இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0069



ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:69 )

பொழிப்பு (மு வரதராசன்): தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்



மணக்குடவர் உரை: தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.

பரிமேலழகர் உரை: ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.
(கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தன் பிள்ளையைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் பாராட்டக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். (சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருளும் உண்டு.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்.

பதவுரை:
ஈன்ற பொழுதின்-பெற்ற பொழுதினும்; பெரிது-மிகவும்; உவக்கும்-மகிழும்; தன்-தனது; மகனை-மகனை; சான்றோன்-நற்குண நற்செய்கை நிறைந்தவன்; என-என்று சொல்ல; கேட்ட-செவியுற்ற அதாவது பிறர் சொல்லத் தன் செவிகளால் கேள்வியுற்ற; தாய்-தாய்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்;
பரிப்பெருமாள்: தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்;
பரிதி: ஈன்ற காலத்தில் ஆண்பிள்ளை என்று சொல்லக் கேட்ட மகிழ்ச்சியிலும்;
காலிங்கர்: மற்றிவனைத் தான் முன்னம் ஈன்றெடுத்த அப்பொழுதினும் பெரிதும் மனமகிழும்;
பரிமேலழகர்: தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;

'தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். 'ஆண்பிள்ளை ஈன்ற காலத்தில்' எனப் பரிதி பொருளுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்றகாலத்திலும் பெருமகிச்சி அடைவாள்', 'அவனைப் பெற்றபோதுள்ள மகிழ்ச்சியினும் மிகுதியான மகிழ்ச்சியடைவாள்', 'தான் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியினும் மிகுதியாக மகிழ்வாள்', 'தன் மகனை அவள் பெற்றெடுத்த போது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைவாள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பெற்றெடுத்த போது அடைந்ததைவிட மிக மகிழும் என்பது இப்பகுதியின் பொருள்.

தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.
பரிப்பெருமாள்: தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: யாதும் அறியாத பெண்டிரும் மகிழ்வர் என்பது கருத்து.
பரிதி: தன்பிள்ளை அறிவினால் பெரியவன் என்று கேட்ட தாய்க்கு அதிலும் மகிழ்ச்சி என்றவாறு.
காலிங்கர்: பின் புதல்வனை உலகத்துச் சிறந்தோர் பலரும் 'இவன் பெரிதுஞ் சால்புடையான்' என்று எடுத்து உரைப்பக் கேட்ட தாயானவள் என்றவாறு.
பரிமேலழகர்: தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.
பரிமேலழகர் குறிப்புரை: கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது. [காவாஅன் -தொடை அல்லது மடி]

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'தன்மகனைப் பிறர் சொல்லக் கேட்ட தாய் என்றே பொருள் உரைத்தனர். சான்றோன் என்பதற்கு மணக்குடவர் 'சான்றோன்' என்றே உரை தந்தார்; பரிதி 'அறிவினால் பெரியவன்' என்றும் காலிங்கர் 'பெரிதுஞ் சால்புடையான்' என்றும் பரிமேலழகர் சால்புடையான் என்றும் பொருள் தருவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்மகன் வீரன் என்று புகழக் கேட்ட தாய்', 'தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்டதாய்', 'தம் மகனைப் பெரியோன் எனப் பிறர் சொல்லக் கேட்ட தாய்', ' தன் மகன் மிக உயர்ந்த குணமுடைய நல்லவனாக இருக்கிறான் என்று ஊரார் புகழ்வதைக் கேட்கிறபோது ஒரு தாய்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தன் மகனை நற்குணநற்செய்கைகள் நிறைந்தவன் என்று கூறப்படுவதைக் கேட்ட தாய் உள்ளம் என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:

தன் மகனைச் சான்றோன் என்று கூறப்படுவதைக் கேட்ட தாய் உள்ளம் பெற்றெடுத்த போது அடைந்ததைவிட மிக மகிழும் என்பது பாடலின் பொருள்.
'சான்றோன்' எனப்படுபவன் யார்?


பிள்ளைகள் நல்லவராகவும் வல்லவராகவும் வளர்ந்து நற்பெயர் பெற்றால், அப்பெருமை அவர்களின் தாய்க்குரியது.

