இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1067



இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1067)

பொழிப்பு (மு வரதராசன்): இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

மணக்குடவர் உரை: பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி.
இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

பரிமேலழகர் உரை: இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி.
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கேட்டாலும் ஒளிப்பாரிடம் கேளாதீர் என்று இரப்பாரை எல்லாம் கேட்டுக் கொள்வேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இரப்பாரை எல்லாம் இரப்பன் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.

பதவுரை: இரப்பன்-கெஞ்சிக் கேட்பேன்; இரப்பாரை-ஏற்பவரை; எல்லாம்-அனைத்தும்; இரப்பின்-கெஞ்சிக் கேட்குங்கால்; கரப்பார்-மறைப்பவர்; இரவன்மின்-ஏற்காதீர்கள், கெஞ்சாதீர்கள்; என்று-என்பதாக.


இரப்பன் இரப்பாரை எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்:
பரிப்பெருமாள்: பிறர்மாட்டு இரந்து செல்வார் எல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்:
பரிதி: இரப்போரை வேண்டிக் கொள்வேன்;
காலிங்கர்: பிறர்பால் காணாது சென்று இரப்பாரை எல்லாம் யானும் ஒன்று இரப்பல்; அஃது யாதோ எனின்;
பரிமேலழகர்: இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்;

'இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரப்பவர்களை எல்லாம் யான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்', பிச்சை கேட்க எண்ணுகிறவர்களையெல்லாம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்', 'யான் இரவலரை எல்லாம் பணிந்து வேண்டிக் கொள்ளுகிறேன்', 'இரப்பாரை எல்லாம் பணிந்து வேண்டுவேன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரவலரை எல்லாம் யான் கேட்டுக் கொள்கிறேன் என்பது இப்பகுதியின் பொருள்.

இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி.
மணக்குடவர் குறிப்புரை: இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.
பரிப்பெருமாள்: இரக்குமிடத்து இல்லை என்பார்மாட்டு இரவாது ஒழியுங்கோள் என்று என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: யாவர்மாட்டும் இரத்தல் ஆகாது என்று கூறுவார் முற்பட ஈயாதவர்மாட்டு இரக்கல் ஆகாது என்றது.
பரிதி: ..............வேண்டுவன இரப்போரை இல்லை என்போரைக் கேளாமல் இருக்க என்று.
காலிங்கர்: அங்ஙனம் இரந்து உயிர் வாழக் கருதுகின்ற அவ்விரப்பான் கண்ணும் அது கொண்டு உயிர்நிலை பெறாது பின்னும் கரப்பார்கண் அவ்விளிவரவு ஆகிய இரத்தலைச் செய்யன்மின்.
காலிங்கர் குறிப்புரை: எனவே; இந்த எளிமைப்பட்டும் இரக்கவேண்டின் இரவாது இறத்தல் இனிது என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: யாது சொல்லி? எனின், நுமக்கு இரக்கவேணடுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி.
பரிமேலழகர் குறிப்புரை: இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது. [இளிவந்த செயலான் - இழிவான இரத்தல் தொழிலால்; ஊட்டிய வழியும் - உணவூட்டி வளர்த்த இடத்தும்; இது வேண்டா - இளிவந்த இச்செயல் வேண்டா]

'இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரக்கும் நிலை ஏற்பட்டால் பொருளை வைத்துக் கொண்டு மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று', '''பிச்சை கேட்க நேர்ந்தாலும், வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லுகிறவர்களிடம் பிச்சை கேட்க வேண்டாம்' என்று', 'இரந்தால் தம்மிடம் உள்ளதைக் கொடாது ஒளிப்பாரிடம் இரப்புச் செய்யாதீர் என்று', 'இரக்க வேண்டுமானால், உள்ளது ஒளிப்பாரை இரவாது ஒழிமின் என்று சொல்லி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரக்க வேண்டுமானால், உள்ளது மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரக்க வேண்டுமானால், உள்ளது மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று இரவலரை எல்லாம் இரப்பன் என்பது பாடலின் பொருள்.
'இரப்பன்' என்ற சொல் குறிப்பது என்ன?

உள்ளதை ஒளிப்பவர்களிடம் எதையும் கெஞ்சிக்கேட்டுகொண்டு நிற்காதீர்!

