இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0067



தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:67)

பொழிப்பு (மு வரதராசன்): தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

மணக்குடவர் உரை: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.

பரிமேலழகர் உரை: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.
(பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.

பதவுரை: தந்தை-தந்தை; மகற்கு-மகனுக்கு; ஆற்றும்-செய்யும்; நன்றி-நன்மை; அவையத்து-அவையில்; முந்திஇருப்ப-முந்தியிருக்குமாறு; செயல்-செய்தல்.


தந்தை மகற்குஆற்றும் நன்றி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்;
பரிப்பெருமாள்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்;
பரிதி: புதல்வருக்குத் தந்தை செய்யும் உதவி;
காலிங்கர்: மற்று ஆங்ஙனம் இனிமை நுகர்ந்து இன்புறூஉம் தந்தையானவன் புதல்வருக்குச் செய்யும் நன்மை யாதோ எனின்;
பரிமேலழகர்: தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;

'தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்/உதவி' என்று மணக்குடவரும் பரிதியும் கூற 'தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மை' என்று காலிங்கரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தந்தை மகனுக்குச் செய்யும் கடமை', 'தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் தன் குழந்தைக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை எதுவென்றால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்பது இப்பகுதியின் பொருள்.

அவையத்து முந்தியிருப்பச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
பரிப்பெருமாள்: அவைக்களத்தின் கண்ணே முந்துற்றிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புதல்வர்க்குக் கல்வி உண்டாக்குக என்றது.
பரிதி: ஐந்து வயதில் வாசிப்பிவித்து சமர்த்தனான பின்பு ஆஸ்தானத்தில் அழைத்து இருத்திக் கொள்ளும்படியாக அறிவு உண்டாக்குதல் என்றவாறு.
காலிங்கர்: பெரிய நன்ஞானக் கேள்வி உடையனாகச் செய்து சான்றோர் அவையின்கண் சென்று மற்றவரால் முதன்மை பெற்றிருப்பதாகச் செய்கை என்றவாறு.
பரிமேலழகர்: கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.

'அவையின்கண் முந்தியிருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை கல்வி பயிற்றத் தொடங்குவதற்குரிய ஆண்டு ஐந்தாவது என வரையறுத்திருப்பது நோக்கத்தக்கது.

இன்றைய ஆசிரியர்கள் 'அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே', 'கற்றாரது அவையின்கண் முதன்மையாயிருக்கும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுவித்தல்', 'கற்றோர் அவையில் எல்லோர்க்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல். அஃதாவது மிகுந்த கல்வி கேள்விகளை அளித்துப் பெரியோராக்குதல்', 'மகன் கற்றிந்தார் சபையில் சிறப்புடையவனாக விளங்கும்படி (நல்ல கல்வி கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைப்பதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தந்தை மகற்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது பாடலின் பொருள்.
'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன?

ஒரு தந்தை தன் மக்களைச் சமூக அரங்கில் முதன்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுவான்.

தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை அவையிலே தன் மகன் மேம்பட்டிருக்கும்படி அவனைக் கல்வியறிவுடையனாக்குதல்.
இவ்வதிகாரத்து முந்தைய பாடல்களில் பெற்றோர் தம் குழந்தைகளின் மூலம் நுகர்ந்த இன்பங்கள் கூறப்பட்டன. பிள்ளைகளுக்குப் பெற்றவர் செய்யவேண்டிய கடமை பற்றி இங்கு சொல்லப்படுகிறது. இக்கடமையைத் தந்தை மகற்குச் செய்யும் நன்றி என்று குறிக்கிறார் வள்ளுவர். 'நன்றி' என்பதற்கு நன்மை என்பது நேரிய பொருள். தந்தை மகனைப் பெற்றதனால் வளர்த்தலும் கடமையாகிறது. கடமைகளில் மிக்க பயனைத் தருவது நன்றி. கைம்மாறு எதிரபாராமல்-கடமை என்று கூடக் கருதாமல் அவன் சிறந்தவன் ஆக வேண்டும் என்ற பெருநோக்குடன் செய்வது நன்றி. மகனை அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் தந்தை அவனுக்கு ஆற்றும் நன்மை என்கிறது பாடல்.

'தந்தை' 'மகற்கு' என்பன ஆண்பாலை மட்டும் குறிப்பனவா?
திருக்குறளில் பெண்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிற பகுதியைத் தவிர மற்ற இடங்களில் சொல்லுவதெல்லாம் இருபாலருக்கும் பொதுவேயாகும் என்பார் நாமக்கல் இராமலிங்கம். தந்தை எனக் குறிப்பாகச் சொல்லப்பட்டாலும் இங்கே அது பொதுவாகப் பெற்றோரைக் குறித்து நிற்பது. எனவே இப்பாடலில் சொல்லப்பட்ட நன்றி என்பது பெற்றோர் அதாவது தாய் தந்தையர் இருவரும் செய்யும் நன்மைகளையேயாம், தம்மக்களைப் போற்றி முந்தியிருக்கச் செய்யும் தாயார் பலரை என்றும் எங்கும் காணலாம்.
'மகற்கு' என ஒருமையில் கூறியிருப்பதால் இது 'மகனுக்கு' என்று ஆண்பாலாற் சொல்லப்பட்டது என்பதல்ல. இப்படிக் கூறப்பட்டாலும் இதில் மகளும் அடங்குவாள்; இப்பாடல் இரு பாலருக்கும் பொருந்தும். 'தந்தை தன் குழந்தைக்குச் செய்யும் உதவியாவது' எனத் தகப்பன் கடமையை மக்கட்கு எனப்பொருள் கண்டு இருபாற் பொதுமையாகவே கொள்ளவேண்டும். எனவே மகற்கு என்றது மகன் - மகள் இருபாலரையும் குறிப்பதாகக் கொள்வர்.
தந்தை, மகற்கு என இப்பாடலில் சொல்லப்பட்டது இருபாலரையும் குறித்தது.

