இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0038வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:38)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
இது வீடு தருமென்றது.

பரிமேலழகர் உரை: வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
(ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

தமிழண்ணல் உரை: நல்லது செய்வதற்கு நாள் நட்சத்திரம் பார்க்கவேண்டியதில்லை. நல்லதைச் செய்யும் நாளெல்லாம் வாழும் நாளாகும்; செய்யாது விடின் அது வீழ்நாளாகிப் போகும். வீழ்நாளாகி விடாதவாறு மிகக் கருத்தோடு நல்லவற்றைச் செய்து வருவானாயின், அஃது ஒருவனது வாழ்நாள் எனப்படும் வழியில் வீழ்நாளாகிய இடைவெளிகள் ஏற்படாது அடைக்கும் கல்லாகும். அது வாழ்நாள்களின் தொடர்ச்சியைக் காக்கும் என்பதாம்.
வாழ்நாள் வழியடைத்தல்-வாழும் நாளுக்கு வழியமைக்கும் கல் என்பார் திரு வி க. வீழ்நாள் படாது காத்தால் எல்லா நாளும் வாழ்நாளாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பதவுரை: வீழ்நாள்-வீணாகின்ற நாள்; படாஅமை-உண்டாகாமல்; நன்று-நல்லவை, அறம்; ஆற்றின்-செய்தால்; அஃது-அது; ஒருவன்-ஒருவன்; வாழ்நாள்-(பயனின்றி) உயிரோடிருக்கின்ற நாள்; வழி-பாதை; அடைக்கும்-மூடுகின்ற; கல்-கல்.


வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின்;
பரிதி: அவமே நாட்போகாமல் தன்மமே செய்க. [அவமே-வீணாக அல்லது பயன் இல்லாமல்]
காலிங்கர்: ஒருவன் நாள் இடைப்படாமே நல்வினையாகிய அறத்தினைச் செய்யின்; [இடைப்படாமே-இடையீடுபடாமல்]
பரிமேலழகர்: செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;

'ஒருநாள் கூட வீணாகாமல் ஒருவன் அறவினை செய்தால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாள் தவறாமல் அறஞ்செய்க', 'அறம் செய்யாத நாள் ஏற்படாமல் ஒருவன் அறத்தைத் தொடர்ந்து செய்வானாயின்', 'மரணம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடாமல் சுகமாக இருக்கும்போதே சரியான முறையில் அறங்களைச் செய்கிறவனுக்கு', 'அறந்செய்யாது வீணே கழியுநாள் ஏற்படாமல், ஒருவன் நன்மையே நாடோறுஞ் செய்வானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வீணே கழியுநாள் ஏற்படாமல் நல்லதுசெய்தால் என்பது இப்பகுதியின் பொருள்

அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது வீடு தருமென்றது.
பரிதி: அது இனிமேற் செனனம் இல்லாமல் செனனவழியை அடைக்குங்கல் என்றவாறு. [செனனவழி-பிறப்பிற்கு வாயிலாக உள்ள வினைகள் இவனை வந்து சேரும் வழியை]
காலிங்கர்: பிறகு அங்ஙனம் செய்கின்ற வினையீர்ந்த பெரியோனுடைய வாழ்நாளது வழியினை அடைக்குங்கல் என்றவாறு. [வினையீர்ந்த - வினைமிகுந்த]
காலிங்கர் குறிப்புரை: அதன் கருத்து: என்றும் தான் செய்துவருகின்ற இல்லறமானது ஒரு நாளாயினும் விழுநாள் படாமே செய்து வருமாயின் அம்மிகுதியான் பெரியோனுடைய வாழ்நாளினது போவது வருவதாகிய வழியினையடைக்குங் கல்லாம் என்றவாறு.
பரிமேலழகர்: அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது. [இருவகைவினை - நல்வினை, தீவினை; இருவகைப்பயன் - வினைகளின் பயனாகிய இன்பதுன்பங்கள்; அவிச்சை-அறியாமை (அஞ்ஞானம்); பஞ்சக்கிலேசம்- ஐவகைத்துக்கங்கள்.]

பழைய ஆசிரியர்கள் 'அவ்வறச்செயல் மீண்டும் பிறப்பதைத் தடுக்கும் கல்லாகும்' என்ற பொருள் உரை தருவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும்', 'அஃது அவனுக்கு வரும் பிறப்பினைத் தடுக்கும் கல்லாகும்', 'அச் செயல் அவன் மீண்டும் பிறப்பதற்குள்ள காரணங்களை இல்லாமல் செய்துவிடக்கூடிய கற்கோட்டை', 'அது மீண்டும் உடலெடுத்து வாழுநாள் வரும்வழியை வாராமல் அடைக்குங் கல்லாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்லாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீணே கழியுநாள் ஏற்படாமல் அறஞ்செய்தால், அது ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பது பாடலின் பொருள்.
'வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்றால் என்ன?

