இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0034



மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.



மணக்குடவர் உரை: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.
பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

பரிமேலழகர் உரை: மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய;
(குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும். உள்ளத்தில் குற்றம் உடையவனாய்ச் சொல்லுகின்ற நற்சொல்லும் செய்கின்ற நற்செயலும் ஆரவாரத்தின் பாற்பட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், பிற ஆகுலநீர.

பதவுரை: மனத்துக்கண்-உள்ளத்தில்; மாசு-குற்றம்; இலன்-இல்லாதவன்; ஆதல்-ஆகுதல்; அனைத்து-எல்லா, அந்தஅளவு; அறன்-அறம்; ஆகுல-ஆரவாரம், ஆடம்பரம், இரைச்சல், வெளிப்பகட்டு; நீர-தன்மையுடையன; பிற-மற்றவை.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்;
பரிப்பெருமாள்: ஒருவன் தன்மனத்தின்கண் ஓரழுக்குமிலனாதலே எல்லாவறமுமாவது;
பரிதி: மனத்திலும் பாவத்தை நினையாதொழிய; அது போதும்;
காலிங்கர்: ஒருவன் தனது நெஞ்சத்துக்கண் பாவக்கருத்து இலனாதலே அனைத்தறங்களும்;
பரிமேலழகர்: அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அவ்வளவே அறம் ஆவது;
பரிமேலழகர் குறிப்புரை: குற்றம் - தீயன சிந்தித்தல்.

இப்பகுதிக்கு மணக்குடவரும் காலிங்கரும் 'மனதில் குற்றமிலாதிருத்தல் எல்லா அறங்களுமாம்' என்றனர். பரிதியும் பரிமேலழகரும் இதை 'மனத்திலும் குற்றமுடையன் அல்லன் ஆகுக; அவ்வளவே அறம் ஆவது' என்றபடி இரண்டு வாக்கியங்களாகக் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனப்பிழையின்றி நட; அதுவே அறம்', 'மனத்துக்கண் குற்றமில்லாதவனாக ஒழுகுக, அவ்வளவே அறமாவது', 'உள்ளத்திற் குற்றமில்லாதவனாகுக. அஃதே உண்மையறமாம்', 'மனத்தில் குற்றமான நோக்கமில்லாமல் செய்கின்ற நல்ல காரியந்தான் அறம் என்பது' என்றபடி உரை நல்கினர்.

'மனத்தின்கண் குற்றமிலனாதலே எல்லா அறம்' என்பது இப்பகுதியின் பொருள்.

ஆகுல நீர பிற:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய.
மணக்குடவர் குறிப்புரை: பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.
பரிப்பெருமாள்: அதனின் அழுக்குண்டாயிருக்கச் செய்வன வெல்லாம் ஆரவார நீர்மையன.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பிற் கூறப்பட்டது.
பரிதி: தன்மம் செய்யவேண்டாம் என்றவாறு.
காலிங்கர்: ஒழிந்தன எல்லாம் துக்கத்தன்மையுடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; [ஆரவாரம்-பிறர் அறியச் செய்யும் ஆடம்பரம்]
பரிமேலழகர் குறிப்புரை: பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.

இப்பகுதிக்கு 'மனதில் அழுக்குடன் செய்வன எல்லாம் ஆரவாரத்தன்மையுடையன' என்று மணக்குடவர் பொருள் கூறுவார். 'மனத்தில் பாவத்தை நினையாதிருந்தாலே போதும்; வேறு அறம் செய்யத் தேவையில்லை' என்பது பரிதியின் உரை. காலிங்கர் 'மற்றவை துக்கத் தன்மையுடைத்து' என்றார். 'மனதில் மாசில்லாத சொல்லும் வேடமும் ஆரவாரத் தன்மையுடையன' என்று பரிமேலழகர் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மற்றவையெல்லாம் வெளிப்பகட்டு', 'பிறவெல்லாம் வெளிப் பகட்டே', '(அங்ஙனம் மாசற்ற மனத்தோடு கலவாத சொல்லுஞ் செயலுமாகிய) பிறவெல்லாம் ஆரவாரத்தின் தன்மையனவேயாம்', 'ஒரு சுயநல நோக்கத்தைக் கொண்டு எந்தத் தர்மம் செய்தாலும் அது ஆடம்பரந்தான்; அறமாகாது' என்றபடி உரை செய்தனர்.

மற்றவை ஆரவாரத் தன்மையுடையன என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் எல்லா அறமுமாம்; பிற ஆரவாரத் தன்மையுடையன என்பது இப்பாடலின் பொருள்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் ஆகுமா?

உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்க.

