திருக்குறள் பனுவலுக்குத் திறவுகோலாக அமைவது அறன் வலியுறுத்தல் அதிகாரம்.
பகைமை, வறுமை, பிணி, மனமாசு, அச்சம் போன்ற தீமைகளுக்கிடையில் மாந்தர் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மன அமைதி பெறுவதற்கும், அன்றாடக் கடமைகளிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகள் நிகழாமல் காக்கப் பெறுவதற்கும் அறக்கோட்பாடுகள் தேவையாக இருக்கின்றன.
குறள்நூல் தொடக்கம் முதல் முடிவு வரை அறத்தையே உணர்த்துவது. அறம் ஒரு இயங்கு ஆற்றலாகவும் பொருள், இன்பம் ஆகிய அறங்கள் அதன் வெளிப்பாடாகவும் கூறப்படுகிறது.
குறள்நூல் தொடக்கம் முதல் முடிவு வரை அறத்தையே உணர்த்துவது.
தனிஅறம் பேசியதாலும், பொருள் செய்தலில் மேற்கொள்ள வேண்டிய பொருள் வாழ்க்கை அறங்கள் கூறியதாலும், களவும் கற்புமாகிய காமஇன்ப வாழ்க்கையும் அறத்தொடு அமையவேண்டும் என்று அறிவுறுத்துவதாலும், பொருளும் இன்பமும் அறமாகவே அடங்கவேண்டும் என்று குறள் வலியுறுத்துவது தெளிவு. புறநானூறு பொருளும் காமமும் அறத்தின் வழிகளில் செல்லும் என்று முன்னர் சொன்னது: சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல (புறநானூறு.37 பொருள்: மேன்மையுடைய முறைமையினால் பொருளும் காமமும் அறத்தின் பின்னே தோன்றும் காடசியைப் போல.)
அறன் வலியுறுத்தல் என்பது அறத்தை வலியுறுத்திக் கூறுதலும் அதாவது அறத்தைப் பின்பற்றவேண்டிய இன்றியமையாமையைக் குறிப்பிட்டு நிற்றலும், அறத்தை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனச் சொல்வதும் ஆகும். அறன் வலியுறுத்தல் அதிகாரம், அறத்தின் பொது இலக்கணம் கூறி, ஏனைய பொருளும் இன்பமும் அறவழி வருவனவாகவே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
'அறம்' என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல். அறம் என்பதை அறு+அம் என்று விரிப்பர். அறு என்பது அறுத்துச் செல் என்ற பொருள் தரும்.
அறுத்துக் கொள்ளப் பயன்படுவது அறம் என்பர். சிக்கல் நிறைந்தது வாழ்க்கை. அவரவர் தன் வழியிலுள்ள சிக்கல் அறுத்து நிறைவான வாழ்வு
அமைக்கத் துணை செய்வது அறம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே-முழுநிறைவடிவமே-அறம் என்று கூறுவர்.
இச்சொல் காலப்போக்கில் பல்வேறு பொருள்களை உணர்த்தும் பொருள் செறிவு வாய்ந்த சொல்லாகச் சிறப்புற்று விரிவடைந்தது.
அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று. நல்வாழ்வுக்குப் பயன்படுகின்ற அத்துணைப்
பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம். பொதுவாக நல்லொழுக்கமும் நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும்.
ஒழுக்கச் செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும்.
'எண்ணம் அறத்தின் நிலையமைதி (Static) ஆற்றலாகும்; சொல் இயக்க நிலை (Kinetic) ஆற்றலாகும்; செயல் இயங்குநிலை (dynamic) ஆற்றலாகும்' (க த திருநாவுக்கரசு).
எண்ணம் தூய்மையாக இருக்கவேண்டுமானால், மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும் என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று.
மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே அறம் எனப்படும். இவ்வாறு அறத்திற்குப் பொது இலக்கணம் கூறியபின் மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன.
அறத்திற்கு வரையறை செய்து (குறள் 34,35) அறத்தின் சிறப்பு கூறி (குறள் 31,32) எப்பொழுது அறம் செய்வது, ஏன் அறம் செய்யவேண்டும் (குறள் 33,36,38, 39) எனக் கூறி, செய்ய்யத்தக்கன பழியில்லா அறம்(குறள் 40) என்று அதிகாரம் முடிவடைகிறது. இடையில், உலகியல் காட்சி ஒன்றைக் காண்பித்து அறக்கருத்து தவறாகப்புரிந்து கொள்ளப்படக்கூடாது (37) என்பதும் தெளிவாக்கப்படுகிறது.