இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0068தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:68)

பொழிப்பு (மு வரதராசன்: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

மணக்குடவர் உரை: தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.

பரிமேலழகர் உரை: தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.
(ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பதவுரை: தம்மின்-தம்மைக் காட்டிலும்; தம்-தமது; மக்கள்-பிள்ளைகள், புதல்வர்; அறிவுடைமை-அறிவுடையராய் இருத்தல், அறிவு உடையனாந் தன்மை; மா-பெரிய; நிலத்து-உலகின்கண்; மன்-நிலைபேறு; உயிர்க்கு-உயிருக்கு; எல்லாம்-அனைத்தும்; இனிது-இனியதாகும், நன்றானது.


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மக்க ளறிவுடையாரானால்;
பரிப்பெருமாள்: தம்மக்க ளறிவுடையாரானால்;
பரிதி: தம்மிலும் புதல்வர் அறிவினராகில்;
காலிங்கர்: தம் புதல்வர் அறிவுடைமையின் மிகுதியைக் கண்டுதாம் இன்புறுவது அன்றி;
பரிமேலழகர்: தம் மக்களது அறிவுடைமை;
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை.

'தம் மக்கள் அறிவுடையரானால் தம்மின் (இனிது)' என்று பொருள் கண்டவர்கள் மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர். 'தம்மக்கள் தம்மின் அறிவுடைமையரானால்' எனப் பொருள் கண்டார் பரிதி.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது', 'தம் மக்கள் அறிவுடைமை', 'தம்மைப் பார்க்கிலுந் தம்முடைய மக்கள் கல்வியறிவுடையராயிருப்பது', 'தன் மக்களுடைய அறிவுடைமை தம்மைவிட' என்ற பொருளில் உரை தந்தனர்.

தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது என்பது இப்பகுதியின் பொருள்.

மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.
பரிப்பெருமாள்: அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்புதல்வரைக் கற்பிக்க வேண்டும் என்றார். அதனால் பயன் என்னை என்றார்க்கு அவர் நன்னெறி ஒழுகுதலானே தமக்கும் பிறர்க்கும் இனிமையுண்டாம் என்று கூறப்பட்டது.
பரிதி: உலகத்தார்க்கு எல்லாம் இனிமையாம் என்றவாறு
காலிங்கர்: மாநிலத்து மன்னுயிர்கட்கு எல்லாம் இன்புறத்தக்க இனிமையைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.

'உலகத்தார்க்கு எல்லாம் இனிமையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்றோர்க்கும் எல்லோர்க்கும் இனியது', 'இவ்வுலகத்து மக்கட்கெல்லாம் தம்மைப் போல இனிது', 'இப்பெரிய நிலவுலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத்தரும்', 'உலகத்து உயிர்கட்கு இனிமையைத் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பெரிய நிலவுலகலத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிமை என்பது பாடலின் பொருள்.
'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' குறிப்பது என்ன?

தம் குழந்தைகளை மிக்க அறிவுடைமைப் படுத்துதலே பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருத்தல் வேண்டும்.

தம்மைக் காட்டிலும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெரிய உலகத்து நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் இனிமையானது.
'தம்' என்ற சொல் பெற்றோர் இருவரையும் குறிக்கும். இக்குறளைத் 'தம்மக்கள் தம்மின் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது' எனவும் 'தம்மக்கள் அறிவுடைமை தம்மின் இனிது மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' எனவும். இருவிதமாகக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்வர். ஆகையால் 'தம்மை விடவும் தம் பிள்ளைகள் மிகுந்த அறிவுடன் விளங்குதல் உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இனிது' என்ற ஒருகருத்தும், 'தம் மக்கள் அறிவுடையாரதல், தம்மை விட மற்ற உயிர்களுக்கு மிகவும் இனிமையானது' என்று மற்றொரு கருத்தும் இக்குறட்கு உருவாயின.

