இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:615)

பொழிப்பு (மு வரதராசன்): தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

மணக்குடவர் உரை: தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம்.
ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.

பரிமேலழகர் உரை: இன்பம் விழையான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
(இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினை செய்து முடித்தலையே விரும்புபவன் தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவரைத் தாங்கும் தூணாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பதவுரை:
இன்பம்-மகிழ்ச்சி; விழையான்-விரும்பாதவன்; வினை-செயல்; விழைவான்-விரும்புபவன்; தன்-தனது; கேளிர்-நண்பர், உற்றார்; துன்பம்-துயரம்; துடைத்து-நீக்கி; ஊன்றும்-தாங்கும்; தூண்-தூண்.


இன்பம் விழையான் வினைவிழைவான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன்;
பரிப்பெருமாள்: தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன்;
பரிதி: தான் இன்பம் விரும்பாமல் பிறர்க்கே இன்பம் தருவான்;
காலிங்கர்: என்றும் தனக்கு ஓர் இன்ப நுகர்ச்சியை விரும்பானாகிக் கருமத்தின்கண் ஆள்வினையுடைமையையே விரும்புவான் யாவன்;
பரிமேலழகர்: தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்;
இஃது ஏகதேச உருவகம், காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.

'தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பம் நாடாது காரிய முடிவை நாடுபவன்', 'இன்பத்தை விரும்பாதவனாய்த் தொழில் புரிவதையே விரும்புபவன்', 'சுகபோகங்களில் ஆசை கொள்ளமாட்டான், காரியங்களைச் செய்து முடிக்கவே ஆசையுள்ளவன்', 'தனக்கு இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் முடித்தலையே விரும்புகின்றவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்பம் நுகர்தலை விரும்பாதவனாகித் தான் கொண்ட தொழிலைச் செய்வதில் இன்பம் காண்கின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம்.
மணக்குடவர் குறிப்புரை: ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.
பரிப்பெருமாள்: தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவர் தளராமல் தாங்குவதொரு தூண் ஆவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.
பரிதி: தன் உறவின் முறையாரது துன்பம் துடைக்குந் தூண் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவனே கேளிராகிய நட்டோர்க்கும் சுற்றத்தார்க்கும் சான்றோர் முதலிய அனைவோர்க்கும் தாளாண்மை நிலைபெறுத்தித் துன்பத்தைத் துடைத்து ஊன்றும் தூண் என்றவாறு.
பரிமேலழகர்: தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று.

'தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றத்தின் துன்பம் தாங்கும் தூணாவான்', 'தன் சுற்றத்தினராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்', 'அப்படிப்பட்டவன் தன்னுடைய பந்துமித்திரர்களின் துன்பங்களைப் போக்கி அவர்களை ஆதரிக்கும் சுமைதாங்கி போன்றவன்', 'தன் சுற்றத்தாரது துன்பத்தினை நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன் சுற்றத்தின் துன்பம் நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்பம் நுகர்தலை விரும்பாதவனாகித் தான் கொண்ட தொழிலைச் செய்வதில் இன்பம் காண்கின்றவன் தன் சுற்றத்தின் துன்பம் நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான் என்பது பாடலின் பொருள்.
தனது இன்பத்தைத் துறந்துதான் ஒருவன் உதவமுடியுமா?

இன்பம் அனுபவித்தலை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட செயலின்மெல் கருத்தாய் இருப்பவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துயரத்தை நீக்கி அவர்களைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான்.

முயற்சியில்லாதவன் ஒருவருக்கும் உதவ இயலாது என்று இதற்கு முன் சொல்லப்பட்டது, முயற்சியுடையவன் சுற்றத்துக்கு உதவும் பெற்றிகொண்டவனாயிருப்பான் என்று இங்கு கூறப்படுகிறது.
இன்பத்தில் மட்டுமே நாட்டம் கொள்ளாமல், செயலில் முனைப்போடு இருப்பவன் தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்கும் தூண் போல் நிற்பான். செயல்மேல் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் பொறுப்புள்ளவனாக இருப்பான்; பொருள் ஈட்டுவதில் வெற்றிபெறுவனாயும் இருப்பான். நல்ல வருவாய் உள்ளவர்களாலேதான் மற்றவர்க்கு உதவி செய்யமுடியும். செல்வம் பெற்றாகிவிட்டது; பின் மிகுந்த அச்செல்வத்தை வைத்து ஒருவன் என் செய்வான். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் (வெற்றி வேற்கை (நறுந்தொகை) 3 பொருள்: பொருளுடையவர்க்கு அழகாவது, நல்ல சுற்றத்தைப் பாதுகாத்தல்) என்ற பழமொழி சொல்வதுபோல சுற்றத்தார் துன்பமுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல் செல்வமுடையோர்க்கு அழகாமாதலால் அவன் தன் சுற்றத்துக்கு உதவ முன் வருவான்,
பாடலிலுள்ள கேளிர் என்ற சொல் சுற்றம் அதாவது ஒருவனைச் சுற்றியிருப்பவர்களை அதாவது உற்றார், உறவின்முறையார், நண்பர் ஆகியோரைக் குறிக்கும். அவர்களது துன்பமாகிய பாரத்தை தாளாண்மையால் பொருள் உள்ளவனால்தான் தாங்க இயலும்.

