இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:215)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம்.
இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.

பரிமேலழகர் உரை: உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும்.
(நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: உலகில் உள்ள உயிர்களை விரும்புகின்ற பெரிய அறிவினையுடையானது செல்வம், எல்லோர்க்கும் பயன்படும் ஊருணி நீர் நிறைந்தால் போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகவாம் பேரறி வாளன் திரு ஊருணி நீர்நிறைந் தற்றே.

பதவுரை:
ஊருணி-குளம்; நீர்-நீர்; நிறைந்து-நிரம்பினார்; அற்றே-அத்தன்மைத்தே; உலகு-உலகநலம்; அவாம்-விரும்பிச் செய்யும்; பேர்-பெரியதாய்; அறிவாளன்-(ஒப்புரவு) அறிந்தவன்; திரு-செல்வம்.


ஊருணி நீர்நிறைந் தற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்;
பரிப்பெருமாள்: ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்;
பரிதி: வானேரி நிறைந்தால் ஒக்கும்;
காலிங்கர்: ஊரணியாகப் பேரேரியும் பெருங்குளமும் முதலிய நீர்புகுந்து நிறைந்து நின்ற அவ்வத் தன்மைத்தே;
பரிமேலழகர்: ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும்;
பரிமேலழகர் குறிப்புரை: (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.

'ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊருணியில் நிறைந்த நீர் போலாகும்', 'ஊரிலுள்ள குளம் நீர்நிறைந்தாற்போல, எல்லார்க்கும் உதவும் (சில மாவட்டங்களில் குளம் என்று வழங்குவது, ஊருணி எனச் சில மாவட்டங்களில் இன்றும் வழங்குகிறது.)', 'குடி தண்ணீருக்காகவுள்ள குளத்தில் நீர் நிறைந்திருக்கிறது போலாம்', 'ஊரில் உள்ளார் தண்ணீர் உண்ணுங் குளமானது நீர்நிறைந்தாற் போலும்!', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊருணியில் நீர் நிறைந்தாற் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

உலகவாம் பேரறிவாளன் திரு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
பரிப்பெருமாள்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
பரிதி: அறிவுடையவரிடத்தில் செல்வம் என்றவாறு.
பரிதி குறிப்புரை: வானேரியும் சகலர்க்கும் பிரயோசனப்படும் என்பதாம்.
காலிங்கர்: உலகத்து யாவரும் 'இப்பொருள் நமது' என்று சூழ்ந்து கொள்ளும் தன்மைத்தாகிய பேரறிவாளனது செல்வம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இனி அவாவுதல்-சூழ்தல்.
பரிமேலழகர்: உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம்,

'உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவுஅறிவானது செல்வம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி வாளா அறிவுடையவரிடத்தில் செல்வம் என்றார். காலிங்கர் உலகத்தார் சூழ்ந்து கொள்ளும் செல்வம் எனப் பொருள் காண்கிறார். பரிமேலழகர் உலகநடையை விரும்பிச் செய்யும அறிவினையுடையவனது செல்வம் என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலக நலம் விரும்பும் பேரறிஞனது செல்வம்', 'உலகத்தார் விரும்புகின்ற பேரறிஞனது செல்வம்', 'உலகத்தார் விரும்பத் தகுந்த பெரிய அறிவாளியிடத்திலிருக்கிற செல்வம்', 'உலக இயல்பறிந்து உதவிசெய்ய விரும்பும் பெரிய அறிவினையுடையவனது செல்வம் (பேரறிவாளன்பால் செல்வஞ் சேர்வது நீர் நிறைந்தாற் போலும் என்பது கருத்து.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலக நலம் விரும்பும் ஒப்புரவை நன்கு அறிவானது செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகவாம் பேரறிவாளன் செல்வம், ஊருணியில் நீர் நிறைந்தாற் போன்றது என்பது பாடலின் பொருள்.
'உலகவாம் பேரறிவாளன்' யார்?

