இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1061 குறள் திறன்-1062 குறள் திறன்-1063 குறள் திறன்-1064 குறள் திறன்-1065
குறள் திறன்-1066 குறள் திறன்-1067 குறள் திறன்-1068 குறள் திறன்-1069 குறள் திறன்-1070

மானத்திற்குக்கேடு தரும் இரத்தலுக்கு அஞ்சுதல். வறுமையைப்போக்க வழியறியாதபோது, இரத்தலையும் மானக்கேடின்றிக் கைக்கொள்க என்றவர், இங்கு எவ்வாற்றானும் இரவாமல், முயற்சிசெய்து உழைத்தே வாழுமாறு வற்புறுத்துகிறார். இரவு அதிகாரம் மனிதம் நேயம் பற்றியது. இது தன் முயற்சித் தூண்டுதல். தன் முயற்சிக்கு அப்பாற்பட்ட சூழ்நிலை இரவு; எச்சூழலிலும் தன் முயற்சிக்கே முதலிடம் தருக என்பது இது.
- தமிழண்ணல்

தமது மானம்கெட வரும் இரவிற்கு அஞ்சுதல் இரவச்சம் எனப்படுகிறது. இரவச்சமாவது இரத்தலுக்குப்‌ பயப்படவேண்டும்‌ என்பதாம்‌. இரப்பு என்பது முன்னதிகாரத்தில் கூறப்பட்ட குற்றங்கள் எல்லாம் உடைத்து ஆதலான், இது பெரிதும் அஞ்சத்தகுவது ஆகிறது. அவ்வதிகாரத்தில்‌ வறுமைப்பட்டார்‌ ஈகைப்‌ பண்புடையாளரிடம்‌ இரந்து பெறலாம்‌ என்று பொதுப்படக்‌ கூறப்பட்டது‌. ஆனால் 'கரவாது உவந்து ஈயும் கண்போன்றவரிடம்கூட இரவாமை நன்று' என்று இரவாமையின்‌ சீர்மையை இப்பாடற்தொகுதி எடுத்தோதுகின்றது. இரவாமையே உயர்வு தரும், உழைத்து வாழ்வதே வாழ்வு என்பதை விளக்கும் அதிகாரம் இது.

இரவச்சம்

பிறரிடம் சென்று ஒன்றை இரந்து கேட்க அஞ்சுதல். மானத்தினை அழிக்கும்‌ இரவுக்கு அஞ்சவேண்டும் என்பதனைக் கூறுவது 'இரவச்சம்'‌. 'தீவினை அச்சம்' என்பது போல 'இரவுஅச்சம்‌' அமைக்கப்‌பட்டுள்ளது‌,
உலகில் சிலவேளைகளில் சிலர்க்கு பொருள் தேட முடியாத நிலைமை உண்டாகும். ஊழின் பெருவலியுள் சிக்கிக்கொண்டோர், வறுமையால் வருகின்ற பெருங்கேட்டிலிருந்து மீட்சிபெறும்வகையான் இரவை மேற்கொள்வர், ஆதரவற்ற பிணியுடையார், உடல் ஊனமுற்றோர் போன்றோர்க்கு இரந்து வாழ்தல் ஒன்றுதான் உயிர்வாழ்தற்கு வழி. அறநெறி நின்று ஒப்புரவு செய்தலையே கடனாகக் கொண்டிருப்பாரும் வறுமையுறுதல் இயற்கை. இரப்பவர்க்கு உதவுவது மனிதப் பண்பாட்டின் மேன்மையைக் காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பாகும்; இரப்போர், ஈவோர் இருப்பதாலேயே உலகம் ஈரத்துடனும் உயிர்ப்புடனும் இயங்குகிறது என்று முன் அதிகாரமான இரவில் சொல்லப்பட்டது. இரத்தல் என்பது வறுமையுற்ற காலத்துக் கொள்ளத்தகும் காப்புவழியாககக் கொள்ளவேண்டுமேயன்றி, அது நேரிய பொது நெறியல்ல என்பதற்காக அவ்வதிகாரம் செய்யப்பட்டது; சோம்பித் திரிந்து கொண்டு தம்வயிறு வளர்ப்பதற்கென இரப்போர்க்கும், இரத்தலையும் ஒரு தொழிலாகக் மேற்கொண்டு இருப்போர்க்கும் இரத்தல் அறனன்று எனக் கூறித் திருத்துவதற்கு இரவச்சம் அதிகாரம் செய்யப்பட்டது. இரவு இரவச்சம் என்ற அதிகாரங்கள் தம்முள் முரணியன அல்ல. வாழ்க்கை நிலை வேறுபாடு நோக்கிச் சொல்லிய வேறுவேறு அதிகாரங்களாகக் கொள்ளவேண்டும். வள்ளுவர் கனவுகள் காணும் கவிஞர் அல்லர். இலக்கியல் சார்ந்த ஒரு கற்பனை யுலகில் வாழ்ந்தவருமல்லர். உலக நடைமுறை அறிந்தவராதலால் இந்நிகழுலகில் நின்றே அறத்தைக் கூறினார். செல்வமும் வறுமையும் விரவிய நிலவுலகில் இரப்போர்க்கு அறத்தைக் கற்பிக்கும் வேளையில் கரப்போரின் இழிவையும் எடுத்துரைக்கிறார்.