இக்குறளுக்கு, மேற்கண்ட பொருள்களை அடியாகக் கொண்டு, சிறுசிறு வேறுபாடுகளுடன் உரைகள் பல உள. அவற்றிலிருந்து சில:
1. தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இன்பம் தருவது. எல்லா மனிதர் என்பதை எல்லாப் பெற்றோருக்கும் என வாசித்தல் நன்று. இது தம்மைக் காட்டிலும் தம்முடைய மக்கள் அறிவுடையவர்களாக இருப்பதைக் காண்பது. உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் அதாவது பெற்றோர் அனைவருக்கும் இன்பம் தரும் என்ற பொருள் தரும். தம் பிள்ளைகளை அறிவுடையோராக வளர்க்க வேண்டும் என்ற செய்தியைச் செல்கிறது.
பிள்ளைகளின் அறிவுடைமையை அவர்தம் பெற்றோர் அறிவோடு உறழ்ந்து காட்டுகிறது என நோக்காமல், தம்மக்களின் அறிவுடைமையை உயர்த்திக்காட்டுவது இக்குறள் என்றவாறு கொள்ளவேண்டும்.
2. தம்மை விடத் தம் மக்கள் அறிவுடையராக இருத்தல், உலகத்து உயிர்களுக்கெல்லாம், தம்மினும் இனியதாகும் என்கிறார் வள்ளுவர் என்பது மற்றொருவகை உரை. தம் பிள்ளைகள் அறிவுடைமையோராதல் தம்மினும் உலக மக்களுக்கு எப்படி இனிமை தரும்? இதற்கு விளக்கமாக புலி எட்டடி பாயப் புலிக்குட்டி பத்தடி பாய்ந்தால் காண்போர் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று இன்புறுவர் என்ற நோக்கில் இவ்வுரை அமைந்தது என்பர். பிள்ளைகளின் பெருமை குறித்துப் பெற்றோரைவிட உலக மக்கள் மிக மகிழ்வர் எனப் பெற்றோர்களே நினைப்பர் என்பது உலக இயல்புக்கு மாறானது.
3. பெற்றோர் கால அறிவைவிட அவரது குழந்தைகள் கால அறிவுப் பெருக்கத்தை கருத்திற் கொண்டே வள்ளுவர் இங்கு கூறியிருக்கிறார் எனவும் இப்பாடலை விளக்கினர். முந்தைய தலைமுறையைக் காட்டிலும் பின்வரும் தலைமுறை அறிவில் முதிர்ச்சி பெறுவது இயல்பானதே. வளர்ச்சியே இயற்கை. உலகில் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கும் மாற்றங்களின் அடிப்படையாக உள்ள பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனையில் எழுந்தது இப்பாடல் என்பர். பெற்றோர்களைவிட மக்கள் அறிவில் சிறந்திருத்தல் வேண்டும்; தலைமுறை தோறும் மக்களினம் அறிவில் சிறந்திருத்தலே உள்ளது சிறத்தலாகும்; அவ்வாறு சிறந்து இருத்தலினால் பெற்றோர்க்கு மட்டுமன்றி, உலகுக்கே பெருநன்மை உண்டாக்குவதாகும்; உலகமக்கள் இனிதாவர். அதாவது சமுதாயம் நாளும் அறிவின் வயப்பட்டு, முன்னேறுதல் வேண்டும் என்ற நோக்கிலே, தம் மக்கள் கூடுதல் அறிவு பெறுமாறு வளர்ப்பதே சமுதாய வளர்ச்சிக்கு அறிகுறி; அங்ஙனம் ஆதல் உலகத்தில் நிலைபெற்ற உயிர்கட்கெல்லாம் இனிதாகும்.
'இக்குறட்குத் தம்மைவிடத் தம்மக்கள் அறிவிற் சிறந்தவராக இருப்பதே யாவர்க்கும் இனிது எனப் பொருள் கொள்ளின் அது சமுதாயம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்ற கொள்கைக்கு ஆதரவு தருவதே. மக்கள் யாவரும் தம் பிள்ளைகளைத் தம்மைவிடச் சிறந்த அறிவுடையோராக்க விழைவதே யியல்பாயின், ஒவ்வொரு தலைமுறையும் சென்ற தலைமுறையைவிட அதிக அறிவைப் பெறுமாயின் சமுதாயம் முன்னேறி வருதல் இயல்பே. அது இனிது என வள்ளுவர் கூறினாரேயன்றி எப்போதும் அவ்வாறு அமைகிறது என அவர் கூறவில்லை.' (காமாட்சி சீனிவாசன்)

