இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0614



தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:614)

பொழிப்பு (மு வரதராசன்): முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

மணக்குடவர் உரை: முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்.
இஃது அறம் செய்யமாட்டானென்றது.

பரிமேலழகர் உரை: தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: முயற்சியில்லாதவன் பிறர்க்குதவுதல் என்பது பேடியின் கையிலுள்ள வாளாட்சி போல முடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.

பதவுரை:
தாளாண்மை-முயற்சி; இல்லாதான்-இல்லாதவனது; வேளாண்மை-உதவி செய்தல்; பேடி-கோழை; (ஆண்மை திரிந்த பெண்தன்மை மிகுந்தவர், பெண்தன்மை மிகுந்து பெண் என்றும் ஆண் என்றும் சொல்ல இயலாத தன்மையுடையவர் என்றும் கொள்வர்); கை-கை; வாளாண்மை-வாள் ஆளுதற்றன்மை; போல-போல; கெடும்-அழியும்.


தாளாண்மை இல்லாதான் வேளாண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல்;
பரிப்பெருமாள்: முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல்;
பரிதி: முயற்சியில்லாதவன் உபகாரியாந்தன்மை எப்படி என்றால்;
காலிங்கர்: தனது ஆண்மைக்கு உரிய முயற்சியினை இல்லாத மன்னவனது கைவண்மை எத்தன்மையதோ எனின்;
காலிங்கர் குறிப்புரை: வேளாண்மை என்பது யாவர்க்கும் வழங்கும் கை வண்ணம் என்றது.
பரிமேலழகர்: முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை;

'முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழைப்பில்லாதவன் யார்க்கும் உதவ முடியுமா?', 'முயற்சியில்லாதவன் பிறர்க்குதவுதல் என்பது', 'விடாமுயற்சியில்லாதவன் உபகாரியாக இருக்க முடியும் என்பது', 'முயற்சியில்லாதான் பிறர்க்கு உதவி செய்யும் தன்மை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முயற்சியில்லாதான் பிறர்க்கு உதவி செய்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

பேடிகை வாளாண்மை போலக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறம் செய்யமாட்டானென்றது.
பரிப்பெருமாள்: படைகண்டாலஞ்சுமவன் கையில்வாள் பிடித்தாற்போலக் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறம் செய்யமாட்டானென்றது.
பரிதி: பேடி கையில் வாள் ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: உறையகத்து இருந்த வாளாண்மைபோலக் கெடும் என்றவாறு.
காலிங்கர் மாற்றுரை: இனி மற்று இவ்வாறும் அன்றி, ஆண்மகன் அல்லாத பேடி கைப்பற்றின வாள் ஆட்சிபோல ஆள்வினை முயற்சியும் மாற்றார்மேல் வழக்கும் அன்றிக் கெட்டு நின்றாற்போலப் பொருவில் முயற்சியும் பொலிவுறு வழக்கமும் இன்றிக் கெடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வேளாண்மை என்பது யாவர்க்கும் வழங்கும் கை வண்ணம் என்றது. பேடிகை என்பது வாளினது உறை என்றது. வாளாண்மை என்பது வாள் ஆட்சி என்றது. [பேடிகை-பெட்டி அல்லது உறையை யுணர்த்தும் (அகத்திய நிகண்டு)]
பரிமேலழகர்: படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.

உரையாளர்கள் அனைவரும் 'வாளாண்மை போலக் கெடும்' என்பதற்கு கைவாள் பிடித்தாற் போலக் கெடும் என்ற பொருளிலேயே உரைகூறினர். பேடி என்ற சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் படைகண்டால் அஞ்சுபவன் என்று பொருள் கூறினர். பரிமேலழகரும் அங்ஙனமே. பரிதி வாளா 'பேடி' என்றார். காலிங்கர் பேடி என்ற சொல்லையும் கை எனபதையும் இணைத்து பேடிகை எனக் கொண்டு வாளினது உறை எனப் பொருள் கொள்கிறார்; உறை என்ற பொருள் அகத்திய நிகண்டில் இருப்பதாக தண்டபாணி தேசிகர் குறிக்கிறார். காலிங்கர் தந்த மாற்று உரை மற்றவர்கள் கூறியது போன்ற பொருளிலே உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'பேடி பகைவர்முன் வாள் வீச முடியுமா?', 'பேடியின் கையிலுள்ள வாளாட்சி போல முடியாது', 'பயங்கொள்ளியான பேடி ஒருவன் வாளேந்தி, பகைவரை வெல்ல முடியும் என்பதைப் போன்று பயனற்றதாகும்', 'போரைக்கண்டால் அஞ்சும் பேடி தன் கையில் உள்ள வாளாளும் தன்மைபோல இல்லையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேடியின் கையிலுள்ள வாளாட்சி போலக் கெடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முயற்சியில்லாதான் பிறர்க்கு உதவி செய்தல் பேடியின் கையிலுள்ள வாளாட்சி போலக் கெடும் என்பது பாடலின் பொருள்.
'பேடி' குறித்தது என்ன?

முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவி செய்ய எண்ணுதல், கோழை தன் கையில் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல நிறைவேறாத செயலாகவே முடியும்.

முயற்சியில்லாதவனது செயலின்மை நிலை விளக்கப்படுகிறது. செயலின்மை செல்வமில்லாததால் விளைந்தது. செல்வமின்றி அனைவர்க்கும் உதவ நினைப்பது கோழை ஒருவன் வாள் வீச எண்ணுவதற்கு ஒப்பாகும். போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையில் வாள் இருந்தும் என்ன பயன்? அவனிடத்து எந்த ஆண்மைச் செயலும், வீரச் செயலும் தோன்றாது. அச்சமுள்ள கோழையாதலால் வாளைத்தொடவே நடுங்குவான், அதைக் கையில் எடுக்க விரும்பினாலும் அதைக்கொண்டு அவனால் ஒன்றும் செய்ய இயலாதவனாய் இருப்பான்- அவன் கையில் உள்ள வாள் இருப்பதால் என்ன பயன்? அதுபோல முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவுதல் இயலாது. முயற்சியில்லாதவனிடம் வளம் ஒன்றும் இருக்காது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். வளமற்றவனிடம் ஒன்றுமில்லாவிட்டால் அவனால் எப்படிப் பிறர்க்கு உதவமுடியும்? கோழை ஒருவன் போர்க்களத்தில் எப்படி வாள் சுழற்றமுடியாதோ அதுபோல் முயற்சியற்றவன் விரும்பினாலும் மற்றவர்க்கு உதவ முடியாது.

'பேடி வாளைப் பயன்படுத்துதல் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உதவும் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம்' என்பது இக்குறளுக்கான பரிமேலழகரின் நயமான உரை.
பேடிகைவாள் பேடிக்குப் பயன்படாமை மாத்திரமேயன்றிப் பிறரால் தம் உயிர் நீக்குங் கருவியாகவும் பயன்படுதல்போல, வருவாயில்லாத வேளாண்மையும் இருந்த பொருளையும் விரைவில் அழிக்க வழியாகும் என்பதாம் என இப்பாடலுக்கு விளக்கம் தந்தார் தண்டபாணி தேசிகர். பேடியின் கையிலிருக்கும் வாளைப் பகைவர் பிடுங்கி அதனாலேயே அவனை மாய்ப்பர் என்கிறார் இவர்.

'பேடி' குறித்தது என்ன?

பேடி என்ற சொல்லுக்குப் படைகண்டால் அஞ்சுமவன், பேடி, படை கண்டால் அஞ்சும் பேடி, பயங்கொள்ளியான பேடி, எதற்கும் அஞ்சும் கோழை, போரைக்கண்டால் அஞ்சும் பேடி, போருக்கு அஞ்சும்பேடி என் உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

பேடி என்ற சொல்லுக்குக் கோழை எனப்பொருள்பட மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'படைகண்டாலஞ்சுமவன்' என்று உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் வாளா பேடி என்று பொழிப்பில் கூறியுள்ளனர். பரிமேலழகர் சிறப்புரையில் 'பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும்' என்ற பகுதியில் 'உடையாள்' எனக் குறிப்பதால் பெண்மைத்தன்மை மிகுந்தவரையே இவர் குறிக்கிறார். காலிங்கர் தனது முதலுரையில் 'பேடிகை' எனக் கூட்டி 'வாளின் உறை' எனப் பொருள்படும்படும்படி அமைத்தார். இவ்வுரை 'உறையகத்து இருந்த வாளைப் போலும்' பயன்படாது எனக் கூறுகிறது. ஆனால் இவரது மாற்றுரையில் 'ஆண்மகன் அல்லாத பேடி' எனப் பேடிக்கு விளக்கமும் சொல்லியுள்ளார்.

