ஒப்புரவு என்பதற்கு பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம், இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல், ஒத்துப்போகும் மெல்லியல்பு என அகராதி பொருள் தருகிறது. ஒ+புரவு எனப் பிரித்து 'மன்பதைக்கு ஒத்த நிலையில் கொடை செய்தல்' என்பார் வ சுப மாணிக்கம். 'ஒப்புரவறிதல் உலகநடையை அறிந்து செய்தல். உலகநடையறிதலாவது உலகம் நடைபெறுவது மக்கள் பலர்கூடி ஒருவர்க்கொருவர் உதவி வாழ்தலாற்றான் என்பதையறிதல்' என விளக்குவார் நாகை சொ தண்டபாணிப் பிள்ளை. இவ்வாறு ஒப்புரவு என்ற சொல்லுக்கு உதவி, வள்ளன்மை, உலகநடையறிந்து செய்தல் எனப் பொருள் கூறுவர்.
..........................................................உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே! (நற்றிணை 220 பொருள்: ...இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம் உலகநடை அறிந்திருப்பாரேயாயின், எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?) என்ற சங்கப்பாடலில் ஒப்புரவு என்ற சொல் 'உலக நடையறிந்தவர்' என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது.
ஒப்புரவு என்பதை பொதுநன்மைக்காகச் செய்யும் பயன்கருதாத தொண்டு என விளக்கலாம். உலகமெல்லாம் ஒன்று எனக் கருதி ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது ஒப்புரவாகும். இது தொடர்புடையாளரிடம் செலுத்தும் அன்பு போன்றதோ அல்லது இரக்கப்பட்டு உதவுவது போன்றதோ அல்ல. உலகமெல்லாம் ஒரு குடும்பமாய் ஒத்து இயங்கும் தன்மையை அறிந்து கொண்ட மேலான அன்பின் உந்துதலால் எழும் உதவும் தன்மை ஆகும். மனித வாழ்க்கை இரு நிலைகளில் அமைகின்றது. ஒன்று, தான், தன் குடும்பம் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்வது; மற்றொன்று பொதுநலமுடையவனாக வாழ்வது. ஒப்புரவுச் செயல்கள் உலக நடப்பை அறிந்து, அவ்வப்போது அங்கங்கு செய்யப்படும் பொதுநலப் பணிகள் அனைத்தும் ஆகும். இவை காலத்தினாற் செய்தனவும், பயன் தூக்கார் செய்தனவும், செய்யாமற் செய்தனவும் ஆகத் தேவைக்கு இன்றியமையாமையன இயற்றப்படுவன. உதவியுள் பொருள் செலவிடுதல், சோறுஈதல் மட்டும் அன்று. காலம் ஒதுக்குதல், ஆற்றல் வழிச் செய்யும் பணிகள் போன்றவையும் அடங்கும்.
நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொண்டு கூட்டுறவான வாழ்வு தோன்றுகின்ற போது ஒப்புரவு நிகழ்கிறது. ஒப்புரவு செய்வதற்கு ஒருவர் செல்வம் படைத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. பொதுத்தொண்டு செய்ய ஒருவர் தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவழிக்க முன்வந்தாலே அவர் ஒப்புரவாளர் ஆகிறார். இக்காலத்தில் நிறுவன அமைப்புகளின் வழியும் நிறைய ஒப்புரவு பணிகள் நடைபெறுகின்றன. NGO (Non-Governmental Organization) என அறியப்படும் நிறுவனங்களில் விருப்பார்வத்தொண்டர் (volunteer) ஆக ஊதியம் எதுவும் பெறாமல் முழுநேர/பகுதி நேரப் பணியாகச் ஒப்புரவுகள் ஆற்றப்படுகின்றன. கழிவுகளை அகற்றி ஊரைத் தூய்மைப்படுத்துதல், குருதிக்கொடை போன்ற மருத்துவ முகாம்கள் நடத்துதல், ஆதரவற்றோர் இல்லங்களில் முதியோர், சிறுவர், ஊனமுற்றோர் இவர்களுக்குத் தேவைப்பட்ட உதவிகள் செய்தல். புயல், கடும்மழை, வெள்ளம், ஆழிப் பேரலை, தீ போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பு அளித்தல். நூலகம் கட்டுதல், கல்வி நிலையம், உடற்கழகம், தண்ணீர்ப்பந்தல். பூங்கா, விளையாடு களம் அமைத்தல் என்றின்னவை ஒப்புரவுப் பணிகளுக்குக் காட்டுக்கள்.
ஒப்புரவு வேறு. ஈகை வேறு. ஈகை என்பது ஒன்று தேவைப்பட்டவர் இரந்து கேட்க அதை அவர்க்குக் கொடுத்தல். ஒப்புரவு பொதுநல நோக்குடன் அனைவர்க்கும் செய்யப்படும் உதவி.
அன்புடைமை, அருளுடைமை என இரு தனித்தனி அதிகாரங்கள் இருப்பதுபோல, ஒப்புரவு, ஈகை எனும் இரு பெயரால் அதிகாரங்கள் அமைக்கப்பட்டமையே, இச்சொற்கள் வேறுபட்ட பொருளின என்பதை அறியலாம்.