எல்லா வகை இரவும் மானம் கெடச்செய்வனே. மானம்தீரா இரவு என்பது அரியது. ஒருமனிதன் தன்போன்ற மற்றொரு மனிதனிடம் இரந்து பசியொழிப்பது இழிவானது; உழைத்து உயிர் வாழ்தலே இயல்பானது. எனவே இரவு அஞ்சப்படவேண்டியது.
இரவச்சம் அதிகாரத்தில் கரவு பற்றிய கருத்தாடல்களே மிகையாக உள்ளன. தம்மிடம் உள்ளதை மறைத்து வைத்துக்கொண்டு இரந்து நிற்பரிடம் 'என்னிடம் ஒன்றும் இல்லை' என்று ஒளிப்போர் மாட்டுச் செல்லவே செல்லாதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன் என்கிறார் வள்ளுவர்.

மறைக்காமல் மகிழ்வுடன் கொடுப்பார் என்று ஒருவரிடம் இரத்தலைவிட இரவாமை கோடிமடங்கு நல்லது.
'ஒருவன் இரத்தல் மூலம்தான் உயிர்வாழ வேண்டும் என்று இந்த உலகத்தைப் படைத்த கடவுள் உண்டாக்கியிருந்தால் அக்கடவுளும் இரப்பவன்போல் அலைந்து கெட்டுப் போகட்டும்'.
இரத்தல்வழி வறுமையை ஒழித்து விடலாம் என்று எண்ணுவதினும் கொடுமை உடையது வேறு எதுவுமில்லை.
தனக்கு உலகம் முழுவதுமே கிடைப்பதாக இருந்தாலும் தேவையான நேரத்திலும் இரத்தலை விரும்பாது மறுக்கிற மனநிலை உடையவன் உயர்ந்தவன்.
இன்னொருவரின் உதவியை நாடி உண்பதினும் ஒருவன் தனது உழைப்பில் பெறும் நீர்போன்றகூழ்கூட இனிமையானது.
ஆவிற்கு நீர் என்றுகூட இரவாது வாழ்தலே மேல். பசுவிற்கு நீர் வேண்டும் என்று பிறரிடம் சென்று ஏன் இரக்கிறாய்? எளிதாகவும் விலையின்றியும் இயற்கையில் கிடைக்கும் நீரை நீயே முயன்று தேடி பசுவின் நாவறட்சியைப் போக்கலாமே!
'வேறுவழியே தோன்றவில்லை என்னும் சமயத்தில் இரந்துதான் ஆகவேண்டும் என்றால் தம்மிடம் உள்ளதை மறைப்பவர்களிடம் செல்லாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்!'
வறுமையென்னும் பரந்த நீர்ப்பரப்பைக் கடக்க இரத்தலென்னும் பாதுகாப்பற்ற படகில் பயணித்தால், அது ஒளித்துவைத்தல் என்னும் பாறைதாக்கப் பிளந்துவிடும்.
இரத்தல் காட்சி உள்ளத்தை உருக்குகிறது. மறைத்தலைக் காணுதல் அந்த உடைந்த உள்ளத்தையும் இல்லாமற் செய்துவிடுகிறது.
இரவலர் பிறரிடம் கையேந்தி நிற்கும்போதே இறந்துவிட்டவர் போலாகின்றனர். அந்நிலையில் அவர்களுக்கு உதவாதவர்களின் உயிர் எங்கே ஒளிந்து கொள்ளுமோ?
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

