இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1064



இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு

(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1064)

பொழிப்பு (மு வரதராசன்): வாழ வழி இல்லாத போதும் இரந்துகேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும்.

மணக்குடவர் உரை: தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து.
இஃது இரவாதார் பெரிய ரென்றது.

பரிமேலழகர் உரை: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து.
(அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: வாழ்க்கைக்கு வேண்டியன இல்லாமல் வறுமையுற்றபோதும் பிறரிடம் சென்று இரத்தலை ஏற்றுக் கொள்ளாத பெருங்குணம், உலகம் முழுவதும் கொடுத்தாலும் ஈடாகாத பெருமை உடையது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடம்இல்லாக் காலும் இரவொல்லாச் சால்பு இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே.

பதவுரை: இடம்-பெரிய இடம், உலகம்; எல்லாம்-முழுவதும்; கொள்ளா- கொள்ளாத; தகைத்தே-பெருமையுடையதே, மதிப்புடையதே; இடம்இல்லாக்காலும்-உதவும் வழிகள் இல்லாதபோதும்; இரவு-ஏற்றல், கெஞ்சிக்கேட்டல்; ஒல்லா-இசையாத, உடம்படாத, ஒத்துக்கொள்ளாத; சால்பு-நிறைகுணம்.


இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து;
பரிப்பெருமாள்: அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமை உடைத்து;
பரிதி: பூமி இடம் போதாதே என்றவாறு;
காலிங்கர்: உலகு இடம் எங்கும் சென்று பூரித்தும் பின்னும் புறம் போகும் தன்மையும் உடைத்தே;
பரிமேலழகர்: எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து; [ஒருங்கு இயைந்தாலும் -ஒருசேரப் பெற்றாலும்]

'அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீடு நிறைந்த செல்வத் தன்மை உடையது', 'எல்லா உலகமும் ஒருங்கு இயைந்தாலும் ஈடாகாத பெருமையுடையது', '(அண்டங்களெல்லாம் அடங்கியிருக்கிற ஆகாயன் என்ற) எல்லா இடமும் சேர்ந்தாலும் போதாது என்னும்படி அவ்வளவு பெரியது', 'உலக முழுவதிலும் அடங்காத பெருமையை உடைத்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளஇடமெல்லாம் அடங்காத பெருமையை உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

இடம்இல்லாக் காலும் இரவொல்லாச் சால்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு. [சால்பு- நிறைந்த குணம்]
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரவாதார் பெரிய ரென்றது.
பரிப்பெருமாள்: தன் சுற்றத்தளவு உணவுக்கு வருவாய் அகல இல்லாத காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பென்பது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரவாதார் பெரிய ரென்றது. இவை இரண்டினானும் இரவாமையால் வரும் நன்மை கூறப்பட்டது.
பரிதி: மிடியார்க்குத் தனம் தேடுவோம் என்று உழலும் காலுக்கு என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனின்; தமக்கு ஒன்றிற்கும் ஒரு திறவு இல்லாத இடத்தும் இரந்து கோடல் இல்லாமை என்கிற இந்தப் பெரிய சால்பு உடைமை என்றவாறு.
பரிமேலழகர்: நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி. [நல்கூர்ந்த வழியும்-வறுமையுற்ற விடத்தும்]
பரிமேலழகர் குறிப்புரை: அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது. [அந்நெறி அல்லதனை- பிறர்பாற் சென்று இரத்தலை]

'தமக்கு வருவாய் இல்லா/ நுகரவேண்டுவன இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லாத போதும் இரக்காத நிறைகுணம்', 'உணவுக்கு வழி இல்லாத இடத்தும் பிறரிடம் இரத்தற்கு இசையாத நிறைகுணம்', '(வருவாய்க்கு) வழியே இல்லாத காலத்திலும் கூடப் பிச்சை கேட்க இணங்காத பெருங்குணம்', 'உணவிற்கு இடமில்லாத போழ்தும், இரப்பதற்கு உடன்படாத மன அமைதி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நுகர்பொருள் பெற வழிஒன்றுமே இல்லாமல் போனபோதும் பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்க உடன்படாத நிறைகுணம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நுகர்பொருள் பெற வழிஒன்றுமே இல்லாமல் போனபோதும் பிறரிடம் சென்று இரவொல்லாச் சால்பு, உள்ளஇடமெல்லாம் அடங்காத பெருமையை உடைத்து என்பது பாடலின் பொருள்.
'இரவொல்லாச் சால்பு' குறிப்பது என்ன?

உண்ண உடுக்க ஏதுமற்றபோதும் பிறரிடம் சென்று கையேந்த நினையார் சால்புடையார்.

