பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
(அதிகாரம்:மக்கட்பேறு
குறள் எண்:61)
பொழிப்பு (மு வரதராசன்): பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.
|
மணக்குடவர் உரை:
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.
பரிமேலழகர் உரை:
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை.
('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
நாம் அடைய வேண்டுமென்று விரும்புகின்ற பொருள்களுக்குள் நல்லறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பெறுமவற்றுள் அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற யாம் அறிவது இல்லை.
பதவுரை: பெறும்-(இல்வாழ்வார்)அடைகின்ற; அவற்றுள்-அவைகனுள் (பேறுகளுள்); யாம்-நாங்கள், யான்; அறிவது-தெரிவது; இல்லை-இல்லை; அறிவதுஅறிந்த-அறிவுடையராய், அறியக்கூடியவற்றை அறிந்த; மக்கள்-பிள்ளைகள், புதல்வர்; பேறு-பெறுதல், அடையத்தக்கது, வரம், செல்வம்; அல்ல-அல்லாதவை; பிற-மற்றவை (இங்கு பிற பேறுகள்).
|
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் பெறும் பொருள்களுள், யாம் கண்டறிவதில்லை;
பரிப்பெருமாள்: ஒருவன் பெறும் பொருள்களுள் யாம் கண்டறிவதில்லை.
பரிதி: உலகத்தில் பெறும் பேறுகளுக்குள்;
காலிங்கர்: வேறு பெறும்பேறு சிறந்ததாக யான் கருதி இருப்பது ஒன்றும் இல்லை இல்வாழ்பவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: பெறுமவற்றுள் யாம் மதிப்பது இல்லை.
'பெறும் பொருள்களுள் கண்டறிவதில்லை' என்று மணக்குடவரும் 'பெறும் பேறுகளுள் யாம் கருதியிருப்பது ஒன்றும் இல்லை' என்று காலிங்கரும், 'பெறுமவற்றுள் யாம் மதிப்பதில்லை' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாம் மதிப்பதில்லை', 'யாம் மதிப்பதில்லை', 'ஒருவன் பெறுதற்குரிய ஊதியங்களுள் எமக்குத் தெரியவில்லை', 'அடையக்கூடிய செல்வங்களும், யாம் பெரிதாக மதிப்பதில்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.
பெறும்பேறுகளுள் எமக்குத் தெரியவில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அறிவுடைய மக்கள்' பாடம்): அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக.
பரிப்பெருமாள் ('அறிவுடைய மக்கள்' பாடம்): அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது ஒழிந்த பொருள்களெல்லாவற்றினும் சிறந்தனவாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிற பொருளாயின் ஒரு பிறப்பளவும் முடிய நில்லாது. இது இருமைக்கும் துணையாதலால் புதல்வரைப் பெறவேண்டும் என்றது.
பரிதி: புதல்வரைப் பெறுதல் போல் பேறில்லை. அதிலும் பொன்னுமாய் மணமுமானாப்1 போல அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளையைப் பெறுதல் என்றவாறு.
காலிங்கர்: அறிவினை முழுவதும் அறிந்த நெறிக்கு உரியராகிய மக்கட்பேறல்லது.
பரிமேலழகர்: அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது. ['அறிவது அறிந்து' -பரிமேலழகர் கொண்ட பாடம் ஆகலாம்; உரிமை-அறிவுடைமை]
'அறிவுடைய மக்களினும் சிறந்தனவாக' என்று மணக்குடவரும் 'அறிவினை அறிந்த நெறிக்கு உரியராகிய மக்கட் பேறல்லது' என்று காலிங்கரும் இத்தொடர்க்கு உரை கூறினர். பரிதி 'கல்விச்செல்வமான பிள்ளையைப் பெறுதல்' என்கிறார். பரிமேலழகர் 'அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை' என்று உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிற செல்வங்களை', 'ஒருவன் எய்துவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகள்', 'அறிய வேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பெறுவதைப் பார்க்கிலுஞ் சிறந்தது யாதாவதிருப்பதாக', 'அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற செல்வங்களை' என்றபடி பொருள் உரைத்தனர்.
அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பெறும்பேறுகளுள் அறிவறிந்த மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை என்பது பாடலின் பொருள்.