இரவச்சம் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1061ஆம் குறள் தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்தவரிடமும் ஒருபொருளைக் கேளாமை கோடி மடங்கு நல்லது என்கிறது.
  • 1062ஆம் குறள் பிறரிடம் இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் உலகத்தைப் படைத்தவன் மிகக் கெட்டு அலைவானாக என்று சொல்கிறது.
  • 1063ஆம் குறள் வறுமைத் துன்பத்தை இரந்துஇரந்து நீக்குவோம் என்னும் கரடுமுரடான எண்ணத்தைப் போல முரணானது வேறு இல்லை என்கிறது.
  • 1064ஆம் குறள் ஒன்றுமே இல்லாமல் போனபோதும் பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்க உடன்படாத நிறைகுணம் உலகமெல்லாம் நிறைந்த பெருமையை உடைத்து எனச் சொல்கிறது.
  • 1065ஆம் குறள் தெளிந்த நீர்போலும் சமைக்கப்பட்ட கூழேயானாலும் தன் முயற்சி கொடுத்ததை உண்பதுபோல் இனிமைதருவது வேறில்லை எனச் சொல்கிறது.
  • 1066ஆம் குறள் பசுவிற்கு நீர் வேண்டுமென்று பிறரிடம் இரந்து கேட்டாலும், அந்த இரப்புச்சொல் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை என்கிறது.
  • 1067ஆம் குறள் இரவலரை எல்லாம் யான் கேட்டுக் கொள்கிறேன்; இரக்க வேண்டுமானால், உள்ளது மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று என்கிறது.
  • 1068ஆம் குறள் இரத்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு கரத்தல் என்னும் கற்பாறையுடன் தாக்குண்டவுடன் பிளந்துபோகும் எனச் சொல்கிறது.
  • 1069ஆம் குறள் இரத்தலை நினைத்தால் உள்ளம் கசிந்து உருகுகின்றது; இரப்பவர்க்கு இல்லையென்று மறைப்பதை நினைத்தால் உள்ளமே மாய்ந்து அழியும் என்கிறது.
  • 1070ஆம் குறள் இரப்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் உள்ளது மறைப்பார்க்கு எங்குச் சென்று மறைந்திருக்கும்? எனக் கேட்கிறது.

இரவச்சம் அதிகாரச் சிறப்பியல்புகள்

முயற்சியால் பொருளீட்டி வாழும் வாழ்க்கையே பேறுபெற்ற வாழ்க்கை. அவ்வாறல்லாமல் பிறரிடம் கெஞ்சிக் கேட்டுப் பெற்று வாழ்தல் இழிவான வாழ்க்கையாம். மறைக்காது உள்மகிழ்ந்து கொடுப்போரிடத்தில் இரந்தாலும் இழிவுதான். ஆதலால் யார்மாட்டும் இரவாமை, இரந்து பொருள் பெறுதலினும் கோடி நன்றாம் என கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் (1061) என்ற குறள் கூறுகிறது.

