இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0066குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:66)

பொழிப்பு :(மு வரதராசன்) தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையைச் சுவைக்காதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

பரிமேலழகர் உரை: குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் குழல்இனிது யாழ்இனிது என்ப.

பதவுரை: குழல்-புல்லாங்குழல்; இனிது-இனிமையானது; யாழ்-யாழ் என்னும் இசைக்கருவி; இனிது-இனிமையானது என்ப-என்று சொல்லுவர். தம்-தமது; மக்கள்-புதல்வர்; மழலை-குதலை; சொல்-மொழி; கேளாதவர்-கேட்காதவர்.


குழல்இனிது யாழ்இனிது என்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர்;
பரிதி: குழலோசை நல்லது யாழோசை நல்லது என்பர்;
காலிங்கர்: பரதம் பற்றிய குழலின் ஓசையும் பண்ணினைப் பற்றிய யாழின் ஓசையும் மிக இனிது என்பர்; .
பரிமேலழகர்: குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர்.

'குழலோசை இனிது யாழோசை இனிது என்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குழலிசை யாழிசை இனியது என்பர்', 'குழலினது இசை நல்லது, யாழினது இசை நல்லது என்று கூறுவர்', 'குழலிசையும் யாழிசையும் இனிமையானவை என்பர்', 'புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமையானவை என்று சொல்வார்கள்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறவாற்றானும் வரும் இன்பமும் இதனோடு ஒவ்வாது என்றது. இதனானே மற்றுள்ள பொறிகளான் வரும் இன்பமும் சொன்னாராகக் கொள்ளப்படும் ஒன்றென முடித்தலான் இத்துணையும் மக்களான் ஆகிய பயன் கூறப்பட்டது.
பரிதி: தம் மக்களிடம் மழலைச்சொல் கேளாதபேர் என்றவாறு.
காலிங்கர்: குழவிப் பருவத்து இயல்பாகிய மழலைச் சொல்லைப் பெரிதும் செவிக்குச் சுவையாகக் கேட்டறியாத புல்லறிவாளர் என்றவாறு.
பரிமேலழகர்: தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.

'தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவரே', 'தம் குழந்தைகளுடைய குதலைச் சொல்லைக் கேளாதவர்கள்', 'தம் மக்களுடைய மழலைச் சொல்லைக் கேளாதவர்களே', 'தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்கக் கொடுத்து வைக்காதவர்கள்தாம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர் என்பது பாடலின் பொருள்.
மழலைச் சொல் என்றால் என்ன?

எந்தவிதமான இசையையும்விட தம்தம் குழந்தைகளின் மழலைச் சொல்தான் இன்பம் தருவது என்று இங்கு வள்ளுவர் மெய்மறந்து பாடுகிறார். குழந்தைகள் வழங்கும் மழலை இசை இன்பத்தினை அழகுறக் கவிதைநடையில் சொல்கிறார்.

குழல் என்பது புல்லாங்குழல் என்னும் துளை இசைக்கருவியைக் குறித்த சொல். அது இங்கு புல்லாங்குழல் தரும் இசையைச் சொல்கிறது. யாழ் என்னும் சொல் நரம்பு இசைக்கருவியிலிருந்து வரும் இசையைக் குறிக்கிறது.
தன் குழந்தைகளின் மழலை மொழி குழலிசையினும் யாழிசையினும் மிக இனியது என்று பெற்றோர் மகிழ்வர்.
இதற்கு முந்தைய பாடலில் '....அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு' (குறள் 65) எனப் பிள்ளைகளின் மழலைச் சொல் நல்கிய செவியின்பம் கூறப்பட்டது. இங்கு அந்த மழலைச் சொல்லின் இனிமை வியந்து சொல்லப்படுகிறது,