பேடி என்ற சொல் ஆணிலக்கணமும் பெண்ணிலக்கணமும் விரவி ஒருபாலும் நிரம்பாதவரைக் குறிக்கும் என இலக்கண நூல் கூறும்.
பழம் இலக்கியங்கள் பலவற்றிலும் இச்சொல் பயின்று வந்துள்ளது.
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி ஆடலும் (சிலப்பதிகாரம், கடலாடுகாதை, 57 பொருள்: ஆண்மைத் தன்மையில் திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய பேடென்னுங் கூத்தும்) என்று சிலம்பில் பேடி கூறப்படுகிறது.
மணிமேக கலைதன் மதிமுகம் தன்னுள்
அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய
கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்
படையிட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
(மனிமேகலை, 3 மலர்வனம் புக்க காதை, 20-25 பொருள்: மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள்அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ? அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ.) என மணிமேகலைக் காப்பியத்தில் 'மணிமேகலையின் அழகைக் காணும் ஆண்கள் மயங்கிவிடுவர். அவ்வாறு மயங்காது இருப்பவர்கள் பேடியர் மட்டுமே' எனச் சுதமதி கூறுவதில் பேடியர் பேசப்படுகின்றனர். மேலும் நாலடியாரில் பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ, கண் அவாத் தக்க கலம் (நாலடி 251 பொருள்; பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ) என்ற இடத்தும் சீவக சிந்தாமணியில் இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம் (சீவக சிந்தாமணி கோவிந்தையார் இலம்பகம், 443 ) என்ற இடத்திலும் இச்சொல் ஆளப்பட்டது.

ஆண்மை குறைந்து பெண்மை மிகுந்திருப்பவள் பேடி எனவும் பெண்மை குறைந்து ஆண்மை மிகுந்திருப்பவன் பேடன் எனவும் அழைக்கப்படுவர். தேவநேயப் பாவாணர் ஆண்தன்மையை விரும்பும் பெண் பேடி என்றும் பெண்தன்மையை விரும்பும் ஆண் பேடன் எனக் குறித்துள்ளார். மேலும் இவர் 'இப்பாகுபாடு பாலுறவு பற்றியதேயன்றிப் போர்மறம் பற்றிய தன்று .பேடியருள் போர்மறம் உள்ளவரும் உளர்; இல்லாதவரும் உளர். இங்குக் குறிக்கப்பட்ட பேடி அஃதில்லாத வகையென அறிக' தனது உரையில் அறிவித்துள்ளார்.
பேடி என்பவர் இன்று திருநங்கை எனவும் மூன்றாம் பாலினத்தவர் எனவும் கூறப்படுவராவர் (பேடன் திருநம்பி எனப்படுகிறார் என்பர்).

நாமக்கல் இராமலிங்கம் பேடி என்றதற்குப் பயங்கொள்ளி எனப் பொருள் கூறுவார். தொல்லாசிரியர்கள் அஞ்சுபவன் என்ற பொருளே கொண்டனர். பாலியல் திரிபு இருந்தாலும் அனைவரும் கோழைத்தனம் கொண்டவர்களைப் பற்றியே பேசுகின்றனர். வாள் தொடர்பான பிற குறள்களிலும் வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சுபவர்க்கு (அவைஅஞ்சாமை 726.பொருள்: அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?) என்றும் பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சும் அவன்கற்ற நூல் (அவைஅஞ்சாமை 727 பொருள்: அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது) .என அஞ்சும் குணம் கொண்டவர் பற்றியே வள்ளுவர் சொல்லியுள்ளார்.

பேடி என்பதற்குக் கோழை எனப் பொருள் கொள்வது பொருத்தம். முயற்சி இல்லாதவன் செய்ய எண்ணும் உதவி எதற்கும் அஞ்சும் பேடி ஒருவனது கையிலுள்ள படைக்கலம் போலச் செயலின்றி ஒழியும் என்பது கருத்து.

முயற்சியில்லாதான் பிறர்க்கு உதவி செய்தல் பேடியின் கையிலுள்ள வாளாட்சி போலக் கெடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வினையுடைமை இல்லாதவன் உதவிசெய்தல் இயலாது.

பொழிப்பு

முயற்சியில்லாதவன் பிறர்க்குதவுதல் என்பது பேடியின் கை வாள்வீசுவது போலக் கெடும்.