இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1066ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1066)

பொழிப்பு (மு வரதராசன்): பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

மணக்குடவர் உரை: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை.
இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

பரிமேலழகர் உரை: ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பசுவுக்குத் தண்ணீர் என்று கேட்டாலும் கேட்ட நாவிற்கு பெருமை இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்.

பதவுரை: ஆவிற்கு-பசுவிற்கு; நீரென்று-நீர் என்பதாக; இரப்பினும்-கெஞ்சிக் கேட்குங்காலும்; நாவிற்கு-நாக்கிற்கு; இரவின்-கேட்டல்போல, இரத்தல்போல, ஏற்றல் போல; இளிவந்தது-இழிவானது; இல்-இல்லை.


ஆவிற்கு நீரென்று இரப்பினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும்;
பரிப்பெருமாள்: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும்;
பரிதி: பசுவிற்குத் தண்ணீர் தாருங்கோள் என்று கேட்பினும்;
காலிங்கர்: தமக்கும் தம் கிளைக்கும் இரத்தல் இன்றி ஒரு பசுவிற்கு இத்துணை நீர்வேண்டும் என்று பிறர்பால் சென்று இரப்பது தகுமேயும், அன்றே; மற்று, அது சொல்லி இரப்பினும்;
பரிமேலழகர்: தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;

ஒரு பசுவிற்கு இத்துணை நீர்வேண்டும் என்று பிறர்பால் சென்று அது சொல்லி இரப்பினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆ' என்பதாகக் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீரின்றி இறக்கும் நிலையிலுள்ள பசுவிற்கென நீரினைப் பிறரிடம் இரந்து கேட்டாலும்', 'பசு மாட்டிற்குக் குடிப்பாட்டத் தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்டாலும்', 'பசுவிற்குத் தண்ணீர் வேண்டுமென்று இரந்தாலும்', 'பசுவிற்கு நீர் வேண்டுமென்று இரந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பசுவிற்கு நீர் வேண்டுமென்று பிறரிடம் இரந்து கேட்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நாவிற்கு இரவின் இளிவந்தது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.
பரிப்பெருமாள்: நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது. இவை மூன்றினாலும் இரத்தலைத் தவிர வேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: இரப்பது போல் ஈனம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அதுவும் அவ்விரவினுட்படுதலின், குடிமரபாளர் தமது நாவிற்கு இரத்தலின் மேற்பட்ட இளிவரவு உடையது பிறிதொன்று இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. [குடிமரபாளர் - வழிவழியாக நற்குடிப்பிறந்தோர்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின் 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின் 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளி வந்தது இல்' என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது. [எண்மைத்து- எளிமை உடையது; அச்சொல்லளவே- இப்பசுவிற்குத் தண்ணீர்தரல்வேண்டும் என இரக்கும்சொல் மாத்திரமே; அதுதான் - அச்சொல் தான்; முயன்று செய்வதல்லது-முயற்சித்து பொருளை ஈட்டிச் செய்வதல்லாமல்]

'நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்விரத்தல் போல நாக்குக்கு இழிவு தருவது வேறில்லை', 'தானம் கேட்பதைவிடக் குறைவான காரியம் நாக்கிற்கு வேறெதும் இல்லை', 'அந்த இரப்புச்சொல் நாவினுக்கு இழிவைத் தருவதுபோல வேறொன்றுந் தருவதில்லை', 'அந்த இரத்தல் போல நாவிற்கு இழிவைத் தந்தது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்த இரப்புச்சொல் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பசுவிற்கு நீர் வேண்டுமென்று பிறரிடம் இரந்து கேட்டாலும், அந்த இரப்புச்சொல் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'நாவிற்கு இளிவந்தது' குறிப்பது என்ன?

இரத்தல் நாவிற்கு இழிவைத்தரும்.

பசுவிற்கு நீர் வேண்டுமென்று யாரிடம் சென்று கேட்பதாக இருந்தாலும் அவ்விரத்தல்போல நாவினுக்கு இழிவைத் தருவது யாதும் இல்லை.
முந்தைய குறள் (1064) தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், வறுமையாளன் தன் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை என்று கூறியது. இங்கு தம்பொருட்டு மட்டுமல்ல எதற்காகவும் இரப்பதுபோல் இழிவானது வேறு இல்லை எனச் சொல்லப்படுகிறது. பசுவுக்கு, பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத, நீர் வேண்டும் என ஒருவன் இரக்க நேர்ந்தால்கூட அதனால் அவன் நாவுக்கு இழிவு நேரும் என்கிறது இப்பாடல்.