'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன?

'அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் அவையத்து முந்தியிருக்க அவாவுதற்குரிய முறையில் மகனைத் தந்தை வளர்த்தல் எனப் பொருள்படும்.
அவை என்ற சொல்லுக்கு கற்றோர் அல்லது சான்றோர் கூடிய அவை என்றும் தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நற் கடமை, அவர்களை அந்த அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் அதாவது முற்பட்டு இருக்குமாறு செய்தல் என்றும் அன்றைய, இன்றைய அனைத்து உரைகாரர்களும் பொருள் கூறினர். அவையத்தில் முந்தி இருக்கும் தகுதி அதாவது முதன்மைத் தகுதி- முன் வரிசைத் தகுதியானது- கல்வி கேள்விகளில் சிறந்து இருப்போருக்கே வாய்க்கும் என்பது குறிப்பால் அறியப்படுகிறது என்றும் எழுதினர். 'தந்தை மகனுக்குச் செய்யக் கூடிய நன்மை என்னவென்றால், தமது பிள்ளைகளைக் கல்வித் தகுதி உடையவர்களாக ஆக்கிக் கற்றோரின் நன்மதிப்பை அடையச் செய்து, அவனைக் கற்றவர் கூடிய அவையத்து முந்தியிருப்பச் செய்வது' என்ற கருத்துப்பட பெரும்பான்மையாரால் இக்குறள் விளக்கப்பட்டது.
இப்பொருள் தெளிவுடையது போல் தோன்றினாலும் சில ஐயங்கள் எழுகின்றன: 'அவை' என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் குறிப்பிடும் 'கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை' என்பதுதான் சரியான பொருளா? தம் மக்கள் கற்றோர் அவையில் முன் வரிசையில் அமரும் தகுதி பெறத்தான் எல்லாத் தந்தையரும் முயலவேண்டுமா? மக்களுக்கு கல்வி பெறச்செய்தல் தந்தையின் கடன் என்பது சரி. அவர்கள் ஏன் அவையில் அதுவும் கற்றவர் அவையில் முதன்மைத் தகுதி பெறவேண்டும்?

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு, 312: பொருள்: மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது கடமையாகும்; அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தையது கடமையாகும்) என்ற சங்கப் பாடலை மனத்தில் கொண்டு உரையாசிரியர்கள் கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை எனப் பொருள் கொண்டனர் எனத் தெரிகிறது.
வள்ளுவர் நடைமுறை சார்ந்த பார்வையிலேயே கருத்துக் கூறுபவர் ஆதலால் தம் மக்கள் கற்றோர் அவையில் முந்தியிருக்க வேண்டும் என்பதற்காக தந்தையர் அனைவரும் பாடுபடவேண்டும் என்பது அவர் சொல்ல வந்த செய்தி என்பதாகத் தோன்றவில்லை. கல்விஅறிவு, ஒழுக்கமுடைய நல்லோர் சேருங் கூட்டமே அவை என்று வழங்கப்பட்டு வருகிறது என்பது பொதுவான கருத்து. கற்றோர் அவை என்று இங்கு விதந்து சொல்லப்படவில்லை. எனவே பொதுவாக அவை என்பதாகக் கொள்வதில் இழுக்கில்லை.
மு கோவிந்தசாமி 'முந்தியிருப்பச் செயல் –முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல். அவ்வையத்தும் எனப்பிரித்து, பிறநாடுகளிலும் எனக் கூறுக; அன்றி அவன் காலத்து உலகில் எனலுமாம்' என்று இக்குறளுக்கு உரை வழங்கினார். இவ்வுரையில் காணப்படும் 'மகன் காலத்து உலகில்', 'முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் (Competitive Spirit)' என்ற விளக்கங்கள் புதுமையானவை. பிள்ளைகளை அவர்கள் காலத்து உலகில் முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் என்ற பொருள் ஏற்புடைத்தே.
நாம் வாழ்வது போட்டிமனப்பான்மை கொண்ட உலகம். இதில் தகுதியுள்ளோரே வெல்வர். எனவே, எந்தத் துறையில் பிள்ளைகள் விருப்புடன் இருக்கிறார்களோ அதில் ஈடுபாடு உண்டாகச் செய்து, அவர்களிடம் மறைந்துள்ள பெரும் ஆற்றல்களை வளர்த்து, வெளிக்கொணர்ந்து, எழும் சவால்களை எதிர்கொண்டு, வெல்லும் திறன் வளர தந்தை உதவி செய்தல் என்பது 'முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகலாம். தம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி தந்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து, பரந்த உலக அரங்கில், அவர்கள் திறமைக்கான முதலிடத்தில் இருக்கச் செய்ய தந்தையர் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து சிறப்பாக அமையும்.

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்ல மக்கட்பேறு குழந்தை வளர்ப்பைப் பொறுத்தும் அமையும்.

பொழிப்பு

தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையில் முந்தியிருக்கச் செய்தல்.