இசை என்பது செவிக்கு இனிமையாகப் பண்ணப்படுவது. இசையை அமைத்துப் பாடும் கருவிகள் குழல், யாழ் என்பன. அவற்றிலிருந்து எழுப்பப்படும் இசை விலங்குகளையும் வயப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனப் பழம்நூல்கள் பாடும். யாழிசை வாசித்து அசுணம் என்னும் பறவையை மெய்மறக்கச் செய்வார்களாம். '....ஆயன் குழல் போலும்' (பொழுதுகண்டிரங்கல் 1228) என்றும் ..... யாழ் கோடு செவ்விது' (கூடாவொழுக்கம் 279) என்றும் குறளில் வேறு இடங்களிலும் இக்கருவிகள் பேசப்படுகின்றன. எவரையும் இன்புறுத்தவல்ல இவற்றின் இசையை விடத் தாம் பெற்ற குழந்தைகளின் மழலைப் பேச்சு மிகவும் இனிமையானது எனப் பெற்றவர்கள் பேருவகை கொள்வர். குழந்தைகளின் மழலை எனும் குதலை மொழி கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பமாகும். பொருள் விளங்காத அவர்தம் மொழி, இன்றைக்கும், என்றைக்கும் எந்த இசை அறிஞர்க்கும் இயலாத, எந்த இசைக் கருவிகளிலிருந்தும் வெளிப்படமுடியாத இனிய ஒலிகளாகும்.
எல்லாக் குழந்தைகளின் மழலைப் பேச்சும் சுவையானதுதான். ஆனால் 'தம் மக்கள்' மழலை பெற்றோர்க்குச் சொல்ல முடியாத அளவு மிகையான மகிழ்ச்சி அளிக்கும். தம் குழந்தைகளை அன்புருவாகக் காண்பதனால் பேசும் மழலையிலும் இனிமை ஒன்றையே உணர்கின்றார்கள். அது ஒரு பெற்றோராக அனுபவிப்பவர்க்கு நன்கு விளங்கும்.

காலிங்கர் தம் உரையில் 'பரதம் பற்றிய குழலின் ஓசையும் பண்ணினைப் பற்றிய யாழின் ஓசையும்' எனக் குறித்துள்ளார். இதனால் குழல் நாட்டியத்திற்கு உரியது அதாவது பரதத்திற்குப் பக்கவாத்தியமாக வாசிக்கப்பெறும் வங்கியமாதல் வேண்டும் என்றும் யாழ் இசைக்குரிய தென்றும் அறியக்கிடக்கிறது. மேலும் 'யாழோசை போல மழலைச் சொல் மனம் ஒன்றச் செய்வதெனவும் பரதத்திற்குத் துணையான குழலோசை போல மழலை சுவைத்து மெய்ப்பாட்டால் ஆடவும் செய்வது எனவும் அறிய உதவுகிறது' என விளக்குவார் தண்டபாணி தேசிகர்.

இப்பாடலே செவிக்கு இன்பம் ஊட்டும் ஒலிநயக் கற்பனையுடன் அமைத்துள்ளது என்பது அறிந்து மகிழத்தக்கது. குழல், யாழ் என்ற சொற்களிலேயே ஒரு குழைவு இருக்கின்றது.
சிறந்த ஒன்றைச் சொல்லுங்கால் 'இழும்' என்னும் மொழி பயிலச் சொல்ல வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் என்பது அவரது செய்யுள்.(செய்யுளியல் 539.: பொருள்: இழுமென் மொழியால் விழுமிய பொருளைக் கூறினும்) இக்குறள் சிறப்பு 'ழ'கரம் பயிலும் இழுமென் மொழியமையப் பாடியது அறிக (இரா இளங்குமரன்).

மழலைச் சொல் என்றால் என்ன?

பேசும் பக்குவம் அடையாத குழந்தைகளின் மொழியே மழலைச் சொல் எனப்படுவது. இதைக் குதலைச் சொல் என்றும் கூறுவர். இளஞ்சொல்; சொல்வடிவம் நன்கு விளங்காதிருப்பது.

ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது;
(கலித்தொகை: 80; பொருள்: ஐயனே! விருப்பமருவுகின்ற அழகினையுடையையாய் 'அத்தத்தா' என்று கூறும் நினது இனிய மொழியைக்கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது). என்று சங்கத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில் எச்சில் ஊறக் கொஞ்சு மொழி பேசுவதைக் கேட்டு மெய்சிலிர்த்தாள்.
கேட்பதற்குத் தேன் போலும் தித்திக்கும் தீஞ்சுவை வாய்ந்தது குழந்தைகளின் வாயூறும் மழலை மொழி என்று
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
(அகநானூறு: மருதம்: 16; பொருள்: நாவாற் பயின்று பேசப்படாத கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய குதலைச் சொற்களையும் உடைய, கண்டார் அனைவரும் விரும்பும் பொற்றொடி யணிந்த புதல்வனை) என்ற அகப்பாடல் கூறும்,

தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தம் பிள்ளைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு இசையாகிறது என்னும் மக்கட்பேறு கவிதை.

பொழிப்பு

குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர் தம் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர்.