இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0031சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:31)

பொழிப்பு (மு வரதராசன்): அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

மணக்குடவர் உரை: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.
இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.

பரிமேலழகர் உரை: சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?
எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்- மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

சி இலக்குவனார் உரை: அறம் பெருமையையும் செல்வத்தையும் தரும். அதனை விட உயிர்க்கு ஆக்கம் தருவது வேறொன்றுமில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் உயிர்க்கு அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ?

பதவுரை: சிறப்பு-பெருமை; ஈனும்-பெற்றுத் தரும்; செல்வமும்-செல்வமும். பொருளும்; ஈனும்-அளிக்கும்; அறத்தின்-அறத்தைக் காட்டிலும்; ஊ(உ)ங்கு-விஞ்சிய, மேற்பட்ட; ஆக்கம்-மேல் மேல் உயர்தல்; எவனோ-யாதோ?, எதுவாக இருக்க முடியும்?; உயிர்க்கு-உயிருக்கு, (மாந்தர்க்கு).


சிறப்புஈனும் செல்வமும் ஈனும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால்;
பரிதி: மறுமைக்குச் சிறப்பாகிய முத்தியும் இம்மைக்குச் சிறப்பாகிய செல்வமும் தரும்;
காலிங்கர்: அறமானது இவ்வுலகத்து நுகர்ச்சி இன்பக் காரணமாகிய செல்வத்தையுந் தரும்; மற்ற உலகத்து நுகர்ச்சி இன்பக் காரணமாகிய தேவர் பதத்தையுந் தரும்.அதனான்;
பரிமேலழகர்: வீடுபேற்றையும் தரும்; துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்;
பரிமேலழகர் கருத்துரை: எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது.

மற்ற உலகத்து நுகர்ச்சி இன்பத்துக்கு முத்தியும் இவ்வுலகத்து நுகர்ச்சி இன்பத்துக்கு செல்வம் என்று இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை கண்டனர். பரிமேலழகர் செல்வம் என்பதற்கு துறக்க உலகம் என்று கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம் மதிப்பும் செல்வமும் தரும்', 'அறம் புகழையும் பொருளையும் தரும்', 'சிறப்புத் தரும்; செல்வமும் தரும்', 'அறமானது வீட்டின்பத்தையும் கொடுக்கும்; இம்மை மறுமையிற் பெருஞ்செல்வத்தையும் கொடுக்கும்' என்றபடி உரை செய்தனர்.

பெருமையைப் பெற்றுத் தரும்; செல்வத்தையும் அளிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை.
மணக்குடவர் கருத்துரை: இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று.
பரிதி: தன்மத்திலும் சிறந்த தெய்வம் ஏதோ என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வறத்தின் மேலாய் அழியாது நிற்கும் பொருள் யாதோ?
காலிங்கர் குறிப்புரை: இவ் எழுவகைப் பிறவியினுஞ் சிறந்த மானிடராயினார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது?
பரிமேலழகர் விரிவுரை: ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம்- மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

அறத்தின் மேலாய் உயர்வு உயிர்க்கு ஆக்கம் தருவது யாதோ என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். ஆக்கம் என்ற சொல்லுக்கு பரிதி தெய்வம் என்று கொள்ள காலிங்கர் அழியாது நிற்கும் பொருள் என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலின் அறத்தினும் வாழ்வுக்கு நல்லது வேறில்லை', 'ஆதலால், அதனைக் காட்டிலும் உயிர்க்கு நன்மை தருவது எது?', 'அப்படிப்பட்ட தர்மத்தைக் காட்டிலும் உயர்ந்த பொக்கிஷம் மனிதருக்கு என்ன இருக்கிறது?', 'ஆதலால் அதனைப் பார்க்கிலும் உயிர்களை மேன்மேலுயர்த்துவது வேறு எது?' என்றபடி உரை கூறினர்.

அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமையைப் பெற்றுத் தரும்; செல்வத்தையும் அளிக்கும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ? என்பது பாடலின் பொருள்.
அறம் செல்வமும் கொடுக்குமா என்ன?

அறவாழ்வு மேற்கொண்டோர் சிறப்பு மட்டுமல்ல செல்வத்தையும்கூடப் பெறுவர்.

அறம் ஒருவனுக்குப் பெருமை சேர்க்கும்; செல்வத்தையும் அளிக்கும். மாந்தர்க்கு உயர்வு தருவதில் அறத்தினும் மேலானது வேறு ஒன்றும் இல்லை.
அற வழியைப் பேணுவது மாந்தர்க்கு சிறப்பையும் செல்வத்தையும் பெற்றுத்தந்து அவர்களை மேன்மேல் முன்னேறச் செய்யும். அறத்தினூஉங்கு ஆக்கம் வேறில்லை என்று சொல்லப்படுவதால் அறன் வலியுடைத்து என்பதும் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பதும் பெறப்படுகின்றன. அறவாழ்வில் பெருமை, பொருள் இவை கிடைக்கும் என்கிறது பாடல்.

இப்பாடலில் ஈனும் என்ற சொல் இருமுறை ஆளப்பட்டுள்ளது. முதலில் உள்ள 'ஈனும்' சிறப்பு என்னும் சொல்லோடு சேர்ந்து அமைந்து உடனடி சிறப்பு (புகழ்) என்ற குறிப்பையும், செல்வமும் என்ற சொல்லுக்குப் பின்னர் தனிச் சொல்லாக அமைந்து செல்வம் நீண்ட நாளைக்குப் பிறகே சேரும் என்ற காலக் கெடுவின் நீட்டம் என்ற குறிப்பையும் புலப்படுத்தும் என்பார் செ வை சண்முகம்.
'அறம் செய்வதனால் உடனே சிறப்புண்டாவது உறுதி. ஆனால் செல்வம் உடனே கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்வதன் பலன் இல்லாமல் போகாது. ஆதலால் புகழைப் போல செல்வம் உடனே கிடைக்காவிட்டாலும் பின்னால் கிடைக்காமல் போகாது. அதற்காகவே செல்வம் ஈனும் என்று 'உம்' சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது' என்பது நாமக்கல் இராமலிங்கத்தின் உரை.

சிறப்பு என்ற சொல்லுக்கு முத்தி, தேவர்பதம், வீடுபேறு மோட்சம், சுவர்க்கம், வீடுபேறு என்றவாறும் இன்பம், பெருமை, மதிப்பு, உயர்ச்சி, சிறப்பு என்றும் பொருள் உரைத்தனர். இவற்றுள் பெருமை என்பதே பொருத்தமானது.
ஊங்கு என்ற சொல் 'மேம்பட்ட' என்ற பொருள் தரும். 'மிக்க' என்றும் பொருள் கொள்வர். 'ஆக்கம்' என்பதற்கு 'மேன்மேலுயர்தல்' என்று பரிமேலழகர் கொண்ட பொருள் சிறந்தது. ஆக்கம் என்பது உயர்ச்சி என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது. எவனோ என்பதன் பொருள் 'எதுவாக இருக்கமுடியும்?' என்பது. 'எவனோ' என்னும் வினாக் குறிப்பு 'வேறொன்றுமில்லை' என்பதையும் தெரிவிக்கிறது.
அறத்தினும் ஆக்கம் எவனோ' என ஊங்கு என்ற சொல் இல்லாமல் இருந்திருந்தாலும் இக்குறட்பொருள் மாறியிருக்காது ஆனல் அப்படியில்லாமல் ஊங்கு என்ற சொல்லை அளபெடையோடு சேர்த்து ஊஉங்காகி ஓங்கி ஒலிக்க வைத்தது அறத்தின் விழுப்பத்தை வற்புறுத்துவதற்காகவே ஆகும்.
'சிறப்பீனும் செல்வமும் ஈனும்' என்றதற்கு நேர்பொருளான 'சிறப்பைத் தரும் செல்வத்தையும் தரும்' என்று கூறும் உரையும் உள்ளது. இப்பொருள் சிறப்பானதாகவும் இல்லை; குறள் நடைக்கு ஏற்றதாகவும் இல்லை.