உழைப்பை அஞ்சுதலும், எப்பொழுதும் இன்பத்தையே விரும்புதலும், முயற்சிக்குத் தடைகளாம். ஆதலால், ஆள்வினையாளன் அவற்றையொழித்து ஒழுகுவான் என்பதும் இக்குறளால் பெறப்படுகிறது.

காலிங்கர் உரை 'கருமத்தின்கண் ஆள்வினையுடைமையையே விரும்புவான், கேளிர் முதலிய அனைவர்க்கும், தாளாண்மை நிலைபெறுத்தி துன்பத்தைத் துடைத்து ஊன்றுந்தூண்' எனச் சொல்கிறது. இதன் பொருள் சுற்றத்தையும் முயற்சிக்கண் ஈடுபடச் செய்வதும், அதன் வாயிலாகத் துன்பம் துடைப்பதும் வினைவிழைவான் கடமையாகி, அவனைத்தூண் போன்றவனாகச் செய்கிறது என்பது. முயற்சியுடையவன் மேன்மேலும் முயன்று கேளிரைத் தாங்குவான் என்பதைக் காட்டிலும் அவர்களையும் 'தாளாண்மையில் நிலைபெறுத்துவான்' என்றும் அவர்கள் வாழ வகை செய்து தருவான் என்றும் அதாவது சுற்றத்தையும் முயற்சிக்கண் ஈடுபடுத்தி வழிவகுப்பான் என்று கூறுவதால் இவ்வுரை சிறக்கிறது.

தனது இன்பத்தைத் துறந்துதான் ஒருவன் உதவமுடியுமா?

'இன்பம் விழையான் வினைவிழைவான்' என்ற குறளின் முதற்பகுதிக்குத் தன் இன்பத்தை முற்ற நீக்கி செயலில் ஈடுபடுவன் என்ற பொருள்படும்படி உரையாசிரியர்கள் பலர் எழுதினர். மேலும் உழைக்கின்றவன் ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஓய்வை எண்ணினால் கேளிர் துன்பம் துடைக்க முடியாது என்ற கருத்தையும் இக்குறள் தருவதாகக் கூறினர். எனவே ஒருவன் தனது இன்பத்தைத் துறந்துதான் பிறர்க்கு உதவமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இன்பம் தேடுவது உலக உயிர்களின் இயல்பு. ஒருவகையில் இன்பம் வழிதான் உயிர்கள் இயங்குகின்றன எனக் கூறலாம். இன்ப நாட்டம் இன்றேல் உலக இயக்கம் இல்லை. எனவே இன்பம் வேண்டாம் எனக் குறள் கூறாது. இன்பம் விழையாதவன்தான் வினையை விழைவான் என்று இப்பாடலை வாசிக்காமல் 'இன்பம் மட்டுமே விழையானாகி வினைவிழைவான்' எனப் படித்தால் குறட்பொருள் எளிதாகும்.
இன்பத்தின் நிலைக்களன் எண்ணற்றவை என்றாலும் உடம்பின் இன்பம் தான் இங்கு பேசப்படுகிறது. ......முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619) என்று வள்ளுவரே கூறியது போல முயற்சி மெய்க்கு வருத்தந்தருவதுதான். தாளாண்மையாளன் மெய்வருத்தம் பார்க்கமாட்டானானாலும் அவனுக்கும் இன்பம் பெறும் உரிமை உண்டு. எந்த நேரமும் மெய்யின்பம் விரும்பாது - கேளிக்கை, பொழுதுபோக்கு என்று திரியாமல்- செயலில் கருத்திறுத்த வேண்டும் என்றுதான் இங்கு சொல்லப்படுகிறது.
இக்குறளுக்கான விரிவுரையில் பரிமேலழகர் 'காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும்' எனக் குறிக்கிறார். இதற்கு 'இன்பத்தை விழையாமல் இன்பவாயிலாகிய முயற்சியை இடைவிடாது மேற்கொள்பவன் எல்லாப்பயனும் எய்துவன். ஆகவே முயற்சியுடையவன் இன்பமும் எய்துவன்'' என விளக்கம் கூறுவர்.
ஓய்வு ஒழிவின்றி உழைக்க வேண்டும் என்றல்லாமல், கேளிர்க்காக மிகுதியும் உழைக்கவேண்டும் என்று பாடல் கூறுவதாகக் கொள்ள வேண்டும்.

இன்பம் விழைதல், வினை விழைதல் என்றிவை இருவேறு மனநிலைகள் என்றாலும் ஒன்று இருந்தால் மற்றது இல்லை என்பதாக இல்லை. இரண்டும் இணையாகவும் இருக்க முடியும்; இன்பம் நுகர்ந்துகொண்டே செயலில் முனைப்பு காட்டி வெற்றிகாண முடியும்.

இன்பம் நுகர்தலை விரும்பாதவனாகித் தான் கொண்ட தொழிலைச் செய்வதில் இன்பம் காண்கின்றவன் தன் சுற்றத்தின் துன்பம் நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆள்வினையுடைமையில் இன்பம் காண்பவன் பொறுப்பு, கடமை, உணர்வுகள் உள்ளவனாய் இருப்பான்.

பொழிப்பு

இன்பம் நாடாது தொழிலைச் செய்வதில் நாட்டம் கொண்டவன் சுற்றத்தின் துன்பம் நீக்கி அவர்களை நிலைபெறுத்துந் தூணாவான்.