இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0064அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:64)

பொழிப்பு (மு வரதராசன்): தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்.

மணக்குடவர் உரை: இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.

பரிமேலழகர் உரை: அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.
(சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)

இரா சாரங்கபாணி உரை: தம் குழந்தைகளின் சிறு கையால் துழாவப்பட்ட உணவு அமிழ்தத்தைக் காட்டிலும் மிகுந்த இனிமை பயக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.

பதவுரை: அமிழ்தினும்-அமிழ்தத்தைவிட; ஆற்ற-மிக, மிகவும்; இனிதே-இனிமையானதே; தம்-தம்முடைய; மக்கள்-குழந்தைகள்; சிறு-சின்ன; கை-கை; அளாவிய-துழாவிய, பிசைந்து கலக்கப்பெற்ற; கூழ்-சோறு.


அமிழ்தினும் ஆற்ற இனிதே:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது;
பரிப்பெருமாள்: இனிமையுடைத்தாகிய அமிழ்தத்தினும் மிகவினிது; .
பரிதி: அமிர்தத்திலும் இரசம் என்றவாறு.
காலிங்கர் ('அமுதினும்' பாடம்): அமரர் கடைந்தெடுத்த அமிர்தத்தினும் மற்றிது மிகவும் தமக்கு இனிமை உடைத்து.
பரிமேலழகர்: சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து;

'அமிழ்தத்தினும் மிக இனிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அமிழ்தினும் மிக இனிக்குமே!', 'மனிதர்க்கு அமிழ்த்தினும் மிக இனிய சுவையுடையது', 'சுவைமிக்க அமிழ்தத்தினும் மிக இனிமையுடையது', 'அமிர்தத்தைவிட இனிமை தரும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அமிழ்தினும் மிக இனிது என்பது இத்தொடரின் பொருள்.

தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.
பரிப்பெருமாள்: தம்முடைய மக்களது சிறியகைகளாலே அளையப்பட்ட கூழ்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இன்பம் தரும் என்பார் பின்; முற்படச் சுவைக்கு இனிது என்று கூறுகிறார்.
பரிதி: தன்பிள்ளையின் சிறுகையினால் அளாவி அணைந்த அசனம். [அசனம்- சோறு முதலிய உண்பொருள்கள்]
காலிங்கர்: அது யாதெனின் நம் புதல்வரது விரகறியாப் பருவத்து அச்சிறுகையால் தாம் உண்ணும் காலத்து அங்கோடு இங்கோடு அளாவிய உணவானது. [விரகு அறியாப் பருவம்-வஞ்சனையறியாத பருவம்]
பரிமேலழகர்: தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு.
பரிமேலழகர் குறிப்புரை: சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188

'தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் குழந்தைகள் இளங்கையால் கிண்டிய உணவு', 'தம் மக்கள் தம்முடைய சிறுகைகளால் துழாவிய சோறானது', 'தம் மக்கள்சிறிய கைகளால் துழாவப்பட்ட உணவு (தூய்மை இழந்த போதிலும்)', 'தம் குழந்தைகள் அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளை விட்டுக் குழப்பிய சோறு' என்றபடி பொருள் உரைத்தனர்.

தம் குழந்தைகளது சிறுகைகளால் துழாவிய சோறு என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
தம் குழந்தைகளது சிறுகைகளால் துழாவிய கூழ் அமிழ்தினும் மிக இனிது என்பது பாடலின் பொருள்.
'கூழ்' என்றால் என்ன?

தம் குழந்தைகளின் பிஞ்சுக்கைகளால் ஊட்ட உண்பது பெரும் இன்பப் பேறாம்.

தம் குழந்தைகளது சிறிய கைகளால் துழாவி ஊட்டிய உணவு பெற்றோர்க்கு அமிழ்தத்தினும் மிக்க இனிமை யுடையதாம்.
ஒரு பெற்றோர் தம் குழந்தைக்கு ஒரு அட்டிலில் உணவு வைத்து ஊட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்பச்சிளங் குழந்தைக்குத் தன்னைப் பெற்றவர்க்குத் தானும் ஊட்டிவிட வேண்டும் என்ற உணர்வு தோன்ற அட்டிலுள்ள சோற்றைத் தன் சிறுகைகளால் அங்கொடு-இங்கொடு அளாவி, சிந்திச் சிதறி, தன் உடம்பெங்கும் இறைத்துக்கொண்டு, பெற்றவர்க்கு ஊட்டிவிட முயல்கிறது. அவ்வுணவை ஏற்று உண்ட பெற்றோர் அதை அமிழ்தத்தினும் இனிமையானதாக உணர்கிறார்கள். வஞ்சனையறியாப் பருவத்துக் குழந்தை அன்புடன் குழைத்துத் தரப்பட்ட கூழல்லவா அது! குழந்தை தன் பிஞ்சுக் கைகளால் சோற்றை அளைவதைக் காணுதல் ஒரு இன்பம். அது ஊட்டிவிட்டதை உண்ட சுவை மேலும் ஒரு இன்பம். இக்காட்சியை மிகுந்த அழகுணர்ச்சியுடன் கூடிய கவிதையாக வடித்து தந்திருக்கிறார் வள்ளுவர் இங்கு.