ஒன்றுமே இல்லாமல் போய்விட்ட நிலையிலும் பிறரிடம் கெஞ்சிநின்று உயிர்வாழ உடன்படாத அமைதி, எத்துணை பெரிய இடமும் கொள்ளாப் பெருமையுடையதாகும்.
முந்தைய குறள் (1063) இரந்தே வறுமையை நீக்குவேன் என்ற வறட்டுப் பிடிவாதம் ஆகாது எனக்கூறியது; இங்கு எத்துணை வறுமையாயினும் அதனை இரந்து நீக்க எண்ணாதவருடைய மனஉறுதி சொல்லப்படுகிறது.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் (ஒப்புரவறிதல் 218 பொருள்: ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார்) என்பதிலுள்ள 'இடனில் பருவத்தும்' தரும் பொருளே இங்கு 'இடம்இல்லாக் காலும்' என்றதற்கும் பொருந்தும். அதாவது உதவும் வழிகள் ஒன்றுமில்லாத போதும் என்பது. எனவே இடமில்லாக்காலும் என்பது உலகில்வாழ இடந்தருஞ் செல்வம் இல்லாமற் போனபோதிலும் எனப்பொருள்படும்.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு (புகழ் 234 பொருள்: உலகின் எல்லைவரை நீண்ட புகழை ஒருவன் செய்வானாயின் வானுலகம் தேவரைப் போற்றாது, (பிறர்க்குப் பயன்படும் புகழ் வாழ்வுடையவரையே போற்றும்)) என்பதிலுள்ள நிலவரை நீள்புகழ் என்ற தொடர் தரும் பொருளை அதாவது உலகின் எல்லைவரை நீண்ட புகழ் என்பதை, இங்கு இல்லாமையிலும் இரக்காதவன் பெறக்கூடிய பெருமைக்குப் பொருத்திக் கொள்ளலாம். உய்யும்வழி ஒன்றும் தென்படாது திக்குமுக்காடச் செய்யும் வறுமை நிலையில், துன்பப்படாமல் இரந்து வாழலாமே என்று எண்ணம் எழலாம். அப்போதும் இரந்து வாழ உடன்படாத திண்மையுடையவரது மதிப்பு அளவிடற்கரியது; அது உலகப் பரந்த இடமெல்லாம் கொள்ளாத அத்துணை பெருமையுடையது என்கிறது குறள்.
பொருள்வாழ்க்கையில் பெரும்இடருற்று முற்றிலும் தளர்ந்தபோதும் தன்னிலையில் தாழாமல் முயன்று மானத்தோடு வாழ்தலை விரும்புவரைப் போற்றும் பாடலிது. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் (சான்றாண்மை 988 பொருள்: சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது) என்னும் குறளையும் இணைத்து நோக்கலாம்.

'இரவொல்லாச் சால்பு' குறிப்பது என்ன?

'இரவொல்லாச் சால்பு' என்ற தொடர்க்குப் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, இரந்து கோடல் இல்லாமை என்கிற இந்தப் பெரிய சால்பு உடைமை, பிறர்பாற் சென்று இரத்தலை உடம்படாத அமைதி, பிறரிடத்திலே போய் இரப்பதற்குச் சம்மதியாத நன்மை, பிறர் பாற் சென்று இரக்க உடன்படாத அமைதி, இரந்துகேட்க உடன்படாத சால்பு, பிறரிடம் சென்று இரப்பதற்கு உடம்படாத சால்புடைமை, இரந்து வாழ்தலுக்கு உடன்படாதாரின் பெருமை, இரக்காத நிறைகுணம், பிறரிடம் இரத்தற்கு இசையாத நிறைகுணம், பிச்சை கேட்க இணங்காத பெருங்குணம், (மானம் கெட) இரத்தலை மேற்கொள்ளாத சான்றாண்மை, இரப்பதற்கு உடன்படாத மன அமைதி, பிறரிடம் சென்று இரத்தலை ஏற்றுக் கொள்ளாத பெருங்குணம், பிச்சையெடுத்து உயிர்வாழ உடன்படாத மன அமைதி, பிறரிடம் வாங்கிப் பிழைக்கும் பண்பை ஒதுக்கிய நிறைகுணம், பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு, இரத்தலைச் செய்யாது நிறைவுபெற்றிருக்கும் பெருமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எந்த வறுமைச் சூழலிலும் இரவுக்கு உடன்படாத சால்பு உலகம் கொள்ளா அளவு பெருமையையுடையது என்பது இக்குறள் கூற வரும் செய்தி.
தேவநேயப் பாவாணர், இரவொல்லாச் சால்பு என்பதற்குப் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குணநிறைவு எனப் பொருள் கூறி 'மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புக்களாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம்' என விளக்கமும் தருவார்.

'இரவொல்லாச் சால்பு' என்றது பிறர்பாற் சென்று இரத்தற்கு உடன்படாத நிறைகுணம் என்ற பொருள் தரும்.

நுகர்பொருள் பெற வழிஒன்றுமே இல்லாமல் போனபோதும் பிறரிடம் சென்று கெஞ்சிக்கேட்க உடன்படாத நிறைகுணம், உள்ளஇடமெல்லாம் அடங்காத பெருமையை உடைத்து என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சால்புடன் வாழ இரவச்சம் கொள்ளவேண்டும்.

பொழிப்பு

நுகர்ச்சிக்கு ஒன்றுமே இல்லாத போதும் இரக்காத நிறைகுணம் உலகமெல்லாம் நிறைந்த பெருமையை உடைத்து.