தன் மகனை நற்குணமும் நற்செய்கையும் கொண்டவன் என உலகம் சொல்லக் கேட்ட தாய், ஈன்ற பொழுதினும் பெரிதும் உவப்பாள் என்றும் இம்மகனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன நோற்றானோ என்று உலகத்தார் சொல்லும் வகையில் பிள்ளை புகழ்பெற்று தந்தையை மகிழ்விப்பான் என்றும் இதே அதிகாரத்தில் மற்ற இடங்களில் கூறப்பட்டுள்ளன. இங்கு பிள்ளைகளின் அறிவுடைமை பேசப்படுகிறது. தம் பிள்ளைகளைத் தங்களை விட அறிவுச் செல்வம் மிக்குடையவர்களாகச் செய்து உலகத்துக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும் என்பது பெற்றோர்களின் நோக்கமாக இருக்கவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
'தம்மிலும் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது, உலகத்துப் பெற்றோர் எல்லார்க்கும் இனிமை பயக்கும்.

'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' குறிப்பது என்ன?

மாநிலத்து என்பது உலகத்திலுள்ள என்ற பொருளில் ஆளப்பட்டது.
நாடு மொழி சமய எல்லைகள் கடந்தும் அறிவு பயன்படுவதால் 'மாநிலம்' எனக் கூறப்பட்டது என்பர்.
'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' என்பதற்கு நேர் பொருள் 'இவ்வுலகத்து உயிர்களுக்கெல்லாம்' என்பது. இது விலங்குகள், பறவைகள் உட்பட அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.
'மாநிலத்து மன்னுயிர்' என்றதால் 'தம் மக்கள் உலகமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது' என்றபடி இக்குறட் பொருளை விளக்குவர். 'தம்மக்கள் தம்மினும் அறிவுடையராயிருத்தலை அறிந்து, தாமின்புறுதலேயன்றி தந்நாட்டவரும் அயனாட்டவருமாகிய மன்னுயிர்கள் அனைத்தும் இனவளமும் வளர்ச்சியும் பெறுதலாகிய இன்பம் பெறும் என உரை கோடல் சிறந்ததாகும்' என்பது தண்டபாணி தேசிகர் கருத்து. நாமக்கல் இராமலிங்கம் 'தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது' என உரை தருகிறார்.

இக்குறள் தம் மக்கள் தம்மைவிட அறிவுடையாராய் இருப்பது குறித்து மகிழ்ச்சி கொள்ளும் பெற்றோர் பற்றியது. உலகத்திலுள்ள எல்லா உயிர்களின் பெற்றோரும் அவ்வாறே உவகை கொள்வர் என்றதால் 'மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம்' என்று சொல்லப்பட்டது.

தமது பிள்ளைகள் தம்மைவிட அறிவுடையர்கள் ஆவது பெரிய நிலவுலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிமை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மக்கட்பேறு அவர் தம்மினும் பொருளுடையர் ஆகவேண்டுமென்பதற்காக அல்லாமல் தம்மைவிட அறிவினராய்ச் செய்வதற்காக இருக்கவேண்டும்.

பொழிப்பு

தம்மைவிடத் தம்மக்கள் அறிவுடையவர்களாக விளங்குவது உலகிலுள்ள எல்லா உயிர்களின் பெற்றோர்க்கும் இன்பம் தருவது.