இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:218)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வவளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

மணக்குடவர் உரை: செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார்.
இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார்.
(பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர் வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடனறி காட்சி யவர் இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்.

பதவுரை:
இடன்-உதவும் வாய்ப்பு (வசதி); இல்-இல்லாத; பருவத்தும்-காலத்தும்; ஒப்புரவிற்கு-பொதுநன்மை செய்தற்கு; ஒல்கார்-தளரார்; கடன் -கடமை; அறி-அறிந்த; காட்சியவர்-அறிவுடையவர்.


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்;
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது.
பரிதி: ஒப்புரவினால் வகையற்ற இடத்திலும் ஒப்புரவு குன்றார்;
காலிங்கர்: தமக்கு ஒன்றும் தருதற்கு இடமில்லாதவாறு வறுமை வந்துற்ற காலத்தும், ஒப்புரவு செய்தற்கு ஒதுங்குதல் இலர்;
பரிமேலழகர்: செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்;

'செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் செல்வம் என்று சொல்லாமல் பொதுவில் 'ஒப்புரவினால் வகையற்ற இடத்திலும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் வறுமைக் காலத்தும் பொதுநலப் பணி செய்யப் பின்வாங்க மாட்டார்', 'தம்மிடம் செல்வம் இல்லாத காலத்திலும் பிறருக்கு உபகாரம் செய்யத் தயங்க மாட்டார்கள்', 'தமது செல்வஞ் சுருங்கிய காலத்தும் உதவி செய்தற்குத் தளரமாட்டார்கள்', 'உதவுவதற்கு முடியாத நிலையிலும் உதவி செய்வதில் தளர்ச்சியடையார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார் என்பது இப்பகுதியின் பொருள்.

கடனறி காட்சி யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒப்புரவை யறியும் அறிவுடையார்.
பரிதி: உலகத்தில் செய்யும் முறைமை அறிபவர்.
காலிங்கர்: யாரெனின், ஒப்புரவு என்னும் கடப்பாட்டினை அறிந்த அறிவினையுடையார் என்றவாறு,
காலிங்கர் குறிப்புரை: கடப்பாடு என்பது முறைப்பாடு. காட்சி என்பது அறிவு.
பரிமேலழகர்: தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.

'ஒப்புரவு என்னும் கடப்பாட்டினை அறிந்த அறவினையுடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒப்புரவு செய்தலே தம் கடமை எனக் கருதும் அறிவுடையார்', 'கடமைகளை உணரும் அறிவுடையவர்கள்', 'தமது கடமையை உணரும் இயற்கை அறிவினை யுடையவர்கள்', 'பிறர்க்கு உதவுதலைத் தம் கடமை என்று அறியக்கூடிய அறிவினை உடையவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் இடனில் பருவத்தும் பொதுநலம் குறையார் என்பது பாடலின் பொருள்.
'இடனில் பருவத்தும்' என்ற தொடரின் பொருள் என்ன?

தமது இன்றைய நிலைமை இடங்கொடுக்காதபோதும் ஒப்புரவுக் கடமையை உணர்ந்தவர்கள் பொதுநலத் தொண்டிலிருந்து பின்வாங்கார்.
ஒப்புரவாளர் உதவி செய்தலை ஒரு கடப்பாடாகக் கருதி பொதுநலத் தொண்டு ஆற்றுகிறார். ஒப்புரவு செய்வதற்குச் செல்வம், காலம், ஆற்றல் போன்றவற்றில் குறைந்தது ஏதாவது ஒன்று தேவையானது. வாழ்க்கை நிலை எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே சீராக அமைய முடியாது. அது கூடியும் குறைந்தும் மாறி மாறிச் செல்லும். உலகத்தார்க்கு உதவுவதே தம் கடமை என்ற ஒப்புரவு அறிதலை உடையவர்கள் எந்த நிலையிலும் பொதுநலம் கருதிச் செய்யும் ஒப்புரவுப் பணியிலிருந்து தளரமாட்டார். உதவிடும் எண்ணத்தை உறுதியாகக் கொண்ட ஒப்புரவாளர் தமது மற்ற எந்த உடைமைகளை இழந்தாலும் சமுதாயத்திற்குத் தாம் செய்யத்தக்க கடமையை எஞ்ஞான்றும் நன்கு காண்பர். செல்வச் சுருக்கம், நேரம் இல்லாமை, செல்வாக்குக் குறைவு போன்ற காரணங்களுக்காக அவர் தனது ஒப்புரவுக் கொள்கையிலிருந்து விலகமாட்டார். ஒப்புரவுச் செயல்களுக்கு இவை தடைகள் ஆகா. இந்நிலையிலும் முயன்று செய்வர்.
கடனறி காட்சியார் இடம், பொருள், ஏவல் போன்ற மற்றையவற்றை ஒழிந்தாலும், ஒப்புரவு செய்தலைக் கைவிடாமல் வேறு வழிகளில் வேண்டிய முயற்சிகளைச் செய்வார்கள். நாகை செ தண்டபாணி 'பொருட்செல்வத்தால் இயலாதேல், மெய்யானும் மொழியாலும் பிறர்க்குச் செய்யலான உதவிகள் பல உளவாதலின், அவைகளைச் செய்வார்' என்று மற்றப்படி எவ்விதம் உதவுவார் என்பதற்கு விளக்கம் தருவார்.

