இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1061



கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1061)

பொழிப்பு (மு வரதராசன்): உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது.

மணக்குடவர் உரை: ..............................................

பரிமேலழகர் உரை: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை - தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும், இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; கோடி உறும் - இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று.
(நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.)

தமிழண்ணல் உரை: தம்மிடமுள்ளதை மறைக்காமல் மனம் மகிழ்ந்து கொடுக்கும் பண்புடைய, கண்போலச் சிறந்தவர்களிடத்திலும் சென்று நின்று ஒருவன் இரவாமல் தான் அடைந்த வறுமையுடன் போராடுதல், அங்ஙனம் இரந்து வாழ்வதைவிடக் கோடிமடங்கு மேன்மையுடையதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.

பதவுரை: கரவாது-மறைக்காமல்; உவந்து-மகிழ்ந்து; ஈயும்-கொடுக்கும்; கண்அன்னார்-கண்போலச் சிறந்தார்; கண்ணும்-இடத்தும்; இரவாமை-இரவாதிருத்தல்; கோடி-கோடிமடங்கு; உறும்-மிகுதியுடைத்து, பெறும்.


கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: இல்லை என்னாது மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல்வார்மாட்டும் ஒரு பொருளை இரந்து செல்லாமை;
பரிதி: ஈனக்குணம் பண்ணாமல் கொடுக்கிற தாதா வல்லாதாரிடத்திலே கேளாதிருப்பது; [ஈனக்குணம்-இழிந்த குணம்; தாதா-கொடையாளி]
காலிங்கர்: தாம் கருதிச் சென்றது ஒன்றைக் கரத்தல் இல்லாத செறிந்த அன்பினை உடையராகிய கண்போலும் கேளிர் மாட்டும் ஒன்று இரத்தல் என்பது பெரிதும் இளிவரவு அன்றே;
காலிங்கர் குறிப்புரை: அல்லது 'காவாதுவந்தீயும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
பரிமேலழகர்: தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; [கரவாது-ஒளிக்காமல்; உள்மகிழ்ந்து- மனம் உவந்து; வறுமை கூர்தல் - வறுமை அடைந்திருத்தல்]
நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது.

'இல்லை என்னாது மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல்வார்மாட்டும் ஒரு பொருளை இரந்து செல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் அன்பரிடத்தும் ஒன்றுபோய்க் கேளாமை', 'தம்மிடம் உள்ளதை மறைக்காமல் தாமே முன்வந்து மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடத்தும் ஒன்றை வேண்டி இரவாதிருத்தல்', 'இல்லையென்னாமல் கொடுக்கக்கூடிய கண் போன்ற (மிகச் சிறந்த)வர்களிடத்திலும் போய், பிச்சை கேட்காமலிருப்பது', 'தம்மிடம் உள்ளதை ஒளியாது மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்த நண்பரிடமும் இரவாமலிருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடமும் ஒருபொருளைக் கேளாமை என்பது இப்பகுதியின் பொருள்.

கோடி உறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி உடைத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது, ஈவார் மாட்டும் இரக்கல் ஆகாது என்றது.
பரிதி: கோடி தனம் பெறும் என்றவாறு.
காலிங்கர்: அதனால் அது செய்யாமை தானே கொடி பொருளினைப் பெறும் என்றவாறு.
பரிமேலழகர்: இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து. [அவ்விரவால் - அந்த இரத்தல் தொழிலால்; மிகுதி-மேம்பாடு]

'இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோடி நல்லது', 'இரந்து பொருள் பெறுதலைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லது', '(பிச்சை கேட்டு எவ்வளவு வாங்கினாலும் அதைவிடக்) கோடி மடங்கு நல்லது', 'கோடி மடங்கு நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கோடி மடங்கு நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண்ணன்னாரிடமும் ஒருபொருளைக் கேளாமை கோடி மடங்கு நல்லது என்பது பாடலின் பொருள்.
'கண்ணன்னார்' யார்?

கடைநிலைத் தேற்றமாக -கடைசிக்கட்ட முயற்சியாக- மட்டுமே இரத்தலை மேற்கொள்க.

தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மனமகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடத்திலும் இரக்கச் செல்லாமலிருப்பது கோடி மடங்கு நல்லது.
முந்தைய 'இரவு' அதிகாரத்தில் இரக்கத் தக்காரிடம் கேட்பதற்கான வழிமுறைகள் காட்டப்பட்டன. இரப்பவன் உள்ளம் நோகாதவாறு பொருள் கொடுப்பவர்கள், ஒளித்தல் இல்லா நெஞ்சுடன் தங்கள் கடமை தெரிந்தவர்கள், தன்னிடம் இருப்பதை இரப்போர்க்கு ஈயாமல் ஒளித்துக் கொள்ளுவதைப்பற்றிக் கனவில் கூட நினைக்காதவர்கள், இகழ்ந்து எள்ளாதவர்கள் போன்றோரிடம் இரக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதனால் இரத்தல் இழுக்கன்று என்று பொருளாகாது. எந்தவகையிலும் இரத்தல் இழிவானதே என்ற கருத்துடையவர் வள்ளுவர். ஆதலால் யார்மாட்டும் இரவாதிருத்தலே, இரந்து கேட்டதைப் பெறுதலினும் கோடி நன்றாம் என்று கூறி இரத்தல் செய்ய அஞ்ச வேண்டும் என்று இங்கு உணர்த்துகிறார்.

