ஆள்வினையுடைமை என்பது விடாமுயற்சி உடைமை என்று பொருள்படும். ஆள்வினை என்ற சொல்லுக்கு ஆட்சி செய்தல் எனவும் பொருள் கொண்டு ஆள்வினையுடைமை என்றதற்கு வினையை ஆளுதல், வேலை கொள்ளுதல் என மற்றொரு விளக்கம் தருவர். இடைவிடாது உழைத்து ஓர் செயலை நிறைவேற்றும் ஆற்றலைக் குறிப்பது ஆள்வினையுடைமையாகும். ஊக்கமுடைமை அதிகாரம் செயல் ஆற்றுவதில் தளர்ச்சியின்றி மன எழுச்சி உடைத்தாதலைச் சொல்லியது; ஆள்வினையுடைமை அதிகாரம் அச்செயலை முடியுமாறு முயலுதலைக் குறிக்கிறது.
ஆள்வினையுடைமை
ஆள்வினையுடைமை என்பதற்கு இடைவிடாத மெய்ம்முயற்சி உடையன் ஆதல் எனத் தொல்லாசிரியர்கள் பொருள் கூறினர். மனஊக்கமும், செயலூக்கமும், ஒன்றிணைந்து மெய்ம்முயற்சியான ஆள்வினையுடைமை உண்டாகிறது.
ஆள்வினையுடைமையாவது செயல்களை ஆளுமையுடன் செய்யும் திறன் பெற்றிருத்தலைக் குறிக்கும். ஆளுமைத்திறன் என்பது தான் செய்யும் தொழிலைத் தனக்கு கட்டுபட்டதாகச் செய்து கொள்ளும் தன்மையைக் குறிக்கும். ஆள்வினை என்ற சொல்லுக்கு முயற்சி என்றும் உழைப்பு என்றும் பொருள் கொள்வர். முயற்சி என்பது ஒழுக்கம், அறிவு, கல்வி, ஊக்கம் போன்று ஒருவனிடமிருந்து பிரிக்கமுடியாது நிலைத்து நிற்கவல்ல உயர்வாழ்வுப் பண்பு ஆகும். வாழ்வுக்குச் செல்வம், புகழ் வேண்டியிருந்தாலும் அவற்றை ஈட்டுதற்கு முதற்கண் வேண்டுவது தன் முயற்சியே. குறளிற் பல இடங்களில், முயற்சியின் பெருமையைச் சிறந்ததென்றும், அதுவே மாந்தர் வாழ்வில் நல்ல துணையாம் என்றும் பேசப்படுவதைக் காணலாம்.
செல்வம் முயற்சியால் வருவது; நல்லூழால் அன்று என்பது வள்ளுவரின் அசையா நம்பிக்கை.
ஆள்வினையுடைமை தனிமனித வெற்றிக்கும் தன் சுற்றத்தின் துயர் களைவதற்கும் துணை செய்வது,
செயலை அரைகுறையாக விட்டு ஓடுபவனை உலகமும் ஒதுக்கிவிடும்;
இன்பங்களின் பின்னால் செல்லாமல் வேலை செய்வதில் கருத்துடன் இருப்பவனாலேயே மற்றவர்க்கு உதவமுடியும்;
முயற்சி செய்பவனிடமே செல்வம் சேரும்; முயற்சி இல்லாதவனுக்கு வறுமை உண்டாகும்;
எப்பொழுதுமே தெய்வத்தின் துணையை நாடாது முயன்று செயல்படுக;
தளராது தொடர்ந்து முயல்வது பெருவலியான ஊழையும் ஒதுங்கி நிற்கச் செய்யும்.
இவை முயற்சி செய்வோரை ஊக்குவிக்கும் வள்ளுவரது வாக்குகள்.
மனித முயற்சியின் மாட்சிமை போற்றும் அதிகாரம் இது. மன எழுச்சி கொண்டு செய்யும் செயலில் தொய்வின்றி முயற்சி செய்தால் எந்த ஒரு செயலையும் முடிக்க முடியும் என்ற உந்துதல் தருகிறது.
முயற்சி திருவினை ஆக்கும் என்ற பழிமொழியான தொடர் கொண்ட முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (616) என்ற பாடல் இங்குள்ளது. முயற்சி செல்வத்தை வளர்க்கும் என்கிறது இது. செல்வமே வேளாண்மை என்னும் செருக்கை ஒருவனுக்கு உண்டாக்குவது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி (618) என்ற பாடல் உடற்குறையுள்ளோருக்கு ஊக்கம் அளிக்கும் படலாக உள்ளது. உடற்குறையல்ல அறிவறிந்து முயலாமையே குற்ற்ம் எனச் சொல்கிறது இது.
'தெய்வம் நோக்கியிராது முயல்க'; அம்முயற்சிக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போகாது என்று உறுதியாகக் கூறும் தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619) என்ற பாடல் ஆகூழைமட்டும் நம்பாமல் முயல்க என்று கூறும் தனிச்சிறப்பு வாய்ந்தது .
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620) என்ற பாடல் பெருவலிமை கொண்ட ஊழின் தாக்கத்தையும் முயற்சியால் எதிர்கொள்ள முடியும் என்கிறது. ஊழ்வினை கீழ்ப்பட மக்கட்கு வாழ்வை வேண்டுபவர் வள்ளுவர். இக்குறள் முயற்சியின் ஆற்றல் இயற்கை வலிமையையும் எதிர்த்து நிற்கவல்லது என்று அதை மிக உயரத் தூக்கிப் பிடிக்கிறார்.