பொதுநலம் விரும்பும் ஒப்புரவை நன்கு அறிந்தவனது செல்வம் ஊருணியில் நீர் நிறைந்தது போன்றது.
பல்லுயிர்க்கும் பொருந்திய பெருங்கொடையே ஒப்புரவு என்பர். உலக உயிர்களின் நலம் விரும்பி ஒப்புரவைப் பெரிதும் அறிந்தவனிடம் உள்ள செல்வம் ஊரார் அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர்நிறைந்து உள்ளது போன்றது.
ஊருணி என்பது 'ஊர் உண்ணும் நீரையுடையது' என்று பொருள்படும். அது அனைவரும் பெறுவதற்காகத் தூய நீரையுடைய ஊர்மக்களுக்குப் பொதுவான குளம் ஆகும். மழைநீரினால் நிறையப் பெறுவதால் அக்குளத்தைப் பரிதி 'வானேரி' எனக் குறித்துள்ளார். ஊருணியை நீராடுவதற்கோ அல்லது மற்றவற்றிற்கோ பயன்படுத்தாமலிருக்குமாறும், ஆடுமாடுகள் அருகில் செல்லாதவாறும் பாதுகாத்து வைப்பர், இதிலுள்ள நீர் ஊரார் அனைவருக்கும் பொதுவானது. ஊருணிநீரை வேண்டியவர் வேண்டியவாறு வேண்டிய அளவு முகந்து எடுத்துச் சென்று பயன்படுத்துவர். அதுபோல, ஒப்புரவின் பயன்களை நன்கு அறிந்தவன் அவனது செல்வம் உலகப் பொது நன்மைக்குப் பயன்படுமாறு கல்வி நிலையம், மருத்துவமனை, நூலகம் போன்றவற்றை ஏற்படுத்தி உதவுவான்.
இக்குறள் ஒப்புரவுக் குணம் கொண்ட மிகு செல்வம் படைத்தவர் பற்றிச் சொல்கிறது. செல்வந்தரின் பொருள் சமுதாயச் செல்வம் ஆகிறது. ஊருணி நீரைத் தடையின்றித் துய்த்தல் போல, ஒப்புரவுடையான் செல்வத்தை ஊரார் தடையின்றித் துய்ப்பர் என்பது கருத்து.

முத்துப் போன்ற பல் என்று சொன்னால் அது பளிச்சென்று தெரியும் வெள்ளை நிறம் என்ற பொதுப்பண்பைக் குறிப்பது போல இங்குள்ள உவமையில் ஊருணி நீர் நிறைந்தது என்ற உவமையும் அற்று என்ற உவம உருபும் பேரறிவாளன் செல்வம் என்ற பொருளும் இருக்க. 'எல்லோருக்கும் பயன்படும்' என்ற பொதுப்பண்பு இங்குக் குறிப்பிடப்படாமலே விளங்கும்,

'உலகவாம் பேரறிவாளன்' யார்?

'உலகவாம் பேரறிவாளன்' என்றதற்கு உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய ஒப்புரவு அறிவான், அறிவுடையவர், உலகத்து யாவரும் 'இப்பொருள் நமது' என்று சூழ்ந்து கொள்ளும் தன்மைத்தாகிய பேரறிவாளன், உலகநடையை விரும்பிச் செய்யும் பெரியஅறிவினையுடையவன், ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளி, உலகோடு ஒத்துவாழும் ஒப்புரவை விரும்பும் பேரறிவாளன், உலகின் உயிர்க்குலம் அனைத்தையும் வாழ்விக்க விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவாளன், உலக நலம் விரும்பும் பேரறிஞன், உலகத்தார் விரும்புகின்ற பேரறிஞன், உலகத்தார் விரும்பத் தகுந்தவனான பெரிய அறிவாளன், உலகோரால் விரும்பப்படும் பேரறிவாளன், உலக இயல்பறிந்து உதவிசெய்ய விரும்பும் பெரிய அறிவினையுடையவன், உலகில் உள்ள உயிர்களை விரும்புகின்ற பெரிய அறிவினையுடையான், உலக நலம் நாடும் பேரறிஞன், உலகிலுள்ள உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான், உலகத்தார் அனைவரும் விரும்பும் பேரறிவுடையாளன், உலக நடையை விரும்பிச் செய்யும் பெரிய அறிவினை ஆள்கின்றவன் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

உலகவாம் என்ற தொடர் உலக மக்கள் அனைவருடைய நலத்தையும் விரும்பும் அதாவது 'ஒப்புரவு' என்னும் பண்புள்ள என்ற பொருள் தருகிறது. தேவநேயப் பாவாணர் 'உலகிலுள்ள உயிர்களை எல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையான்' என இத்தொடர்க்குப் பொருள் கூறினார். பரிமேலழகர் உலக நடையினை விரும்பிச் செய்யும் என்றார். இத்தொடர்க்கு உலகத்தார் விரும்புகின்ற என்னும் உரையும் உள்ளது.
பேரறிவாளன் என்பதற்குப் பலர் பெரிய (கல்வி)அறிவுடையவன் எனப் பொருள் கூறியுள்ளனர். ஒப்புரவாளன் கல்விச் செல்வம் பெற்ற அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. ஒப்புரவுப் பண்புக்கும் கல்வியறிவுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. ஒப்புரவு நன்கு அறிவான் என்பதை பேரறிவாளன் என்ற சொல் குறிக்கும்.
ஒப்புரவை நன்கு அறிந்தவன் 'உலகவாம் பேரறிவாளன்' ஆவான்.

உலக நலம் விரும்பும் ஒப்புரவை நன்கு அறிவானது செல்வம், ஊருணியில் நீர் நிறைந்தாற் போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒப்புரவறிதல் கொண்டவனது செல்வம் எல்லோர்க்கும் எக்கணமும் பயன்படும்.

பொழிப்பு

உலக நலம் விரும்பும் ஒப்புரவு நன்கு அறிவானது செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போலாகும்.