இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0616



முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:616)

பொழிப்பு (மு வரதராசன்): முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.

மணக்குடவர் உரை: முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும்.
இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை: முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும்.
(செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)

மயிலை சிவமுத்து உரை: முயற்சியானது ஒருவனது செல்வத்தை வளர்க்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையில் சேர்த்துவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும்.

பதவுரை:
முயற்சி-முயலுதல்; (திரு-செல்வம்), திருவினை-செல்வத்தை; ஆக்கும்-உண்டாக்கும்; முயற்று-முயலுதல், உழைத்தல்; இன்மை-இல்லாதிருத்தல்; இன்மை-வறுமை; புகுத்திவிடும்-திண்ணமாக அடைவித்துவிடும்.


முயற்சி திருவினை ஆக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயற்சி செல்வத்தை உண்டாக்கும்;
பரிப்பெருமாள்: முயற்சி செல்வத்தை உண்டாக்கும்;
பரிதி: உத்தியோகம் செல்வம் தரும்;
காலிங்கர்: இங்ஙனம் முயல்கின்ற முயற்சியானது செல்வத்தை உளதாக்கும்;
பரிமேலழகர்: அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: செல்வம் - அறுவகை அங்கங்கள்.

'முயற்சி செல்வத்தை உண்டாக்கும்/தரும்/உளதாக்கும்/வளர்க்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழைப்பு செல்வநிலையை உண்டாக்கும்', 'முயற்சி செல்வத்தினை மேன்மேல் பெருக்கும்', 'முயற்சி செய்கிறவர்களுக்குச் செல்வம் அதிகமாகும்', 'முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முயற்சி செல்வத்தினை உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயலாமை வறுமையை உண்டாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: முயலாமை வறுமையை உண்டாக்கிவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வமும் நல்குரவும் இதனானே வருமென்றது.
பரிதி: உத்தியோகம் இன்மை வறுமை தரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அம்முயற்சி இல்லாமையானது அவர்க்கு வறுமையைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும்.
பரிமேலழகர் குறிப்புரை: வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.

'முயலாமை வறுமையை உண்டாக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழையாமை வறுமையைத் தந்துவிடும்', 'முயற்சியின்மை வறுமையுட் சேர்த்துவிடும்', 'முயற்சி செய்யாதவர்களுக்கு உள்ள செல்வம் குறைந்து வறுமை வந்துவிடும்', 'முயற்சி இல்லாமை வறுமையை உண்டாக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும் என்பது பாடலின் பொருள்.
'திருவினை ஆக்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

விடாமுயற்சியானது வளத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருப்பவனுக்கு வறுமைவந்து சேரும்.

'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற உறுதியை உடன்பாட்டில் கூறி 'முயற்சி இன்மை புகுத்திவிடும்' என்று எதிர்மறையில் அச்சுறுத்தும் முறையில் சொல்லும் பாடலிது. முயற்சி பொருள் வளத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கும். முயற்சி இல்லாவிட்டால், வளம் எல்லாம் வறண்டு வறுமை அடையச் செய்யும் என்பது பொருள்.
முயற்சி திருவினையாக்கும்' என்று சொல்லப்பட்டதின்பின் அஃதின்மை வறுமையைச் சேர்க்கும் என்பது தானே பெறப்படுவதால் அது மீண்டும் ஏன் கூறப்பட்டது? முயற்சி இன்மையால் வறுமை வந்து வாட்டக்கூடாது என்னும் நோக்கில் மறுபடியும் அது இன்றி கொடுந்தீமை உண்டாகும் எனவலியுறுத்தவே மீண்டும் சொல்லப்பட்டது. அதனாலேயும் மக்கள் அயராமல் முயன்று முன்னேற வேண்டும் என்பது பாடலின் நோக்கம்.
'முயன்று கொண்டிருக்கும் போதே எதிர்பாராத பல செல்வம் வந்து சேரும்; முயற்சியில்லாதவன் அறியாமலே வறுமை வந்து சாரும்' எனவும் உரை கண்டுள்ளனர். முயற்சியின் பயனாகச் செல்வம் வரும் என்பதுதான் பாடலின் கருத்து. ஊழ்வினைப் பயனாக செல்வம் வரும் என்ற பொருளில் உள்ள உரைகள் ஏற்கத்தக்கனவல்ல.
இக்குறளிலுள்ள 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற தொடர் பழமொழி ஆகி விட்டது.

