இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:613)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

மணக்குடவர் உரை: முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்.
இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.

பரிமேலழகர் உரை: தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று - முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு - எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.
(பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறர்க்கு உதவும் பெருமித எண்ணம் உழைக்கின்ற பெரும்பண்பால் உண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு.

பதவுரை:
தாளாண்மை-முயற்சி; என்னும்-என்கின்ற; தகைமைக்கண்-பெரும்பண்பின் இடத்து; தங்கிற்றே-நிலைபெற்றதே; வேளாண்மை-உதவி செய்தல்; என்னும்-என்கின்ற; செருக்கு-பெருமிதம்.


தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது;
பரிப்பெருமாள்: முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது;
பரிதி: தாளாண்மை என்னும் முயற்சியாலே;
காலிங்கர்: அரசர்க்கு ஆள்வினையுடைமை என்னும் அத்தகுதிப்பாட்டின்கண் தங்கியது;
பரிமேலழகர்: முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது;

'முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'ஆள்வினையுடைமை என்னும் தகுதிப்பாட்டின்கண் தங்கியது' என்றார். பரிமேலழகர் 'முயற்சி என்னும் உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பிலேதான் நிலைத்துள்ளது', 'விடாமுயற்சி உள்ளவர்களிடத்தில்தான் உள்ளது', 'முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த தன்மையினாலே நிலைபெறுவதாகும்', 'முயற்சி என்று சொல்லப்படுகிற உயர்ந்த குணத்தின் கண்ணே நிலை பெற்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பிலேதான் நிலைத்திருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

வேளாண்மை என்னும் செருக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
பரிப்பெருமாள்: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.
பரிதி: வேளாண்மை என்னும் பிரியம் ஆகையால் உத்தியோகங் கண்ணாக இருப்பான் என்றவாறு. [உத்தியோகம் -முயற்சி]
காலிங்கர்: யாது எனின், யாவர்க்கும் உகப்ப வழங்கும் உபகாரம் என்று எடுத்துரைக்கப்பட்ட பெரிய செருக்கு என்றவாறு. [உகப்ப-மகிழ(உவப்ப என்பதன் திரிவு)]
பரிமேலழகர்: எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் கைகூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர்மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.

'பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்/பெரிய செருக்கு/மேம்பாடு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லார்க்கும் உதவுதல் என்னும் பெருமித உணர்வு', 'உலகத்தில் உபகாரம் செய்வதன் சிறப்பெல்லாம்', 'எல்லோருக்கும் உதவிசெய்தல் என்னும் மேம்பாடு', 'எல்லார்க்கும் உதவி செய்தல் என்னும் மேம்பாடு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உதவி செய்தல் என்னும் தகைமை, முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பிலேதான் நிலைத்திருக்கிறது என்பது பாடலின் பொருள்.
இங்குள்ள 'தகைமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வு, முயற்சி என்னும் பெரும்பண்பிலே நிலைத்திருக்கிறது.

வேளாண்மை என்பது பிறர்க்கு உதவி செய்யும் பண்பு குறித்தது. மற்றவர்க்கு நன்மை செய்து வாழ்தல் மேம்பட்டதாகும். அவ்வாழ்வு பெருமைக்கு உரியது. வள்ளுவர் 'வேளாண்மை என்னும் செருக்கு’ என்று சொல்கிறார். செருக்கு என்ற சொல் பொதுவாக ‘தீவினை யென்னுஞ் செருக்கு’ என்பது போல பெருமிதமற்ற பொருளிலே வழங்கிவருவது. இங்கு அக்குணம் சிறப்பு தோன்ற உரைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெருமை உண்டாக வேண்டுமானால் பொருள் தேவை. ஆள்வினையுடையாருக்கே பொருள் கைகூடும். விடாமுயற்சி இல்லாதவனுக்குச் செல்வம் மேம்படுவது அரிது. எனவே தாளாண்மை அதாவது முயற்சி உடைமை என்னும் பெரும்பண்பு உடையவர்க்கே எல்லார்க்கும் நன்மை செய்யும் பெருமையை அடையமுடியும். தாளாண்மை இல்லாவிட்டால் வேளாண்மையில் வெற்றி பெற இயலாது, ஆகையால் வேளாண்மை என்று சொல்லப்படுகின்ற மேலான தன்மை, தாளாண்மை என்னும் சிறந்த தன்மையில் தங்கிற்று எனச் சொல்லப்பட்டது.

இங்குள்ள 'தகைமை' என்ற சொல்லின் பொருள் என்ன?

'தகைமை' என்ற சொல்லுக்கு நன்மை, முயற்சி, தகுதிப்பாடு, உயர்ந்த குணம், உயர்ந்த பண்பு, உயர்ந்த இயல்பு, பெரும்பண்பு, உயர்ந்த தன்மை, பெருமை, மேம்பாடு, தகுதிப்பாடு என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
‘தகைமை’ என்பதற்கு உயர்ந்த குணம், பெருமை என்னும் பொருள்கள் பொருந்துவன.

'தகைமை' என்ற சொல்லுக்குப் பெரும்பண்பு என்பது பொருள்.

உதவி செய்தல் என்னும் பெருமித உணர்வு, முயற்சி என்று சொல்லப்படும் உயர்ந்த பண்பிலேதான் நிலைத்திருக்கிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆள்வினையுடைமை நன்மைகள் செய்யத் துணை செய்யும்.

பொழிப்பு

உதவி செய்தல் என்னும் பெருமித எண்ணம் முயற்சி என்கிற உயர்ந்த பண்பிலேதான் நிலைத்துள்ளது