இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1065



தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1065)

பொழிப்பு (மு வரதராசன்): தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.

பரிமேலழகர் உரை: தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை.
(தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: சமைத்த உணவு வெறும் தண்ணீரைப் போன்ற கஞ்சியே ஆனாலும் உழைத்துக் கிடைத்த அந்த உணவைவிடச் சுவையானது எதுவும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்குஇனியது இல்.

பதவுரை: தெண்ணீர்-தெள்+ நீர், தெளிந்த நீர்; தெளிவான நீர்; அடு-சமைத்த; புற்கை-கஞ்சி; ஆயினும்-ஆனாலும்; தாள்-முயற்சி; தந்தது-கொடுத்தது; உண்ணலின்-உண்ணுதற்கு; ஊங்கு-மேற்பட்ட; இனியது-இன்பமானது; இல்-இல்லை.


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை; [புற்கை- புல்லரிசிச்சோறு]
பரிப்பெருமாள்: மோரினும் காடியினும் அடப்பட்ட தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை;
பரிதி: நல்ல தண்ணீரிலே சமைத்த புற்கையாயினும் தம் முயற்சியிலே வந்தது;
காலிங்கர்: அடுபுற்கை தன்னினும் பசைபடு புற்கை அன்றி வெறுந் தெளிநீர்ப்புற்கை ஆயினும் அது தமது தாளாண்மையால் தரப்பட்டதாயின்; [அடுபுற்கை- சமைத்த சோறு; பசைபடு புற்கை - குழைந்த சோறு; தெளிநீர்ப் புற்கை- நீர் சுரந்த சோறு.]
பரிமேலழகர்: நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும்; [அடுபுற்கை - சமைத்த கூழ்]

'தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழைப்பால் வந்தது கஞ்சித் தண்ணீராயினும்', 'தெளிந்த நீரில் சமைத்த எளிய உணவாயினும் முயற்சியால் வந்த அவ்வுணவை', 'தெளிந்த நீரைப் போல் (உணவுப் பொருள் அதிகம் இல்லாமல்) சமைக்கப்பட்ட வெறும் கஞ்சியானாலும், தன்னுடைய சொந்த உழைப்பினால் சம்பாதிக்கப்பட்டதை', 'தெளிந்த நீர்போலும் சமைக்கப்படுகின்ற கூழேயானாலும் தன் முயற்சி உழைப்புக் கொடுத்ததை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தெளிந்த நீர்போலும் சமைக்கப்பட்ட கூழேயானாலும் தன் முயற்சி கொடுத்ததை என்பது இப்பகுதியின் பொருள்.

உண்ணலின் ஊங்குஇனியது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.
பரிப்பெருமாள்: உண்டலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இரந்துகொண்டு அக்காரம் பாலோடு அயிறலின் புற்கை அயிறல் இனிது என்றது. [அக்காரம்-சர்க்கரை; அயிறலின் - உண்டலின்]
பரிதி: போதும் என்றவாறு.
காலிங்கர்: அதனைத் தாம் உண்டு இன்புறுதலின் மேற்பட்ட இனிமை உடையது யாதுமில்லை; எனவே பிறர்பால் இரந்து பெறுவது அமுதமே ஆயினும் இனிதன்று என்பது பொருள் என்றவாறு. [அதனை - கூழை]
பரிமேலழகர்: அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை. [அதனை - அடுபுற்கையை (கூழை)]
பரிமேலழகர் குறிப்புரை: தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும்; இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது. [தாள்தந்த கூழ்- முயற்சியால் வந்த கூழ்; இளிவாய இரவு- இழிவாகிய இரத்தல்; நெறியான் ஆயது - நல்லவழியில் வந்தது; அது - வழியாலாயது]

'உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனை உண்பதுபோல் சுவை வேறில்லை', 'உண்ணுதலினும் இனிய உணவு வேறில்லை', 'உண்பதைக் காட்டிலும் இன்பமளிக்கக் கூடியது வேறில்லை', 'உண்ணலைப்போல மிக இனியது வேறொன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தெண்ணீர் அடுபுற்கையானாலும் தன் முயற்சி கொடுத்ததை உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது பாடலின் பொருள்.
'தெண்ணீர் அடுபுற்கை' என்றால் என்ன?