எல்லாவகையிலும் முயன்றும் பொருளீட்ட முடியாத நிலை ஒருவர்க்கு ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட வறியதோர் காலத்துக் கொளத்தகும் காப்புவழியாக மட்டுமே இரத்தலை மேற்கொள்ள வேண்டும்; அதை இயற்கைப் பொது நெறியெனக் கொள்ளக்கூடாது. முயற்சியால் பொருளீட்டி வாழும் வாழ்க்கையே நல்வாழ்க்கை. எவ்விதம் நோக்கினாலும் இரந்து வாழ்க்கை நடத்துவது இழிவானதுதான். கரவாது உவந்து கொடுப்போரைக்கண்டு மானம் குறைவுபடாமல் பொருள் அடைந்தாலும் இரத்தலின் இழிவு நீங்குவதில்லை. எனவே கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்கும் வல்லமையோடு அதனை அகற்றவல்ல தாளாண்மையை மேற்கொள்க என்று குறிப்பால் வலியுறுத்துகின்றார். வேறுவழியே இல்லை என்றபோதும், எத்துணை நல்லவர்களிடத்திலும் இரவாது ஒருவன் வறுமையுறுதல், அவனிடம் இரந்துபெறும் பொருளை விட கோடி மடங்கு நல்லது.

‘கோடியுறும்’ என்ற தொடர் கோடி மடங்கு நல்லது எனப்பொருள் தருவது. ...........எழுபது கோடி உறும் (அமைச்சு 639), ...............ஏதின்மை கோடி உறும் (தீ நட்பு 816) என்ற குறள்களிலும் இத்தொடர் ஆளப்பட்டது.
இக்குறட்கருத்தை ஒட்டிய நாலடியார் பாடல் ஒன்று இவ்விதம் கூறுகிறது:
கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை; இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ,
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு?
(நாலடியார் 305, பொருள்: தமக்கொன்று ஒளியாத உறுதியானமெய்யன்பின்னையுடைய கண்போன்றஅன்பர்களிடத்தும் யாதும் இரத்தல் செய்யாதுவாழ்வது வாழ்க்கையாகும்; இரத்தலாகிய செயலைநினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றது; அவ்வாறானால், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது கருத்துத்தான் எவ்வாறு நையாநிற்கும்!)

'கண்ணன்னார்' யார்?

'கண்ணன்னார்' என்றதற்குக் கண் போல்வார், தாதா வல்லாதார், கண்போலும் கேளிர், கண்போலச் சிறந்தார், கண்போலச் சிறந்தவர், கண் போல உரியார், கண் போன்று உரிமை உடையோர், அன்பர், கண் போன்ற (மிகச் சிறந்த)வர், கண் போன்ற அருளுடையர், கண்போல்பவர், கண் போல் சிறந்த நண்பர், கண்போன்ற மனிதர், கண்ணைப் போல் வேண்டியவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நண்பர்கள், கேளிர், உறவினர்கள், உரிமைகொண்டோர், நேயர், அன்பர், அருளுடையார் போன்றோரை உவந்தளிக்கக்கூடிய கண்ணன்னார் என உரைத்தனர். பரிமேலழகர் தனது சிறப்புரையில் 'இவர் இவர்வரப்பெற்றோமே என உள்ளம் மகிழ்ந்தவர்' எனக் கண்ணன்னாரைக் குறிப்பிடுகிறார். அவரிடம் கூட இரத்தல் கூடாது என்கிறது இப்பாடல்.
எவ்வளவுதான் கொடுப்பவர் சிறப்பானவராகவும் இருந்தாலும், வறுமைப்பட்டார் இரக்கும்போது உள்ளத்தில் நாணி நடுக்குற்று ஒடுங்கிக் குறுகிக் கையேந்தி நிற்கும் நிலையில்தான் இருக்க வேண்டிவரும். அந்த இழிநிலை வேண்டாம்; அத்தகைய கொடையாளிகளிடமும் பெறாதிருப்பது நல்லது என்கிறது இப்பாடல்.

'கண்ணன்னார்' என்ற தொடர் கண் போல்வார் என்ற பொருள் தரும்.

தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்தவரிடமும் ஒருபொருளைக் கேளாமை கோடி மடங்கு நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்பான நெருக்கமானவரிடமும் இரவச்சம் வேண்டும்.

பொழிப்பு

ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடத்தும் ஒரு பொருளைக் கேளாமை கோடி நல்லது.