ஒருவன் இன்னொருவனிடத்துச் சென்று நின்று கையேந்திக் கெஞ்சும் காட்சி வள்ளுவரை மிகவும் பாதிக்கின்றது. இப்படிப்பட்ட இழிநிலையில் இரவலனைக் கொண்டு ஆழ்த்தும் இறைவனைப் பரந்து கெடுக என்று சாபம் கொடுப்பதுபோலப் பேசுகிறார் வள்ளுவர். இறைவனுடைய படைப்பின் நோக்கம் நமக்குத் தெரியாது. ஆனால் இழிவை உண்டாக்கும் இரப்பதையே தொழிலாகக்கொண்டு வாழவேண்டும் என்ற நோக்கத்தோடு சிலரை இறைவன் படைத்திருந்தால் 'அந்த இறைவன் இரவலரைப் போன்று அலைக்கழிக்கப்பட்டு அழிந்தொழியட்டும்' என்று வெகுண்டு இறைவனையே வள்ளுவர் சபிக்கின்ற முறையில் இக்குறட்பா அமைந்திருக்கிறது. அறச்சீற்றம் காட்டும் அவரது நெருப்பைக் கொட்டும் வரிகள் இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (1062) என்பது.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல் (1065) என்ற பாடல் தன் முயற்சியால கிடைத்த பொருள் கொண்டு சமைக்கப்பட்ட புல்லிய அரிசிச் சோறு தெளிந்த நீர்போன்று இருந்தாலும் அதனினும் இனிமையானது வேறொன்றும் இல்லை என்கிறது. மான உணர்வைத் தூண்டும் இப்பாடலில் முன்னோர் தேடி வைத்த செல்வத்தை வைத்து உண்டு வாழ்பவனையும், பிறர் சொத்தைக் களவாடி வாழ்பவனையும் குறிப்பால் கடிந்துள்ளமை நோக்கத்தகும்.

இரவலனிடமே இரப்பது இழிவு ஆயினும் அருள் நெஞ்சினரான வள்ளுவர் இரப்பவர்களை நோக்கி இரந்து ஒரு செய்தி கூறுகின்றார். பிறர் நன்மைக்காகவும் இரக்கக் கூடாது என்றவர் தாமே இவ்விதம் இரக்கிறார்: இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று (1067). இரப்பவர் மானங் கெடக்கூடாது என்ற நோக்கில் இவ்விதம் கெஞ்சுகிறார்.

வறுமையின் கொடுமையால் இல்லையென்று கூறுபவர்களிடம் சென்று இரந்து நிற்கும் கொடுமையை நினைப்பது வள்ளுவரின் நெஞ்சை நெகிழச் செய்கிறது. வறுமைப்பட்டோர் துய்க்கும் மானக்கேடு கண்டு அவர் உணர்ச்சிவயப்பட்டவராகி விடுகிறார். அதனால் தாம் உணர்ந்ததை குறள்வழி உணர்த்தும் போது அது தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிடுகிறது. வறுமையால் வாடுகின்றவர் கையேந்தும் நிலையைக் காணும்போது அது மிகவும் கொடிய செயல் எனக் கருதுகிறார்; அவருடைய உள்ளம் உருகுகிறது. அதையும்விட மிகக் கொடிய செயலான கரத்தலை எண்ணும் நெஞ்சம் வெடித்துச் சிதறுகிறது. இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் (1069) அதாவது 'இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும்; தம்மிடம் உள்ள பொருளை மறைத்து ஒளிப்பவரின் கொடுமையை நினைத்தால் அந்த உருகிய உள்ளமும் அழிந்தே போய்விடும்' என்று தாம் உணர்ந்தவற்றைக் கற்பனை கலவாச் சொற்களில் உலகோர்க்குச் சொல்கிறார்.
குறள் திறன்-1061 குறள் திறன்-1062 குறள் திறன்-1063 குறள் திறன்-1064 குறள் திறன்-1065
குறள் திறன்-1066 குறள் திறன்-1067 குறள் திறன்-1068 குறள் திறன்-1069 குறள் திறன்-1070