சுவை மிகுதியான உணவு எதனையும் 'அமிழ்தம்' (அல்லது அமிழ்து) என்பது உலக வழக்கு. அமிழ்தானது தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள உணவுவகையாகும். இது வானிலுள்ள தேவர்கள் அருந்துவது; உயிர் தளிர்க்கச் செய்யும் இயல்பினது; சாவா வாழ்வைத் தரவல்லது; அதைவிடச் சுவையில் மேம்பட்டது வேறு ஒன்றில்லை என்று சொல்லப்படுவது.
குழந்தை தர உண்ட உணவு பெற்றோர்க்கு அமிழ்தைவிட மிக இனிய சுவையுடையதாய் இருக்கிறது. உலகியல்பு அறிந்தவராதலால் 'தம் மக்கள்' என்ற சொற்றொடரை வள்ளுவர் இப்பாடலில் பெய்கிறார். 'தம்பிள்ளை' ஊட்டிய உணவுதான் அமிழ்தினும் இனியதாகும் என்பது கருத்து. குழந்தை பெற்ற அனைவரும் இவ்வினிய அனுபவம் அடைந்திருப்பர். அதைப் படிக்கும்போது மறுபடியும் அக்காட்சி நம் முன் தோன்றி நம்மை மகிழ்விக்கிறது.

சங்கப்பாடல் ஒன்று 'குறுகக் குறுக நடந்து சென்று சிறிய கையை நீட்டி கலந்தின்கட் கிடந்ததனைத் தரையிலே யிட்டும் கூடப்பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியும் கையால் துழாவியும் நெய்யை யுடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும் தோற்றமளிக்கும் 'மயக்குறு மக்கள்' இல்லாவிடில், எத்துணைப் பெரிய செல்வந்தராக இருந்தாலும் அவர் தம் வாழ்வில் பெறக்கூடிய நன்மை ஒன்றுமில்லை' என்கிறது. அப்பாடல்:
படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுந் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே.
(புறநானூறு 188 )
இச்செய்யுள் சோற்றைத் தம் மெய்பட விதிர்த்த குழந்தையைக் கண்டு மகிழ்ந்து பாண்டியன் அறிவுடைநம்பியால் பாடப்பட்டது. தம்குழந்தையின் சிறு கைகளால் ஊட்டப்பட்ட உணவு இனிமையானது என்று இன்னும் சுவைகூட்டி இறும்பூதெய்த வள்ளுவர் பாடினார்.

'கூழ்' என்றால் என்ன?

'கூழ்' என்ற சொல்லுக்குக் கூழ், அசனம், உணவு, சோறு என்று பொருள் கூறினர். பெரும்பான்மையர் உணவு என்றே கொள்கின்றனர். குறளிலேயே பிற இடங்களில் கூழ் என்ற சொல்லாட்சி உணவு என்ற பொதுப்பெயரிலேயே பயின்று வந்துள்ளது. படை குடி கூழ்... (குறள் 381) என்ற பாடலிலும் கூழும் குடியும்.... (குறள் 554) என்ற இடத்தும் கூழ் உணவு என்று பொருளிலேயே வந்துள்ளன. பரிதி, காலிங்கர் ஆகிய தொல்லாசிரியர்களும் கூழ் என்பதற்கு உணவு என்றே உரை வழங்கினர்.
இன்று நாம் அரிசி, கேப்பை, கம்பு அல்லது கொள்ளு போன்றவற்றின் சோற்றைக் கரைத்துக் குடிக்கப்பெறுவதையே கூழ் என்கிறோம் ஆதலால் 'எளிய கூழாக இருந்தாலும் கூட', 'மிகவும் எளிமையுடைய கூழேயானாலும்' என்று கூழ் என்று அதன் எளிமைக்காகச் சொல்லப்பட்டது என்பது போல் சிலர் உரையெழுதினர். வள்ளுவர் அதன் எளிமையைக் குறிப்பதற்காகக் கூழ் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. 'கூழ்' என்பது உணவு என்ற பொருளிலேயே இங்கு ஆளப்பட்டுள்ளது. குழந்தையின் கைபட்டு ஊட்டப்பட்ட எந்த உணவும் சுவை மிக்கது என்பதுவே இக்குறள் கூறும் கருத்து.

கூழ் என்ற சொல்லுக்கு உணவு என்பது பொருள்.

தம் குழந்தைகளது சிறுகைகளால் துழாவிய சோறு அமிழ்தினும் மிக இனிது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

குழந்தைகளின் சிறுகைகளால் உணவருந்துவது மக்கட்பேறு தரும் இன்பம்.

பொழிப்பு

அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் சிறு கையால் துழாவித் தரப்பட்ட உணவு.