'அறிவறிந்த மக்கட்பேறு' என்றால் என்ன?
|
பிள்ளைகள் அறிவுடையாராக உருவாகி வந்தால் அது பெற்றோர்க்குப் பெரும்பேறு ஆகும்.
ஒருவன் பெறுகின்ற செல்வங்களுள் அறிவிற் சிறந்தவர்களாக விளங்கி நிற்கும் பிள்ளைகளல்லா பிற எதனும் யாம் அறிந்தது இல்லை.
இல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள் அறிவறிந்த மக்களைப் பெறுதலை விடச் சிறந்த பேறு வேறு ஒன்று இருப்பதாகத் தாம் அறியவில்லை என்று வள்ளுவர் தாமே முன்வந்து பேசுகிறார்.
ஒருவன் வாழ்க்கையில் பெறவேண்டிய பேறுகள் பல உள்ளன. முன்னர் அவற்றைப் பதினாறு பேறுகளில் அடக்கிக் கண்டனர். அவை நன்மக்கள், புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு,பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்பன. இவற்றுள், ஒருவன் பெற்ற பிள்ளைகள் அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய மக்களாக விளங்கினால் ஒருவனுக்கு அதைவிட நற்பேறு ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
பிள்ளை பெறுவதே ஒரு பேறுதான். அப்பிள்ளையே அறிவுடையவராக ஆக்கம் பெற்றால் அது மிகப் பெரும் பேறு ஆகிறது. இதைப் பொன்மலர் மணம் தருவது போல என்று உருவகிக்கிறார் உரையாசிரியர் பரிதி.
இல்லறவாழ்வு என்பது பெற்றோரது இன்பத்துக்காக மட்டும் அல்ல. இல்வாழ்வின் பயன் சமூகத்துக்கும் உண்டாக வேண்டும். அதனாலேதான் மக்கட்பேற்றுக்கு இல்லற வாழ்க்கையில் சிறப்பான இடம் அமைந்தது. தம் வழித்தோன்றல்களை உலகத்துக்குத் தந்துவிட்டு பெற்றவர் மறைகின்றனர். மக்கட்பேறே மானுடத்தின் தொடர்ச்சிக்குக் காரணம் ஆவது. அம்மக்கள் எப்படி வளர்கிறார்களோ அதைப் பொருத்துத் தான் எதிர்கால சமுதாயம் அமையும். மானுடம் தொடர்வது மட்டுமல்ல அது செம்மையாக வளர வேண்டும் என்று கருத்திலேயே 'அறிவறிந்த' என்ற அடையைப் பயன்படுத்தினார் வள்ளுவர். அப்படி அவர்கள் அறிவு அறிந்தவர்களாக உருப்பெறுதலே பெற்றோர் பெறும் பேறுகளில் எல்லாம் தலையாயது; அதைவிடச் சிறந்த பேறு வேறு இருக்க முடியாது என்று வள்ளுவர் உள்ளம் வீறு பெற்ற நிலையில் அறுதியிட்டுக் கூறினார்.
இப்பாடலில் 'யாம்' என வள்ளுவர் தம் நேர்கூற்றாகத் தன்மைப் பன்மை(சிறப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமை) யில் கூறுகிறார்.
குறளில் மொத்தம் மூன்று பாடல்களில் வள்ளுவர் 'யாம்' என்று அழுத்தம் கொடுத்து மிக வன்மையாகவும் மிகத் தெளிவாகவும் தம் கூற்றாகச் சொல்லியுள்ளார். அதில் முதலாவது குறட்பா இது. (மற்ற இரண்டு: குறள்கள்: வாய்மை 300, கயமை 1071)
தமது வழக்கமான செய்யுள் நடையை மாற்றி 'யாம் அறிவது இல்லை' என்று தம்மைச் சான்று வைத்து மொழிந்தது நோக்கத்தக்கது. 'யாமறிவது இல்லை' என்ற பகுதி 'யாம் அறிந்தது இல்லை', 'எமக்குத் தெரிந்தவரை வேறில்லை' என்ற பொருள் தரும்.
