‌, மக்கட்பேறு‌ என்பன மூன்றும்‌ காரண காரியத்‌ தொடர்புபட ஒன்றன்பின்‌ ஒன்று வள்ளுவரால்‌ வைத்து முறை செய்யப்பட்டிருக்கிறது.

மக்களினத் தொடர்ச்சிக்கும் உலகம் சிறப்புறுதற்கும் மக்கட்பேறு தேவை. தேவநேயப்பாவாணர் 'அஃதாவது, இனப்பெருக்கத்திற்கும் உலக நடப்புத் தொடர்ச்சிக்கும் இறைவன் வகுத்த இயற்கையான ஏற்பாட்டின்படியும், தத்தம் தொழிலில் தமக்கு உதவி செய்தற்பொருட்டும், உழைக்க இயலாத முதுமைக்காலத்தில் தம்மைப் பேணும் பொருட்டும், தாம் இறந்தபின் தம் பெயரால் அறஞ்செய்தற் பொருட்டும், தம் பெயரை இவ்வுலகில் நிலவச்செய்தற் பொருட்டும், பிள்ளைகளைப் பெறுதல்' என இவ்வதிகாரத் தலைப்பை விளக்குவார். மனைமாட்சியின் நன்கலம் மக்கட்பேறு என்றதால் மக்களைப் பெறுதல் மனையறம் காத்தலில் இன்றியமையாத பகுதியாகிறது.

இவ்வதிகாரம் மக்கட்பேற்றின் சிறப்பைக் கூறி குழந்தைகளால் பெற்றோர் எய்தும் பெரும் இன்பங்களைச் சொல்லி, பிள்ளை வளர்ப்பில், தாய்-தந்தையர் கடமையையும் கூறுகிறது. குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோர் உள்ளம் மகிழ சான்றோராகவும் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பான வாழ்வும் மேற்கொள்வர் என்றும் கூறிச் செல்கிறது.

'மக்கட்பேறு' அதிகாரம் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கே கூறப்பட்டது; பெண் குழந்தை பெற்றவர்களுக்காக அன்று என்று தோற்றம் தரும் வண்ணம் பழைய உரைகள் சில அமைந்தன. 'அறிவறிந்த என்றதனால் மக்கள் என்னும் பெயர் பெண்ணொழிந்து நின்றது' அதாவது இங்கு மக்கள் என்று குறிப்பிட்டது ஆண்மக்கள் பற்றியே என்ற பரிமேலழகர் உரை பொருத்தமில்லாதது. மக்கள் என்பது ஆண் பெண் இருபாலர்க்கும் உரிய சொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறியமாட்டாதவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று உரைப்பது முற்றும் தவறான கருத்தாகும்.
மக்கள் என்றால் ஆண், பெண் இருவரையும் குறிக்கும் பலர்பாற்பெயர். புதல்வர் என்பதும் இருபாலரையும் குறிக்கும் பலர்பாற்பெயரே. புதல்வர் ஆண் பால் புதல்வி- பெண் பால் புதல்வர்-பலர் பால் (இரு பாலரையும் குறிக்கும்).
அவையத்து முந்தியிருத்தலை ஒரு பாடலிலும் (67), சான்றோன்/அரிய குணங்கள் கொண்டவன் எனப்பலர் பாராட்ட விளங்குதலை இரு பாக்களிலுமாக (68. 69) மூன்று பாடல்கள் மகனுக்கு உரியதாக்கப்பட்டது. அதிகாரத்து மற்ற ஏழு பாடல்களிலும் 'மக்கள்' என இருபாலாரையும் சுட்டிச் சொல்லப்பட்டது. எனவே, மக்கட்பேறு என்பது பெண்மக்கட்பேறு உள்ளடங்கிய இருபாலார்க்கும் பொதுவாகவே எழுதினாரேயன்றி ஆண்மக்கட் பேற்றை மட்டும் முதன்மைப்படுத்திக் கூறவில்லை என்பது அறியப்படும்.

மக்கட்பேறு அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 61 ஆம்குறள் அறிவுடன் கூடியதாக பிள்ளைகள் உருவாதல் பெற்றோர் பெறும் பேறாகும் என்கிறது.
  • 62 ஆம்குறள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட்டால் பெற்றோருக்கு தீமைகள் நேரா என்பது.
  • 63 ஆம்குறள் பிள்ளைகள் அவரவர் காலில் நிற்கப் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பதை அறிவுறுத்துவது.
  • 64 ஆம்குறள் தம் குழந்தைகளின் பிஞ்சுக்கையால் ஊட்ட உணவருந்துவது சுவைமிக்க அனுபவம் எனச் சொல்கிறது.
  • 65 ஆம்குறள் தமது உடம்பில் சாய்ந்து உரைக்கும் குழந்தைகளின் குதலை மொழி கேட்பது உடம்பிற்கும் செவிக்கும் இன்பம் தரும் என்கிறது.
  • 66 ஆம்குறள் எந்தவிதமான இசையையும் விட தம்தம் குழந்தைகளின் மழலைச் சொல்தான் இன்பம் தருவது என்று ஆசிரியர் மெய்மறந்து பாடுவது.
  • 67 ஆம்குறள் தன் மகனை உலக அரங்கில் முதன்மைப்படுத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவது ஒரு தந்தையின் கடமை என்று சொல்கிறது.
  • 68 ஆம்குறள் தம் குழந்தைகளை அறிவுடைமைப் படுத்துதலே பெற்றோரின் வளர்ப்பு நோக்கமா இருத்தல் வேண்டும் என்று சொல்கிறது.
  • 69 ஆம்குறள் பிள்ளைகள் நற்குணம் வாய்ந்தவர்களாக வளர்ந்து பெயர் பெற்றால், அப்பெருமை தாய்க்குரியது என்று குறிக்கிறது.
  • 70 ஆவதுகுறள் மகன் பெருமை கொண்டோன் ஆனது தந்தையின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்கிறது.

மக்கட்பேறு அதிகாரச் சிறப்பியல்புகள்

'யாம்' என வள்ளுவர் தாமே முன்வந்து பேசுவதாகத் தன்மைப் பன்மை(சிறப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமை) யில் அமைந்த குறள்கள் மொத்தம் மூன்று. அதில் முதலாவது பாடலான பெறுமவற்றுள் யாமறிவது இல்லை......(குறள் 61) என்பது இவ்வதிகாரத்தில் உள்ளது.

........ தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்(குறள் 64) மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்.......(குறள் 65) குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்(குறள் 66) என்ற 'தம்குழந்தைகள்' நல்கும் இன்பங்கள் கூறும் மூன்று இனிமையான கவிதைச் சுவை நிரம்பிய பாடல்கள் இங்கேதான் உள்ளன.

நற்குண நற்செய்கைகள் கொண்டவனாக இருக்கிறான் என்று கேள்விப்படும் தாயின் பேருவகையைச் சொல்லும் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்................ (குறள் 69) என்ற புகழ்பெற்ற பாடல் இவ்வதிகாரத்தின் கண்ணே உள்ளது.




குறள் திறன்-0061 குறள் திறன்-0062 குறள் திறன்-0063 குறள் திறன்-0064 குறள் திறன்-0065
குறள் திறன்-0066 குறள் திறன்-0067 குறள் திறன்-0068 குறள் திறன்-0069 குறள் திறன்-0070