யாவரும் எந்த வகையான உரையும் இன்றி எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய குறள். முன்பு பெற்றவர் கடமை கூறப்பட்டது; இங்கு மகன் தான் பிறர் புகழுமாறு வாழ்ந்து பெற்றவரை மகிழ்விக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
பிள்ளைப் பேற்றில் தாய் அடையும் மகிழ்ச்சி பெரிது. பத்துத் திங்களாய் அங்கமெல்லாம் நொந்து ஓர் மகவைப் பெற்றவேளை, பேறுகாலத்தில் தான் பட்ட துயரெல்லாம் மறந்து இன்பமடைவாள் அவள். மகன் பல்திறன் கொண்டவனாக வளரும்பொழுது தாய் மேலும் மகிழ்ச்சி அடைவாள். அதனினும் பெரியதோர் இன்பம் பிற்காலத்தில் உண்டு. அது தன் மகனைச் சான்றோன் என்று ஊரார் புகழ்வதைக் கேட்கிறபோது ஏற்படுவது; அம்மகிழ்ச்சி ஒரு தாய் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியினும் பெரிது. தன் பிள்ளைகளை ஊரார் பாராட்டுவதைக் கேட்பதைவிட பெற்ற அன்னையர்க்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியுமா?

சால்புடையவனாக ஒருமகன் உருவாவதற்குத் அவனது தாயின் பங்கு மிகையாம். அன்பும், பரிவும் பொங்க நல்ல பழக்க வழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி உயரிய ஒழுக்கப் பண்புகள் கொண்டு தம் மக்களை மேம்பாடுறப் பேணி வளர்ப்பாள் அவள். அவன் வளர்ந்தபின் அவனைச் சான்றோன் என்று அறியும் தன்மை தாயிடம் அமைந்திருந்தாலும், அவ்வாறான அவனது உயர்வைத் தானேயறிந்து அவள் இன்புற்றிருந்தாலும், பிறர் தன் மக்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும்பொழுது பெற்றவள் மனத்தில் பெருமகிழ்ச்சியுண்டாகும் என்பது உலக இயற்கை. உலகத்தோரே அவனது குறை நிறைகளை உள்ளவாரே ஆராய்ந்து காணவல்லார். உலகத்தோர் யாரையும் எளிதில் புகழ்ந்து கூறமாட்டார்கள் எனவே அவர்கள் தன் மகனைச் சான்றோன் எனக் கூறக் கேட்ட அத்தாய்க்கு அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும். தான் அறிந்ததை ஒப்ப, மற்றவரும் தன் மக்களைப் பெருமைபடப் கூறியபோது அப்பிள்ளையை பெற்ற நாளினும் பெரிதும் மகிழ்வாள் தாய்; அப்பொழுது அவள் மனமும் வயிறும் மார்பும் குளிரும்.
இக்குறளகத்துத் தன் மகனை என ஆண்பால் மேல் வைத்துக் கூறியிருப்பினும் ஒருமொழி யொழிதன் இனங்கொளற் குரித்தே (நன்னூல் பொதுவியல் 7 பொருள்: பெயர், வினை, இடை, யுரிஎன்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்று ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும்) என்னும் விதிப்படி இது பெண்பாலர்க்கும் (மகளுக்கும்) பொருந்தும்.
உலகத்து எல்லாத் தாய்க்கும் உள்ள ஓர் இயல்பை படிப்போர் உள்ளத்தை மகிழ்விக்கும்படியான ஒரு கவிதையாக்கித் தந்துள்ளார் வள்ளுவர்.

'சான்றோன்' எனப்படுபவன் யார்?

சான்றோன் என்ற சொல்லுக்கு உரையாளர்கள் பண்பு நிறைந்தவன், மிக உயர்ந்த குணங்களுள்ள நல்லவன், நல்லபிள்ளை, வீரன், கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்தோன், கல்வி கேள்வியின் மிகுந்தவன், அறிவினாற் பெரியன், அறிவுடையான், பெரியோன், அறிவில் நிறைந்தோன் எனப் பலவாறு விளக்கம் கூறினர்.

சால்பின் அடிப்படையில் வருவது சான்றோன் என்னும் சொல். சால்பு என்பது நிறைவு என்னும் பொருள் தருவது. சான்றோன் என்பதற்கு நிறைந்தவன் என்பது நேர் பொருள். எதில் நிறைந்தவன் அவன்? சான்றோன் என்பதில் கல்வி, ஒழுக்கம், பண்பாடு அனைத்தும் அடங்கும் என்றாலும் அது பண்பின் நிறைவு பற்றியே பெரிதும் குறிக்கும். சான்றோன் என்ற சொல் பொதுவாக நல்ல குணங்களாலும் செய்கைகளாலும் நிறைந்தவன் எனப் பொருள்படும்.

நற்குண நற்செய்கைகள் நிறைந்தவன் 'சான்றோன்' எனப்படுவான்.

அதிகார இயைபு

மக்கட்பேறுவின் மெய்யான உவப்பு தம் மக்களைப் பற்றிய புகழ்ச்சொல் காதில் விழும்போது தாய்க்கு உண்டாகும்.

பொழிப்பு

தன் மகனைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் புகழ்ந்து கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள்.