பிறரிடம் உதவிகேட்க செல்வாரை யெல்லாம், 'இரக்கச் செல்லுவதாய் இருந்தால். தம்மிடம் உள்ளதைக் கொடாமல் மறைப்பவரிடம் செல்லாதீர்கள்' என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்வேன்' என வள்ளுவரே இரந்து கேட்கிறார்.
இரக்க இரத்தக்கார்க் காணின்.. என்று இவ்வதிகாரத்து முதல் குறளில் (1051) கூறப்பட்டது. எதிர்மறையாக, இங்கு 'கரப்பாரிடம் இரக்க வேண்டாம்' என வேண்டிக்கொள்ளப்படுகிறது. மானம் தீரா இரவு என்பதை மறுபடியும் மறுபடியும் வள்ளுவர் வலியுறுத்துவார். கராப்பாரிடம் இரந்து நிற்றல் மானக்கேட்டை ஏற்றுக்கொள்வதற்குச் செல்வதுபோல் ஆகிவிடும். கரப்பார் எள்ளுவர்; நகையாடுவர்; சினத்துடன் கடுஞ்சொற்களை மொழிவர்; இறுதியில் இரப்பவனிடம் 'இல்லை'யென்று கூறிக் கையை விரித்து ஒன்று கொடுக்கவும் மாட்டார். இதனால்தான் இரவு என்பது வறுமை தொலைகின்ற ஒரு சிறிய காலத்துக்குக் காப்பாக இருக்க வேண்டுமேயன்றி அதுவே ஒரு தொழிலாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கிலும் எளியார்க்கு எளியராய்மாறி வள்ளுவர் இரவலனிடமே, வேறு வழியே தோன்றவில்லை என இரக்க வேண்டிய தேவை வந்தால், கரப்பாரிடம் இரக்க வேண்டாம் எனக் கெஞ்சுகிறார்.

சிலர் இக்குறளை ஆசிரியர் கூற்றாகக் கொள்ளாமல் இரத்தலின் கொடுமையால் வருந்திய இரவலன் ஒருவன் பட்டறிவால், தான் துய்த்த துன்பத்தைக் கருத்தில்கொண்டு, கூறுவதாகக் கொள்வர்.

'இரப்பன்' என்ற சொல் குறிப்பது என்ன?

இரப்பன் என்ற சொல்லுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்வேன் என்பது பொருள். இப்பாடல் இரவைக் கருதுவோரை நோக்கி வள்ளுவர் பாடுவதுபோல் உள்ளது. கையேந்திதான் நிற்கவேண்டும் என்ற நிலைவந்தால் தம்மிடம் உள்ளதை ஒளித்து வைத்துக்கொண்டு 'இல்லை' என்று சொல்கிறவரிடம் சென்று கெஞ்ச வேண்டாம் என கையேந்துபவர் எல்லாரையும் இரப்பன் என்கிறார் வள்ளுவர். இரவலனிடமே இரப்பது இழிவு ஆயினும் இரப்பவர் நலக் கருதி அவர் அதனையும் மேற்கொள்ளுகின்றார். 'கரப்பாரிடம் இரக்காதீர்கள்‘ என்று இரப்பாரிடம் கையேந்தி நிற்கிறார்.
இரத்தல் காட்சி வள்ளுவரை அருள் நெஞ்சினரான வள்ளுவரை எந்த அளவு வருத்தியிருக்கும் என்பதை இரப்பாரைப் பார்த்து அவரே இரந்து நிற்பதாக உள்ள இக்குறள் நன்கு வெளிப்படுத்துகிறது. வறுமைப்பட்டவனின் தன்மானத்திற்கு எவ்வகையிலும் இழுக்கு நேரக்கூடாது என்று எண்ணும் அவரது ஈர நெஞ்சத்தையும், மனிதநேயத்தையும் இது புலப்படுத்துவதாக உள்ளது. இரக்க நேர்ந்தாலும் வைத்துக் கொண்டு இல்லையென்பவர்களிடம் போய்க் கேட்டுவிடாமல் கொடுக்கும் மனமுள்ளவர்களை அறிந்து கேட்பது நல்லது என அறிவுறுத்துகிறார் அவர். பொருளை மறைப்பவர்மாட்டுச் சென்று இரப்பதால் வறுமைத் துன்பத்தோடு இழிவுத் துன்பமும் மிகும் என்பது செய்தி.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற (மக்கட்பேறு 61), யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (வாய்மை 300), மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல் (கயமை 1071) ஆகிய குறட்பாக்களில் தான் அறிந்த உண்மையை நேரடியாகவே 'யாம் அறிவதில்லை', 'யாம் கண்டதில்லை' என்ற முறையில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளமை அவரே நம்முன் வந்து நேராகப் பேசுவது போல உணர்வை ஏற்படுத்தியது.
இங்கு இரப்பன் என்று தன்மை ஒருமையைக் கையாண்டு வறியவர்கள் மேல் கொண்ட பரிவால் அவர்களிடம் நேரில் பேசுகிறார்.

'இரப்பன்' என்று வள்ளுவர் கூற்றாக அமைந்த பாடல் இது.

இரவலரை எல்லாம் யான் கேட்டுக் கொள்கிறேன்; இரக்க வேண்டுமானால், உள்ளது மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வள்ளுவர் தம்மையே முன்னிலைப் படுத்தி இரவன்மின் என இரவச்சம் வேண்டுகிறார்.

பொழிப்பு

இரப்பவர்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்; இரக்கவேண்டிய நிலை உண்டானால் பொருளை வைத்துக் கொண்டு மறைப்பவர்களிடம் சென்று இரவாதீர்கள் என்று.