இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0033ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:33)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க.
இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும் செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

பரிமேலழகர் உரை: ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
(இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: யாவருந் தத்தமக்கு இயலும் அளவாக இயலும் நெறியிலே, அறச்செய்கையைக் கைவிடாமல் செய்யத்தகும் இடங்களிலெல்லாஞ் செய்க. (உடம்பின் நிலைக்கும் பொருளினளவிற்குந் தக்கபடி செய்தலே இயலும்வகை செய்தலென்பது.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாய் எல்லாம் அறவினை செயல்.

பதவுரை: ஒல்லும்-இயலும்; வகையான்-திறத்தால், வழிகளில்; அறவினை-அறச்செயல்; ஓவாதே-ஒழியாமல், இடைவிடாமலே; செல்லும்-இயலும், செய்யத்தகும், எய்தும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; செயல்-செய்க.


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே; [தமக்கியலுந் திறத்தானே- தம்மால் முடிந்தவரை]
மணக்குடவர் குறிப்புரை: இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும் செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது
பரிதி: தன்னால் இயன்ற மனவாதிகளால் தருமத்தை; [மனவாதிகளால்-மனம் முதலியவற்றால்]
காலிங்கர்: தனக்கியலும் கூறுபாட்டால் அறமாகிய வினையினை ஒழியாதே;
பரிமேலழகர்: தத்தமக்கு இயலுந்திறத்தான் அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே;
பரிமேலழகர் குறிப்புரை: இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல்.

'இயலும் திறத்தால் அறவினையை ஒழியாதே' என்று இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயன்ற அளவு இடைவிடாது', 'தமக்கு இயலும் வகையில் அறச்செயல்களை இடையீடு இல்லாமல்', 'முடிந்தவரையிலும் தர்ம காரியங்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம்', 'யாவருந் தத்தமக்கு இயலும் அளவாக இயலும் நெறியிலே, அறச்செய்கையைக் கைவிடாமல் (உடம்பின் நிலைக்கும் பொருளினளவிற்குந் தக்கபடி செய்தலே இயலும்வகை செய்தலென்பது.)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இயன்ற வழி வகைகளில் அறச்செயல்களை இடைவிடாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்லும்வாய் எல்லாம் செயல்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யலாமிடமெல்லாஞ் செய்க.
மணக்குடவர் குறிப்புரை: நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.
பரிதி: செய்க என்றவாறு.
காலிங்கர்: சென்று தலைப்படுத்தற்குரிய இடம் எங்கும் செய்க.
பரிமேலழகர்: அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது. [நற்சிந்தை- நல்லனவற்றை மனத்தால் எண்ணுதல்]

'செய்யலாம் இடங்களிலெல்லாம் செய்க' என்ற பொருளில் இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தை ஏற்கும் இடமெல்லாம் செய்க', 'செய்யும் இடமெல்லாம் செய்க', 'மறக்காமல் செய்ய வேண்டும்', 'செய்யத்தகும் இடங்களிலெல்லாஞ் செய்க' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஏற்கும் இடங்களிலெல்லாஞ் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இயன்ற வழி வகைகளில் அறச்செயல்களை இடைவிடாமல் செல்லும்வாய் எல்லாம் செய்க என்பது பாடலின் பொருள்.
'செல்லும்வாய்' குறிப்பது என்ன?

அறம்செய்யும் நோக்கத்திற்கு நெகிழ்ச்சியான வழிமுறைகள்.

முடிந்த வகைகளில் எல்லாம், சமயம் நேர்ந்தபோதெல்லாம் அறச் செயல்களை இடைவிடாது தொடர்ந்து செய்து வர வேண்டும்.
இயன்ற வழிகளில் செய்க, ஓயாது செய்க, செய்யவாய்ப்புள்ள இடங்களிலேல்லாம் அறம் செய்க என அறிவுறுத்தப்படுகிறது. ஒருவனுடைய பொருளுக்கும் வலிமைக்கும் எவ்வளவு முடியுமோ அந்த அளவில் அவனை அறப்பணி மேற்கொள்ளச் சொல்கிறது குறள்.
அறம் என்பது எத்தனை முறை செய்யப்பட்டது என்ற எண்ணிக்கையப் பொறுத்தது அல்ல; எவ்வளவு பெரிய அளவில் அது செய்யப்பட்டது என்ற கணக்கைப் பொறுத்ததும் அல்ல. அறச்செயல்கள் செய்தற்குரிய வாயில்கள் எண்ணிக்கையில் அடங்கா. இதுதான் அறம் என்று பட்டியலிடவும் இயலாது. இயன்ற அளவில் அறம் செய்தல் வேண்டும்.
மக்களெல்லாரும் ஒரே வாய்ப்புடையவராக இல்லை. எல்லாரிடத்திலும் ஒரே வித அறவினையை எதிர்பார்க்க முடியாது. அறவினையைச் சிலர் மனத்தளவிலும் சிலர் சொல்லளவிலும் சிலர் செயலிலும் நிகழ்த்தும் வாய்ப்புடையவராயிருப்பர். அவரவர் தத்தம் நிலைக்கேற்ற அளவில் அறவினை நிகழ்த்தலாம். மிகச்சிறிய பணிகள் கூட தகுதியான பிறர்க்கு நன்மை பயக்கும் என்றால் அதுவும் அறம் என்று கருதப்படும்.

