இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0040செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:40)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே.
மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை: ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே.
('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவனுக்குச் செய்யத் தக்கது அறச் செயலே. தள்ளத்தக்கது பழிச்செயலே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு செயல் பாலது ஓரும் அறனே; உயல் பாலது ஓரும் பழி.

பதவுரை: செயல்-செய்யல், செய்தல்; பாலது-பான்மையது, தன்மையுடையது, தக்கது; ஓரும்-ஆராய்ந்துணரும், குறிக்கொண்டு கருதும்; அறனே-நற்செயலே, அறச்செயல்களே; ஒருவற்கு-ஒவ்வொருவர்க்கு(ம்); உயல்-தப்புதல், ஒழிதல், நீக்குதல், விடல்; பாலது-தன்மையுடையது; ஓரும்-ஆராய்ந்துணரும்; பழி-தீவினை, பழிக்கத்தக்க செயல்.


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே;
பரிதி: மனம் வாக்குக் காயங்களாலே செய்வதெல்லாந் தருமமே செய்க;
காலிங்கர்: ஈண்டுக் குறிக்கொண்டு செய்யத்தகுவதாகப் பெரியோர் கருதுகின்றது அறமான தொன்றுமே; [குறிக்கொண்டு-இலக்குவைத்து]
பரிமேலழகர்: ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே;

'ஒருவன் செய்யத்தக்கது அறமே' என்று இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் செய்யவேண்டுவது அறமே', 'ஒருவனுக்குச் செய்யத் தக்கது அறச் செயலே', 'ஒவ்வொருவரும் ஆராய்ந்து செய்யவேண்டிய காரியம் அறமே', 'செய்ய வேண்டியது அறமே' என்றபடி உரை பகன்றனர்.

ஒருவன் கருத்துடன் செய்ய வேண்டியது அறமே என்பது இப்பகுதியின் பொருள்.

உயற்பால தோரும் பழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பும் பகுதியது பழியே.
மணக்குடவர் கருத்துரை: மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
பரிதி: விடுவதாகின் பாவத்தை விடுவது என்றவாறு.
காலிங்கர்: தமக்கு நன்மையறிவார் ஒருவர்க்குப் பிறவித்துயரினின்றும் உய்யலாம்; அதனால் மிகவும் ஆராய்ந்து கொண்மின், பாவமாகிய பழியினை என்றவாறு.
பரிமேலழகர்: ஒழிதற்பான்மையது தீவினையே.
பரிமேலழகர் கருத்துரை: 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.

'நீக்கத்தக்கது பழியே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் விடவேண்டியது பழியே', 'தள்ளத்தக்கது பழிச்செயலே', 'செய்துவிடாமல் ஆராய்ந்து விலக்க வேண்டியது பழிவரக்கூடிய காரியங்களே', 'நீக்க வேண்டியது பழியே' என்றவாறு உரை தந்தனர்.

செய்துவிடாமல் ஆராய்ந்து நீக்க வேண்டியது பழி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவன் கருத்துடன் செய்ய வேண்டியது அறமே; செய்துவிடாமல் ஆராய்ந்து நீக்க வேண்டியது பழி என்பது பாடலின் பொருள்.
'ஓரும்' என்ற சொல் குறிப்பது என்ன?

கடமையாகக் கொண்டு செய்யவேண்டியவை அறச்செயல்கள்; தப்பிக்க வேண்டியவைதீச்செயல்கள்.

எண்ணிச் செய்யத்தக்கவை அறமே, ஆராய்ந்து விலக்கத்தக்கன பழி சேர்க்கும் செயல்கள்.
செயற்பால தோரும் என்பதை செயற்பாலது+ஓரும் எனவும் உயற்பால தோரும் என்பதை உய்யல்பாலது+ஓரும் எனவும் விரித்தால் பொருள் தெளிவாகும். செயற்பாலது என்றதற்கு செய்யத்தக்கது என்பது பொருள். உய்யற்பாலது என்றது -செய்யாமல் (தப்பிக்)காத்துக் கொள்ள வேண்டியது அல்லது நீக்கத்தக்கது எனப்பொருள்படும். ஓரும் என்ற சொல் ஆராய்ந்துணரும் என்ற பொருள் தருவது.
அறன் என்ற சொல் பொதுவான நிலையில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. செய்யத்தக்கவை அறன் என்றதனால் அறன் இங்கு வினை அல்லது செயற்பாடு என்பதைக் குறிப்பதாக உள்ளது. அறச்செயலைத் தொடங்கும்முன் அதனைக் குறிக்கொண்டு கருதி உணர்ந்து அதன்கண் ஈடுபடல் வேண்டும் என்று பாடலின் முதல் பகுதி கூறுகிறது. ஒருவன் செய்யத்தகுவன யாவும் அறநெறிப்பட்ட செயல்களாகவே இருக்கவேண்டும். செயற்பாலது அறம் ஒன்றே என்பதை வலியுறுத்த 'அறனே' என்னும் ஏகார ஒலியமைப்புடன் மொழிநடை அமைக்கப்பட்டது.
செய்யத்தக்கது அறமெனில் செய்யத்தகாதது எது என்ற வினா எழுகிறது; அது பழி என்கிறார் வள்ளுவர். அது ஒருவன் கைவிடத் தகுவன யாவும் பழியோடுபட்ட தீச்செயல்களே என்பது பாடலின் பிற்பகுதியால் தெரிவிக்கப்படுகிறது. பழியாவது அறமல்லாதது; உயர்ந்தோரால் பழிக்கப்படுவது. அறன் என்பதன் பகைமுரணாகப் 'பழி'யையே குறள் கூறுகிறது என்பது இக்குறளால் அறியப்படுகிறது. அதாவது அறத்துக்கு எதிர்ச்சொல் பழி.
ஒருவன் ஆராய்ந்து பழிச் செயல்களிலிருந்து அவற்றைச் செய்யாது காத்துக் கொண்டு, அறச் செயல்களில் குறிக்கொண்டு ஈடுபட வேண்டும் என்பது கருத்து. பழிச்செயல்களைச் செய்யாமல் தப்பித்துக் கொள்ளுவதும் வலியுறுத்தப் பெறுகிறது. 'உய்யல்' என்னும் சொல் பழி செய்யாது நிற்றல், பழி சூழநேரின் அதனை விடுத்து நீங்கல் என்னும் இரண்டு பொருளையும் நல்குவது (திரு வி க). அறனே என்று முதல் பகுதியில் சொல்லப்பட்டதால் பழியுடன் ஏகாரத்தை கூட்டி நீக்கத்தக்கன பழியே என்றும் விளக்குவர். செய்யத்தக்கன அறவினைகளே; ஆராய்ந்து உணர்ந்து செய்யாமல் காத்துக்கொள்ளவேண்டியது பழியே.