உள்ளத்தில் குற்றம் இல்லாது இருத்தலே அறமாம். பிறவெல்லாம் ஆரவாரத்தின் தன்மையனவே.
மேற்கோளாகக் காட்டப்படும் குறட்பாக்களில் முதன்மை இடம் பெறும் பாடல் இது.
அறம் என்றால் என்ன என்பதற்குப் பலரும் பலவிதமாக விளக்கம் கூறினர். ஆனால் வள்ளுவர் 'உள்ளத்தின்கண் குற்றங்குறை இல்லாதவனாக ஒருவன் இருத்தல் என்பதே அறம்' என்கிறார். அவர் கூறும் அறத்திற்கான இலக்கணம் எளிமையானது; புதுமையானது; பொதுமையானது; எல்லோராலும் செயல்படுத்தக் கூடியது; எக்காலத்திற்கும் ஏற்றது. அதை மிகச் சுருக்கமான சொற்களில், யாரும் கூறாத முறையில், எல்லோருக்கும் எளிதில் நன்கு புலனாகும்படி இப்பாட்டில் சொல்லியுள்ளார்.
'பிற' அதாவது மற்ற மனத் தூய்மையற்ற, அறத்தின் பெயரிலான, சொல்லும் செயலும் ஆடம்பரமானவை; ஒலிஎழுப்புவதற்காகச் செய்யப்படுவன; வீண் பகட்டுக்காகவும் வெற்று விளம்பரத்திற்காகவும் செய்யப்படுவன எனவும் கூறினார். தூய்மையான மனம் இல்லாமல் மற்றவர் அறிவதற்காகவே செய்யும் செயல்கள் எல்லாம் ஆடம்பரம், ஆரவாரம், இரைச்சல் தன்மைகள் கொண்டவையாகும். அறம் உள்ளத்திலேயே தோன்ற வேண்டும். சொல்லிலும் செயலிலும் அறம் காணப்பட்டாலும் உள்ளமும் அதனோடு பொருந்த வேண்டும் என்பது வள்ளுவம்.

'அனைத்து' என்பதற்கு, 'எல்லாம்' என்னும் பொருளோடு, 'அவ்வளவு' என்ற பொருளும் உண்டு. 'தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணி...' (கல்வி, குறள்396)) என்ற பாடல் பகுதி 'மணலில் உள்ள கேணியில் தோண்டிய வரை நீர் ஊறும்' என்று பொருள் தந்து 'அனைத்து' என்ற சொல் அளவு குறிப்பதாக உள்ளது. அதுபோல இக்குறளும் எவ்வளவு மனத்தில் குற்றம் அற்றவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு அறம் செய்தவன் ஆவான் என்ற கருத்தைத் தருவதாகவும் கொள்வர். இவ்வாறாக, 'மாசிலனாதலே அனைத்து அறங்களும்; பிற ஆகுல நீர' என இரு தொடராகவும் 'மாசிலனாகுக; அவ்வளவே அறமாவது; பிற ஆகுல நீர' என மூன்று தொடராகவும் கொண்டு இக்குறளுக்குப் பொருளுரைப்பர். இருதொடராக உள்ள உரை இயல்பானது. இருவகை விளக்கங்களும் கடைசியில் சொல்ல வருவது மனமாசின்மையே அறம் என்பதுதான்.
ஆகுல என்பதற்கு ஆரவாரம், துக்கம் என்று கொண்ட பொருள்கள் பழம்நூல்களில் பயின்று வந்தன. நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலங் கடுப்பக், கௌவை யாகின்றது ஐயநின் நட்பே (நற்றிணை 354 9:11 பொருள்: நீண்ட வழியிலே செலுத்தும் பண்டிகள் நிரையாகச் செறிந்து செல்லுமாறு உரப்பி யோட்டுகின்ற உப்புவாணிகர் அளத்து வெளியிலே போகும் பேரொலிபோல உன்னுடனான நட்பு பழிச்சொல்லுக்கிடமாகின்றது) என்ற சங்கச் செய்யுளில் உப்புவணிகர் எழுப்பும் பேரொலி 'ஆகுலம்' எனக் குறிக்கப்பெற்றது.
ஆகு+உலம்-ஆகுலம்; ஆகின்ற ஒலி. உலம் உலம்பு என்பதன் கடைக்குறை; உலம்புதல் பகட்டுதல்; அலப்புதல். 'நான் அறம் செய்தேன்' என ஒலிபரப்புதலும், பரப்புமாறு செய்தலும் என்பர் சி அரசிறைவன் (திருக்குறள் தமிழ் மரபுரை)

