இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:618)

பொழிப்பு (மு வரதராசன்): நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

மணக்குடவர் உரை: யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது.
அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
(அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)

இரா சாரங்கபாணி உரை: உறுப்புகளின் ஊனம் எவர்க்கும் பழியாகாது. ஆனால் அறிவினால் அறியப்படுவன அறிந்து முயற்சி செய்யாமையே பழியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.

பதவுரை:
பொறியின்மை- மெய் வாய் கண் மூக்கு செவி முதலிய உறுப்புக்களில் குறைவுடைமை; யார்க்கும்-எவர்க்கும்; பழியன்று-குற்றமாகாது; அறிவறிந்து-அறிய வேண்டுவனவற்றை அறிந்து; ஆள்வினை-முயற்சி; இன்மை-இல்லாமை; பழி-குற்றம்.


பொறியின்மை யார்க்கும் பழியன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது;
பரிப்பெருமாள்: யாவர்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது;
பரிதி: மெய் வாய் கண் மூக்கு செவி குறைந்தது பங்கமல்ல;
காலிங்கர்: தாம் ஒரு கருமத்தை முயலின் அது விதி இடத்தால் தமக்கு ஆக்கம் இல்லாமை மன்னவர்க்கும் மற்று யாவர்க்கும் பழியாவது அன்று;
காலிங்கர் குறிப்புரை: பொறி இன்மை என்பது விதி இல்லாமை என்றது.
பரிமேலழகர்: பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது;

'யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'மெய் வாய் கண் மூக்கு செவி குறைந்தது பங்கமல்ல' என உரை தந்தார். காலிங்கரும் பரிமேலழகரும் 'விதி இல்லாமை யாவர்க்கும் பழியாவது அன்று' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை', 'புத்தி கூர்மை இல்லாதிருப்பது யாருக்கும் குற்றமல்ல', 'முயற்சிக்குரிய பயனைத் தருகின்ற விதியில்லாமை ஒருவருக்குங் குற்றமாகாது', 'உறுப்புக் குறைபாடுடைமை யார்க்கும் பழியைத் தருவது அன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உறுப்புக் குறை எவர்க்கும் குற்றமாகாது என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது.
மணக்குடவர் குறிப்புரை: அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: அறிவன அறிந்து முயற்சி இன்மையே குற்றமாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
பரிதி: அறிவின்மை பங்கம் என்றவாறு.[பங்கம்-குறைவு]
காலிங்கர்: மற்று யாதோ பழியாவது எனின்; தமக்குச் செய்யத் தகுவதாகத் தாம் அறியும் கருமம் யாது, அதனையே குறிக்கொண்டு அறிந்து மற்று அதன்கண் முயல்வது ஓர் முயற்சி இல்லாமையே ஒருவர்க்குப் பழி ஆவது என்றவாறு.
பரிமேலழகர்: அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
பரிமேலழகர் குறிப்புரை: அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றம்' என இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'அறிவின்மை குறையாகும்' என்றார். காலிங்கர் 'செயலில் குறிக்கொண்டு முயற்சி இல்லாமை பழி' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'அறியவேண்டுமவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழி' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவை வளர்த்து முயலாமையே பழி', 'ஆனால் புத்தி கூர்மை இருந்தும் முயற்சியில்லாமல் (சோம்பி) இருப்பது குற்றம்', 'ஒன்றை முயலுங்கால் அறிய வேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றமாகும்', 'அறிய வேண்டுவனவற்றை அறிந்து வினை செய்யாமையே பழியாவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிய வேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுப்புக் குறை எவர்க்கும் குற்றமாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றம் என்பது பாடலின் பொருள்.
'பொறி' குறிப்பது என்ன?

உடல் ஊனம் யார்க்கும் குற்றம் ஆகாது. அறியுமளவும் அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே குற்றமாகும்.

உடல் உறுப்புக் குறை ஒருவர்க்கு பழியன்று; உடலுரம் இருந்தும், அறிய வேண்டியனவற்றை அறிந்து செயல் செய்து ஆள்வினையின்றி அதாவது முயற்சி இல்லாமல் வாழ்வதே பழியாகும் என்கிறார் வள்ளுவர் இங்கு. ஐம்பொறிகளின் திறன் குறைபாடு இருந்தாலும் முயன்று உழைத்து வாழ்பவர் எவரும் பழிக்குரியவரல்லர். முயற்சி என்பது மாந்தர் எல்லார்க்கும் பிரிவில்லா இயற்கை நலமாம். அறிவறிந்து ஆள்வின என்றது உடற்குறை இருந்தாலும் மற்ற வகையில் சிந்தித்து முயல்வதைக் குறிப்பது. இதனால்தான் 'மாற்றுத் திறனுடையோர்' என்ற பெயர் தோன்றியது.