மாந்தர் பொருளை விரும்பிச் சேர்ப்பது போல, அறத்தை விழைந்து செய்வது இல்லை. தம்மால் அறம் செய்ய இயலாது என்று வாளா இருப்பவர்களும் உண்டு. இவர்கள் போன்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் அறஞ்செய்யும் வழிகள் கூறப்பட்டன.
செல்வம் படைத்தோர் இல்லார்க்கு உணவு, உடை வழங்கி அறவினை செய்யலாம். அறவினைகளைச் செய்வதற்குப் செல்வம் தேவையில்லை; நல்ல மனமே தேவை. எல்லோரிடமும் அன்புகாட்ட முடியும். ஆதரவற்றோர் இல்லம், முதியோர் விடுதி, உடல் ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் காப்பகம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ளோரிடம் அன்பு வார்த்தைகள் பேசலாம்; மருத்துவ முகாம்களுக்குச் சென்று தொண்டாற்றலாம். எளியாரை வலியார்‌ வருத்துவதைக் காணும்போது எளியார்க்குத்‌ துணை செய்யலாம்.‌ குற்றம் உடையார் மீது பகை காட்டாமல் திருத்தம் காண முற்படலாம். இவை யாவும் அறச்செயல்களே.
சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல், வாழ்வியலுக்குத் துணையாய் அமையும் நிலம், நீர், மரம், விலங்கு முதலியனவற்றை முறையாகப் பாதுகாத்தல், தெருக்களில் கிடக்கும் தடைகளை ஒதுக்கிப் போடுவது, பொதுக்குழாயில் வீணாகச் செல்லும் நீரை அடைத்து நிறுத்துவதும் அறம்சார்ந்த செயல்கள்தாம்.
இவ்வாறாக நல்லெண்ணம் கொண்டு எவ்வகையான செயல்கள் மூலமும் அறம் புரியலாம்.

நற்சிந்தை, நற்சொல், நற்செயல் இவற்றின் வழி யாராலும், எப்பொழுதும், எல்லா இடங்களிலும் அறப்பணி ஆற்றமுடியும். இயன்ற அறங்களைச் செய்தால் எல்லாருமே அறவாழ்வை மேற்கொண்டோர் ஆகிவிடலாம் என்பது செய்தி.

'செல்லும்வாய்' குறிப்பது என்ன?

செல்லும் என்பதற்கு செய்யும், தலைப்படுதற்கு உரிய, எய்தும் எனப் பொருள் கூறுவர். இங்கு செய்யும் அல்லது செய்யக்கூடிய என்ற பொருள் பொருத்தம். வாய் என்ற சொல்லுக்கு வழி, வாய்ப்பு அல்லது இடம் என்பது பொருள். செல்லும் வாய் என்பது செய்யும் வாய்ப்பு என்ற பொருள் தருகிறது. 'ஒல்லும் வாய்' என்ற அடைசேரும்போது வாய்ப்புக்கிடைத்தபோது என்ற சிறந்த பொருள் கிடைக்கிறது. ஏற்கும் இடம் என்றும் பொருள் கூறுவர்.
சிறுசிறு செயல்கள் வழியும் அறவினைக்கு வாய்ப்பு உண்டு. உடல் வலிமையும் பொருள் வளமும் எவ்வளவு இடம் தருகிறதோ அவ்வவ்வகையில் அவ்வவ்வளவும் வாய்ப்புகள் விரியும்.

செல்லும்வாய் என்ற தொடர் செய்வதற்கு இடமாகிய வாய்ப்புக்கள் என்ற பொருள் தரும்.

இயன்ற வழி வகைகளில் அறச்செயல்களை இடைவிடாமல் ஏற்கும் இடமெல்லாம் செய்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு ஆற்றலுக்கு ஏற்ப அறம் செய்க என்ற அறன் வலியுறுத்தல்.
பொழிப்பு

இயன்ற அளவு அறச்செயல்களை இடைவிடாது, செய்யத்தகும் இடமெல்லாம் செய்க.