உழைப்பு நல்கியதைத் துய்த்துவாழ்வதுவே சுவையானதாம்.

தெளிந்த நீர்போன்று சமைத்த கூழே ஆனாலும் தன்முயற்சியால் கிடைத்தது என்றால் அதை உண்பதைவிட இனிமையானது வேறு இல்லை.
பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்டுப் பெற்ற பொருளால் பல்சுவை உணவு வயிறு நிறைய உண்டாலும் உண்மையான மகிழ்ச்சி உண்டாகாது. இரந்து உதவிபெற மறுத்து தன் முயற்சியால் கிடைத்தது கொண்டு உண்பது சிறிதளவே இருக்கலாம்; அது தெளிந்த நீர்போன்ற கூழாக இருந்தாலும் அதை உண்பதைவிட இனியது வேறு ஒன்று இல்லை.
உயிர்கள் உணவால் இயங்குகின்றன. பலர் முயற்சித்துப் பொருளீட்டி உணவு பெறுகின்றனர். உழைப்பின்றியும் உணவுப்பொருள் கிடைக்கலாம். முந்தையோர் தேடிவைத்த செல்வத்தை வைத்து உண்டு வாழ்கிறவர்களும் உண்டு; பிறர் உடைமையைக் கவர்ந்துண்டு வாழ்பவர்களும் இருக்கின்றனர். பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்டுப் பொருள்பெறும் இரப்போரும் இருக்கிறார்கள். தன் உழைப்பின்றிப் பிறன் கையால் பொருள் பெறுவது மானங் கெட வருவது. அதுகொண்டு வாழ்வது இன்பம் தராது. ஆனால் உழைப்பால் கிடைத்த பொருள் கொண்டு உண்டல் பெருமகிழ்ச்சி தரும்.

'தாள்' என்றது தன்முயற்சி குறித்தது. தாள்தந்தது என்ற தொடர் தன் முயற்சியால் கிடைத்தது எனப்பொருள்படும். தானே முயன்று தேடியதைக் கொண்டு துய்ப்பதில் இன்பம் கூடுதலாக உண்டு. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு (புணர்ச்சி மகிழ்தல் 1107 பொருள்: தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உண்டானதை உண்பதைப் போன்றது இளம்பெண்ணைத் தழுவுதல்) என வேறொரு இடத்தில் 'தமதுபாத்து உண்ப'தின் மகிழ்ச்சியை வள்ளுவர் உவமிப்பார். தன் முயற்சியால் கிடைத்ததை உண்டு மகிழ்ந்து வாழவேண்டும்; பிறரிடம் இரந்து வாழ்வது இனிதன்று.

.................கருனையைப் பேரு மறியார் நனிவிரும்பு தாளாண்மை நீரு மமிழ்தாய் விடும் (நாலடியார் 200 பொருள்: கறிகளைப் பேர்தானும்அறியாத முயற்சியாளர்கள் மிகவும் விரும்புகின்ற தம் முயற்சியுடைமையாற்கிடைத்த நீருணவும், அவர்க்கு அமிழ்தமாக மாறி இன்பந் தருதல்உறுதி) எனத் தன்முயற்சியால் உண்டானது நீருணவேயாயினும், அது அமிழ்தமாக இனிக்கும் என நாலடியாரும் கூறிற்று.

'தெண்ணீர் அடுபுற்கை' என்றால் என்ன?