'திருவினை ஆக்கும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'திருவினை ஆக்கும்' என்ற தொடர்க்குச் செல்வத்தை உண்டாக்கும், செல்வம் தரும், செல்வத்தை உளதாக்கும், செல்வத்தினை வளர்க்கும், செல்வத்தைப் பெருகச் செய்யும், செல்வநிலையை உண்டாக்கும், செல்வத்தினை மேன்மேல் பெருக்கும், செல்வம் அதிகமாகும், பலவகைச் செல்வங்களையும் தரும், செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

உரையாசிரியர்கள் அனைவரும் திரு என்பதற்கு செல்வம் என்றும் 'திருவினை' என்பதற்கு 'செல்வத்தினை' எனப் பொருள் கொண்டு திருவினை ஆக்கும் என்பதற்கு செல்வத்தினை உண்டாக்கும் என்று பொருள் கூறினர். தேவநேயப்பாவாணர் 'செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவும் செய்யும்' என ஆக்குதலுக்குப் புதிதாக உண்டாக்குதலும், உள்ளதையும் உண்டாக்கியதையும் வளர்த்தலுமாகிய இரண்டையும் செய்யும் என இரு பொருள் கண்டுள்ளார்.

'முயற்சி திருவினை யாக்கும்' என்னும் தொடர்க்கு முயற்சியின் பயனாய் திரு ஆகிய செல்வம் சேர்க்கும் என்றும் முயற்சியின் பயனாய் செயலூக்கம் கிட்டும் என்றும் சிந்திக்க இடமுள்ளது; திருவினை என்ற சொல்லை திரு + வினை அதாவது 'சிறப்பான செயல்' என்ற பொருள்வரும்படி பிரிக்க இயலும். அதுபோல் இந்தக்குறளிலுள்ள 'இன்மை' என்பதற்கும், செயலின்மை என்றும் கொள்ளலாம் எனச் சிலர் கருத்துரைப்பர். இவர்கள் இக்குறளுக்கு 'முயற்சி ஒருவருக்கு சிறப்பான செயல்களை நடத்தி முடிக்க உதவும்; முயற்சி இல்லாவிடில் செயல்கள் இல்லாமையைப் புகுத்தி விடும்' எனப் பொருள் கூறுவர்.
மு கோவிந்தசாமி திருவினையாக்கும் என்பதற்குச் 'சிறந்த வினைகளை முடிக்கும்' என உரை செய்துள்ளார். மேலும் இவர் முயற்று இன்மை புகுத்தி விடும் என்றதற்கு 'முயற்சியின்மை நற்செயலையும் தீயதுள் புகுத்திவிடும்' எனப்பொருள் கூறுகிறார். முயற்சியால் செல்வம் சேரும்; முயற்சியில்லா இடத்து வறுமை குடிபுகும் என்று பின்வரும் குறட்பாவிலும் (617) கூறப்பட்டுள்ளதால் இவ்வுரைகளும் கருதற்குரியன.

'திருவை ஆக்கும்' என்ற தொடரே செல்வத்தை உண்டாக்கும் என்றதை உணர்த்தும். பின் ஏன் 'திருவினை ஆக்கும்' எனச் சொல்லப்பட்டது? என்பதும் சிந்தித்தற்குரியது.

முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவனது ஆள்வினையுடைமை அவனது செல்வநிலையை முடிவு செய்யும்.

பொழிப்பு

முயற்சி செல்வநிலையை வளர்க்கும். முயற்சி செய்யாமை வறுமையுட் சேர்த்துவிடும்