தம் தேவைகளுக்காக ஒருவர் மற்றவரிடம் இரப்பதுதானே இழிவானது; நீர் வேட்கையால் வருந்தும் ஓருயிர்க்கு நன்மை செய்வது அறச்செயல்தானே, அதில் என்ன குற்றம்? நீர், காற்று, வெப்பம் ஆகியன பொருள் கொடுத்துப் பெறவேண்டியன அல்ல; அவை இறைவன் அளித்த பொருள்கள். அவற்றிற்கு விலை எதுவும் கிடையாது. அதாவது அதைக் கொடுப்பவர்க்குப் பொருள் இழப்பு இல்லை. இருப்பினும் பசுவின் மீது இரக்கங்கொண்டு அதற்கு உதவ நீர் கேட்டாலும் அவ்வுதவியை ஏன் இரந்து செய்யவேண்டும்? அது அப்படிக் கேட்பவனது உள்ளச் சிறுமையைத்தானே காட்டுகிறது? பசுவுக்கு நீர் தர வேண்டுமானால் தானே முயன்று அருகிலுள்ள நீர் நிலையைத் தேடித் தண்ணீர் இறைத்துக் கொண்டுவந்து பசுவுக்கு உதவலாமே தவிர பிறரிடம் போய் இரந்து நிற்கக்கூடாது என்பது குறிப்பு, அதனால் பசுவுக்காக நீர் வேண்டும் என்ற உயர்நோக்கத்திற்காகவும் இறைஞ்சிக் கேட்கும் சொல் இரப்பவர் நாவிற்கு இழிவைத்தரும் என்கிறார் வள்ளுவர். எந்தவகை இரப்பாயினும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர் கருத்து.
இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை (முதுமொழிக்காஞ்சி, இல்லைபத்து 9 பொருள்: இரந்து உயிர்வாழ்தலின்மேல் கீழ்மை இல்லை) என முதுமொழிக்காஞ்சிப் பாடல் ஒன்றும் இரத்தலின் இளிவரவு கூறுகிறது.

பொதுநலம் கருதி, ஒப்புரவிற்காக, பொதுமக்களிடம் பொதுக்கொடை கேட்பது இரவாகக் கருதப்படுவதில்லை.

'நாவிற்கு இளிவந்தது' குறிப்பது என்ன?

நோக்கம் நல்லதாய் இருப்பினும் அதனை அடையும் வழிமுறைகளும் தூயனவாய் இருத்தல் வேண்டும் என்று வள்ளுவர் பல இடங்களில் அறிவுறுத்தியுள்ளார். தாயின் பசி நீக்க என்பதற்காகவும் அறத்துக்குப் புறம்பான குற்றச் செயல்களைச் செய்யக்கூடாது என்று ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (வினைத்துய்மை 656 பொருள்: பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக) என்ற குறள் முன்பு கூறியது.
இரப்பதும் சான்றோர் பழிக்கும் செயல்தான். எனவே பசுவுக்குத் நீரென்றாலும் அதை இரந்துபெறுதலைப்போல நாவிற்கு இழிவுதரும் செயல் வேறொன்றும் இல்லை என்கிறார் இங்கு.

தேவநேயப்பாவாணர் 'அஃறிணையுள் ஆவானது அமைதிக்குச் சிறந்தமையாலும் பிறவினத்தினுந் தூய்மையாயிருப்பதனாலும், ஆவைக் காப்பது பேரறம் என்னும் கொள்கையெழுந்தது. ஆயினும், அதன் பொருட்டும் இரப்பது இழிவென்பது தோன்ற ’ஆவிற்கு’ என்றும். இரக்கும் பொருள் விலைகொடுத்துப் பெற வேண்டாத எளிமையதாகலின் ’நீர்’ என்றும் இரக்குஞ்செயல் அதனைச் செய்யும் உறுப்பிற்கும் இழிவென்பதுபட ’நாவிற்கு’ என்றும், இழிவுகட்குள் தலைமையான தாதலின் ’இளிவந்ததில்’ என்றும், கூறினார். இதனால் அறத்தின் பொருட்டும் இரத்தல் இழிவென்பது கூறப்பட்டது' என இக்குறட்கருத்தை விளக்குவார்.

'நாவிற்கு இளிவந்தது' என்றது நாவினுக்கு இரக்கும்சொல்போல இழிவுதருவது பிறிதொன்றில்லை என்ற பொருள் தருவது.

பசுவிற்கு நீர் வேண்டுமென்று பிறரிடம் இரந்து கேட்டாலும், அந்த இரப்புச்சொல்போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எச்செயலுக்காக வேண்டியும் இரவச்சம் கொள்க.

பொழிப்பு

பசுவிற்கு நீர் வேண்டுமென்று இரந்து கேட்டாலும், அவ்விரப்புச்சொல் போல நாவினுக்கு இழிவைத் தருவது வேறொன்றும் இல்லை.