ஆகுல நீர பிற என்பதில் உள்ள பிற என்பதற்கு மனமாசுடன் செய்யப்படும் வினைகள் எனக்கொண்டு அவை அறம் ஆகா என்று பொருள் உரைத்தனர். இவர்கள் கருத்துப்படி மனமாசுடன் செய்யப்படும் அறவினை என்பது ஆரவாரத்திற்காக அதாவது ஓர் அறவாணர் என்று தன்னை உலகுக்கு உரக்கச் சொல்லிக் கொள்வதற்காகச் செய்யப்படுவது. இப்படிப்பட்ட அறவினை உண்மையான அறநோக்கத்தோடு செய்யப்படுபவதாக இல்லாமல் இருக்கலாம்; இதனால் அறப்பயன் அறம் செய்பவனுக்குச் சென்று சேராமல் இருக்கலாம். ஆனால் அந்த அறத்தின் பயன் செய்யப்படுபவனுக்குச் சென்று சேருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எந்த நல்வினயும் அறம்தான். எனவே ஆரவாரத் தன்மை கொண்டதானலும் அதுவும் அறச்செயல்தான். ஆரவாரத்தன்மையுடையன என்றுதான் குறளில் சொல்லப்படுகிறதே அல்லாமல் அவை அறச்செயல்கள் ஆகா என்று கூறப்படவில்லை என்பது எண்ணத்தக்கது. ஆயினும் மனத்தில் மாசின்றி செய்த அறமே மேன்மையானது என்பது தெளிவு.
பொருள்வழி அறம் செய்ய வாய்ப்பும் வளனும் இல்லாதவர்களுக்காகவும் இக்குறள் சொல்லப்பட்டதாகவும் கூறுவர். ஒருவன் மற்ற அறங்களைச் செய்யமுடியாவிட்டாலும் மனத்தில் மாசு இல்லாதவனாக விளங்கினால் அதுவே அவன் அறம் செய்தல் போன்றதுதான். இது ஒரு மிகச் சிறந்த விளக்கமாகும்.

இப்பாடலின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களிலும் சேர்த்து ஏழே ஏழு எழுத்துக்கள் அமைந்துள்ள சிறப்பு எண்ணி இன்புறத்தக்கது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் ஆகுமா?

மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்றது உள்ளத்தில் அழுக்கு அல்லது குற்றம் இல்லாதிருத்தல் என்று பொருள் படும்.
அறத்திற்கு மாசின்மையாகிய பண்பு மட்டும் போதாது, செயலும் வேண்டும் என்று வ உ சிதம்பரம் கருத்துரைத்தார். இவர் 'மனமாசின்மை ஓர் ஒழுக்கமே அன்றி அறமாகாது; அறம் என்பது ஓருயிர்க்கு நன்மை பயக்கும் செயல்' என்று கூறி வள்ளுவர் 'செயல்', 'செய்க', 'ஆற்றின்' 'செயற்பாலதோரும்' என்று சொன்னதால் அறம் ஒரு செயலையே குறிக்கும் என்ற கருத்தை முன்வைத்து 'மனமாசின்மையே அறன் எனின் பொருளைக் கொடாத மனம் கொண்டோர் இதனை மேற்கோளாகக் கொண்டு அறஞ்செய்யாமலே ஒதுங்குவர். இங்ஙனம் நல்லன செய்யாமைக்கு எடுத்துக்காட்டாகும் ஒருமன நிலையை ஆசிரியர் கூறார்' என்றும் 'இது பாடப்பிழையாக இருக்கும்' என்றும் கூறினார்.
ஆனால் அறம் என்பது செயலாலும் சொல்லாலும் எண்ணத்தின் மூலமும் அமைய முடியும். எண்ணம், சொல், செயல் - இவை மூன்றும் தொடர்பு பெற்றுக் கடனாற்றும் பண்புடையன. இவற்றுள் எண்ணமானது குற்றம் இல்லாது இருந்தால் அதற்கு மாறாகச் சொல்லோ, செயலோ தோன்றுவதற்கு இடம் இல்லை; இம்மூன்றனுள்ளும் செயலுக்கும் சொல்லுக்கும் எண்ணமே அடிப்படை. மனத்தூய்மைதான் உண்மையான அகத்தூண்டுதலாகும் என்பதால் வள்ளுவர் எப்போதும் அதை வலியுறுத்துவார். எனவேதான், அறம் மனத்திலேயே அமைதல் வேண்டும் என்கிறார் அவர். எண்ணத்தின் தூய்மையே முதன்மையானது. ஒருவன் மற்ற அறங்களைச் செய்யமுடியாவிட்டாலும் மனத்தில் அழுக்கு இல்லாதவனாக விளங்கினால் அது ஓர் ஒழுக்கம் மட்டுமல்ல; அதுவே சிறந்த அறமுமாம் என்பது மிகமிக உயர்வான கருத்து.

மனத்தின்கண் குற்றமிலனாதலே எல்லா அறம்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையன என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

அறத்திற்கு அரிய வரையறை கூறும் அறன் வலியுறுத்தல் பாடல்.

பொழிப்பு

உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே எல்லா அறமுமாகும்; மற்றவை ஆர்ப்பாட்டத் தன்மையுடையவை.