இன்றைக்கு என்ன நன்மை செய்வது என்று நாளும் நினைவூட்டிச் செய்க.

வீணாகக் கழியும் நாள் ஆகாமல் ஒருவன் எந்நாளும் நல்ல செயல்களைச் செய்தால் அது அவன் வாழும் நாளில் துன்பத்திலிருந்து காக்கும் கல்லாகும்.
இடையீடு இல்லாமல் அறம் செய்தால் துன்ப இடைவெளி இல்லாது வாழ்வு அமையும்; எனவே வாழ்நாள் முழுதும் நன்மை செய்க.
இதற்கு முந்தைய பாடல் ஒன்று (குறள் 36) இன்றே அல்லது உடனே அறம் செய்க என்று சொல்லிற்று. இங்கு என்றும் அறம் செய்க என்று வலியுறுத்தப்படுகிறது. இழந்த காலத்தைத் திரும்பப் பெறுதல் இயலாது ஆதலால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வகையில் நல்லது செய்க எனச் சொல்கிறது இப்பாடல். நல்லது செய்யத் தவறிய நாள் என்று ஒன்று இருக்க வேண்டாம். அப்படி நாள் சென்றால் அது வீணாய்ப்போன நாள் ஆகும். பயனின்றிக் கழியும் நாளை வீணாள் என்று பேச்சு வழக்கு உள்ளது. அதுவே வீழ்நாள் என இங்கு வந்தது.
ஒருவன் செய்யும் அறச்செயல்கள் அவனுக்குண்டாகும் துன்பத்தின் வழியை அடைக்கும் கல் போல அமைந்து அவனைக் காக்கும். வீழ்நாள் என்பதற்கு 'விரும்புநாள்' எனக் கொண்டு, வீழ்நாள் படாமை என்றதற்கு 'நல்லநாளை எதிர்பார்த்துக் காலங்கழிக்காமல்' என்றும் உரை உள்ளது.
இக்குறளுக்குப் புலவர்குழந்தை 'ஒருவன் எப்போதும் நன்மையே செய்யின், அது அவன் வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்லாகும்' என பொழிப்புரை தந்து 'நல்லதையே செய்து பழகினால் அப்பழக்கம் தீமை செய்ய இடங்கொடாதென்பதாம். நற்பழக்கமே தீப்பழக்கத்திற்குத் தடைக்கல்' என்ற விளக்கமும் கொடுக்கிறார்.

வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றால் என்ன?

'வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்றதற்கு அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல், இனிமேற் செனனம் இல்லாமல் செனனவழியை அடைக்குங்கல், வாழ்நாளது வழியினை அடைக்குங்கல், யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல், ஆயுசு மோக்ஷத்திற்கு ஏறுகிறதற்குத் தடையாகின்ற எமன் வருகிற வழியை அடைக்கும் கல், சுவர்க்கத்தில் இருந்து வாழும் நாள்களைப் போகாமல் வழியை அடைக்கும் கற்கதவாம், உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல், பிறவியெடுத்து உழலும்‌ காலம்‌வரும்‌ வழியை வாராமல்‌ தடுத்‌து அடைக்கும்‌ கல்‌, வாழ்நாள் எனப்படும் வழியில் வீழ்நாளாகிய இடைவெளிகள் ஏற்படாது அடைக்கும் கல், பிறப்பு வழியை அடைக்கும் கல், வரும் பிறப்பினைத் தடுக்கும் கல், மீண்டும் பிறப்பதற்குள்ள காரணங்களை இல்லாமல் செய்துவிடக்கூடிய கற்கோட்டை, வாழ்நாள் ஆற்றை அடைத்துக் காக்கும் அணை, மீண்டும் உடலெடுத்து வாழுநாள் வரும்வழியை வாராமல் அடைக்குங் கல், பிறந்து பிறந்து துன்பம் அடைவதற்குள் வழியை அடைக்கும் கல், வாழும் நாளின் வழியைக் காட்டும் அடையாளக் கல், வாழ்நாளில் துன்பம் வரும் வழியினை (வராதபடி) அடைக்கும் தடைகல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்குப் பழம் ஆசிரியர்கள் அனைவருமும் இன்றைய உரையாளர்களில் பெரும்பான்மையினரும் 'பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழி' என்ற பொருளில் உரை வகுத்தனர். இது பிறப்பறுக்கும் பெருமருந்து அல்லது பிறப்பு வரும் வழியை யடைக்குங்கல் என்பதைத் தெரிவிப்பது; பிறவிச்சுழற்சிக் கோட்பாட்டைத் தழுவிய சமயக் கருத்தாம். பல்பிறப்பு, மறுபிறப்பு, வினைப்பயன் என்பனவற்றை அடியாகக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தலைத் தடுப்பது என்ற இப்பொருளை ஒப்புக்கொள்ளதவர்கள் 'வாழ்நாள் வழியடைக்கும் கல்' என்பதற்கு 'வாழ்நாளாகிய இடைவழியை அடைத்து நிரப்பும் பாலக்கல்', 'வாழ்நாளின் வழிக்கு அமைக்கப்படும் கல்', 'வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்', 'வாழும் நாளின் துன்பம் வரும் வழியை அடைக்குங்கல்', 'அவன் வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல்' 'வழியைச் செம்மையாக அமைக்கும் கல்', 'சாவுக்குப்பின்வரும் துயர வாழ்க்கைக்குச் செல்லும் வழியைத் தடுக்கும் கல்' எனப் பலவேறு வகையாக விளக்கம் தந்தனர்.
வழியடைக்கும் கல் என்பதற்கு வழியை அடைத்து வைக்கப்படும் கல் என்று நேர் பொருள் காணலாம். ஊரில்வாழ்வார் வழியை வெட்டிப்போட்டு தடைஏற்படுத்துவதுபோல, காடுகளில் வாழ்வார் முள்ளை வெட்டிப்போட்டு வழியை அடைப்பதுபோல, மலைநாட்டு வாழ்வார் கல்லை ஒருசேர நட்டு வேலி அமைத்து வழியடைப்பது வழக்கம்; அதனைக் கண்டு கூறப்பட்டது வழியடைக்கும் கல் என்பது என்பர்.