அறம் செல்வமும் கொடுக்குமா என்ன?

அறம் சிறப்புடன் செல்வத்தையும் நல்கும் என்று சொல்கிறது இப்பாடல். அறம் செய்வார்க்குப் பொருள் தேயும் என்பதுதானே எல்லாரும் எண்ணுவது? எப்படி அறம் பொருள் பெருகச் செய்ய முடியும்? அறமும் பொருளும் முரணானவை; உலகத்தில் பொருள் தேடப் புகுந்தால் அறத்தைக் கைவிட வேண்டும் என்னும் பொதுக் கருத்துக்கு மறுப்புரையாக அறத்தால் பொருள் அழியாது என்பதுவும் அறம்செய்து கொண்டே பொருள் தேடலாம் என்பதுவும் தோன்றச் செல்வமும் ஈனும் என்கிறது இக்குறள்.
பரிமேலழகர் 'துறக்கம் முதலிய செல்வம்' தரும் என்று சொல்லி எந்தச் செல்வத்தைக் குறள் கூறுகிறது என்று விளக்கினார். அதுபோன்று மற்ற உரையாளர்கள் சிலர் இப்பாடலிலுள்ள செல்வம் என்பதற்குப் பொருளைச் சார்ந்ததாக இல்லாமல், கல்வி, கேள்வி, நன்மதிப்பு என்ற செல்வங்களைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும் என்றனர். அறச் செயல்கள் செய்யும் ஒருவன் புகழ் பெறுகிறான். எனவே பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருளையும் அதாவது (அறச்) செல்வத்தையும் கொடுக்கும் என்று விளக்கலாம் என்று கூறினர் வேறு சிலர்.

அறம் செய்தால் பொருட்பெருக்கமும் உண்டாகும்; எனவே அறம் செய் என்று சொல்லப்படுகிறது. பொருள் கிடைப்பதற்காக அறம் செய்யவேண்டும் எனச் சொல்ல வள்ளுவர் விரும்ப மாட்டார். 'அறம் செய்; பொருட்செல்வம் வந்து சேரும்' என்றுதான் சொல்கிறார். எனவேதான் 'செல்வமும் ஈனும்' என்று பொருளும்கூடக் கிடைக்கும் என்ற பொருள்படப் பாடினார். நல்லது செய்தால் பொருள் தானாக வரும் என்பதை வள்ளுவர் நம்புகிறார் என்று தோன்றுகிறது. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு (வெஃகாமை குறள் 179 பொருள்: அறம் இது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் செல்வம் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேரும்) என்ற குறளில் கண்டது போலவும் குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். (குடி செயல்வகை குறள் 1023 பொருள்: என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்) என்ற பாடலில் கூறப்பட்டது போலவும் அறநெறி நிற்பார்க்கு செல்வமும் கொழிக்க அறக்கடவுள் முன்வருவார் என்று பொருள் கொள்ளலாம். அறத்தின் பயனாக செல்வம் அதுவாக எந்த நேரமும் வந்து சேரலாம் என்பது கருத்து.

பெருமையைப் பெற்றுத் தரும்; செல்வத்தையும் அளிக்கும் அறத்தினும் உயிர் வாழ்வுக்கு உயர்வு தருவது எதுவோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழ்வுக்கு உயர்வு தரும் எனக்கூறி அறன் வலியுறுத்தல் செய்யும் பாடல்

பொழிப்பு

அறம் பெருமையையும் பொருளையும்கூடத் தரும். அதனைக் காட்டிலும் உயிர்க்கு மேன்மை தருவது எது?