கடனறி காட்சியவர் என்பதற்கு 'ஒப்புரவறிந்து ஈவதனாலே செல்வங் குன்றி வகையற்ற போதிலும் இயன்றமாத்திரம் கடன் வாங்கிச் செலவு செய்வார்கள் அறிவுள்ளோர்கள்' என்கிறது பழைய உரை ஒன்று. ‘கடன்’ என்பதற்குக் கடமை என்பதே அன்றும் இன்றும் பொருளாக வழங்கி வருகிறது. எனவே இன்றைய வழக்கிலுள்ள கடன் என்பதற்குரிய பொருளைக் குறளில் உள்ள ‘கடன்’ என்னும் சொல்லுக்கு ஏற்றிக் கூறும் அவ்வுரை பொருந்தாது. கடங்கொண்டுஞ் செய்வார் கடன் (பொருள்: வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள்) என்று பழமொழி (216) யும் சொல்லும். ஆனால் வள்ளுவர் எங்கும் அப்படிச் சொல்லவில்லை..கடனறி காட்சியவர் என்ற தொடர்க்குக் கடமையாக அறிந்தவர் என்பதே பொருள்.

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று (குடிமை 955 பொருள்: தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை) என்று பிறிதோரிடத்தில் இக்குறளின் கருத்தையொட்டிச் சொல்லப்பட்டுள்ளது.

'இடனில் பருவத்தும்' என்ற தொடரின் பொருள் என்ன?

'இடனில் பருவத்தும்' என்ற தொடர்க்குச் செல்வம் விரிவற்ற காலத்திலும், ஒப்புரவினால் வகையற்ற இடத்திலும், தமக்கு ஒன்றும் தருதற்கு இடமில்லாதவாறு வறுமை வந்துற்ற காலத்தும், செல்வம் சுருங்கிய காலத்தும், செல்வவளம் இல்லாத காலத்திலும், தகுதியில்லாத காலத்தும், இடம் பொருள் ஏவல் சுருங்கிய காலத்தும், உதவுதற்குரிய செல்வம் விரிவற்ற காலத்தும், வறுமைக்காலத்தும், செல்வம் இல்லாத காலத்திலும், தம்மிடம் உதவும் வாய்ப்பு இல்லாத போதும், உதவுவதற்கு முடியாத நிலையிலும், ஒப்புரவு செய்தற்கு இடம் இல்லாத காலத்தும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இடன் என்ற சொல்லுக்கு நேரிய பொருள் இடம் அல்லது காலம் ஆகும். ‘இடனில் பருவத்தும்’ என்பது இடமோ அல்லது காலமோ சுருங்கிய காலத்தும் எனப்பொருள்படும். பழைய உரை ஒன்று 'இடம், பொருள், ஏவல் சுருங்கிய காலத்தும்' என உரைத்தது.
‘இடனில் பருவத்தும்’ என்பதற்குப் பெரும்பான்மையான உரையாளர்கள் 'செல்வமில்லாத காலத்தும்' என்று உரைத்தனர். இத்தொடர்க்குச் செல்வநிலையை மட்டும் காட்டிநின்றது எனக் கொள்வது சிறக்காது. இடனில் என்ற சொல்லுக்கு ஒப்புரவுக்கு ஏற்ற சூழல் இல்லை என்பது பொருள். சூழல் என்பது செல்வம், செல்வாக்கு, ஆற்றல், காலம், உடல்நிலை இன்னபிற குறித்ததாக இருக்கலாம். 'இடனில் பருவத்தும்' என்ற தொடர்க்கு உதவுதற்கு ஏற்ற வாய்ப்பு/வசதி இல்லாத காலத்தும் எனக் கொள்வது பொருத்தம்.

ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒப்புரவறிதல் உடையார் எந்நிலையிலும் மனஞ்சுருங்காது பொதுநலம் செய்வார்.

பொழிப்பு

ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையவர் இயலாத நிலையிலும் பொதுநலம் குறையார்