இவ்வாறாக இப்பகுதிக்குக் கருத்து உரைப்பவர்கள் இருபெரும் பிரிவாக-மறுபிறவியைத் தடுக்கும் கல் என்று கூறுவோராக ஒரு சாராரும், தீமை வரும் வழியை அடைக்குங்கல் எனச் சொல்லும் மற்றொரு சாராராகவும் உள்ளனர்.
தொல்லாசிரியர்களும் மற்றவர்களும் வாழ்நாள் என்பதற்கு 'பிறந்திறக்கும் துன்பமான வாழ்வு என்று பொருள் கொண்டு, பிறவியைத் தடுக்கும் கல், வீடுபேறு என்னும் வகையில் உரை கூறினர். வள்ளுவர் மறுபிறவி, பல்பிறவி பற்றிக் குறளில் பேசியிருக்கிறார் என்பது உண்மைதான். அதே சமயம் அவர் இவ்வுலக வாழ்க்கையை மிகமேன்மையாகவே கருதுகிறவர். மாந்தர் நிலமிசை நீடு வாழவேண்டும் என்று விரும்புகிறவர். அவர் பிறவியைத் தடுக்கும் வழி சொல்வாரா? பிறப்பிறப்பு வரும் வழியை அடைப்பதற்காக அறம் செய் எனக் கூறுவாரா? மாட்டார்.
வழியடைக்கும் என்பதற்கு வழியமைக்கும் என்றும் பாடம் உண்டு என்பார் கு ச ஆனந்தன். திரு வி க வழியடைக்கும் என்றதற்கு 'வழியமைக்கும்' எனப் பாடம் கொண்டு 'வாழும் நாளுக்கு வழியமைக்கும் கல்' அதாவது 'வழியில் பரப்பப்படும் கல்' எனப் பொருள் கூறுவார். 'வீழ்நாள் படாது காத்தால் எல்லா நாளும் வாழ்நாளாகும்" என்பதைச் சொல்லும் இவ்வுரை இப்பாடலுக்கான நல்ல விளக்கமாக உள்ளது.
இக்குறளுக்கான தமிழண்ணலின் உரை 'வாழ்நாள் எனப்படும் வழியில் வீழ்நாளாகிய இடைவெளிகள் ஏற்படாது அடைக்கும் கல்லாகும்' என்கிறது.
வாழ்நாள் வழியடைக்கும் கல் என்பதற்கு வாழ்நாளின் வழியைச் செம்மையாக்கப் பரப்பும் கல் எனவும் உரை உளது. அது நீண்ட வாழ்நாளைத் தரும் எனப் பொருள் தரும்.
வாழ்நாள் வழி அடைக்கும் என்பதற்கு வாழும்நாட்களைக் குறைக்கும் எனப் பொருள் கொள்வதே நேரிது. இங்கு சொல்லப்படும் நாட்களைத் துன்ப காலம் எனக் கொண்டால் அது துன்பமான வாழும் நாட்களைக் குறைக்கும் என்ற பொருள் கிடைக்கும். இன்பமும் துன்பமும் நிறைந்த உயிர் வாழ்க்கையில் நல்லது செய்தல் என்பது துன்பம் வரும் வழியை அடைக்கும் கல்லாம் எனப்பொருள் கோடல் பொருந்தும்

வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல் நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்லாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒரு நாள்கூட வீணாக்காத அறன் வலியுறுத்தல்.

பொழிப்பு

செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைத் தொடர்ந்து செய்வானாயின், அது வீழ்நாளாகிய இடைவெளிகளை அடைக்கும் கல்.