''யாம்' என்பது ஆசிரியரை மட்டும் கொண்டதன்று. ஆசிரியரைப் போலச் சிந்தனையில் அமர்ந்து உண்மை கண்ட அறிஞர் பலரையுங் கொண்டது' என்பார் திரு வி க.
|
அறிவறிந்த மக்கட்பேறு என்றால் என்ன?
அறிவறிந்த என்பதற்கு 'அறிவுடைய' எனப் பாடம் கொண்டால், குழந்தை பிறக்கின்றபோதே அறிவுடையதாக இருக்கவேண்டும் என்ற பொருள் உண்டாவதால், அது பொருந்தாது என்று உணர்ந்த பரிமேலழகர் அறிவறிந்த என்ற பாடம் கொண்டு 'காரணமாகிய அறிவுடைமை காரியமாகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத்தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார்' என உரைத்தார் பரிமேலழகர். 'அறிவறிந்த’ என்பதை அறிவு+அறிந்த எனப் விரிக்காமல் அறிவ+அறிந்த எனப்பிரித்து அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய எனப் பொருள் கொள்கிறார் அவர்.
திரு வி க: ''அறிவறிந்த' என்ற பாடத்தில் ஒருவிதச் சிறப்புளது. அது மக்கட்கும் அறிவுக்குமுள்ள தொடர்பின் இயற்கையை உணர்த்துவது' என்றார்.
'பெறுதல்' என்ற சொல்லுக்கு குழந்தை பிறக்கும் காலத்தில் பெறுவது அல்ல. வளர்ந்து கற்று அறிவுடையராய் விளங்கும்போது உள்ள நிலையைச் சொல்வதாகக் கொள்ளவேண்டும். 'மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் 'அறிதற்குரியர்'தாம். அறிதற்குரியோருள் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர்' என்பார் சி இலக்குவனார். இது சிறந்த விளக்கம். அவ்விதம் அறிவறிந்தவராக அமையும் பிள்ளைகளின் பெற்றோர்தாம் பேறு பெற்றவர்.
இதே அதிகாரத்துப் பின்வரும் குறள்கள் பண்புடையவனாகவும், நற்குணநற்செயல்கள் உடையவனாகவும் வளர்ந்த பிள்ளைகளைப் பற்றிச் சொல்கின்றன. பண்புடையவர்களாகவும் சான்றோனாகவும் ஆவதற்கு வளரும் சூழ்நிலை மிகவும் இன்றியமையாதது. அதற்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே மக்களைப் பயிற்றுவித்தல் வேண்டும். பெற்றோர், உறவினர், சுற்றத்தார், இனத்தார், ஆசிரியர் ஆகிய இவர்கள் இக்கடமையைச் செய்வர். ஆனால் அறிவுடையராவது அருட்பேறு ஆகும். அதைப் பெறுதலே நற்பேறு எனலாம். அதைவிடச் சிறந்த பேறு வேறொன்றில்லை என்பது பாடல் தரும் செய்தி.
வள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியதால் பெற்றோரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த என்ற குறிப்பினை உணர்த்துகின்றார் என்று சிலர் எழுதினர். மேலும் மக்கட்கு அறிவுப் பிறப்பும் உண்டு; அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று பிறப்பு வேற்றுமை காட்டினர். இன்னும் சிலர் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை பெற்றோர்களுக்குத்தான் அடையாக்க வேண்டும்; அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். பானையில் இல்லாதது அகப்பையில் வராதது போலவும், அறிவு உயிர்க்குள்ள இயற்கைப்பண்பு. உயிர் உணருந்தன்மைத்து; அறிவு முதலியன உடல்கொள் உயிர்க்குணம் என்பதும் இலக்கண நூற் கொள்கை; ஆதலால் அறிவோடு பிறத்தல் கூடும் என்றனர். இக்கருத்துக்கள் ஏற்கத் தகுவனவாக இல்லை.
மக்கட்கு அறிவு பிறப்பிலேயே அமைந்து கிடப்பது என்பது இயற்கை அறிவைக் குறிப்பதாகும். அது எல்லா மக்களுக்கும் உண்டு.
|
பெறும்பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை என்பது இக்குறட்கருத்து.
நல்லறிவுள்ள மக்கட்பேறு பெறுதலைவிட சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
பெறுவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை.
|