பிறவியிலோ பின்னிலையிலோ உடல் ஊனமாகிவிட்டால் தம் நிலை எண்ணி, மனம் நோவாமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் இக்குறள் அமைந்துள்ளது. இருக்கும் உறுப்புக்களைக் கொண்டு முயன்று முன்னேறாவிட்டால் அது பழியாகும் என்கிறது இப்பா. உயர்நிலை மட்டும் வற்புறுத்தி, உலகநிலை கூறாது விடுபவரல்லர் வள்ளுவர். உடல் ஊனம் மாந்தர் ஆற்றலுக்கு உட்படாச் செயல். உடற்குறையை மாந்தர் எவரும் பழியாகக் கொள்ளார். உருவு கண்டு எள்ளாமை வேண்டும்... (குறள் 667 பொருள்: உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது....) என அறிவுறுத்துபவர் வள்ளுவர். உறுப்புக் குறையுடையோர் யாரும் அறிவற்றவர் அல்லர்; அவர்கட்குச் செய்திறன் இல்லை என்பதும் இல்லை, நிறையுடலே செயலாற்ற அரிய பெருந்துணை என்றோ குறையுடல் செயலுக்கு இடையூறோ என்பதும் அன்று. பெற்ற உடம்பு குறையாக இருந்தாலும் நல்வாழ்வுக்கு அறிவாட்சியும் முயற்சியுமே அடிப்படை. உடற்குறை வாழ்வுக் குறையன்று என்று சொல்லியபின் பெற்றது கொண்டு அற்றது நிரப்பும் அறிவாற்றல் அன்னார்க்கும் உண்டு என்பதால், 'அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி' என்று பழியின் இருப்பிடம் காட்டப்படுகிறது. உடல் ஊனம் குறையல்ல; அறிவு உண்டு என்பதை அறிந்து அதனை ஆள விழையாததே குறை என்று கூறப்படுகிறது; பொறி புலன்களில் குறைபாடு ஏற்பட்டாலும் ஆள்வினை மிக்கவர்களாக மாந்தர் வாழத் தூண்டுகிறார் வள்ளுவர்.
ஆள் வினையின்மை பழி என்றதனால், விடாது முயல்க என்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
‘அறிவறிந்து ஆள்வின’ என்பதற்குக் குறைந்த நேரத்தில் அதிகப் பயன் விளைவிக்கும் அறிவுடன் கூடிய உழைப்பு எனப் பொருள் கூறுவார் குன்றக்குடி அடிகளார்.

பெரும்உடற்குறைகளால் பாதிக்கப்பட்டிருந்த ஹெலன் கெல்லர் (Helen Keller), ஸ்டீபன் ஹாகின் (Stephen Hawking) ஆகியோர் விடாமுயற்சி கொண்டு உழைத்து உலகம் போற்றும் வெற்றியாளர்கள் ஆயினர். இவர்கள் போன்றோரே அறிவறிந்து ஆள்வினை உடையோர் ஆவர்.

'பொறி' குறிப்பது என்ன?

'பொறி' என்ற சொல்லுக்குப் புண்ணியம், மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகள், விதி, களம், கருவிகள் வாய்க்காமை, நன்மை விளைக்கும் ஊழ், உடல் உறுப்புக்கள், அறிவு, செல்வம், முயற்சிக்குரிய பயனைத் தருகின்ற விதி, முயற்சிக்குத் தகுந்த பலனைத் தருகின்ற விதி, மேன்மைக்கு ஏதுவாகிய ஊழ் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

முயற்சிச் சிறப்பை குறளில் பல இடங்களில் விளக்கியுள்ளார் வள்ளுவர், இக்குறள் முயற்சி குன்றுதற்குரிய சூழல் எதுவாயிருப்பினும் அதனால் மனம் தளரக் கூடாது எனும் பேரறத்தை விளக்க வந்தது. பொறி என்பது உறுப்பு, விதி, ஊழ், முதலிய பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாய் அமைந்துள்ளது.
பொறி ஐம்பொறிகளின் பொதுப்பெயர். அது அவற்றால் அறியப்படும் அறிவைக் குறிக்கும். இங்கு பொறி என்பதற்கு உடலுறுப்பு என்பதுவே பொருத்தமான பொருள். இதற்கு ஐம்பொறி எனப்பொருள் கொள்ளாமல், ஊழ், விதி, அறிவு, செல்வம் என்று பொருள் சிலர் கொள்கின்றனர். குறளில் 'பொறி' என்ற சொல் பொறிவாயில் ஐந்தவித்தான்...(குறள் 6) என்றும் கோளில் பொறியிற் குணமிலவே... (குறள் 9) எனவும் மற்ற இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடங்களில் வரும் பொறி என்ற சொல், உடற் பொறிகளையே குறிப்பிடுகிறது. இக்குறளை அடுத்து வரும் இரண்டு பாடல்களில் (குறள் 619, 620) தெய்வம், ஊழ் எனக் குறிப்பிடும் வள்ளுவர், இக்குறளிலும் (618) ஊழ், விதி என்ற கருத்தையே சொல்லியிருக்க வழியில்லை. எனவே இக்குறளில் வரும் 'பொறி' எனும் சொல்லுக்கு உடற் பொறி என்று பொருள் கொள்வதே சிறக்கும்.

'பொறி' என்பது இங்கு உடல் உறுப்பு குறித்தது.

உறுப்புக் குறை எவர்க்கும் குற்றமாகாது; அறிய வேண்டியவற்றை அறிந்து இடைவிடாது முயலாமை குற்றம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆள்வினையுடைமையில் ஊனம் இருக்கக்கூடாது.

பொழிப்பு

உடல் உறுப்புகளின் ஊனம் எவர்க்கும் குற்றமாகாது; அறிவினால் அறியப்படுவன அறிந்து முயற்சி செய்யாமையே குற்றம்.