'தெண்ணீர் அடுபுற்கை' என்ற தொடர்க்கு மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கை, மோரினும் காடியினும் அடப்பட்ட தெளிந்த நீரினாலே யட்ட புற்கை, நல்ல தண்ணீரிலே சமைத்த புற்கை, அடுபுற்கை தன்னினும் பசைபடு புற்கை அன்றி வெறுந் தெளிநீர்ப்புற்கை, தெளிந்த நீர் போலும் அடுபுற்கை, தெளிந்த தண்ணீர்போல இருக்கிற புல்லரிசிக் கூழ், தெளிந்த நீர்போலச் சமைத்த கூழ், தெளிந்த நீர்போல் சமைத்த கூழ், தெளிந்த நீர்போலும் அடப்பட்ட அரிசிக் கஞ்சி, தெளிந்த தண்ணீரைப் போன்று சமைத்த கூழ், கஞ்சித் தண்ணீர், தெளிந்த நீரில் சமைத்த எளிய உணவு, தெளிந்த நீரைப் போல் (உணவுப் பொருள் அதிகம் இல்லாமல்) சமைக்கப்பட்ட வெறும் கஞ்சி, தெளிந்த நீரிலே வேக வைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ், தெளிந்த நீர்போலச் சமைத்த கூழ், தெளிந்த நீர்போலும் சமைக்கப்படுகின்ற கூழ், தெளிந்த நீர்போன்று சமைத்த கூழ், சமைத்த உணவு வெறும் தண்ணீரைப் போன்ற கஞ்சி, தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழ், தெளிந்த நீரும் புல்லரிசியுணவும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தெண்ணீர் என்பது தெள்+நீர் என விரிந்து தெளிந்த நீர் எனப்பொருள்படும். அடுபுற்கை என்பது சமைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ் என்ற பொருள் தருவது. 'தெண்ணீர் அடுபுற்கை' என்ற தொடர்க்கு தெளிந்த நீர் போன்ற சமைக்கப்பட்ட புல்லரிசிக் கூழ் என்பது பொருள். கூழ் என்பது அரிசியுடன் மோர், காடி, அல்லது மாவுப்பொருள் கலந்து சமைக்கப்பட்டு செறிவாக இருப்பது. தெண்ணீர் என அடை கொடுக்கப்பட்டுள்ளதால், வறுமையின் காரணமாக புல்லரிசி கொஞ்சமாக இட்டுக் காய்ச்சப்பட்ட கஞ்சி, கிட்டத்தட்டத் தெளிந்த நீர் போலவே இருப்பதாகச் சொல்கிறது. இக்கஞ்சியில் நீரின் சுவையே மிகுதியாகத் தெரியும். மானமுள்ள வறுமைப்பட்டோர்க்கு இந்த நீர்த்த கஞ்சியே பெரிதும் உணவாக அமையும்.
வயிற்றுப்பசி தணியக்கூடிய அளவு பிசைந்துண்ணும் சோற்றுத் திரளாயின்றி புற்கை வெந்த நீரேயாயினும், இந்த நீருணவு உழைப்பினால் வந்தது என நினைத்து உண்ணும்போது பெறும் இன்பம் பெரிது. நெறியான முறையில் வந்ததால் இரந்துபெறும் பொருளால் உண்டாக்கப்படும் உணவினும் சிறந்தது; மகிழ்ச்சி தருவது. இதனினும் இனிமையானது வேறொன்றும் இல்லை.

'புற்கை- புல்லரிசிச்சோறு. இன்று புக்கை என வழங்குகிறது. மற்றும் சோற்றுக்கஞ்சிக்கும் பெயராயிற்று. புற்கையாயினும் என்ற இழிவு சிறப்பும்மை உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் குடிப்பனவும் கறிப்பனவுமாகிய தொடுகறி சிறிதுமில்லாத கஞ்சி என்பதை உணர்த்திற்று' என்பார் தண்டபாணி தேசிகர். இச்சொல்லுக்குப் புன்னரிசிக் கூழ் என்றும் கேழ்வரகு மாவினாற் காய்ச்சிய கூழ் என்றும் வேறு சிலர் பொருள் கூறினர்.
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கு (புறநானூறு 64:7 பொருள்: மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு), என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே (புறநானூறு 84:1 பொருள்: என்னுடைய தலைவன் தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும் பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்) எனப் புறநானூற்றிலும் இச்சொல் ஆளப்பெற்றுள்ளது.

'தெண்ணீர் அடுபுற்கை' என்றது செறிவில்லாத தெளிந்த நீர் போன்ற, சமைக்கப்பட்ட கஞ்சியைக் குறிப்பது.

தெளிந்த நீர்போலும் சமைக்கப்பட்ட கூழேயானாலும் தன் முயற்சி கொடுத்ததை உண்பதைவிட இனிமைதருவது வேறில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மான உணர்வு மிக்கவர் இரவச்சம் கொள்வராயிருப்பர்.

பொழிப்பு

தன் உழைப்பால் வந்தது தெளிந்தநீர் போன்ற கூழேயாயினும் அதனை உண்பதைவிட இனிமை தருவது வேறொன்றில்லை.