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழு மில (39 பொருள்: அறவழியில் பொருந்தி வருவதே இன்பம்; பிறவழியால் வருவன வேறாயுள்ளவை; புகழுக்குரியனவும் இல்லை) என இதற்கு முந்தைய குறள் கூறியது. அறத்தால் வருவதே உண்மை இன்பமாகும்; மற்றவை எல்லாம் போலி இன்பமாகும்; புகழும் இல்லாதவையாகும். அதனாலொருவன் வாழ்நாளில் செய்யத்த தக்கது அறமே; செய்யாமல் ஒடுக்கத்தக்கது பழியே: எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும் ஒரு செயல் பிறருக்கு நன்மையாய் அமைந்தால் அது நற்செயல் அல்லது அறம்; தீமை தருமாயின் அது அறச்செயல் அன்று. மாந்தர் செய்யவேண்டியது அறம் சார்ந்த செயல்களே; செய்யாமல் இருக்க வேண்டியது பழி உண்டாக்கும் பாவச்செயல்கள் அதாவது தீச்செயல்கள்.
அறமல்லாத வழியில் சென்றால் செல்வமும் இன்பமும் எளிதில் கிடைக்கும் என்பதால் அறமற்ற நெறியில் சென்றால் என்ன என்னும் உளத்தடுமாற்றம் ஒருவற்கு ஏற்படுவது இயல்பு. வள்ளுவர் அறநெறியையே நேர்முகமாகவும் எதிர்முகமாகவும் வற்புறுத்துவதன் காரணம் இத்தடுமாற்றத்தைப் போக்குவதற்காகவே.

'ஓரும்' என்ற சொல் குறிப்பது என்ன?

ஓரும் என்பதனை மணக்குடவர், பரிமேலழகர் ஆகியோரும் இன்றைய உரையாளர்களில் பெரும்பான்மையோரும் (பொருள் எதுவும் தராத) அசைச் சொல்லாகக் கொண்டனர். மற்ற உரையாசிரியர்கள் 'குறிக்கொண்டு கருதி' என்றும் 'ஓர்ந்து காணும்' அதாவது 'ஆராய்ந்து அறியும்' என்றும் பொருள் தரும் சொல்லாகக் கொள்வர். 'ஓரும்' என்பதை அசைநிலை என்று கொள்வதைவிட, காலிங்கர் உரைப்படி, முதலில் உள்ள 'ஓரும்' என்பதற்குக் குறிக்கொண்டு கருதி என்றும் பின்னுள்ள 'ஓரும்' என்பதற்கு 'ஆராய்ந்து உணரும்' என்றும் கொள்வது சிறக்கும். இதன்படி செயற்பாலது ஓரும் அறனே என்பது குறிக்கொண்டு கருதிச் செயத்தக்கது அறமே என்ற பொருள் தரும். அதுபோலவே உயற்பாலது ஓரும் பழி என்பதற்கு ஒழிதற்பாலன ஆராய்ந்து அறிந்த பழியுண்டாக்கும் செயல்கள் என்பது பொருள்.
அறன் இன்னதென்றும், பழி இன்னதென்றும் ஓராது நடப்பது அறிவுடைமையாகாது. இரண்டையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து நடப்பது அறிவுடைமையாகும்.
ஆராய்ந்து உணர்ந்து செயற்பாலது அறம்; ஆராய்ந்து உணர்ந்து உயற்பாலது பழி. இரண்டுக்கும் ஆராய்ந்துணரும் பான்மை வேண்டும் என்பார் 'ஓரும்' 'ஓரும்' என்றார். 'ஓரும்' என்ற ஒரே அசைநிலையை இரண்டு முறை குறட்பா ஒன்றில் பெய்ய ஆசிரியர் உளங்கொள்வாரோ என்பது சிந்திக்கத்தக்கது என்பார் திரு வி க.

ஒருவன் குறிக்கொண்டு செய்யத்தக்கது அறமே; ஆராய்ந்துணர்ந்து தள்ளத்தக்கது பழி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழி நீக்கி செயல் புரிக என்னும் அறன் வலியுறுத்தல்.

பொழிப்பு

ஒருவனுக்குக் கருத்துடன் செய்யத் தக்கது அறமே; ஆராய்ந்து தள்ளத்தக்கது பழி.